"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Monday, June 27, 2011
றிசானா நபீக் மரணதண்டனைக்கு உட்படுவார் ?
தனது பராமரிப்பில் இருந்த குழந்தை ஒன்றைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 2005ம் ஆண்டு சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட இலங்கையைச் சேர்ந்த றிசானா நபீக் மரணதண்டனையை எதிர்கொள்வதாக ஐக்கிய ராச்சியத்திலிருந்து இயங்கும் டெய்லி மெயில் பத்திரிகையின் இணையத்தளமும் இந்தியச் செய்தியொன்றை ஆதாரம் காட்டி இலங்கையின் சூரியன் செய்திச் சேவையும் செய்தி வெளியிட்டுள்ளன.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்திருந்த றிசானா மூச்சுத் திணறலுக்கு உட்பட்டிருந்த குழந்தையைக் காப்பாற்ற தான் பெரிதும் முயன்றதாகக் கூறியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் இந்தோனேசியாவைச் சேர்ந்த றுயாதி சபுப் என்ற பணிப்பெண் தனது முதலாளியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்திற்காக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசியா சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடைசெய்ய உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் றிசானா நபீக்கின் மரணதண்டனை தொடர்பான இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலாளியால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குறித்த இந்தோனேசியப் பணிப்பெண் விசாரணையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
றிசானா நபீக் பிறந்த வருடம் 1982 என அவரது கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அவரது உண்மையான பிறந்த வருடம் 1988 ஆகும். சம்பவம் நடக்கும் போது றிசானாவுக்கு வயது 17 மாத்திரமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரினால் போலியான முறையில் பெறப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தியே இவர் பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
சவூதி அரேபியா இந்த மரண தண்டனையை நிறைவேற்றுமாக இருந்தால், அது தான் ஏற்றுக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைச் சாசனத்தை மீறும் செயற்பாடாகும்.
மனித உரிமை அமைப்புகள் றிசானா வழக்குக்கு முன்னரும் வழக்கின் போதும் முறையான சட்டப் பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளன.
தனது குடும்பச் செலவுகளுக்காக குறிப்பாக தனது சகோதரர்கள் மூவரின் கல்விச் செலவுகளுக்காக உழைக்கும் முகமாகவே றிசானா இவ்வேலைக்கு சென்றதாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்.
நயிப் அல் குதாபி என்ற சிறு குழந்தை ஒன்றை பராமரிக்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. குழந்தையைப் பராமரிக்கும் திறன்கள் அற்றிருந்த றிசானா வேலைக்குச் சேர்ந்து ஒரு சில வாரங்களுக்குள் குழந்தைக்கு உணவு வழங்கும் போதே அது மூச்சுத் திணறலுக்கு உட்பட்டது.
இத்தண்டனையை கண்டித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, மேன்முறையீட்டு வழக்கின் போது தனது உண்மையான வயதை நிரூபிக்கும் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க றிசானாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment