widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, December 27, 2012

இறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் "மலக்குகள்"


இறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் "மலக்குகள்"


ஓரிறையின் நற்பெயரால்...
மேன்மைமிகு மலக்குகள் குறித்து முஸ்லிம்களுக்கு ஒரு புரிதலுக்காகவும், அஃதில்லாதவர்களுக்கு சிறு விளக்கமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை.
இறையின் படைப்பில்
இறைவன் தன் எண்ணத்திற்கேற்ப (தேவைக்கேற்ப அல்ல) தனது படைப்பை பற்பல நிலைகளில் ,கோணங்களில்,சுழலில் உருவாக்கி இருக்கிறான். அவ்வாறு உருவாக்கப்பட்ட படைப்பினங்களை நாம் ஐந்து பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.
1. மலக்குகள்  2. ஜின்கள்  3. மனிதர்கள்  4. மனிதர்கள் அல்லாத இவ்வுலகில் உள்ள ஏனைய உயிரினங்கள் மற்றும்  5. உயிரற்ற பொருட்கள்.
இங்கு மலக்குகள் குறித்து மட்டுமே பார்ப்பதால் ஏனைய படைப்பினங்கள் பற்றிய பார்வை வேண்டாம்.மேலே உள்ள பட்டியல் அப்படைப்பினங்களின் தரத்திற்கேற்பவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.ஆக மலக்குகள் மனித,ஜின் வர்க்கங்களை விட உயர்ந்த படைப்பு என்பது தெளிவு! அதை அடிப்படையாக வைத்தே இனியும் கட்டுரையை தொடருங்கள்.
மலக்குகள் யார்?
இறைனின் ஏவல்களை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்களே மலக்குகள். அவனின் அனைத்து ஆணைகளுக்கும் உடன்படுவதே அவர்களின் தனிச்சிறப்பு. மேலும், அதுவே அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கமும் கூட,
''...அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்''. (66:06 சுருக்கம்)
இவ்வாறு இறை படைப்பில் உயர் படைப்பாக வர்ணிக்கப்படும் மலக்குகள் மேற்கொள்ளும் செயல்கள் குறித்து குர்-ஆனில் சிலவற்றை பார்ப்போம்.
பொறுப்புகள் பல அவர்கள் மீது சாட்டப்பட்டாலும் மனித சமுகத்தோடு அவர்களுக்கு உள்ள மிக முக்கியமான தொடர்புகள் குறித்து,
*இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனுடைய தூதுவர்களுக்கு இறை புறத்திலிருந்து வெளிபடும் வேத வெளிப்பாட்டை (வஹீயை) அறிவிப்பது அவர்களின் தலையாய பணியாகும்.
''அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து,) "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்" என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான்.'' (16:02)
*மனிதர்கள் மேற்கொள்ளும் நன்மை/தீமைகளின் அடிப்படையில் அமைந்த அனைத்து செயல்களையும் பதிவு செய்கின்றனர்.
''(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- (50:17)
''நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.'' (82:10-12)
*மனிதர்களுக்கு தாயின் கர்ப்ப அறைக்குள் உயிர் ஊதுவதும்,மனித வாழ்நாள் தவணை முடிந்ததும் அவர்களின் உயிரை கைப்பற்றுவதும் அவர்கள் செய்யும் பிறிதொரு பணியாகும்.
"உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், "மலக்குல் மவ்து" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.'' (32:11)
''ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,'' (47:27)
மலக்குகள் செயல் பாட்டை மேற்கூறிய வசனங்களில் அறியலாம். மேலும் அவர்களை குறித்து அறிய...
'அவர்களுக்கு மனிதனோடு கொண்ட தொடர்பு பற்றி (2:30, 2:34, 7:11, 17:61, 18:50, 20:116, 38:73, 13:11, 82:10,86:4, 8:12, 40:7, 42:5, 3:123-126, 8:9,10)
இறைவனுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி (2:30, 39:75, 40:, 42:5, 79:1-3)
பிற (3:42, 2:98, 6:111,158, 15:78, 16:2,33, 25:21, 41:30, 97:4, 6:9, 17:95, 35:1, 37:149,150, 43:19, 53:26-28)
இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி,மலக்குகளுக்கு தனியானதொரு சக்தியோ,இறைவனுக்கு தன் தேவையின் அடிப்படையிலோ அவர்களுக்கு அச்செயல்பாடுகள் வழங்கப்படவில்லை.மாறாக இறைவனின் வல்லமையின் ஒரு வெளிப்பாடாகவே இது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏனெனில் தன் திருமறையில்
அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்; 'ஆகுக!' என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது. (40:68)
மேலே குறிப்பிடப்பட்டவை மலக்குகள் குறித்த ஆன்மிக பார்வை
இனி,.
மலக்குகள் இருப்பதை அறிவியலால் நிருப்பிக்க முடியுமா...?
மலக்குகள் மனிதனை போன்றே ஒரு படைப்பை தவிர மனித படைப்பின் எத்தகையை அம்சமும் அவர்களுக்கு பொருந்தாது என்பதை கவனத்தில் வைத்து தொடருங்கள்.,
அறிவியல் கோட்பாடுகளுக்கும்,இறைவனின் வார்த்தைகளான குர்-ஆனிய கோட்பாடுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்., இன்று நம்மிடையே அறிவியல் என உள்ளவைகளை, அவை எவ்வாறு ஏற்பட்டது,ஏற்படுத்திய விளைவு முதலிய காரணிகளை கையில் வைத்து கொண்டு,பிறகே நாம் அதை உண்மை என்கிறோம்.
ஒரு எளிய நிகழ்வுதாரணம், இன்று நம் கையில் இருக்கும் வானவில் குறித்த வரைவிலணத்தின் படி அவை எப்படி ஏற்படும், ஏன் ஏற்படும்,எவ்வளவு நேரம் ஏற்படும் போன்ற தகவல்களை மிக துல்லியமாக தர முடியும்., அதற்கு (மாறுபடாமல் இருப்பதற்கு) பெயர் தான் அறிவியல்,
காரணம் பல்வேறு கால சூழ்நிலைகளில், நேரங்களில், இடங்களில் ஏற்பட்ட வானவில் தோற்றங்கள் குறித்த நிகழ்வுகளை ஒருசேர இணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் வானவில் குறித்து மிக தெளிவாக அறிகிறோம்.
இவ்விடத்தில் ஒன்றை நன்றாக கவனியுங்கள் நமக்கு கிடைக்கபெற்ற ஒரு முழுமைப்பெற்ற செயல் வடிவத்தை வைத்து கொண்டே அதன் தொடர் செயலாக்கம் மற்றும் ஏற்கனவே அவை செயல் பட தொடங்கிய விதம் குறித்து உண்மையே வெளிபடுத்த முடியும்., மாறாக உலகில் முன்முதலில் வானவில் தோன்றுவதற்கு முன்பே இன்னின்ன காலங்களில் நேர அளவில் நிறங்களில் வானவில் தோன்றும் என யாரும் கூறவில்லை.
இதற்கு விளக்கம்- எந்த அறிவியலாரிடமும் இருக்கிறதா...? வானவில் குறித்து அவர்கள் முன்னர் அறியாததே...!
என்ற ஒரு காரணமே விடையாக இருக்கும், மேலும் இன்று நாம் வகுத்திருக்கும் வானவில் குறித்த கோட்பாடுகள் அனைத்தும் நம் கண்ட ஆய்வின் அடிப்படையில் மட்டுமே கோட்பாடுகளாக வைத்திருக்கின்றோம்.
மேலும் இதற்கு மேல் எந்தவித கோட்பாடும் வானவில் குறித்து இனி மாறாது என எவரும் சொல்ல முடியாது. இன்னும் பல ஆண்டுகள் கழித்து வானவில்லில் நிறப்பிரிகை மாறுபாடோ,தோன்றும் கால அளவில் ,சுழலில் மாறுபாடு ஏற்பட்டாலோ யாரும் இதுகுறித்து யாரும் ,ஏற்கனவே வானவில் குறித்து கூறப்பட்ட கோட்பாடுகள் பொய்யென கூற மாட்டார்கள் .மாறாக வானவில் குறித்த "அறிவியல் கண்டுப்பிடிப்பில்" மேலும் ஒரு மைல்கல் என பெருமிதம் கொள்வார்கள்.
ஆக, நம் கண முன் தெரியும் நிதர்சனமான உண்மைகளுக்கேற்ற வகையில் காரணத்தை மெல்ல மெல்ல அறிவதே அறிவியல்!,
அதே போலத்தான் சந்திர /சூரிய கிரகணங்களும் இன்னும் 1000 வருடங்கள் கழித்து கூட எப்போது ஏற்படும்,எந்த நாட்டில் எவ்வளவு நேரம் தெரியும் என்பதை மிக துல்லியமாக சொல்ல முடிந்த அறிவியலாருக்கு முதல் கிரகணங்கள் ஏற்படுவதற்கு முன்பு இப்படி ஒரு கிரணக செயல் பாடுகள் ஏற்படுதல் குறித்த எந்த வித தகவல்களும் இல்லை.,
அதேபோலத்தான் ஏனைய பிற அறிவியல் செயல் பாடுகளும். எனவேதான் EXPIRY தேதிக்கு முன்னே கெட்டு போகும் உணவு பொருட்கள் மற்றும் EXPIRY தேதி முடிந்தும் செயல்படும் பாட்டரி போன்ற வேதி பொருட்களுக்கு அறிவியல் முரண்பாட்டை நாம் முன்னிருத்துவதில்லைஇதற்கு நேர்மாறாக இஸ்லாத்தின் அடிப்படை இருக்கிறது.(அறிவியலுக்கு மாற்றமாக அல்ல,மேற்குறிப்பட்ட செயல்முறை விதிக்கு மாற்றமாக) இஸ்லாம் தன்னுடைய கோட்பாடுகளையும், கொள்கைகளையும் மிக அழகாக, தெளிவாக மற்றும் விரிவாக முன்மொழிந்து, மேலும் அக்கொள்கைகள் எக்காலத்திருக்கும், யாருக்காகவும் எதற்காகவும் நெகிவுதன்மையடையாது என பிரகடனபடுத்திய பிறகே மனித சமுகத்திற்கு தன்னை அறிமுகப்படுத்துகிறது.
அவ்வாறு விளக்கப்பட்ட அக்கொள்கைகளை செயல்படுத்த காரணங்களையும் கூறியுள்ளது. இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளில் மிக முக்கியமானது "மறைவானவற்றின் மீது நம்பிகை வைப்பது" இதன் கீழாக தான் நாம் பார்க்கும் மலக்குகள் சார்ந்த கோட்பாடுகள் வருகிறது.
ஆக மலக்குகளின் தன்மையை விளக்கி அவர்களை இந்த உலகில் யாரும் நிகழ்வின் அடிப்படையில் அறிந்து கொள்ளமுடியாது என தெளிவுறுத்திய பின்னரே அவர்கள் குறித்த இன்னபிற நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்கிறது.
குர்-ஆன் இத்தெரிவை யாரும் கேள்வி எழுப்பாமலே அவை குறித்து தன்னிலை விளக்கம் அளிக்கிறது. எனவே இன்று மலக்குகளை ஏற்க/நம்ப மறுப்போர் எவரும் மலக்குகள் குறித்து பேசும் போது அவர்(மலக்கு)கள் தொடர்பான மூலங்கள் குர்-ஆன்லிருந்தே பெறப்பட்டன என்பதை மறந்து விடக்கூடாது.,
எனவே யாரும் அறியாத ஒன்றை பற்றி அதற்கு ஒரு வரைவிலக்கணமும் கொடுத்து (அதுவும் யாரும் அதுகுறித்து கேள்வி கேட்காமலே)நிகழ்வின் அடிப்படையில் இவ்வுலகத்தில் யாரும் உளவியல் மற்றும் உணர்வுரீதியாக அவர்களின் இருப்பை அறிந்துக்கொள்ளவும் முடியாது என அச்செயலுக்கு முழு வரையறை தரும் போது அறிவியல் ரீதியாக என்ன முரண்பாடு இருக்கிறது
ஏனெனில் அறிவியலுக்கு முரண்படும் செயலானது,நிருப்பிக்கபட்ட அறிவியல் ஆய்வோடு நாம் ஒப்பிடும் ஒரு சோதனை முற்றிலும் வேறுபடுவதே ஆகும். மலக்குகள் குறித்து விஞ்ஞான ரீதியான ஒரு வரைவிலக்கணமோ அல்லது எந்த ஒரு அறிவியல் சோதனையோ மேற்கொள்ளப்படவில்லை. எனவே இங்கு அறிவியல் முரண்பாட்டிற்கு வேலையே இல்லை.
அதுபோலவே ஏனைய மறுமை கோட்பாடுகள் குறித்த அறிவியல் நடவடிக்கையும்.,முரண்படாத அறிவியலுக்கு பொருந்தக்கூடிய எந்த செயலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே!
ஒளியின் வேகத்தை விட,மிக வேகமாக செயல்படும் மலக்குகள் குறித்த ஆய்வை மனித உருவாக்க கருவிகளால் கண்டறிய முயல்வது எப்படி சாத்தியம்...அதுவும் அவர்கள் தனித்தன்மை தெளிவாக,விரிவாக கூறப்பட்ட பிறகும்...?
அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Saturday, December 22, 2012

இஸ்லாமும் அடிமைத்தனமும்


இஸ்லாமும் அடிமைத்தனமும்
  அபூ ஆஸியா  
மனிதர்கள் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவர்கள். நீங்கள் ஒருவரிலிருந்து மற்றொருவராகத் தோன்றியவர்களே. என்று மனிதர்களின் பரிபூரண சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட இஸ்லாம் அடிமைத்தனத்தைத் தனது சமூக வாழ்க்கையின் ஒர் அம்சமாகக் கொள்ளுமா?
ஆதத்தின் மக்களை நாம் உண்மையிலேயே கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறும் குர்ஆனே மனித சமுதாயத்தில் ஒரு கூட்டதார்களை வீட்டுத் தட்டு முட்டு சாதனங்களைப் போல் விற்கப்பட்டுக் கொண்டும், வாங்கப்பட்டுக் கொண்டும் இருக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்யுமா?
'எவர்; எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ.. அவர்.. அவர்களுடைய பழுவான சுமைகளையும் அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும் இறக்கிவிடுவார்' (7:157) என்றே குர்ஆன் கூறுகிறது.
எனில் அடிமைகளை வைத்துக் கொள்ளவும், நிர்வகிக்கவும் சில விதிமுறைகளை ஏற்படுத்தியது என்றால் அது காலச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்ட ஒரு தற்காலிக விதிமுறையாகும்.
முந்தைய கால கட்டங்களில் போருக்குப் பின் வெற்றி பெற்ற நாட தோல்வியடைந்த நாடுகளின் போர் வீரர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக உபயோகப்படுத்துவதையும், விற்கப்படுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலை திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட கால கட்டத்தில் இறக்கியருளிய நாட்டிலும், அதன் சுற்றுச்சூழலிலும் இருந்து வந்தது. மேல் நாடுகளில் 18-ம் நூற்றாண்டின் கடைசி வரை கூட இருந்து வந்தது. அதுவும் யுத்தக் களத்தில தோல்வியடைந்தவர்களையல்ல. யுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத நிரபராதிகளையாகும்.
அமெரிக்காவில் மேற்கிந்தியர் எனப்படும் கருப்பு இனமக்களை பிடித்து விற்பனை செய்யும் வழக்கம். இந்த 20-ம் நூற்றாண்டு வரை இருந்தது. மேனாட்டவர் ஆப்ரிக்காவின் மத்திய பகுதியில் வாழ்ந்த கருப்பு இனமக்களை மிருகத்தனமாக வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாக விற்பதற்காக கப்பலேற்ற உபயோகிக்கப்பட்ட கடற்கரைக்கு அடிமைக்கரை என்று பெயரே வைக்கப்பட்டது. இப்படி ஒரு நூற்றாண்டுக்குள் (1680-1786) பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்ட கருப்பர் தொகை இரண்டு கோடி என்று அவர்களின் அறிக்கையே கூறுகிறது.1790-ம் ஆண்டில் மட்டும் 75,000 அப்பாவி மக்கள் அடிமைகளாக்கப்பட்டு பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
அமெரிக்காவில் ஆபிரஹாம் லிங்கன்; காலக்கட்டம் வரை கூட அடிமைத்தனம் இருந்து வந்தது என்று அலெக்ஸ்ஹெய்ல் தன்னுடைய The Roots என்றும் நூலில் கூறுகிறார்.அடிமைகள் (சூத்திரர்) கடவுளின் பாதத்திலிருந்து பிறந்தவர்கள் அவர்கள் பிறப்பாலே இழிந்தவர்கள். பிராமணர், ஷத்திரியர், வைஷியர் இட்டப் பணியை ஏற்றுப் நடப்பதே அவர்கள் தலைவிதியாகையால் அதனை அவர்கள் எதிர்க்கவோ, மாற்றவோ முடியாது என்று சாதி இந்துக்கள் நம்பி நடத்தினர். அவர்களுக்கு கடவுள் இட்ட ஒரே வழி மரணத்திற்கு பின் தன் ஆன்மாக்கள் மறுபிறவியில் ஒரு தலைசிறந்த நிலையினை அடையலாம் என்ற நம்பிக்கையில் தன் இழிநிலையையும், தண்டனையையும் மிகப் பொறுமையுடன் சகித்து கொண்டு வாழ வேண்டாம் என்று போதிக்கப்பட்ட, அவர்களை அடக்கி ஆண்டவர்கள் மிக இழிந்த நிலைக்கு அவர்களை தாழ்தியதோடு நில்லாது, அடிமைகள் தம்மை இவ்இழிநிலைக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கிய அநீதியான சமூக அமைப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் எண்ணத்தைக் கூட அகற்றி வைத்தனர்.
ரோமிலும், கிரேக்கத்திலும், பரசீகத்திலும், பண்டைய இந்தியாவிலும் அடிமைகளை எவ்வாறு எவ்வளவு குரூரமாக நடத்தினார்கள் என்பதை இன்று நினைத்தாலும் வேதனை பொங்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை எடுத்து போதித்த அரபு நாட்டின் நிலையோ அடிமைத்தனம் பேணுவதில் எந்நாட்டவர்களுக்கும் சளைத்தவர்களாக இருந்ததில்லை. அச்சூழ்நிலையில் மனித குலத்தின் அருட்கொடையாக வந்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்த மார்க்கம் அடிமைத்தனத்தை நிறுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டது.
கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட ஒட்டு மொத்த குடும்பத்தையுமே அடிமைப்படுத்தி அவர்களைக் கொண்டு கடினமான வேலைகள் வாங்கியும், அவர்களுடைய சம்பாத்தியத்தை அனுபவிக்கவும் செய்திருந்த ஒரு சமூகமாயிருந்தது அரபு சமூகம். அத்தகைய சமூகத்தில் இஸ்லாம் அடிமைத்தனத்தை உடனே தடை செய்யாமல் படிப்படியாக குறைத்து முடிவு நிலைக்கு கொண்டு வந்தது. நேரடியாக தீடிரென்று அடிமைத்தனத்தை தடை செய்யுமாயின் அது சுய சமூகத்தில்; மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அல்லாமல், பிற சமூகத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதாலே அடிமைத்தனத்தை திடிரென்ற தடை செய்யாமல் நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்தது.
  அடிமைகளைப் பேணுதல்  
நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்த இஸ்லாம் அவர்களை எவ்வாறு பேண வேண்டும் என்று சில வரைமுறைகளை வகுத்துத் தந்தது.
'தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினகளக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமையுடையோர்களாக இருப்பவர்களை நேசிப்பதில்லை (4:36)
'உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்களே. எனவே யார் தனது ஆதிக்கத்தில் ஒரு சகோதரரைப் பெற்றிருக்கினறரோ அவர் தாம் உண்பது போலவும் உடுப்பது போலவும் தமது சகோதரருக்கும் உண்ணவும் உடுக்கவும் கொடுக்க வேண்டும். அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட எதையும் செய்யுமாறு அவர்களைக் கேட்க வேண்டாம். அப்படியான எதையும் செய்யம் படி கேட்டால் அதில் அவர்களுக்கு உதவிபுரியுங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசித்துள்ளார். (புகாரி)
உங்களில் எவரும்'இவன் எனது அடிமை', 'இவள் எனது அடிமைப்பெண்' என்று சொல்லக்கூடாது பதில் 'இவர் எனது ஆள்' என்றும் 'இவள் எனது பணிப்பெண்' என்றும் சொல்ல வேண்டும் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்துள்ளார்கள். இன்னும்
'யார் தனது அடிமையைக் கொல்கிறாரோ அவரை நாம் கொல்வோம். அவரது மூக்கை அங்கவீனப்படுத்துபவரின் மூக்கை நாம் அறுப்போம், அடிமைக்கு விதையடிப்பவரை அதற்குப்பதில் நாம் விதையடிக்கச் செய்வோம்' என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
அடிமைகளுக்கு விதையடித்து பாலியல் உணர்வுகளை நசித்து மிருகங்களைப் போல் நடத்திவந்த காலச் சூழ்நிலையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விவாக பந்தம் ஏற்படுத்திக் கொடுக்கக் கூட இஸ்லாம் கட்டளையிட்டது.
உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண் பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள் (24:32)
'தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக விபச்சாரத்திற்கு (அவர்களை) நிர்பந்திக்காதீர்கள்' (24:33) என்றும் கட்டளையிட்டது.
இன்னும் அடிமைகள் தங்கள் உணர்வுகளை தவறான வழிகளில் தணித்துக் கொள்ளும் வகையில் சென்றடாதிருக்க அவர்களின் உணர்வுகளை மதித்து விவாகம் செய்து வையுங்கள். அல்லது நீங்களே திருமணம் செய்து கொள்ளுங்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:25) என்றும் போதிக்கப்பட்டது.
இணைவைக்கும் ஒரு பெண் உங்களை கவரக்கூடியவர்களாக இருந்த போதிலும் அவளைவிட மூஃமினான ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவன் ஆவாள் (2:221) என்று கூறி அடிமைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு சம அந்தஸ்தையும் வழங்கியது.
அடிமைகளை கண்ணியத்தோடு பேணினாலும், அடிமைத்தனத்தை முற்றாக தடை செய்யாமல் போர்க்கைதிகளை மேலும் மேலும் அடிமைகளாக்கி வைத்துக் கொண்டது ஏனென்றால்: தூதரின் கால கட்டத்திலும் சரி பின் சில கால கட்டங்களிலும் சரி யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைத்துக் கொண்டதென்றால் அது எதிரி நாட்டார்கள் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இரு நாடுகளுக்கு மத்தியில் போர் மூண்டால் பிடிபட்ட யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைப்பதும், சித்திரவதை செய்து கொல்வதுமான பழக்கம் பழங்காலந்தொட்டு நிலவி வந்தது.
UNIVERSAL HISTORY OF THE WORLD என்னும் வரலாற்று கலைக்களஞ்சியத்தில் (PAGE 2273) பின்வரும் நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. '599-ம் ஆண்டில் ரோம சக்ரவர்த்தி ஆண்டில் மாரியஸ் போர்களில் தன் படைகள் கைப்பற்றிய இலட்சக்கணக்கான கைதிகளில் ஒரு சிலரைக் கூட விடுதலை செய்ய மறுத்துவிட்டான். பதிலாக அவர்கள் அனைவரையும் வாளுக்கு இறையாக்கினான். இவ்வாறு செய்யக் காரணம் அவர்களை வாழ விடுவதை விடக் கொன்றுவிடுவதே சிக்கனமானது என்ற அவன் கருதியதாகும்'.
யுத்தக் கைதிகளை கூட்டதோடு கொன்று குவிக்கும் பழக்கம் பிற்காலத்திலும் தாராளமாக இருந்தே வந்தது. தேசத் துரோகிகள் என்றும் எதிரிநாட்டு உளவாளிகள் என்றும், எதிரி நாட்டு கைதிகள் என்றும் கூறி கொன்று குவித்த சம்பவங்கள் ஹிட்லரின் ஜெர்மனியிலும், முசோலினியின் இத்தாலியிலும் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளின் சொர்க்க பூமியாக இருந்த ரஷ்யாவிலும். அண்மையிலே கன்பூசியாவிலும் நடந்ததுண்டு. இத்தகைய கொடூரமான மிருகச் செயலை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ செய்ததில்லை.
(மூஃமீன்களே! வலிந்து உங்களுடன் போரிடவரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுக்களை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடுபெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். (47:4) என்று இறைவன் கூறுகிறான்.
இவ் இறைவசனத்தில் எதிரிகளை போர்க்களத்தில் வைத்து நேருக்கு நேர் போரிடும் போது மட்டும் வெட்டுங்கள் என்று கட்டளையிடுகிறது. போருக்குப்பின் போர்வீரர்களை கைதிகளாக பிடித்திருந்தால் அவர்களுக்கு பதிலாக ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டோ அல்லது உபகாரமாகவோ விடுவித்து விடுங்கள் என்று கூறுகிறது.
நபித்தோழர்களில் பிரசித்திப்பெற்ற இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு குர்ஆன் வியாக்யானிகளான ஹஸன் பஸரி, ஹம்மாத் இப்னு அபீசுலைமான் போன்றோர்கள் இவ்வசனத்தின் அடிப்படையில் போர்க்கைதிகளை கொல்வது கூடாது என்று ஃபத்வா வழங்கியுள்ளார்கள். அப்படியாயின் போர்க்கைதிகளை என்ன செய்ய வேண்டும். ஆயுட்காலம் முழுவதுமோ அல்லது சொற்ப காலமோ சிறையிலடைத்து வைக்க வேண்டும் என்றால் அத்தகைய சிறைச்சாலை வசதி ஏற்பாடுகள் எதுவும் அக்காலக்கட்டத்தில் இருந்ததில்லை. எனவே போர்க்கைதிகளை போர் வீரர்களுக்கு பங்கிட்ட வழங்கிவரும் வழக்கத்தை கையாண்டது. அடிமைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்கள் வேலைகளை வாங்கிக் கொண்டு அவர்களை பராமரித்து வந்தனர். இவர்களே அடிமைகளாக கருதப்பட்டு வந்தனர். இத்தகைய அடிமைத்தனத்தை நிர்பந்தத்தின் அடிப்படையில் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
முஸ்லிம்களுக்கும், எதிரிகளுக்குமிடையில் பலபோர்கள் நடைபெற்றன. இப்போர்களில் கைதிகளாக்கப்பட்ட பல முஸ்லிம்கள் எதிரிகளால் அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதோடு அக்காலத்தில் அடிமைகள் அனுபவித்த எல்லாவித இன்னல்களையும், அவர்களும் அனுபவிக்க நேர்ந்தது. பெண்மணிகளின் கண்ணியம் மிக மோசமாக பங்கப்படுத்தப்பட்டது. தந்தையும் மகனும், நண்பர்களுமாக பல ஆண்கள் ஒரே பெண்ணை பகிர்ந்து கொண்டனர். கைப்பற்றப் பட்ட குழந்தைகள் வெறுக்கத்தக்க இழிவான அடிமை நிலையில் வளர்க்கப்பட்டனர். இத்தகைய நிலைமைகள் அக்கால வாழ்க்கையில் நிலைத்துவிட்டதால் இஸ்லாத்தின் கைக்குள் வந்த எல்லா கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது சாத்தியமாகவில்லை.
கைது செய்யப்பட்ட முஸ்லிம்களும் அவர்களின் உற்றார் உறவினர்களும், பகைவர்களால் அடிமைகளாக்கப்பட்டு மிகக் கொடிய சித்திரவதைக்குள்ளும் மானபங்கப்படுதத்பபட்டுமிருந்தனர். இந்நிலையில் முஸ்லிம்கள் கைது செய்தவர்களை விடுதலை செய்வது, அடிமைப்பட்ட முஸ்லிம்களுக்குச் செய்யப்படும் கொடுமைகளுக்கு உற்சாக மூட்டவதாகவும் அமைந்திருக்கும். எதிரி நாட்டு போர்க்கைதிகளை அடிமைப்படுத்தாமல் விட்டுவிட்டாலோ அவர்கள் திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். நாம் வெற்றி பெற்றால் அவர்களை அடிமைப்படுத்தி அனுபவிக்கவும், கொடுமைப் படுத்தவும் செய்யலாம். நாம் தோற்றுவிட்டாலோ நம்மை முஸ்லிம்கள் கைது செய்யவம் மாட்டார்கள் அடிமைப்படுததவும் மாட்டார்கள் என்ற கருதி திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். எனவே மேலும் மேலும் போரைத் தவிர்க்க இஸ்லாம் மேற்கொள்ளத்தக்கதாக இருந்த ஒரே சிறந்த வழி தனது கைதிகளையும் அடிமைகளாக நடத்துவதாகும்.
பகைவர்கள் தாம் யுத்தங்களிற் சிறைப்படுத்தியவர்களைத் தொடர்ந்து பிடிவாதமாக அடிமையாக்கி வர இஸ்லாம் மட்டும் தனது போர்க்கைதிகளை அடிமைகளாக்குவதைச் தன்னிச்சையாக ஒழித்துவிட இயலாது. எனவே இதற்கு மாற்றுவழி இல்லாதவரையும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் யுத்தக் கைதிகளை அடிமைகளாகவன்றி வேறு விதத்தில் நடத்துவதற்கான ஓர் அடிப்படைப் பற்றி இணக்கம் காணும் வரை இஸ்லாம் அடிமைத்தனத்தை சகித்துக. கொள்ள வேண்டியதாயிற்று.
அரசு நடத்தும் போர் அல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை அடிமையாக்க முடியாது என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
  அடிமை விடுதலை  
இஸ்லாம் தன் வசமிருந்த எல்ல வழிவகைகளையும் பயன்படுத்தி அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி செய்ததேயன்றி கொள்கையளவில் கூட அதனை அங்கீகரிக்கவில்லை.
'பின்னர் ஓர் உதவியாக அவர்களை விடுதலை செய்து விடுங்கள் அல்லது யுத்தம் முடியும் வரை அவர்கள் பணங்கொடுத்து தம் விடுதலையைப் பெற்றுக் கொள்ள அனுமதியுங்கள் (47:4) என்று குர்ஆன் உபதேசிக்கிறது. இஸ்லாத்திற்காக நடந்த முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் கைது செய்யப்பட்ட சில கைதிகளை முஸ்லிம்களை மீட்பதற்குப் பதிலாக விடுதலை செய்தனர். அத்துடன் வேறு சிலரை கருணையின் நிமித்தம் விடுதலை செய்தனர்.
அடிமைகளைப் படிப்படியாக ஒழிக்க திட்டமிட்ட இஸ்லாம் முதலாவதாக எல்லோருமே அல்லாஹ்வின் அடிமைகள் என்ற உணர்வை மக்களிடையே பரப்பி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இறைவனை வழிப்படுவதில் எள்ள ஏற்றத்தாழ்வின் மூலமமேயன்றி வேறு எதிலும் கணிக்க முடியாது. இஸ்லாமிய வாழ்க்கை முறையை நம்பி அதை ஏற்று வாழும் யாவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்தது. மக்கள் மனங்களில் அன்பு, ஆதரவு அரவணைப்பு, ஆறுதல் கூறல் போன்ற அருட்குணங்களை வளர்த்து அப்போதிருந்த அடிமைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடாமல் அவர்களை அன்போடும், பண்போடும் நடத்தச் செய்தது. அடிமைகளை விடுவித்தல் இதை அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான ஒரு செயலாக அறிமுகம் செய்து இறைநேசர் பலரும் தம்மிடமிருந்த அடிமைகளை விடுதலை செய்ய வைத்தது.
'(நன்மை தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். ஆயினும் அவன் கணவாயைக் கடக்கவில்லை.
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும் (அது) ஒர் அடிமையை விடுவித்தல்...' என்று குர்ஆன் (90:10,14) போதித்தது.
ஒரு சமயம் நபித்தோழர் அபூதர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். 'அடிமைகளை விடுவித்தலில் மிகச் சிறப்பானது எது? என்ற அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எஜமானனின் மிகவும் விலையுர்ந்த அடிமைகளை விடுவித்தலாகும்' என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
பல்வேறு குற்றங்களுக்கும், பாவச் செயல்களுக்கும் தண்டனையாக அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்னும் சட்டத்தையும் கூறி அடிமைகளை விடுவிக்க ஏற்பாடுகளை செய்தது. உதாரணமாக
1. ஒரு முஸ்லிம் தன் மனைவியுடன் பாலுறவு கொள்வதன் மூலம் தன் நோன்பை முறிப்பாராயின் இச்செயலுக்கு தண்டனையாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
2. அவ்வாறே ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மனைவியுடன் பாலுறவு கொண்டாலும் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
3. ஒரு முஸ்லிம் தன் மனைவித் தன் தாய் போன்றிருக்கிறாள் என்ற ஒப்பிட்டுக் கூறினால் இது ஒரு தீயப் பேச்சாகக் கருதப்படுகிறது. இக்குற்றத்திற்கு பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும் என்றது.
-இத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவத அல்லாஹ்வின் அன்பைப் பெறுதலுக்குரிய மிகச் சிறந்ததோர் செயலாகும் என்றும். உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அவ்வடிமையை உரிமை விட்டவனை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற உதவும் என்றும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்ட ஆரம்ப கால முஸ்லிம்கள், தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல இயன்றளவு அடிமைகளை விலைகொடுத்து வாங்கியும் உரிமையிட்டடார்கள். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளதாகவும், அவர்களின் அருமை மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்ததாகவும் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
அடிமைத்தளையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பொருளோ, பணமோ தேவைப்படும் அடிமைகளுக்கு ஜகாத் நிதியிலிருந்து கொடுத்தும் அவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது (பார்க்க குர்ஆன் 9:60)
இஸ்லாம் அடிமைத்தனத்தை ஆதரிக்கவில்லை. அடிமைத்தளையை அறுத்தெரியவும் மனிதனுடைய சமத்துவத்தைக் காக்கவும் அக்கரை எடுத்துள்ளது.
ஆக்கம் எழுதியவர் - அபூ ஆஸியா

Thursday, December 20, 2012

கஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் வஃபாத்தானார்!



கஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் வஃபாத்தானார்!(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
1968 முதல் கஃபதுல்லாஹ்வின் அனைத்து மார்க்க காரியங்களுக்கும் பொறுப்பாளியாக நியக்கப்பட்டு, நீண்ட காலம் கஃபதுல்லாஹ்வில் இமாமாக இருந்த, முன்னாள் இமாம் "அஷ்ஷைக் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்ஸபீல்" நேற்றுமுன்தினம் (17/12/2012)வஃபாத்தானார்.
நேற்று "அசர்"க்குப்பிறகு கஃபதுல்லாஹ்வில், "ஜனாசா தொழுகை" நடத்தப்பட்டு "அல்-அத்ல்" கபரஸ்தானில் அடக்கம் செய்ய்யப்பட்டார்.
அவருக்கு வயது 89. அரபுலக மார்க்க பிரச்சாரகரான அவர், 1923ல் சவூதி அரேபியாவின் "அல்பகீர்" நகரத்தில் பிறந்தார்.
தனது தந்தை அப்துர்ரஹ்மான் அவர்களிடம் கல்வி கற்ற அவர், 1945ல் "அல்பகீரியா பிரைமரி ஸ்கூலில்" ஆசிரியரானார்.
பின்னர் 1951ல் "அல்புரைதா இன்ஸ்டிடியூட்டில்" பேராசிரியராக நியமிக்கப்பட்ட அவர், மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க (தனது 40வது வயதில்) 1963ல் கஃபதுல்லாஹ்வின் இமாமானார்.
1968 முதல் கஃபதுல்லாஹ்வின் அனைத்து மார்க்க காரியங்களுக்கும் பொறுப்பாளியாக நியக்கப்பட்ட அவர், மூன்றாண்டுகளுக்கு பின்னர் 1971 முதல் கஃபதுல்லாஹ் மற்றும் "மஸ்ஜிதுன்நபவி" ஆகிய இரு பள்ளிவாசல்களின் நிர்வாகக்குழுவுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டு, 29 ஆண்டுகள் அப்பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டார்.
நீண்ட காலம் கஃபதுல்லாஹ்வில் இமாமாக இருந்த, அவரது விருப்பத்தின் பேரில், கடந்த 2000ம் ஆண்டு முதல், பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கப்பட்டு ஓய்விலிருந்தார்.

Monday, December 17, 2012

சூனியம் - ஒரு பார்வை!!


விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. மக்கள் சிந்திக்கத் தவறியதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் 'சூனியம்' என்பதும். ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டால் போதும், அந்த சூனியத்தின் மூலமாக அவனைக் கொல்லவோ, கை கால்களை முடக்கவோ, தீராத நோய்களை உண்டாக்கவோ முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இன்னும் சூனியத்தால் பல அற்புதங்கள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.
இவர்கள் நம்புவது போன்று சூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்றிருப்பின், தமக்குப் பிடிக்காத ஒரு சாரார் மற்றொரு சாராரை சூனியம் செய்து கொன்று விடலாமல்லவா? ஏன் கத்தி களையும், தடிகளையும் பெரும் ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு கலவரம் செய்து கச்சேரி செல்ல வேண்டும்? சரி, குறைந்த பட்சம் சூனியம் செய்பவர்கள் அவர்களின் தொழிலிற்கு இடைறாக இருப்போரையாவது கொன்று சூனியத்தின் சக்தியை நிரூபிக்கலா மல்லவா? பலர் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அது ஏன்? எப்படி? என்று நமக்குச் சந்தேகம் எழுவது எதார்த்தமானதே.! இதை நாம் நன்றாக அறிந்து கொண்டால் இவ்வாறு ஏற்படும் சந்தேகங்களைத் தவிர்க்கலாம். சூனியம் என்பது மனதைக் குழப்பும் ஒரு கலை, இந்த கலையைச் செய்வதால் அவர்கள் மனக்குழப்பத்திற்கு உள்ளாகி சூனியத்தின் பெயரால் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் எவ்விதப் பாதிப்பையும் சூனியம் ஏற்படுத்துவதில்லை.
ஒரு மனிதன் நன்றாகவே இருப்பான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. அவனிடம் எவனாவது உனக்கு இன்ன ஆள் சூனியம் செய்து விட்டான் என்று மட்டும் கூறிவிட்டால் போதும், அவன் தன் மனதில் பல கற்பனைகளை வளர்த்து குழப்பமடைந்து தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று எண்ணும் காரணத்தால் இவனாகவே பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறான். உண்மையை அறிய வேண்டுமானால் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் ஒருவனைச், சோதிப்பதற்காக உனக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லிப் பாருங்களேன்! அன்று முதலே அவன் அதிர்ச்சியில் அலைவதைக் காண்பீர்கள். சூனியம் மனிதனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சுத்தப் பொய். இதைத் தெளிவாக தெரிந்தும் கூட மார்க்க அறிஞர்கள் என்று பெருமையடித்துக் கொள்பவர்கள் தகடு, தாயத்து, முட்டையில் எழுதுதல், அஸ்மா வேலைகள் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். இறைவனுடைய பாதையைவிட்டும் மக்களை வழிதவறச் செய்கின்றனர். இந்த லெப்பைகள் தங்கள் தொப்பைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மனித இனத்தை வழிகெடுப்பதைப் பார்க்கும் சிலர் இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்று எண்ணுகிறார்கள்.
அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளட்டும், இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்பது கடுகளவும் கிடையாது. இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திற்குப் பின்பு ரூதர்கள் தங்கள் கைச்சரக்குகளை முஸ்லிம் மக்கள் மத்தியில் புகுத்தியதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன. ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற்கு ஏற்பச் சட்டங்களை வளைத்துக் கொள்வது இஸ்லாமியச் சட்டமாகவோ கொள்கையாகவோ ஆகிவிடாது. இறைவனால் கொடுக்கப்பட்ட குர்ஆன் கூறுவதும்; அவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காண்பித்த வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும். சூனியம் செய்து மூட நம்பிக்கைகளை உண்டாக்கி வழி கெடுப்பது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சூனியம் என்பது ஒரு கலை தானே, அதை ஏன் இஸ்லாம் தடைசெய்கிறது என்று நமக்குச் சந்தேகம் எழலாம். நன்மையான செயல்களை உண்டாக்கும் கலை என்றால் அதை இஸ்லாம் நிச்சயம் தடை செய்திருக்காது. ஆனால் சூனியக்கலை மக்களை இறை நிராகரிப்பிற்கு இழுத்துச் செல்வதாலும் மக்கள் ஏமாற்றப்படுவதா லும் இஸ்லாம் அதைத் தடை செய்கிறது. கண்களை ஏமாற்றுவதே சூனியம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எதிர்ப்பதற்காக பிர்அவ்ன் சூனியக் காரர்களை ஒன்று திரட்டினான். அவர்கள் செய்த சூனியம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
(அவர்கள் எறிந்த) கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் தோன்றியது. (அல்குர்ஆன் 20.66) அந்த சூனியக்காரர்கள் எறிந்த கயிறுகளும், தடிகளும் பாம்புகளாக மாறவில்லை; பாம்புகள் போன்று தான் காட்சியளித்தன என்று இறைவன் தெளிவாகக் கூறுகின்றான். இந்த வசனத்தில் இறைவன்''யுகய்யலு'', என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யுள்ளான். இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பித்தல், மாயையை ஏற்படுத்துதல் என்பது இதன் பொருளாகும்.
சூனியம் (ஸிஹ்ர்) என்ற கலையின் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பிக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அப்படியானால் அதைக் கொண்டு ஏதும் தீங்கு செய்ய முடியுமா என்ற ஐயம் வரலாம். சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20.69) ''கணவன் மனைவி இடையே பிரிவினையை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.'' (அல்குர்ஆன் 2.102) என்னதான் சூனியம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது என்பது இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது. அப்படியே அது தீங்கு செய்தாலும் மனதில் குழப்பத்தை உண்டாக்கி, கணவன் மனைவிக் கிடையே பிரிவினையைத்தான் உண்டு பண்ண முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதையும் இந்த வசனத்தில் இறைவன் தெளிவாக்கி விட்டான்.
ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க ஏற்படுத்திய சசூழ்ச்சிகளில் ஒன்றுதான் சூனியம் என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் குழப்பம் ஏற்படாது. நீ என்னைக் கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமின் சந்ததியினரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன். பின்பு நிச்சயமாக நான் அவர்கள் முன்பும், அவர்கள் பின்பும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (வழிகெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் கையாண்டு அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக காணமாட்டாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:16,17) உன் கண்ணியத்தின் மீது ஆணையாக, அவர்களில் அந்தரங்கச் சுத்தியான உன் அடியார்களைத் தவிர நிச்சயமாக அவர்கள் யாவரையும் நான் வழிகெடுப்பேன் என்றும் (இப்லீஸ்) கூறினான். (அதற்கு) அதுவே உண்மை; உண்மையையே நானும் கூறுகிறேன். நிச்சயமாக உன்னைக் கொண்டும், உன்னைப் பின்பற்றுவோர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன் என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன் 38:82-85)
மனிதனை வழிகெடுத்து நரகத்தில் சேர்ப்பதற்கான வழிகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஷைத்தான் கையாண்டு வழிகெடுப்பான் என்பதும் அதற்கு இறைவனும் அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டான் என்பதும் மேற்காணும் வசனங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது. இன்று ஷைத்தான் பல வழிகளிலும் மனிதனுடைய உள்ளத்தில் ஊடுருவி வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றான். அவற்றில் ஒன்று தான் சூனியம் என்பது. ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். (அல்குர்ஆன் 2:102) ஷைத்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து அந்த சூனியக்காரர்களுக்கு அவன் உதவி செய்யும் காரணத்தால்தான் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி கணவர் மனைவியிடையே பிரிவினையை உண்டாக்க முடிகிறது. மனதில் குழப்பத்தை உண்டாக்குவதில் ஷைத்தான் மிகத் தீவிரமானவன், திறமையானவன்! எனினும் (ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய) அவ்விருவருக்கும் மறைந்திருக்கும் அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையே ஆட்டிப் பார்த்த அவனுக்கு, பிற மனிதர்களை வழிகெடுப்பது ஒன்றும் கடினமல்ல. பிறருடைய உள்ளத்தில் ஊசலாட்டம் செய்வது, அவனுக்கு இலகுவான செயல்! அந்த அடிப்படையில் சூனியத்தின் மூலம் மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி அவர்களைக் கோவில், தர்கா, போன்ற இடங்களுக்கோ அல்லது சூனியக்காரன் வசிக்கும் இடத்திற்கோ இழுத்துச் சென்று இறைமறுப்பாளர்களாக ஆக்கி தன் இலட்சியத்தில் வெற்றி காண்கிறான். இதை அறியாத மக்கள் அவனுடைய அச்சசூழ்ச்சிக்குள்ளாகி தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்கின்றனர். ஷைத்தானுடைய சூழ்ச்சி எப்படி இருப்பினும் உண்மையான இறை நல்லடியார்களிடம் அது செல்லாது என்பதையும் 38:33 வது வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.
''சூனியம், ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று'' நல்லடியார்களிடம் ஷைத்தானுடைய சூழ்ச்சி செல்லாது என்றால் இறைத்தூதர் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏன் சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்ற ஐயம் இப்போது நமக்கு வந்திருக்கும். ஆம்! இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை தான். அதன் விளைவாக அவர்கள், தாம் செய்த வேலையைச் செய்யவில்லை என்றும், தாம் செய்யாத ஒன்றைச் செய்தது போன்றும் எண்ணிக்கொண்டு சிறிது காலம் மனத்தடுமாற்றத்தில் இருந்தார்கள். தாம் சூனியம் செய்யப்பட்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் தான் வானவர்கள் மூலம் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு தீர்வையும் கூறினான் என்பதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் வாயிலாக அறிகின்றோம். இறைத்தூதர் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்கள், தாம் செய்யாத ஒரு செயலைச் செய்திருப்பதாக அவர்களுக்கு(குறுகிய காலத்தில்) மாயை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி)
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் செய்யாத செயலைச் செய்தது போன்று மாயை ஏற்படும் அளவிற்கு அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் பிரார்த்தனை செய்த வாறு இருந்தார்கள். அதன் பிறகு : ''என்(மீது செய்யப்பட்டுள்ள சசூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ, அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு நபர் (இருவானவர்களான ஜிப்ரயிலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரயில்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என் கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் ''இந்த மனிதரை பீடித்துள்ள நோய் என்ன'' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்) ''இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். அதற்கு அவர் ''இவருக்கு சசூனியம் செய்தது யார்?'' என்று கேட்டார் .அவர்(பதிலுக்கு) ''லபீத் இப்னு அஃஸம் (என்னும் ரூதன்)'' என்று பதிலளித்தார். ''(அவன் சூனியம் வைத்தது) எதில்?'' என்று அவர்(மீக்காயில்) கேட்க அதற்கு, ''சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண்(பேரிச்சம்) பாளையின் உறையிலும்'' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ''அது எங்கே இருக்கிறது'' என்று கேட்க, ''(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்'' என்று பதிலளித்தார்கள் என்று, இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், ''அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன'' என்று கூறினார்கள். நான், ''அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே(சூனியக்கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது. (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி)
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சூனியம் வைத்ததும் அது நிகழ்ந்ததும் உண்மையென்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என்பதைச் சிந்திக்கத் தவறி இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே சூனியம் பாதித்துவிட்டது என்றால் அது நம்மை விட்டு வைக்குமா என்று மட்டும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் இறைவன் நமக்கு ஏராளமான படிப்பினைகளைத் தந்துள்ளான். நாம் அவற்றைக் கவனிக்க வேண்டும். 1. சூனியம் என்பது மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்துவிடாது. 2. இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மனிதர்தான். அவர்கள் இறைத்தன்மையைப் பெற்றவரோ, வானவர்களின் பண்புகளைப் பெற்றவரோ இல்லை. இறைத்தூதர் என்பதால் மனிதர்களில் உயர்ந்தவர் என்ற சிறப்புதான் அவர்களுக்கு உண்டு. 3. ஒருவன் மற்றொருவனுக்கு, சூனியம் செய்துவிட்டால், அதை சசூனியம் செய்யப்பட்டவன் அறிந்து கொள்ள முடியாது அல்லது மற்றொரு சூனியக்காரனிடம் சென்று கேட்டாலும் அவனும் அதை அறிந்திருக்க முடியாது. அப்படி யாரும் அறிந்து கொள்ள முடியும் என்றிருப்பின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் முதலில் அதை அறிந்திருக்க முடியும். அவர்களுக்கே அல்லாஹ்தான் தன் வானவர்கள் மூலமாக அறிவித்தான்.
ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டான் என்பதை சசூனியம் செய்தவனும் அல்லாஹ்வும் மட்டுமே அறிய முடியும். எனவேதான் சூனியம் செய்யப்பட்டிருப்போமோ என்று எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. 4. அப்படியே தனக்கு சூனியம் செய்யப்பட்டதை ஒருவன் அறிந்து கொண்டாலும், அதற்கான தீர்வு உலகத்தில் எங்கும் கிடையாது. அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே அவனிடமே பாதுகாப்பு தேட வேண்டும். சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் ஆகிய அத்தியாயங்களை அருளி இறைவன் தன்னிடம் மட்டுமே ஒவ்வொரு தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுமாறு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்கள் சமுதாயத்தினருக்கும் கட்டளை யிட்டுள்ளான். இறைவன் காட்டித்தந்துள்ள, தீர்வை விட்டு விட்டு நாம் நமது விருப்பத்திற்கு இணங்கி கோவில், தர்கா போன்ற இடங்கள் சென்று தீர்வைத் தேடினாலோ மற்றொரு சூனியக்காரனிடம் சென்று தீர்வைக் கேட்டாலோ நிச்சயம் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் இறைவனிடம் தண்டனை கிடைக்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை.
வானவர்கள்தான் மனிதர்கள் மத்தியில் சூனியத்தை பரப்பினார்கள் என்றும் ஒரு கதை கட்டி விடப்பட்டுள்ளது. வானவர்கள் ஒரு போதும் சூனியத்தைப் பரப்பவில்லை என்ற விஷயத்தை 2:102 வசனத்தின் விளக்கவுரைகளை நன்றாகக் கவனிக்கும் போது நம்மால் கண்டு கொள்ள முடியும். இந்த அளவிற்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கி மக்களைக் கெடுக்கும் சூனியத்தை எவன் செய்கின்றானோ அவன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். இப்பெரும் பாவத்திலிருந்து இறைவன் மனித இனத்தைக் காப்பானாக!
நன்றி: நதியலை

Saturday, December 1, 2012

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு


children
உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும்.
S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும் மானசீக உறவுக்குத் தடையாக இருக்கின்றனர். உதாரணமாக, தந்தை அடிக்க முற்பட்டால் உடனே 555 இற்கு போன் செய்தால் காவல் துறை வீட்டில் வந்து நிற்கும் என்று சட்டம் போட்டால் பெற்றோர் எப்படி பிள்ளைகளைத் திருத்த முடியும். பெற்றோருக்குப் பிள்ளைகள் விடயத்தில் இருக்கும் உரிமைகள் என்ன? என்ற கேள்வி எழும்.
மற்றும் சிலர் சட்டம் இருக்கின்றதோ இல்லையோ பாசத்தின் பெயரில் குழந்தைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாதிருந்து விட்டு தவறுகள் பெருத்த பின்னர் கவலைப்படுகின்றனர்.
இது இப்படியிருக்க, குழந்தைகளைத் தண்டிக்கும் சிலர் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். குழந்தைகளை நல்வழிப் படுத்தல் என்பதுதான் தண்டனையின் நோக்கம். தண்டிக்காமலேயே வழிகாட்டுவதன் மூலம் அந்த இலக்கை அடையமுடியுமாக இருந்தால் தண்டனை இல்லாமலேயே நல்லுபதேசத்தின் மூலமே அடைய முயற்சிக்க வேண்டும்.
சிலர் தமது கோபத்தைத் தீர்ப்பதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் கையில் கிடைத்ததை எடுத்து தண்டிக்கின்றனர். இல்லையில்லை தாக்குகின்றனர். இது குழந்தைகளை நல்வழிக்குட்படுத்துவதற்குப் பதிலாக மனரீதியில் பாதிப்படையச் செய்யலாம். வீட்டை விட்டு வெருண்டோட வைக்கலாம். போதை, தீய நட்பு, கெட்ட பழக்க வழக்கங்கள் போன்ற தவறுகளுக்கு உள்ளாக்கலாம். இத்தகைய தண்டனை முறையை இஸ்லாமும் ஏற்காது. இதயத்தில் ஈரமுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். எனவே தண்டித்தல் குறித்த சில வழிகாட்டல்களை வழங்குதல் நல்லதெனக் கருதுகின்றேன்.
1. கோபத்தில் இருக்கும் போது தண்டிக்காதீர்கள்:
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்பார்கள். அதனால்தான் கோபப்பட்டவர் வீட்டில் பொருட்களை, கண்ணாடியை யெல்லாம் உடைப்பதைப் பார்க்கின்றோம். கோபத்தில் நாம் பேசினால் நமது பேச்சு சரியாக இருக்காது. தண்டித்தால் அது நியாயமாக இருக்காது. சின்னக் குற்றத்திற்குப் பெரிய தண்டனையளித்து அநியாயம் செய்துவிடுவோம். எனவே, உங்கள் கோபம் தணியும் வரையும் இருந்து நீங்கள் நிதானத்திற்கு வந்த பின்னர் நிதானமாகத் தண்டியுங்கள்.
நமது பெற்றோர்கள் சிலரின் செயற்பாடு ஆச்சர்யமாக இருக்கின்றது. மூத்தவன் இளையவனைத் தள்ளிவிட்டான். இளையவனின் தலையில் இரத்தம் வடிகின்றது. பாதிக்கப்பட்ட இளையவனைக் கவனிப்பதற்கு முன்னர் மூத்தவனுக்கு நாலு மொத்து மொத்தாவிட்டால் இவர்களுக்கு ஆத்திரம் அடங்காது. இதனால் தவறு செய்த பிள்ளை அடிக்குப் பயந்து ஓடி வேறு பிரச்சினைகளைத் தேடிக் கொண்டு வருகின்றது. பிறகு இரு குழந்தைகளுக்குமாக மருத்துவம் செய்ய வேண்டிய நிலை பெற்றோருக்கு!
எனவே, தண்டிப்பதிலும் நிதானமும் நியாயமும் தேவை. எனவே, கோபத்தில் இருக்கும் போது தண்டிப்பதைத் தவிருங்கள். நிதானமான நிலையில் தண்டியுங்கள். கோபம் அடங்கிய பின்னர் எப்படி தண்டிப்பது என்று கேட்கின்றீர்களா? குழந்தை இதன் பிறகு இந்தத் தவறை செய்யக் கூடாது என்று உணரும் அளவுக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்து வதற்காகத் தண்டியுங்கள். கோபத்தைத் தீர்ப்பதற்காகத் தண்டிப்பதென்றால் அது முறையான தண்டனையல்ல.
2. சதா தண்டிக்காதீர்கள்:
சில பெற்றோர் எப்போதுமே பிள்ளைகளை திட்டித் தீர்த்துக் கொண்டே இருப்பார்கள். சதாவும் தண்டித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு நடந்து கொண்டால் எமது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு எழாது. தவறில் பிடிவாதமும் முரட்டுத்தனமும் உண்டாகும். வெளியிடத்தில் கூட தவறு செய்து அடிவாங்குவது அவர்களுக்குப் பெரிய பாதிப்பாகத் தெரியாது. நாம் வாங்காத அடியா, கேட்காத ஏச்சா என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் வாழ்நாளிலேயே திருந்தமாட்டார்கள். எனவே, எப்போதாவது ஏதாவது பெரிய தவறுகளுக்காக மட்டும் தண்டியுங்கள். சின்னச் சின்னப் பிழைகளைத் திருத்துங்கள். அப்போது அடியென்றால் பயப்படுவார்கள். ஏச்சு என்றால் கூச்சப்படுவார்கள்.
3. வன்முறை வேண்டாம்:
குழந்தைகளைக் கண்டிக்கும் போது காயம் ஏற்படாவண்ணம் இலேசாகத் தண்டிக்க வேண்டும். கல் மனதுடன் நடந்து கொள்ளக் கூடாது. என் பெற்றோர் தண்டித்தாலும் என்னுடன் பாசத்துடன்தான் இருக்கின்றனர் எனக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். கடுமையான தாக்குதல்களால் குழந்தைகள் குடும்பத்தின் எதிரிகளாக மாறுவர். தகாத உறவுகளை ஏற்படுத்தி தம்மைத் தண்டித்த பெற்றோர்களை இழிவுபடுத்துவர்.
4. தண்டித்தல் என்பது இறுதி முடிவாக இருக்கட்டும்:
எடுத்ததற்கெல்லாம் அடிக்காமல் புத்தி சொல்லுங்கள். சிலபோது கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துங்கள். சிலபோது அவர்களது தவறுகளால் நீங்கள் வருத்தப்படுவதை நடைமுறையில் காட்டுங்கள். பிள்ளை தானாக மனம் இறங்கி நான் செய்த தவறால் பெற்றோர்கள் வருந்துகின்றார்கள் என்று தன்னை மாற்றிக் கொள்ளலாம். இவையெல்லாம் பலனளிக்காத போது இலேசாக அடியுங்கள். எடுத்ததும் கடுமையாகத் தாக்கி விடாதீர்கள்.
5. தண்டிப்பதிலும் நீதி நியாயம் வேண்டும்:
தவறுக்கு ஏற்ற தண்டனையே வழங்க வேண்டும். தண்டனை முறையில் கூட பிள்ளை படிப்பினை பெற வேண்டும். மகன் தவறுதலாக ஒரு கோப்பையை உடைத்துவிட்டான். இதற்காக தந்தை அடிக்கிறார். அதே மகன் ஒரு ஹறாத்தைச் செய்துவிட்டான். இப்போது கோப்பைக்காக அடித்ததை விட குறைவாக அடி என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஹறாத்தைச் செய்வதை விட கோப்பையை உடைத்ததைத்தான் எனது தந்தை பாரதூரமாகக் கருதுகின்றார் என்ற எண்ணத்தையும் குழந்தையின் உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகின்றோம். இது எவ்வளவு பெரிய தவறு என்று சிந்தித்துப் பாருங்கள். எனவே, தண்டனை நீதியானதாக, நியாயமானதாக, தவறின் அளவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
6. தண்டனையை சேமிக்காதீர்கள்:
சில பெற்றோர் பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருப்பார்கள். நாலைந்து தவறுகளை ஒன்றாக சேர்த்து எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாக அடிப்பார்கள். இது குழந்தைகளுக்கு அதிக வேதனையைக் கொடுக்கும். எல்லாத் தவறுக்குமாகக் கிடைக்கும் அடியெனப் பார்க்காமல் ஒரு தவறுக்கு இப்படி அடிக்கிறார்களே என பெற்றோர்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவர். எனவே தவறுக்கு அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் தவறு நடந்தவுடன் அடித்து அதை அந்த இடத்திலேயே மறந்துவிட்டு சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.
7. நிரபராதிகளைத் தண்டிக்காதீர்கள்:
குழந்தைகள் தண்டனையிலிருந்து தப்புவதற்காகப் பொய் சொல்வார்கள். அடுத்தவர்களை மாட்டி விடுவார்கள். ஒரு தவறு நடந்து பின்னர் தான் தப்ப வேண்டும் என்பதற்காக அடுத்தவரை மாட்டிவிடுவர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குற்றத்தைக் குறித்த நபர் செய்தது உறுதியாகாத வரை தண்டிக்கக் கூடாது. தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்டால் குழந்தைகளின் உள்ளம் நொறுங்கிப் போகும். குறித்த நபர் தவறு செய்தது உறுதியாகாத சந்தர்ப்பங்களில் பொதுவாகப் புத்தி சொல்வதோடு விட்டுவிட வேண்டும். நிரபராதியைத் தண்டித்துவிட்டால் குழந்தையென்று பார்க்காமல் மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்.
8. மறதி, தவறுதல், நிர்ப்பந்த நிலை என்பவற்றை மன்னியுங்கள்:
தவறுதலாக அல்லது மறதியாக இடம்பெறும் தவறுகள் அல்லது நிர்ப்பந்த நிலையில் நிகழும் குற்றங்களுக்கு மன்னிப்பு அளியுங்கள். அல்லாஹ் இத்தகைய நிலைகளை மன்னித்துள்ளான். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் புத்தி சொல்வதுடன் விட்டுவிடுங்கள்.
9. உற்சாகத்திற்கு தண்டனையா?
சில பெற்றோர் பிள்ளைகள் ஓடியாடி விளையாடும் போது எரிச்சல்பட்டு பேசாம ஒரு இடத்தில இரு என்று கண்டிப்பார்கள். குழந்தைகள் என்றால் ஓடியாடி விளையாடத்தான் செய்வார்கள். இதையெல்லாம் தவறு என்று தண்டிக்கக் கூடாது. எனவே, இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களை ஒழுங்குபடுத்துங்கள்.
10. பிரச்சினைகளைக் கவனிக்காமல் தண்டிக்காதீர்கள்:
ஒரு பாடத்தில் குழந்தை குறைந்த புள்ளி எடுத்துள்ளது அல்லது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறவில்லை போன்ற சந்தர்ப்பத்தில் குழந்தையை வையாதீர்கள். குழந்தையின் பின்னடைவுக்கு குழந்தை மட்டும் காரணமாக இருக்காது. ஆசிரியரின் குறை இருக்கலாம். பாடம் முறையாக நடக்காதிருந்திருக்கலாம். மற்றவர்கள் விட்ட குறைக்கு குழந்தைகள் தண்டிக்கப்படலாமா? எனவே, குழந்தையின் குறையில் அடுத்தவருக்கும் பங்கு இருக்கும் போது அல்லது குழந்தையிடம் மானசீகப் பிரச்சினைகள் இருக்கும் போது குழந்தையைத் தண்டிக்காமல், ஏசாமல் நீங்கள் பிரச்சினையை இணங்கான முயற்சியுங்கள். பின்னர் குழந்தையை நெறிப்படுத்துங்கள்.
11. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டிக்காதீர்கள்:
குழந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டு இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று கூறினால் தண்டிப்பதை விட்டுவிடுங்கள். அதே போன்று அல்லாஹ்வுக்காக அடிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டால் அடிப்பதை நிறுத்திவிடுங்கள். தண்டிப்பது என்பது இனி இது போன்ற தவறைச் செய்யக் கூடாது என்று உணர்த்துவதற்காகத்தான். பிள்ளையே இனி இப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறிய பின் தண்டனை தேவையில்லையல்லவா?
இது போன்ற வழிமுறைகளைக் கையாண்டு தண்டிப்பின் உண்மையான பயனை அடைந்து கொள்ள முயல்வோமாக!
-Islam Kalvi-

Friday, November 30, 2012

ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம்


மார்க்க விடயங்களில் மிகவும் பேணுதலாக நடக்கும் ஒவ்வொரு கொள்கைவாதிகளும் சறுக்கி விழுகின்ற, தோற்றுப்போகின்ற ஒரு சம்பவம் தான் இந்தத்திருமணம் ஆகும். மார்க்க சட்டதிட்டங்களை பேசுவார்கள் பேணுவார்கள்.ஆனால் இந்த ஒரு விடயத்தில் மட்டும் மௌனியாவார்கள்.
ஒரு சுன்னத்தைப் பேணுவதற்காக பல ஹராமான காரியங்கள் அரங்கேறுவதை இன்றைய திருமணங்களில் காணலாம்.
நிக்காஹ்வை பள்ளிவாசல்களில் மிகவும் எளிமையான முறையில் நடாத்தி ஒரு பயானையும் நிகழ்த்தி விட்டு அதற்குப் பிறகு நடப்பதுவோ முழுக்க முழுக்க அநாச்சாரமும், ஆடம்பரமும், அநியாயமுமாகும்.
திருமணத்தில் நடக்கின்ற ஆடம்பரங்கள்
• ஹோட்டல் (Hotel) அல்லது மண்டபத்துக்கான செலவுகள்• மணமக்களின் ஆடை அலங்காரத்துக்கான செலவுகள்
• மணமக்கள் அமரும் மேடை அலங்காரம்
• வீடியோ போட்டோவுக்கான செலவுகள்
• அழைப்பிதலுக்கான செலவுகள்
• பெண் வீட்டாரிடம் சுமத்துகின்ற செலவுகள்
• இன்னும் பல அநாச்சார, அந்நிய கலாச்சார செலவுகள்
• இறுதியில் விரயமாகின்ற குப்பையில் தஞ்சமாகின்ற சாப்பாடு
இவையனைத்திற்கும் பல லட்ச ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. இதனால் யாருக்கும் எந்தவித பிரயோசனமும் நன்மையும் கிடையாது.மாறாக இத்தகைய திருமணத்தின் மூலம் கடன்காரன் என்ற அந்தஸ்து மட்டுமே எஞ்சுகிறது.இந்த ஆடம்பரங்களும் அநாச்சாரங்களும் நாமே நம் மீது திணித்துக் கொண்டவை.இந்தப்பல லட்ச ரூபாய்களைக் கொண்டு எத்தனையோ வாழ வழியற்ற குடும்பங்களை வாழ வைக்க முடியும் என்பதை எவரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா? இதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளலாம்.ஏழை எளியவர்களும் நமக்கு துஆ செய்வார்கள்.பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களையும் சற்று கவனித்துப் பாருங்கள்.
"வீண்விரையம் செய்யாதீர்கள்! வீண்விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்." (அல்குர்ஆன் 6:141)
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண்விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:26,27)
மணமகனுக்கு இவ்வநியாயத்தை எதிர்த்து போராட முடியாதா?
பெற்றோரையும் உற்றாரையும் எதிர்த்து நின்று தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கத் துடிக்கும் இளைஞர்கள் அதனை சாதித்துக் கொள்வதைப் போல் இந்த அநியாயத்தையும், ஆடம்பரத்தையும், அக்கிரமத்தையும் எதிர்க்க, போராட ஏன் அவர்களுக்கு தைரியமில்லை? மணமகன் மட்டும் ஒற்றைக்காலில் நின்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து இவ்வநியாயத்தை எதிர்த்துப் போராடினால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் பல லட்ச ரூபாய்கள் வீணாவதிலிருந்தும், கொடிய நரகிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
திருமண விருந்து எப்படி அமைய வேண்டும்?
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களையும் அவர்களின் அங்கீகாரத்துடன் நடந்த திருமணங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.ஸஹாபாக்களின் திருமணத்தின் போது அவர்கள் நபியைக் கூட அழைக்கவில்லை என்பதை பின்வரும் சம்பவம் மூலம் அறியலாம்.
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்க, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள்.அப்போது (அது குறித்து) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவிய போது தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டதாக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களிடம் தெரிவித்தார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹர் (விவாகக் கொடை) செலுத்தினீர்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் "ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை" என்று பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா மணவிருந்து அளிப்பீராக!" என்று கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி 5153)
செல்வந்தராக இருந்த நபித்தோழருக்கே அல்லாஹ்வின் தூதர் ஒரு ஆட்டை அறுத்து வலீமா கொடுக்க சொல்லியிருக்கும் போது நாம் ஏன் நம்மை வருத்திக் கொண்டு விரலுக்கு மிஞ்சிய வீக்கமாக வீண் விரையம் செய்ய வேண்டும்?
மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த 'சுன்னத்' நிறைவேறிவிடும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே 'வலீமா' விருந்தாக வழங்கினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 371, 2893)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு 'முத்து' (சுமார் "கோதுமையையே 'வலீமா' விருந்தாக அளித்தார்கள்." (அறிவிப்பவர்: சபிய்யா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5172)
ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விருந்தளித்ததில்லை. ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்த போது ஒரு ஆட்டைத் திருமண விருந்தாக அளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள். நூல்: புகாரி – 5168, 5171, 7421)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த பெரிய 'வலீமா' விருந்தில் ஒரு ஆட்டை 'வலீமா'வாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும். எனவே விருந்தின் பெயரால் செய்யப்படும் ஆடம்பரங்களையும் தவிர்க்க வேண்டும்.
வலீமா விருந்துக்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது.
செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5177)
வலீமா விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அதை மறுக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸின் தொடரில் 'யார் வலீமா விருந்தை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து விட்டார்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
விருந்தை ஏற்பது அவசியமானாலும் விருந்து நடக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடந்தால், அல்லது தீய நடத்தை உடையவரால் விருந்து வழங்கப்பட்டால் அதைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டும்.
நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்தைக் கண்ட போது திரும்பி சென்று விட்டார்கள். (அறிவிப்பவர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ – 5256)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வழியைப் பின்பற்றி நபித்தோழர்களும் இந்த விஷயத்தில் கடுமையான போக்கை மேற்கொண்டுள்ளனர்.
அபூமஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை ஒருவர் விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்கள் "வீட்டில் உருவச் சிலைகள் உள்ளனவா?" எனக் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்படியானால் அதை உடைத்து எறியும் வரை வர மாட்டேன் என்று கூறி விட்டு, உடைத்து எறிந்த பின்னர் தான் சென்றார்கள். (நூல்: பைஹகீ பாகம்: 7, பக்கம்: 268)
என் தந்தை காலத்தில் ஓர் விருந்துக்கு ஏற்பாடு செய்தோம். என் தந்தை மக்களை அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள். வீட்டிற்கு வந்த போது பட்டுத் துணியால் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டதைக் கண்டார்கள். என்னைக் கண்டதும் "அப்துல்லாஹ்வே! நீங்கள் சுவர்களுக்கு பட்டால் அலங்காரம் செய்கிறீர்களா?" எனக் கேட்டார்கள். பெண்கள் எங்களை மிகைத்து விட்டனர்" என்று என் தந்தை கூறினார். அதற்கு அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் "உம்மை பெண்கள் மிஞ்சி விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லை" என்றார்கள். மேலும் "உங்கள் உணவைச் சாப்பிடவும் மாட்டேன். உங்கள் வீட்டிற்குள் வரவும் மாட்டேன்" என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றார்கள். (தப்ரானியின் கபீர் பாகம்: 4, பக்கம்: 118)
மிகச் சாதாரணமாக நாம் கருதுகின்ற இந்தக் காரணத்திற்கே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களின் தோழர்களும் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்.
இதை விட பல நூறு மடங்கு ஆடம்பரங்களும், அனாச்சாரங்களும், வீண் விரயங்களும் மஇலிந்து காணப்படும் விருந்துகளில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் நாம் கலந்து கொள்கிறோம். இது சரி தானா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நூல்: அஹ்மத் – 23388)
எனவே மிக மிக குறைந்த செலவில் நபி வழியில் நம் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமொழிகளின் முலம் அறிந்து கொள்ளலாம்.ஒரு ஊரில் குறைந்தது பத்துப்பேராவது திருமணங்களை மிக மிக எளிமையாக குறைந்த செலவுடன் கூடியது பத்துப்பேரைக் கொண்டாவது நடாத்தினால் அடுத்தவர்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் முன் மாதிரியாக இருக்குமல்லவா?
விருந்தில் மார்க்கத்துக்கு முரணாண காரியங்கள் இடம்பெறல். 
நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்தேன்.அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படத்தைக் கண்ட போது திரும்பிச் சென்று விட்டார்கள். (அறிவிப்பவர்: அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: நஸயீ – 5256)
தன் சொந்த மகளின் வீட்டிலேயே மார்க்கத்திக்கு முரணான ஒரு காரியத்தைக் கண்டு அந்த விருந்தை ஏற்காமல் நபியவர்கள் சென்று விட்டார்கள் என்றால், இன்று நடக்கின்ற திருமண விருந்தில் எத்தனை தீமையான காரியங்கள் நடக்கின்றன? இத்தகைய விருந்துக்கு சமூகமளிப்பதை நாம் புறக்கணிக்கின்றோமா?
அல்லாஹ்வுக்காக இத்தகைய விருந்துக்கு சமூகமளிப்பதை நாம் புறக்கணித்தால் அது ஒரு போதும் பாவமாகாது.ஊருலகத்தின் திருப்தியை நாம் விரும்பினால் அது ஒரு போதும் முடியாது.அதனால் எந்தவித நன்மையும் இல்லை. ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தமே மிக மிக மேலானது.எனவே அல்லாஹ்வின் திருப்தியையும் அருளையும் பெற இவ்வநாச்சாரங்களையும், ஆடம்பரங்களையும் விட்டொழித்து எளிமையான முறையில் நபி வழியில் திருமணங்களை நடாத்தவும் ஆடம்பரமான விருந்து வைபவங்களுக்கு சமூகமளிப்பதை புறக்ககணிக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன் 31:33)
 -ஷாஹினா ஷாபிஃ