widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, June 23, 2011

முஸ்லிம் பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபடாததால் நீரிழிவால் பெரிதும் பாதிப்பு


உடற்பயிற்சியில் ஈடுபடாமையின் காரணமாக நீரிழிவு நோயினால் முஸ்லிம் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார். பொதுவாக எமது நாட்டில் நகரப்புறங்களில் வாழும் அறுபது சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நூற்றாண்டு விழாக்காணும் ஏறாவூர் அல் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தின் முதலாவது விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபர் எம்.ஜே.றபியுதீன் தலைமையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஜெயினுதீன், நகர சபைத் தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா, தனுஜா மௌலானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாகாண அமைச்சர் சுபைர் இங்கு மேலும் பேசுகையில்; இன்று அதிகமான மக்கள் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.சுகாதார அமைச்சின் ஆய்வுகளின் பிரகாரம் நகரை அண்மித்த பிரதேசங்களில் வாழ்பவர்களில் அறுபது சதவீதமானவர்களுக்கு இந்நோய் காணப்படுகின்றது. நீரிழிவு நோய்க்கு வைத்தியர்கள் எவ்வளவு மருந்துகளைத் தந்தாலும் உடற்பயிற்சி இல்லாவிட்டால் முழுமையான சுகம் பெறமுடியாது எனவும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது.உடல் வியர்க்காமல் மென்மையான வாழ்க்கை முறையை பின்பற்றுவதே இதற்கு காரணமாகும்.எனவே முஸ்லிம் பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். இதேபோன்று கல்வித்துறையில் முஸ்லிம் பெண்கள் காட்டுகின்ற ஆர்வம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.பெண்களிடம் கல்வியறிவு இருந்தால்தான் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ளவும் சிறந்த சமுதாயத்தை உருவாக்கவும் இயலுமாக அமையும்.
கடந்த காலங்களில் அல்முனீரா பாலிகா மகா வித்தியாலயத்திற்கான வளப்பங்கீட்டில் கவனம் செலுத்தவில்லை என்பதை எண்ணி கவலையடைகின்றேன்.மன்னிப்புக் கோருகின்றேன் என்றும் தற்போது ஏற்பட்டுள்ள பௌதிக வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment