widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, December 17, 2012

சூனியம் - ஒரு பார்வை!!


விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. மக்கள் சிந்திக்கத் தவறியதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் 'சூனியம்' என்பதும். ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டால் போதும், அந்த சூனியத்தின் மூலமாக அவனைக் கொல்லவோ, கை கால்களை முடக்கவோ, தீராத நோய்களை உண்டாக்கவோ முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இன்னும் சூனியத்தால் பல அற்புதங்கள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.
இவர்கள் நம்புவது போன்று சூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்றிருப்பின், தமக்குப் பிடிக்காத ஒரு சாரார் மற்றொரு சாராரை சூனியம் செய்து கொன்று விடலாமல்லவா? ஏன் கத்தி களையும், தடிகளையும் பெரும் ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு கலவரம் செய்து கச்சேரி செல்ல வேண்டும்? சரி, குறைந்த பட்சம் சூனியம் செய்பவர்கள் அவர்களின் தொழிலிற்கு இடைறாக இருப்போரையாவது கொன்று சூனியத்தின் சக்தியை நிரூபிக்கலா மல்லவா? பலர் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அது ஏன்? எப்படி? என்று நமக்குச் சந்தேகம் எழுவது எதார்த்தமானதே.! இதை நாம் நன்றாக அறிந்து கொண்டால் இவ்வாறு ஏற்படும் சந்தேகங்களைத் தவிர்க்கலாம். சூனியம் என்பது மனதைக் குழப்பும் ஒரு கலை, இந்த கலையைச் செய்வதால் அவர்கள் மனக்குழப்பத்திற்கு உள்ளாகி சூனியத்தின் பெயரால் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் எவ்விதப் பாதிப்பையும் சூனியம் ஏற்படுத்துவதில்லை.
ஒரு மனிதன் நன்றாகவே இருப்பான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. அவனிடம் எவனாவது உனக்கு இன்ன ஆள் சூனியம் செய்து விட்டான் என்று மட்டும் கூறிவிட்டால் போதும், அவன் தன் மனதில் பல கற்பனைகளை வளர்த்து குழப்பமடைந்து தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று எண்ணும் காரணத்தால் இவனாகவே பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறான். உண்மையை அறிய வேண்டுமானால் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் ஒருவனைச், சோதிப்பதற்காக உனக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லிப் பாருங்களேன்! அன்று முதலே அவன் அதிர்ச்சியில் அலைவதைக் காண்பீர்கள். சூனியம் மனிதனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சுத்தப் பொய். இதைத் தெளிவாக தெரிந்தும் கூட மார்க்க அறிஞர்கள் என்று பெருமையடித்துக் கொள்பவர்கள் தகடு, தாயத்து, முட்டையில் எழுதுதல், அஸ்மா வேலைகள் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். இறைவனுடைய பாதையைவிட்டும் மக்களை வழிதவறச் செய்கின்றனர். இந்த லெப்பைகள் தங்கள் தொப்பைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மனித இனத்தை வழிகெடுப்பதைப் பார்க்கும் சிலர் இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்று எண்ணுகிறார்கள்.
அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளட்டும், இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்பது கடுகளவும் கிடையாது. இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திற்குப் பின்பு ரூதர்கள் தங்கள் கைச்சரக்குகளை முஸ்லிம் மக்கள் மத்தியில் புகுத்தியதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன. ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற்கு ஏற்பச் சட்டங்களை வளைத்துக் கொள்வது இஸ்லாமியச் சட்டமாகவோ கொள்கையாகவோ ஆகிவிடாது. இறைவனால் கொடுக்கப்பட்ட குர்ஆன் கூறுவதும்; அவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காண்பித்த வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும். சூனியம் செய்து மூட நம்பிக்கைகளை உண்டாக்கி வழி கெடுப்பது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சூனியம் என்பது ஒரு கலை தானே, அதை ஏன் இஸ்லாம் தடைசெய்கிறது என்று நமக்குச் சந்தேகம் எழலாம். நன்மையான செயல்களை உண்டாக்கும் கலை என்றால் அதை இஸ்லாம் நிச்சயம் தடை செய்திருக்காது. ஆனால் சூனியக்கலை மக்களை இறை நிராகரிப்பிற்கு இழுத்துச் செல்வதாலும் மக்கள் ஏமாற்றப்படுவதா லும் இஸ்லாம் அதைத் தடை செய்கிறது. கண்களை ஏமாற்றுவதே சூனியம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எதிர்ப்பதற்காக பிர்அவ்ன் சூனியக் காரர்களை ஒன்று திரட்டினான். அவர்கள் செய்த சூனியம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
(அவர்கள் எறிந்த) கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் தோன்றியது. (அல்குர்ஆன் 20.66) அந்த சூனியக்காரர்கள் எறிந்த கயிறுகளும், தடிகளும் பாம்புகளாக மாறவில்லை; பாம்புகள் போன்று தான் காட்சியளித்தன என்று இறைவன் தெளிவாகக் கூறுகின்றான். இந்த வசனத்தில் இறைவன்''யுகய்யலு'', என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யுள்ளான். இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பித்தல், மாயையை ஏற்படுத்துதல் என்பது இதன் பொருளாகும்.
சூனியம் (ஸிஹ்ர்) என்ற கலையின் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பிக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அப்படியானால் அதைக் கொண்டு ஏதும் தீங்கு செய்ய முடியுமா என்ற ஐயம் வரலாம். சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20.69) ''கணவன் மனைவி இடையே பிரிவினையை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.'' (அல்குர்ஆன் 2.102) என்னதான் சூனியம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது என்பது இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது. அப்படியே அது தீங்கு செய்தாலும் மனதில் குழப்பத்தை உண்டாக்கி, கணவன் மனைவிக் கிடையே பிரிவினையைத்தான் உண்டு பண்ண முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதையும் இந்த வசனத்தில் இறைவன் தெளிவாக்கி விட்டான்.
ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க ஏற்படுத்திய சசூழ்ச்சிகளில் ஒன்றுதான் சூனியம் என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் குழப்பம் ஏற்படாது. நீ என்னைக் கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமின் சந்ததியினரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன். பின்பு நிச்சயமாக நான் அவர்கள் முன்பும், அவர்கள் பின்பும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (வழிகெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் கையாண்டு அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக காணமாட்டாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:16,17) உன் கண்ணியத்தின் மீது ஆணையாக, அவர்களில் அந்தரங்கச் சுத்தியான உன் அடியார்களைத் தவிர நிச்சயமாக அவர்கள் யாவரையும் நான் வழிகெடுப்பேன் என்றும் (இப்லீஸ்) கூறினான். (அதற்கு) அதுவே உண்மை; உண்மையையே நானும் கூறுகிறேன். நிச்சயமாக உன்னைக் கொண்டும், உன்னைப் பின்பற்றுவோர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன் என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன் 38:82-85)
மனிதனை வழிகெடுத்து நரகத்தில் சேர்ப்பதற்கான வழிகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஷைத்தான் கையாண்டு வழிகெடுப்பான் என்பதும் அதற்கு இறைவனும் அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டான் என்பதும் மேற்காணும் வசனங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது. இன்று ஷைத்தான் பல வழிகளிலும் மனிதனுடைய உள்ளத்தில் ஊடுருவி வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றான். அவற்றில் ஒன்று தான் சூனியம் என்பது. ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். (அல்குர்ஆன் 2:102) ஷைத்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து அந்த சூனியக்காரர்களுக்கு அவன் உதவி செய்யும் காரணத்தால்தான் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி கணவர் மனைவியிடையே பிரிவினையை உண்டாக்க முடிகிறது. மனதில் குழப்பத்தை உண்டாக்குவதில் ஷைத்தான் மிகத் தீவிரமானவன், திறமையானவன்! எனினும் (ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய) அவ்விருவருக்கும் மறைந்திருக்கும் அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையே ஆட்டிப் பார்த்த அவனுக்கு, பிற மனிதர்களை வழிகெடுப்பது ஒன்றும் கடினமல்ல. பிறருடைய உள்ளத்தில் ஊசலாட்டம் செய்வது, அவனுக்கு இலகுவான செயல்! அந்த அடிப்படையில் சூனியத்தின் மூலம் மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி அவர்களைக் கோவில், தர்கா, போன்ற இடங்களுக்கோ அல்லது சூனியக்காரன் வசிக்கும் இடத்திற்கோ இழுத்துச் சென்று இறைமறுப்பாளர்களாக ஆக்கி தன் இலட்சியத்தில் வெற்றி காண்கிறான். இதை அறியாத மக்கள் அவனுடைய அச்சசூழ்ச்சிக்குள்ளாகி தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்கின்றனர். ஷைத்தானுடைய சூழ்ச்சி எப்படி இருப்பினும் உண்மையான இறை நல்லடியார்களிடம் அது செல்லாது என்பதையும் 38:33 வது வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.
''சூனியம், ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று'' நல்லடியார்களிடம் ஷைத்தானுடைய சூழ்ச்சி செல்லாது என்றால் இறைத்தூதர் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏன் சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்ற ஐயம் இப்போது நமக்கு வந்திருக்கும். ஆம்! இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை தான். அதன் விளைவாக அவர்கள், தாம் செய்த வேலையைச் செய்யவில்லை என்றும், தாம் செய்யாத ஒன்றைச் செய்தது போன்றும் எண்ணிக்கொண்டு சிறிது காலம் மனத்தடுமாற்றத்தில் இருந்தார்கள். தாம் சூனியம் செய்யப்பட்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் தான் வானவர்கள் மூலம் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு தீர்வையும் கூறினான் என்பதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் வாயிலாக அறிகின்றோம். இறைத்தூதர் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்கள், தாம் செய்யாத ஒரு செயலைச் செய்திருப்பதாக அவர்களுக்கு(குறுகிய காலத்தில்) மாயை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி)
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் செய்யாத செயலைச் செய்தது போன்று மாயை ஏற்படும் அளவிற்கு அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் பிரார்த்தனை செய்த வாறு இருந்தார்கள். அதன் பிறகு : ''என்(மீது செய்யப்பட்டுள்ள சசூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ, அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு நபர் (இருவானவர்களான ஜிப்ரயிலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரயில்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என் கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் ''இந்த மனிதரை பீடித்துள்ள நோய் என்ன'' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்) ''இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். அதற்கு அவர் ''இவருக்கு சசூனியம் செய்தது யார்?'' என்று கேட்டார் .அவர்(பதிலுக்கு) ''லபீத் இப்னு அஃஸம் (என்னும் ரூதன்)'' என்று பதிலளித்தார். ''(அவன் சூனியம் வைத்தது) எதில்?'' என்று அவர்(மீக்காயில்) கேட்க அதற்கு, ''சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண்(பேரிச்சம்) பாளையின் உறையிலும்'' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ''அது எங்கே இருக்கிறது'' என்று கேட்க, ''(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்'' என்று பதிலளித்தார்கள் என்று, இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், ''அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன'' என்று கூறினார்கள். நான், ''அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே(சூனியக்கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது. (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி)
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சூனியம் வைத்ததும் அது நிகழ்ந்ததும் உண்மையென்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என்பதைச் சிந்திக்கத் தவறி இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே சூனியம் பாதித்துவிட்டது என்றால் அது நம்மை விட்டு வைக்குமா என்று மட்டும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் இறைவன் நமக்கு ஏராளமான படிப்பினைகளைத் தந்துள்ளான். நாம் அவற்றைக் கவனிக்க வேண்டும். 1. சூனியம் என்பது மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்துவிடாது. 2. இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மனிதர்தான். அவர்கள் இறைத்தன்மையைப் பெற்றவரோ, வானவர்களின் பண்புகளைப் பெற்றவரோ இல்லை. இறைத்தூதர் என்பதால் மனிதர்களில் உயர்ந்தவர் என்ற சிறப்புதான் அவர்களுக்கு உண்டு. 3. ஒருவன் மற்றொருவனுக்கு, சூனியம் செய்துவிட்டால், அதை சசூனியம் செய்யப்பட்டவன் அறிந்து கொள்ள முடியாது அல்லது மற்றொரு சூனியக்காரனிடம் சென்று கேட்டாலும் அவனும் அதை அறிந்திருக்க முடியாது. அப்படி யாரும் அறிந்து கொள்ள முடியும் என்றிருப்பின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் முதலில் அதை அறிந்திருக்க முடியும். அவர்களுக்கே அல்லாஹ்தான் தன் வானவர்கள் மூலமாக அறிவித்தான்.
ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டான் என்பதை சசூனியம் செய்தவனும் அல்லாஹ்வும் மட்டுமே அறிய முடியும். எனவேதான் சூனியம் செய்யப்பட்டிருப்போமோ என்று எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. 4. அப்படியே தனக்கு சூனியம் செய்யப்பட்டதை ஒருவன் அறிந்து கொண்டாலும், அதற்கான தீர்வு உலகத்தில் எங்கும் கிடையாது. அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே அவனிடமே பாதுகாப்பு தேட வேண்டும். சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் ஆகிய அத்தியாயங்களை அருளி இறைவன் தன்னிடம் மட்டுமே ஒவ்வொரு தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுமாறு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்கள் சமுதாயத்தினருக்கும் கட்டளை யிட்டுள்ளான். இறைவன் காட்டித்தந்துள்ள, தீர்வை விட்டு விட்டு நாம் நமது விருப்பத்திற்கு இணங்கி கோவில், தர்கா போன்ற இடங்கள் சென்று தீர்வைத் தேடினாலோ மற்றொரு சூனியக்காரனிடம் சென்று தீர்வைக் கேட்டாலோ நிச்சயம் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் இறைவனிடம் தண்டனை கிடைக்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை.
வானவர்கள்தான் மனிதர்கள் மத்தியில் சூனியத்தை பரப்பினார்கள் என்றும் ஒரு கதை கட்டி விடப்பட்டுள்ளது. வானவர்கள் ஒரு போதும் சூனியத்தைப் பரப்பவில்லை என்ற விஷயத்தை 2:102 வசனத்தின் விளக்கவுரைகளை நன்றாகக் கவனிக்கும் போது நம்மால் கண்டு கொள்ள முடியும். இந்த அளவிற்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கி மக்களைக் கெடுக்கும் சூனியத்தை எவன் செய்கின்றானோ அவன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். இப்பெரும் பாவத்திலிருந்து இறைவன் மனித இனத்தைக் காப்பானாக!
நன்றி: நதியலை

0 comments:

Post a Comment