widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, October 16, 2013

ஒரு ஹாஜியின் உளக்குமுறல்..!

இப்போதுதான் என் உள்ளம் புரிந்து கொண்டது. தாயின் கரங்களைப் பற்றிக் கொண்டு என் இறுதி மூச்சுக்களையாவது சுவாசிக்கலாமென என் எண்ணம் துடிக்கிறது"
  ஒரு ஹாஜியின் உளக்குமுறல்..!  
பணம் பணம் என்று வாழ்ந்த நான் என் வாழ்வில் நிறைந்திருக்கும் பாவக்கறைகளை அகற்றிடுவதற்காய் புறப்பட்டேன் படைத்தவன் ரஹ்மானின் இல்லத்தை நோக்கி ஹஜ் எனும் கடமைக்காய்.
ஆடம்பரமும், கட்பணைகளும்தான் என் வாழ்வின் இலட்சியங்களாய் ஒரு காலத்தில் என்னை சுற்றி வந்தன.
பணக்காரர்களும், பதவியுடையோர்களும்தான் என் பாச உறவுகளாய்த் தெரிந்தார்கள். என் மனைவின் கருத்துக்களும், கட்டளைகளும்தான் எனக்கு வேத வசனங்களாய்த தோன்றின.
தந்தையின் மரணத்தோடு என் தாய் பற்றிய எண்ணங்களும் தானாகவே மறைந்தன. என்மீதுள்ள என் தாயின் பாசமட்டும் சிறிதளவேனும் குறையவில்லை என்பதை என் உள்ளம் கண்டு கொள்ள மறுத்தது.
என் மகிழ்சியிலும், முன்னேற்றத்திலும் என் தாய் அவளின் அனாதரவை மறந்திருந்ததும் எனக்குப் புரியவில்லை. என் குழந்தைகளும், மனைவியும்தான் என் வாழ்வின் முகவரியாய்த் திகழ்ந்தார்கள்.
பணமோகத்தால் நான் கண்டது பல நோய்களைத்தான். நிம்மதி தேடிச் சென்ற எனக்கு பணம் தந்த பரிசு அது. உலக மோகத்தால் என் உடலை மறந்தேன். மன நிம்மதியை இழந்தேன்.
இப்போது என் தீராத வியாதிகளைத் தீர்க்கச் சென்றதில் என் சொத்துக்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. இப்போதுதான் நான் என் மரணத்தின் வாடையை நுகர்கிறேன்.
அன்று தொழுகை, நோன்பு, ஸகாத் எல்லாமே வயோதிபர்களின் அடையாளங்கள் என்று நான் எண்ணினேன். ஹஜ் பணபலமுடையோரின் சமூக முத்திரை என்றே நான் கருதினேன்.
கஃபாவைக் கண்டதும் என் கால்கள் முன்நோக்கி நகர மறுத்தன. என் பாவக்கறைகள் என் அர்த்தம் புரியா வாழ்வை உணர வைத்தன. இப்போது நான் எதுவுமற்ற ஒரு பாவி. என் உடலையும், உள்ளத்தையும் பணத்திற்காய் பறிகொடுத்த ஒரு நோயாளி.
தன்னடக்கம் பேணி தவாபை முடித்தேன். என்னையறியாமல் என் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன. களைப்பைப் போக்க கையில் ஒரு தண்ணீர் குவளையை எடுத்தேன். ஸம் ஸம் என்னை நில் நில் என்றது.
அப்போதுதான் என் தாயின் நினைவுகள் என் இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கியது. ஸம் ஸம் நீர் தாயிற்குள்ள பிள்ளைப் பாசத்தின் ஓர் அழியா அத்தாட்சி. தாய்க் குலத்திற்கு இறைவன் கொடுத்த கௌரவம். தாயே! இப்போது தான் குப்பி விளக்கெரியும் உன் குடிசை என் கண்முன் தோன்றுகிறது.
பல இலட்சம் ரூபாய்கள் கையிலிருந்தும் நீ கூனி நடக்கும் வரை என்னால் உன்னை இங்கு கூட்டிவரவேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லையே. ஒரு தடவையேனும் உன் ஆசைகளைக் கேட்டு நிறைவேற்றியதில்லையே என்பதை நினைக்கும் போது என் உள்ளம் குமுறுகின்றது.
கண்களைத் துடைத்தவனாய் ஸஃபா, மர்வா குன்றுகளுக்கிடையில் தொங்கோட்டம் ஓடச் சென்றேன். அங்கு நான் எடுத்து வைத்த ஒவ்வொரு பாதடிகளும் என் உளக்குமுறலை உக்கிறமாக்கின.
ஒவ்வொரு எட்டுக்களும் அன்று ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் தன் குலந்தையின் தாகம் தீர்க்க ஓடிய நிகழ்வை நிஜமாக்கிக் கொண்டிருந்தன. ஒரு வரலாற்று நிகழ்வை வருடம்தோரும் ஹாஜிகள் ஞாபகப்படுத்துவது வெறும் சடங்கிற்காக அல்ல என்பதை இப்போதுதான் என் உள்ளம் புரிந்து கொண்டது.
தாயின் கரங்களைப் பற்றிக் கொண்டு என் இறுதி மூச்சுக்களையாவது சுவாசிக்கலாமென என் எண்ணம் துடிக்கிறது. தாயின் முகம் காணும் ஆசையுடன் என் கால்கள் விரைகின்றன. தாயே என் பாதடிகள் உன் பாசத்தை சொல்கின்றன...
நன்றி : அப்துல் ஹபீழ், மதீனா இஸ்லாமியக் பல்கலைக்கழகம் @ www.jaffnamuslim.com

Eravur Thowheeth Jamaath Haj Festival Prayer at BT/BC/ Aligahar Central College