widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, July 22, 2012

பாவமன்னிப்பு

images (43)
புகழுக்கும் மேன்மைக்கும் உரியவன் அல்லாஹ்! அவனிடம் நாம் மீளுகிறோம். அவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம். ஸலவாத்தும் ஸலாமும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக. வல்லமையும் கருணையும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: “இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் பாவ மன்னிப்பின் பக்கமும் சுவனத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள், அதன் அகலம் வானங்கள் மற்றும் பூமியைப் போலுள்ளதாகும். அது பயபக்தியுடையோருக்காக தயார் செய்யப்பட்டிருக்கிறது” (அல்குர்ஆன் – 3:133) பூமியில் சிறிதளவு இடம் வாங்க பல லட்சங்கள் தேவைப் படுகிறது. வானங்கள் மற்றும் பூமி அளவு விசாலம் மிக்க நித்திய பேறான சுவனத்தை அல்லாஹ் நமக்கு இலவசமாகத் தருவதாக வாக்களிக்கின்றான். அதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் பாவங்களை விட்டொழித்து அல்லாஹ்வின் மன்னிப்பின் பால் விரைவதாகும். பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்டவர் செல்லுமிடம் சுவனமாகும். அங்கே துன்பப்படுதல் இல்லை, உழைப்பில்லை, களைப்பில்லை, விபத்தில்லை, உயிரிழப்பில்லை, நோயால் பீடிப்பதுமில்லை, தள்ளாத வயதாகி தள்ளாடுவதும் இல்லை, ஏன் மரணமே இல்லை. எங்கும் இன்பம்! எதிலும் இன்பம்! பாலாறுகள், தேனாறுகள், மது ஆறுகள்! அதனை அருந்துவதால் போதை தலைக்கேறி பித்துப் பிடிப்பதில்லை. தலைவலி ஏற்படுவதும் இல்லை! அது இன்பத்தின் நீரூற்று. கண்குளிர்ச்சியளிக்கும் இணைகள்! பணிவிடை செய்ய இளம் சிறார்கள்! மாட மாளிகைகள்! செழிப்பு மிகு தோட்டங்கள்! வர்ணித்தால் தீராத இன்பங்களின் இருப்பிடம். இதோ வல்லமை மிக்க அதன் படைப்பாளன் வர்ணிப்பதே நமக்குப் போதுமானதாகும். “அவர்கள் செய்த நல்லறங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது” (அல்குர்ஆன் – 32:17) அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் அடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனதிலும் தோன்றியிராத இன்பங்களை நான் தயார்செய்து வைத்துள்ளேன்” (புகாரி: 4779,4780 முஸ்லிம் 2824 திர்மிதி 3197) எப்படி பாவமன்னிப்புக் கோருவது? இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறைமார்க்க அற¤ஞர்கள் கூறுவர்: அனைத்துப் பாவங்களில் இருந்தும் பாவ மீட்சி தேடுவது கடமையாகும். மனித உரிமையுடன் தொடர்பில்லாமல் – மனிதனுக்கும் இறைவனுக்கும் மத்தியிலான பாவமாக இருந்தால் அதிலிருந்து மீட்சி பெறுவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன. அந்தப் பாவத்திலிருந்து முற்றாக விடுபடுதல் அதனைச் செய¢தது குறித்து வருந்துதல் இனி எப்போதும் அந்தப் பாவத்தைத் திரும்பச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல் உரிமையுடன் தொடர்பான பாவமாக இருந்தால் அதிலிருந்து மன்னிப்புத் தேடுவதற்கு நான்கு நிபந்தனைகள் உள்ளன. நான்காவதாக அந்த மனிதனின் உரிமையி(னைப் பாதிக்கும் தீங்கி)லிருந்து விடுபடல் வேண்டும். அது பணமாகவோ பொருளாகவோ இருந்தால் அதனை அவனிடம் திருப்பிக் கொடுத்திட வேண்டும். அவதூறு சுமத்தியதற்கான தண்டனை போன்றதாக இருந்தால் அந்தத் தண்டனையை ஏற்றிடும் வகையில் அவனிடம் தன்னை ஒப்படைத்திட வேண்டும¢. அல்லது அதனை மன்னித்து விடுமாறு அவனிடம் கோரிட வேண்டும். புறம் பேசிய பாவமாக இருந்தால் அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு அவனிடம் கேட்க வேண்டும். அனைத்துப் பாவங்களை விட்டும மீட்சி பெறுவது கடமை. ஒரு மனிதன் சில பாவங்களிலிருந்து மட்டும் பாவமீட்சி தேடினால் சத்தியவான்களிடத்தில் அந்தப் பாவத்திலிருந்து மட்டும் தான் மீட்சி தேடியதாக ஆகும். மற்ற பாவங்கள் அப்படியே அவன் மீது படிந்திருக்கும். பாவமீட்சி தேடுவது கடமை என்பதற்கு குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்கள் ஏராளம் உள்ளன. சமுதாயத்தின் கருத்தொற்றுமையும் அதற்குண்டு. அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். நீங்கள் வெற்றி அடையக் கூடும்” (24:31) வேறோரிடத்தில்,“ ’உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புக் கோரிய பிறகு அவன்பக்கம மீளுங்கள்” (11:3) இன்னோரிடத்தில், ’இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விடம் தூய்மையான பாவமன்னிப்பாக பாவமன்னிப்புக்¢ கோருங்கள்” (66:8) (ரியாளுஸ்ஸாலிஹீன்) அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்று விட்டால் அதுவே சிறந்த பாக்கியமாகும். அதைவிடச் சிறப்பு ஒன்றும் இருக்க முடியாது. அதைப் பெற்றுக் கொள்ள முயல்வோமா?

0 comments:

Post a Comment