widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, February 4, 2013

"விஸ்வரூபம்' எழுப்பியுள்ள கருத்துரிமைப் பிரச்சினை!


விஸ்வரூபம்' எழுப்பியுள்ள கருத்துரிமைப் பிரச்சினை!
கமலஹாசனின் "விஸ்வரூபம்' தான் இப்போது தமிழகத்தில் சூடான பிரச்சினை. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டுள்ளபோது முதலமைச்சர் ஜெயலலிதா இந்தப் படத்திற்கு அரசு தடை விதித்தது பற்றி நேரடி ஒளிபரப்பில் விளக்கமளித்துக் கொண்டிருந்தார். படத்தை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அளவிற்கு மாநில அரசிடம் காவல் பலம் இல்லை என்று சொல்லிப் புன்னகைக்கிறார்.
முன்னதாக நீதிமன்றம் தடையை நீக்கி ஆணையிட்ட உடன், இரவோடிரவாக தலைமை நீதிபதிப் பொறுப்பில் உள்ளவரை நள்ளிரவில் எழுப்பி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது ஜெயா அரசு. கூடவே எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் செய்தி பறந்தது. அடுத்த நாள் காலை திரையரங்கு உரிமையாளர்கள் பாதுகாப்புக் கருதி படம் ஓடுவதை நிறுத்துமாறு மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டன. அதே நேரத்தில் தமிழக அரசு வழக்குரைஞர் இவ்வாறு தமிழகம் முழுவதும் படம்"ஓடாத நிலையைக்' காட்டிச் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் எனவும் தடையைத் தொடரவேண்டும் எனவும் வாதிட்டார். நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. திரைப்படத் தணிக்கை வாரியம் சார்பாக வாதிட்ட மத்திய அரசு வழக்குரைஞர், தணிக்கை வாரியம் அனுமதித்தபின் ஒரு படத்தைத் தடை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என வாதிட்டார்.
ஆக மத்திய அரசைச் சீண்டுவதற்கன இன்னொரு வாய்ப்பாக இந்தப் பிரச்சினையையும் பயன்படுத்திக் கொண்டது ஜெயா அரசு. இதன் மூலம் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் வாக்கு வங்கியையும் அது உறுதி செய்துகொள்ள முயற்சிக்கிறது.
இந்த மாநிலம் மதச் சார்பற்ற மாநிலம் என்கிற நிலையிலிருந்து வழுவிவிட்டது. ஏதாவது மதச் சார்பற்ற மாநிலம் அல்லது நாட்டுக்குப் புலம் பெயரப் போகிறேன் எனக் கமலஹாசன் சிந்திய கண்ணீர் அவரது ரசிகர்களை மட்டுமல்ல தமிழக அறிவுஜீவிகள், முகநூல் பதிவர்கள் எல்லோரையும் கூட இளக்கிவிட்டது."கலைப் படைப்புகளுக்கு முழுமையான கருத்துச் சுதந்திரம்' என்கிற முழக்கம் இப்போது இந்தத் தரப்பிலிருந்து உரத்து ஒலிக்கிறது.
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் இப்படித் தீவிரவாதிகளாகவும் சந்தேகத்திற்குரியவர்களாகவும் தொடர்ந்து திரைப்படங்களில் சித்திரித்து வந்ததன் விளைவுகளை அன்றாடம் சந்தித்து வருபவர்கள். சில அனுபவங்களைச் சொன்னால்தான் இங்குள்ள நிலைமை உங்களுக்குப் புரியும்.
1. ரெனி அய்லின் கேரளத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு மனித உரிமைச் செயலாளி. பிறப்பால் கிறிஸ்தவர். சென்ற ஆண்டு திருச்சியில் ஓர் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம். எப்போது வந்தீர்கள் என்றேன்?"இரவு 12 மணிக்கு திருச்சி சந்திப்பில் இறங்கினேன். ஒரு லொட்ஜிலும் ரூம் தர மறுத்து விட்டார்கள். அடையாள அட்டையைக் காட்டியும் பயனில்லை. அவர்கள் என்னை முஸ்லிம் எனச் சந்தேகப்பட்டார்கள்' என்று பதிலுரைத்தார். ரெனி ஒல்லியாய், உயரமாய் முகத்தில் தாடியுடன் நீண்ட குர்தா வேறு அணிந்திருப்பார். கேட்க வேண்டுமா?
2. சில ஆண்டுகட்கு முன் ஒரு இளம் பத்திரிகையாளர். ஏதோ ஒரு வேலையாக வீட்டிற்கு வந்திருந்தார். இரவு கவியக் கவிய அவர் புறப்பட அவசரப்பட்டார். வேலை முடியவில்லை. முடித்த பின் போகலாமே என்றேன். "இல்லை சார், நேரமாகிவிட்டது. விநாயகர் ஊர்வலம் அது இதுன்னு நான் ரூமுக்குப் போற வழியில் ஒரே பிரச்சினை. நான் தாடி வேற வச்சிருக்கேனா...' எனச் சொல்லி நகர்ந்தார். அவர் வீட்டுக்குச் செல்லும் வழியில் சமீபமாக ஒரு மதக் கலவரம் நடந்திருந்தது.
நான் மிகைப்படுத்திச் சொல்கிறேன் எனத் தோன்றலாம். ஆனால் இவை இரண்டு மட்டுமல்ல இதைப்போல ஏகப்பட்ட நிகழ்வுகள், அனுபவங்கள் எனக்கு உண்டு. உங்களுக்கெல்லாம் தெரிந்த ஒன்றை நினைவூட்டுகிறேன். அவர் இந்திய இளைஞர்கள் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். இந்த நாட்டின் மிக உயரிய பதவியில் இருந்தவர். அப்துல் கலாம் என்கிற அவரது பெயர் ஒன்று போதுமானதாக இருந்தது, அவரை நிர்வாணமாக்கிச் சோதனை இடுவதற்கு இல்லையா? இது அமெரிக்க விமான நிலையத்தில் நடந்தது என்றாலும் இங்கும் நிலைமை இப்படித்தான்.
முஸ்லிம்களுக்கு நகரங்களில் வீடு கிடைப்பது எளிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புகழ்பெற்ற வட இந்திய முஸ்லிம் நடிகருக்கு இப்படி ஒரு நிலை மும்பையில் ஏற்பட்டது பத்திரிகைகளில் விவாதத்திற்குள்ளானது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 வந்தால் போதும் எங்கள் காவல் துறையினருக்கு எல்லா முஸ்லிம்களும் சந்தேகத்திற்குரியவர்களாகி விடுவர். ரயில் மற்றும் விமான நிலையங்களில் அத்தனை கெடுபிடிகள் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு முஸ்லிமையும் மற்றவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலை இன்று ஏற்பட்டுவிட்டது.
என்னை முஸ்லிம் எனச் சந்தேகப்பட்டார்கள்..... எனச் சொல்ல நேர்வது எத்தனை கொடுமை? இங்கே ஒரு தலித் அனுபவிக்கும் இழிவையும், ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் இந்த வெறுப்பையும் ஒரு தலித்தாகவும், முஸ்லிமாகவும் இருந்துதான் புரிந்து கொள்ள இயலும்.
இப்படியான ஒரு சூழல் உருவாகியுள்ளதில் இங்கு மேலெழுந்துள்ள இந்துத்துவ வலதுசாரி பாசிசத்திற்கு ஒரு பங்குண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால், இத்தகைய கருத்துகள் அந்த அமைப்புகளைத் தாண்டி சாதாரண மக்கள் மனதின் அடியாழத்திலும் போய்ப் படிந்துள்ளதில் அந்த விஷமப் பிரசாரங்களைக் காட்டிலும் நமது அச்சு, காட்சி மற்றும் திரைப்பட ஊடகங்களுக்கு அதிகப் பங்குண்டு.
நாடகம், திரைப்படம் ஆகியவற்றுக்கு ஒரு கலைப் படைப்பு என்பதற்கு அப்பால் அவற்றிற்கு ஒரு பிரசார மதிப்பும் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவை மிகப் பெரிய அரசியல் மாற்றங்களுக்குக் காரணமான வரலாறுகளும் உண்டு.
தமிழ் சினிமா வரலாற்றில் நீண்டகாலம் வரை முஸ்லிம்களை ரொம்பவும் நேசத்துடனும் உயர்வாகவும் சித்திரிக்கும் நிலைதான் இருந்து வந்தது. சிவாஜி படங்களில் "பாவமன்னிப்பு', எம்.ஜி.ஆர் படங்களில் "ராஜாதேசிங்கு', "குடியிருந்த கோயில்' முதலியன உடனடியாக நினைவுக்கு வரும் படங்கள். எண்பதுகளில் வெளிவந்த ரஜினியின் படிக்காதவன் படத்தையும் கூட இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.
திரைப்படங்களில் திராவிட இயக்கத்தினர் கோலோச்சிய காலம் இது என்பதை நாம் அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட இயலாது. திராவிட இயக்கம் முஸ்லிம்களை நேச சக்தியாகவே பார்த்தது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. முஸ்லிம்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளைத் திரைப்படங்களில் பதியும் நிலையைப் பாலச்சந்தரின் ஓரிரு படங்களில் காணலாம். அவரது மனதில் உறுதி வேண்டும்' படத்தில் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு எதிரான கருத்துகள் பேசப்படும்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தோடு உலகளவில் "இஸ்லாமிய பயங்கரவாதம்' கட்டமைக்கப்பட்டது. சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு "நேட்டோ' முதலான தனது கூட்டமைப்புகளையும் ஆதரவுகளையும் தக்கவைப்பதற்கு"கம்யூனிச பயங்கரவாதத்திற்கு'ப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு எதிரி தேவைப்பட்டபோது கட்டமைக்கப்பட்டதுதான் இஸ்லாமியப் பயங்கரவாதம்.
கம்யூனிசக் கருத்தியலுக்கு ஏற்பட்ட பின்னடைவோடு உலகெங்கிலும் ஒரு பக்கம் மத, சாதி,இன அடிப்படையிலான இயக்கங்களும், இன்னொருபக்கம் நியோ பாசிசமும் அரைப் பாசிசமும் தலையெடுக்க நேர்ந்தது தற்செயலான ஒன்றல்ல. இந்தியாவிலும் இந்துத்துவப் பாசிசம் வீச்சுடன் மேலெழுந்தது. உலக மயப் பின்னணியில் பெரிய அளவில் வளர்ச்சியுற்ற மத்தியதரவர்க்கத்தின் மத்தியில் இந்துத்துவக் கருத்தியலுக்கு ஒரு இடமிருந்தது.
இத்தகைய பின்னணியில் தமிழ்த் திரைப்பட உலகில் மேலுக்கு வந்தவர்கள்தான் கமலஹாசன், பாலச்சந்தர், மணிரத்னம், விஜயகாந்த், அர்ஜுன் முதலானோர். 1993 இல் வெளிவந்த பாலச்சந்தரின் "ஜாதிமல்லி' படம் முஸ்லிம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அதில் முக்கிய பாத்திரம்.
திரைப்படங்களில் முஸ்லிம்கள் எதிர்மறையாகச் சித்திரிக்கப்படும் நிலை உருவானதன் பின்னணியை இப்படித்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சினையை ஒட்டி இன்று தமிழ்ச் சூழலில் கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதம் மேலெழுந்துள்ளது. சமீபத்தில் ராஜஸ்தான் தலை நகரம் ஜெய்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கருத்துச் சுதந்திரம் குறித்து நடை பெற்ற ஒரு விவாதம் விஸ்வரூபத்துடன் தொடர்புடையது இல்லை ஆயினும் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.
டெஹெல்கா இதழின் நிர்வாக ஆசிரியை ஷோமா சவுத்ரி, கருத்துச் சுதந்திரத்திற்கு நியாயமான கெடுபிடிகளை விதிக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 19(2) பிரிவில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றார். அரசியல் சட்டம் புனிதமான ஒன்றல்ல. மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்ய வேண்டியதுதான். நியாயமான கெடுபிடிகள் என்ற பெயரில் கெடுபிடிகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை நாம் அரசின் கைகளில் கொடுத்துவிட இயலாதுதான். அரசின் கைகளில் இருக்கும் கெடுபிடி அதிகாரம் என்றைக்கும் மக்களுக்கு ஆபத்தானதுதான். அந்த வகையில் ஷோமாவின் கருத்தை யாரும் ஆதரிக்கத்தான் செய்வர்... அதுவும் கலைப்படைப்புகளுக்கு எவ்விதக் கருத்துச் சுதந்திரத் தடையும் இருக்கக் கூடாது என ஷோமா அடுத்து இதை வெளிப்படையாகச் சொன்னார். விஸ்வரூபத் திரைப்படப் பிரச்சினையில் கருத்துச் சுதந்திரத்தையும் கமலஹாஸனையும் தீவிரமாக ஆதரிப்பவர்களும், கலைப் படைப்புகளுக்குத் தணிக்கை கூடாது; கருத்துச் சுதந்திரத் தடை கூடாது என்றுதான் சொல்கிறார்கள்..
ஆனால் ஷோமா அத்தோடு நிறுத்திவிடவில்லை. அவர் இந்தியத் துணைக் கண்டத்து மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பலவற்றையும் கூர்ந்து கவனித்து வரும் ஒரு இதழாளரும் கூட. அவரால் அத்தோடு நிறுத்திக் கொண்டு போய்விட இயலவில்லை. ஆனால், மேடைப் பேச்சு போன்ற பொதுச் சொல்லாடல்களில் முழுமையான கருத்துச் சுதந்திரம் என்பதற்கு இடமில்லை என்றார். இந்துத்துவவாதிகளான தொகாடியா, உமாபாரதி வகையறாக்களின் மேடைப் பேச்சுகளின் உடனடி விளைவுகளை ஒரு இதழாசிரியரால் எப்படி மறக்க இயலும்?
நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவேத் அக்தார், கருத்துச் சுதந்திரத்திற்கான எல்லையை எவ்வாறு வரையறுப்பது? பொதுப் பேச்சுகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லை விதிக்கலாம் என்றால் பின், முழுமையான கருத்துச் சுதந்திரத்திற்கு இடமில்லை என்கிற இடத்திற்குத்தானே திரும்பி வருகிறோம்? என்று கேட்டபோது ஷோமா சொன்னார்: தகவல் அடிப்படையில் பொய்யாக இருக்கிற, வன்முறைகளைத் தூண்டுகிற கருத்து வெளிப்பாட்டு முறைகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலும்.
அதாவது, மேடைப் பேச்சு முதலியவற்றில் பொதிந்துள்ள இத்தகைய வன்முறைகள் உடனடி விளைவை ஏற்படுத்திவிடும் என ஷோமா கருதுவது புரிகிறது. ஆக இதுபோன்ற உடனடி வன்முறைகளைத் தூண்டக் கூடிய வெளிப்பாடுகள் அவை எந்த ஊடகமாக இருந்தபோதிலும், அவை கலைப் படைப்பு என்கிற போர்வைக்குள்ளிருந்து வெளிப்பட்டபோதிலும் அவற்றிற்கு முழுச் சுதந்திரத்தை அளித்துவிட இயலாது என்பதுதான் அவரது கருத்து என்றே நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால், கலைப்படைப்புகள் இப்படி உடனடி வன்முறைக்கு வித்திடாது என அவர் நம்புகிறார்.
சரி அப்படி உடனடி வன்முறைகளுக்கு வித்திடாமல், தொலை நோக்கில் நிரந்தரமான ஒரு வெறுப்பையும் சந்தேகத்தையும் பிறர் மீது உருவாக்கும் வெளிப்பாடுகளை முழுமையான கருத்துச் சுதந்திரம் என விட்டுவிட இயலுமா? இந்தியச் சூழலில் இப்போது காணப்படும் முஸ்லிம் வெறுப்பில் இப்படியான கலை வெளிப்பாடுகளின் மூலமான வெறுப்பூட்டல்களுக்குப் பங்கே இல்லையா என்கிற கேள்வி நமக்கு எழுகிறது.
ஆக, ஷோமா இறுக்கமாகவும் தெளிவாகவும் கட்டுப்பாடற்ற கருத்துச் சுதந்திரம் வேண்டும் எனக் கூறியிருப்பதுபோல மேலோட்டமாகத் தோன்றினாலும், ஒரு பத்திரிகையாளர் என்கிற வகையில் இன்றைய யதார்த்தத்தின் நியாயங்களிலிருந்து அவரால் தப்ப இயலவில்லை என்பதுதான் உண்மை. பாசிசம் தலை எடுக்கும் சூழலில் முழுமையான கருத்துச் சுதந்திரம் என்பது எந்த அளவிற்குப் புரட்சிகரமான கருத்தாக இருக்கும்?
கருத்துச் சுதந்திரம் குறித்த இந்த விவாதம் புதிதான ஒன்றில்லை. நீண்ட வரலாறு இதற்கு உண்டு. இந்த விவாதத்தில் இப்படி அல்லது அப்படி என இதுவரை முடிவு வந்ததுமில்லை.
ஒரு நண்பர் ஒரு கதை அல்லது ஒரு கவிதை எழுதுகிறார். அது அவரது கருத்துச் சுதந்திரம். அது என்னைப் பாதிக்கிறது என நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எனது கருத்துச் சுதந்திரம். இதை நாம் ஏற்க வேண்டும். வன்முறை கூடாது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இன்று கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அரசின் தடையை எதிர்ப்பதாக இருப்பதைக் காட்டிலும் முஸ்லிம்களின் எதிர்ப்பை விமர்சிப்பதாகவே உள்ளன. அந்த வகையில் முஸ்லிம்கள் இன்று தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலை மிகவும் கவலை அளிக்கிறது.
சரி, இப்படியான சூழலில் அரசுக்குத் தலையிடும் உரிமை உள்ளதா இல்லையா? இல்லை எனச் சொல்லி நான் என்னை எளிதாகப் புரட்சியாளனாகக் காட்டிக்கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் அரசுக்கு ஒரு பொறுப்பு உண்டு என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அரசு இப்படியான பிரச்சினைகளில் முற்று முழுதான அதிகாரமாக அதைக் கைக் கொள்ளாமல் இன்னும் விசாலமான சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் அடங்கிய குழுவிடம் இந்தப் பொறுப்பைக் கையளிக்க வேண்டும்.
அந்தக் குழுமட்டும் சரியாகச் செயல்பட்டுவிடுமா? அரசால் அமைக்கப்படும் அந்தக் குழுவே அரசின் கைப்பாவையாகத்தானே இருக்க முடியும்? என்கிற கேள்விகள் இயல்புதான். அப்படியாகும் வாய்ப்பு நிச்சயம் உண்டு. அதையும் எதிர்த்துப் போராடித்தான் ஆக வேண்டும். போராட்டங்களுக்கு முடிவு ஏது?. தெரிதா சொன்னதுபோல ஜனநாயகம் என்பது என்றைக்கும் வந்து முடிந்துவிடுகிற விடயமல்ல. ஜனநாயகம் என்பது ஜனநாயகத்திற்கான போராட்டம் மட்டுமே. ஒரு தேவதூதனின் வருகைக்காகக் காத்திருப்பதுபோல நாம் ஜனநாயகத்திற்காகவும் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்தக் காத்திருப்பின் வடிவம் கையாலாகாத்தனமல்ல. போராட்டம்தான்.
தடையற்ற கருத்துரிமை குறித்த அந்தப் புகழ்பெற்ற வாசகந்தான் நினைவுக்கு வருகிறது. நீ உன் கைத்தடியைத் தெருவில் நின்று கொண்டு சுழற்றுவதற்கு உனக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அந்த உரிமை என் மூக்கு நுனி வரைதான் என்பதை நினைவிற் கொள்.

0 comments:

Post a Comment