"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Tuesday, June 28, 2011
காத்தான்குடி சம்பவம் குறித்து விசாரணை
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த திங்கள் கிழமை 17 வயது பள்ளி மாணவியொருவரும் அதே வயதான மற்றுமொரு பெண்ணும் வீதியில் வைத்துகடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு செவ்வாய்க்கிழமையன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடை பெற்றது.
சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை குறிப்பிட்ட இருவரும் அடையாளம் காட்டினர்.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக் கிழமை கைதான பெண் நீதிமன்ற உத்தரவின் பேரில் செவ்வாய்க் கிழமைவரை விளக்கமறியலில் அடையாள அணிவகுப்பிற்காக வைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் பலவந்தமாக ஆட்டோவில் கடத்தி வீடொன்றில் தடுத்து வைத்து கைகளாலும் துடைப்பான் தடிகளினாலும் தாக்கி காயம் விளைவித்ததாகவும், அவமானப் படுத்தியதாகவும் குற்றவியல் கோவைச் சட்டத்தின் கீழ சந்தேக நபருக்கு எதிராக குறிப்பிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி நகர் முஸ்லிம்களை மட்டும் வாழும் பிரதேசம். இங்கு சமீப காலமாக மத அடிப்படைவாதம் தலை தூக்கி வருகிறது என்பது போன்ற கவலைகள் சில மட்டத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
குறித்த மாணவியும் மற்றப் பெணணும் மட்டக்களப்பு நகருக்கு சென்று காத்தான்குடிககு திரும்பிய வேளை வீதியில் வைத்து ஆட்டோ ஒன்றில் சிலரால் கடத்தப்பட்டுள்ளனர்.
வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பின்னரே இம்மாணவிகள் பள்ளிவாசல்கள் சம்மேளனத்திடம் அந் நபர்களினால் ஒப்படைக்கப்பட்டதாக ஒரு மாணவியின் தந்தையான முகமது யுசுப் அப்துல் ரசாக் பிபிசியிடம் தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பிறகு தனது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் பிறகு காப்பகம் ஒன்றில் அவர் இருந்ததாகவும் குறிப்பிட்ட அவர் செவ்வாய்க்கிழமைதான் தன் மகள் வீடு திரும்பியதாகவும் குறிப்பிட்டார்.
தனது மகளும் மற்றொறு பெண்ணும் தவறு செய்ததாக பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததன் காரணமாகத்தான் அன்று அங்கே பெரும் கூட்டம் கூடியது என்றும் தன் மகள் எவ்வித தவறும் செய்யவில்லை - ஆபாசப் படங்களைப் பார்க்கவில்லை என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் ரசாக் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தப் பெண்கள் மீது எவ்விதத் தவறும் இல்லை என்று ஒலி பெருக்கிகள் மூலம் பொது அறிவிப்பு செய்ய வேண்டும் என்று ரசாக் கோருகிறார்.
ஆனால் இந்தப் பெண்கள் ஆபாசப் படங்கள் பார்த்ததாக எவ்வித அறிவிப்பும் செய்யப் படவில்லை என்று காத்தான் குடி பள்ளிவாசல் சம்மேளனம் கூறுகிறது. பெண்கள் பள்ளிவாசல் அலுவலகத்தில் தாக்கப்படவில்லை என்றும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.
சம்மேளனத்தில் தலைவரான முகமது இப்ராஹிம் முகமது சுபேர் இஸ்லாமிய இளைஞர்கள் சட்டத்தை தமது கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தப் பெண்கள் பள்ளிவாசல் சம்மேளன அலுவலகத்தில் வைத்துத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதும் தவறு என்று அவர் கூறினார்.
இதே வேளை இச் சம்பவம் தொடர்பாக மேலும் பலரை கைது செய்ய தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source:http://www.bbc.co.uk/tamil
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment