"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, December 27, 2012
இறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் "மலக்குகள்"
இறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் "மலக்குகள்"
ஓரிறையின் நற்பெயரால்...
மேன்மைமிகு மலக்குகள் குறித்து முஸ்லிம்களுக்கு ஒரு புரிதலுக்காகவும், அஃதில்லாதவர்களுக்கு சிறு விளக்கமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை.
இறையின் படைப்பில்
இறைவன் தன் எண்ணத்திற்கேற்ப (தேவைக்கேற்ப அல்ல) தனது படைப்பை பற்பல நிலைகளில் ,கோணங்களில்,சுழலில் உருவாக்கி இருக்கிறான். அவ்வாறு உருவாக்கப்பட்ட படைப்பினங்களை நாம் ஐந்து பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.
1. மலக்குகள் 2. ஜின்கள் 3. மனிதர்கள் 4. மனிதர்கள் அல்லாத இவ்வுலகில் உள்ள ஏனைய உயிரினங்கள் மற்றும் 5. உயிரற்ற பொருட்கள்.
இங்கு மலக்குகள் குறித்து மட்டுமே பார்ப்பதால் ஏனைய படைப்பினங்கள் பற்றிய பார்வை வேண்டாம்.மேலே உள்ள பட்டியல் அப்படைப்பினங்களின் தரத்திற்கேற்பவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.ஆக மலக்குகள் மனித,ஜின் வர்க்கங்களை விட உயர்ந்த படைப்பு என்பது தெளிவு! அதை அடிப்படையாக வைத்தே இனியும் கட்டுரையை தொடருங்கள்.
மலக்குகள் யார்?
இறைனின் ஏவல்களை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்களே மலக்குகள். அவனின் அனைத்து ஆணைகளுக்கும் உடன்படுவதே அவர்களின் தனிச்சிறப்பு. மேலும், அதுவே அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கமும் கூட,
''...அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்''. (66:06 சுருக்கம்)
இவ்வாறு இறை படைப்பில் உயர் படைப்பாக வர்ணிக்கப்படும் மலக்குகள் மேற்கொள்ளும் செயல்கள் குறித்து குர்-ஆனில் சிலவற்றை பார்ப்போம்.
பொறுப்புகள் பல அவர்கள் மீது சாட்டப்பட்டாலும் மனித சமுகத்தோடு அவர்களுக்கு உள்ள மிக முக்கியமான தொடர்புகள் குறித்து,
*இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனுடைய தூதுவர்களுக்கு இறை புறத்திலிருந்து வெளிபடும் வேத வெளிப்பாட்டை (வஹீயை) அறிவிப்பது அவர்களின் தலையாய பணியாகும்.
''அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து,) "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்" என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான்.'' (16:02)
*மனிதர்கள் மேற்கொள்ளும் நன்மை/தீமைகளின் அடிப்படையில் அமைந்த அனைத்து செயல்களையும் பதிவு செய்கின்றனர்.
''(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- (50:17)
''நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.'' (82:10-12)
*மனிதர்களுக்கு தாயின் கர்ப்ப அறைக்குள் உயிர் ஊதுவதும்,மனித வாழ்நாள் தவணை முடிந்ததும் அவர்களின் உயிரை கைப்பற்றுவதும் அவர்கள் செய்யும் பிறிதொரு பணியாகும்.
"உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், "மலக்குல் மவ்து" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.'' (32:11)
''ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,'' (47:27)
மலக்குகள் செயல் பாட்டை மேற்கூறிய வசனங்களில் அறியலாம். மேலும் அவர்களை குறித்து அறிய...
'அவர்களுக்கு மனிதனோடு கொண்ட தொடர்பு பற்றி (2:30, 2:34, 7:11, 17:61, 18:50, 20:116, 38:73, 13:11, 82:10,86:4, 8:12, 40:7, 42:5, 3:123-126, 8:9,10)
இறைவனுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி (2:30, 39:75, 40:, 42:5, 79:1-3)
பிற (3:42, 2:98, 6:111,158, 15:78, 16:2,33, 25:21, 41:30, 97:4, 6:9, 17:95, 35:1, 37:149,150, 43:19, 53:26-28)
இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி,மலக்குகளுக்கு தனியானதொரு சக்தியோ,இறைவனுக்கு தன் தேவையின் அடிப்படையிலோ அவர்களுக்கு அச்செயல்பாடுகள் வழங்கப்படவில்லை.மாறாக இறைவனின் வல்லமையின் ஒரு வெளிப்பாடாகவே இது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏனெனில் தன் திருமறையில்
அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்; 'ஆகுக!' என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது. (40:68)
மேலே குறிப்பிடப்பட்டவை மலக்குகள் குறித்த ஆன்மிக பார்வை
இனி,.
மலக்குகள் இருப்பதை அறிவியலால் நிருப்பிக்க முடியுமா...?
மலக்குகள் மனிதனை போன்றே ஒரு படைப்பை தவிர மனித படைப்பின் எத்தகையை அம்சமும் அவர்களுக்கு பொருந்தாது என்பதை கவனத்தில் வைத்து தொடருங்கள்.,
அறிவியல் கோட்பாடுகளுக்கும்,இறைவனின் வார்த்தைகளான குர்-ஆனிய கோட்பாடுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்., இன்று நம்மிடையே அறிவியல் என உள்ளவைகளை, அவை எவ்வாறு ஏற்பட்டது,ஏற்படுத்திய விளைவு முதலிய காரணிகளை கையில் வைத்து கொண்டு,பிறகே நாம் அதை உண்மை என்கிறோம்.
ஒரு எளிய நிகழ்வுதாரணம், இன்று நம் கையில் இருக்கும் வானவில் குறித்த வரைவிலணத்தின் படி அவை எப்படி ஏற்படும், ஏன் ஏற்படும்,எவ்வளவு நேரம் ஏற்படும் போன்ற தகவல்களை மிக துல்லியமாக தர முடியும்., அதற்கு (மாறுபடாமல் இருப்பதற்கு) பெயர் தான் அறிவியல்,
காரணம் பல்வேறு கால சூழ்நிலைகளில், நேரங்களில், இடங்களில் ஏற்பட்ட வானவில் தோற்றங்கள் குறித்த நிகழ்வுகளை ஒருசேர இணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் வானவில் குறித்து மிக தெளிவாக அறிகிறோம்.
இவ்விடத்தில் ஒன்றை நன்றாக கவனியுங்கள் நமக்கு கிடைக்கபெற்ற ஒரு முழுமைப்பெற்ற செயல் வடிவத்தை வைத்து கொண்டே அதன் தொடர் செயலாக்கம் மற்றும் ஏற்கனவே அவை செயல் பட தொடங்கிய விதம் குறித்து உண்மையே வெளிபடுத்த முடியும்., மாறாக உலகில் முன்முதலில் வானவில் தோன்றுவதற்கு முன்பே இன்னின்ன காலங்களில் நேர அளவில் நிறங்களில் வானவில் தோன்றும் என யாரும் கூறவில்லை.
இதற்கு விளக்கம்- எந்த அறிவியலாரிடமும் இருக்கிறதா...? வானவில் குறித்து அவர்கள் முன்னர் அறியாததே...!
என்ற ஒரு காரணமே விடையாக இருக்கும், மேலும் இன்று நாம் வகுத்திருக்கும் வானவில் குறித்த கோட்பாடுகள் அனைத்தும் நம் கண்ட ஆய்வின் அடிப்படையில் மட்டுமே கோட்பாடுகளாக வைத்திருக்கின்றோம்.
மேலும் இதற்கு மேல் எந்தவித கோட்பாடும் வானவில் குறித்து இனி மாறாது என எவரும் சொல்ல முடியாது. இன்னும் பல ஆண்டுகள் கழித்து வானவில்லில் நிறப்பிரிகை மாறுபாடோ,தோன்றும் கால அளவில் ,சுழலில் மாறுபாடு ஏற்பட்டாலோ யாரும் இதுகுறித்து யாரும் ,ஏற்கனவே வானவில் குறித்து கூறப்பட்ட கோட்பாடுகள் பொய்யென கூற மாட்டார்கள் .மாறாக வானவில் குறித்த "அறிவியல் கண்டுப்பிடிப்பில்" மேலும் ஒரு மைல்கல் என பெருமிதம் கொள்வார்கள்.
ஆக, நம் கண முன் தெரியும் நிதர்சனமான உண்மைகளுக்கேற்ற வகையில் காரணத்தை மெல்ல மெல்ல அறிவதே அறிவியல்!,
அதே போலத்தான் சந்திர /சூரிய கிரகணங்களும் இன்னும் 1000 வருடங்கள் கழித்து கூட எப்போது ஏற்படும்,எந்த நாட்டில் எவ்வளவு நேரம் தெரியும் என்பதை மிக துல்லியமாக சொல்ல முடிந்த அறிவியலாருக்கு முதல் கிரகணங்கள் ஏற்படுவதற்கு முன்பு இப்படி ஒரு கிரணக செயல் பாடுகள் ஏற்படுதல் குறித்த எந்த வித தகவல்களும் இல்லை.,
அதேபோலத்தான் ஏனைய பிற அறிவியல் செயல் பாடுகளும். எனவேதான் EXPIRY தேதிக்கு முன்னே கெட்டு போகும் உணவு பொருட்கள் மற்றும் EXPIRY தேதி முடிந்தும் செயல்படும் பாட்டரி போன்ற வேதி பொருட்களுக்கு அறிவியல் முரண்பாட்டை நாம் முன்னிருத்துவதில்லைஇதற்கு நேர்மாறாக இஸ்லாத்தின் அடிப்படை இருக்கிறது.(அறிவியலுக்கு மாற்றமாக அல்ல,மேற்குறிப்பட்ட செயல்முறை விதிக்கு மாற்றமாக) இஸ்லாம் தன்னுடைய கோட்பாடுகளையும், கொள்கைகளையும் மிக அழகாக, தெளிவாக மற்றும் விரிவாக முன்மொழிந்து, மேலும் அக்கொள்கைகள் எக்காலத்திருக்கும், யாருக்காகவும் எதற்காகவும் நெகிவுதன்மையடையாது என பிரகடனபடுத்திய பிறகே மனித சமுகத்திற்கு தன்னை அறிமுகப்படுத்துகிறது.
அவ்வாறு விளக்கப்பட்ட அக்கொள்கைகளை செயல்படுத்த காரணங்களையும் கூறியுள்ளது. இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளில் மிக முக்கியமானது "மறைவானவற்றின் மீது நம்பிகை வைப்பது" இதன் கீழாக தான் நாம் பார்க்கும் மலக்குகள் சார்ந்த கோட்பாடுகள் வருகிறது.
ஆக மலக்குகளின் தன்மையை விளக்கி அவர்களை இந்த உலகில் யாரும் நிகழ்வின் அடிப்படையில் அறிந்து கொள்ளமுடியாது என தெளிவுறுத்திய பின்னரே அவர்கள் குறித்த இன்னபிற நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்கிறது.
குர்-ஆன் இத்தெரிவை யாரும் கேள்வி எழுப்பாமலே அவை குறித்து தன்னிலை விளக்கம் அளிக்கிறது. எனவே இன்று மலக்குகளை ஏற்க/நம்ப மறுப்போர் எவரும் மலக்குகள் குறித்து பேசும் போது அவர்(மலக்கு)கள் தொடர்பான மூலங்கள் குர்-ஆன்லிருந்தே பெறப்பட்டன என்பதை மறந்து விடக்கூடாது.,
எனவே யாரும் அறியாத ஒன்றை பற்றி அதற்கு ஒரு வரைவிலக்கணமும் கொடுத்து (அதுவும் யாரும் அதுகுறித்து கேள்வி கேட்காமலே)நிகழ்வின் அடிப்படையில் இவ்வுலகத்தில் யாரும் உளவியல் மற்றும் உணர்வுரீதியாக அவர்களின் இருப்பை அறிந்துக்கொள்ளவும் முடியாது என அச்செயலுக்கு முழு வரையறை தரும் போது அறிவியல் ரீதியாக என்ன முரண்பாடு இருக்கிறது
ஏனெனில் அறிவியலுக்கு முரண்படும் செயலானது,நிருப்பிக்கபட்ட அறிவியல் ஆய்வோடு நாம் ஒப்பிடும் ஒரு சோதனை முற்றிலும் வேறுபடுவதே ஆகும். மலக்குகள் குறித்து விஞ்ஞான ரீதியான ஒரு வரைவிலக்கணமோ அல்லது எந்த ஒரு அறிவியல் சோதனையோ மேற்கொள்ளப்படவில்லை. எனவே இங்கு அறிவியல் முரண்பாட்டிற்கு வேலையே இல்லை.
அதுபோலவே ஏனைய மறுமை கோட்பாடுகள் குறித்த அறிவியல் நடவடிக்கையும்.,முரண்படாத அறிவியலுக்கு பொருந்தக்கூடிய எந்த செயலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே!
ஒளியின் வேகத்தை விட,மிக வேகமாக செயல்படும் மலக்குகள் குறித்த ஆய்வை மனித உருவாக்க கருவிகளால் கண்டறிய முயல்வது எப்படி சாத்தியம்...அதுவும் அவர்கள் தனித்தன்மை தெளிவாக,விரிவாக கூறப்பட்ட பிறகும்...?
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
source: www.naanmuslim.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment