widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, July 15, 2012


ரமளானை வரவேற்போம் - (தொடர் 5)

நோன்பை முறிக்கும் செயல்கள்

உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகிய காரியங்கள் நோன்பை நீக்கிவிடும். 

'நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது..'.....'..இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்..' (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகரா - 187வது வசனத்தின் ஒரு பகுதி)

மேற்படி குர்ஆன் வசனத்திலிருந்து நோன்புடைய பகல் வேளையில் உண்ணுவதும், பருகுவதும், மனைவியுடன் கூடுவதும் நோன்பை நீக்கிவிடும் என்பதை அறியலாம். 
'ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான் அழந்து விட்டேன்' என்றார். 'என்ன அழிந்து விட்டீர்?' என்று நபி(ஸல்) அவரிடம் கேட்டார்கள். 'ரமளானில் என் மனைவியுடன் உறவுகொண்டு விட்டேன்' என்று அவர் கூறினார். 'ஓர் அடிமையை விடுதலை செய்ய இயலுமா?' என்று அவரிடம் நபி(ஸல்) கேட்டார்கள். அவர் 'இயலாது' என்றார். அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா?' என்று கேட்டார்கள். அவர் 'இயலாது' என்றார். 'அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா?' என்று கேட்டார்கள். அதற்கும் 'இயலாது' என்றார்.

பின்னர் அவர் (அங்கேயே) அமர்ந்து விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம்பழம் நிரம்பிய சாக்கு ஒன்று கொண்டுவரப்பட்டது. நபி(ஸல்) அதை அவரிடம் வழங்கி, 'இதைத் தர்மம் செய்வீராக!' என்றார்கள். அதற்கவர், 'எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதீனாவுக்கும் எங்களைவிட ஏழைகள் எவருமில்லையே' என்றார். அதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரித்தார்கள். 'நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக!' எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திhமிதீ, இப்னுமாஜா).

மேற்கண்ட ஹதீஸிலிருந்து நோன்பு நோற்றிருப்பவர் உடலுறவு கொண்டுவிட்டால், நோன்பு நீங்கிவிடும் என்பதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். எனவே உண்ணுதல், பருகுதல், உடலுறுவு கொள்ளுதல் ஆகிய காரியங்களை நோன்பாளி செய்யலாகாது என்றும், அக்காரியங்களைச் செய்தால் நோன்பு நீங்கிவிடும் என்பதையும் அறிகிறோம்.
மறதியாக உண்ணுவது, பருகுவது, உடலுறவு கொள்வது உண்பதும், பருகுவதும் நோன்பை நீக்கிவிடும் என்றாலும், ஒருவர் ஞாபக மறதியாக உண்பதால், பருகுவதால் நோன்புக்கு எந்தப் பாதகமும் ஏற்படாது .
'ஒருவர் நோன்பாளியாக இருக்கும்போது மறந்து சாப்பிடாலோ, பருகினாலோ அவர் தமது நோன்பை முழுமைகாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா) அவர் களாச் செய்ய வேண்டியதில்லை என்கிற வாசகம் தாரகுத்னியில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. 

எனவே மறதியாகச் சாப்பிட்டவர்கள், பருகியவர்கள், நினைவு வந்ததும் உண்பதை-பருகுவதை நிறுத்திவிட்டு நோன்பாளியாக இருந்து கொள்ள வேண்டும். அது முழமையான நோன்பாக அமையும். ஆனால் உடலுறவு என்பது இருவர் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் அதில் ஞாபக மறதி ஏற்படும் சாத்தியம் மிகவும் குறைவு. இருவரில் ஒருவருக்கு மறதி ஏற்பட்டால் இன்னொருவர் நினைவு படுத்திவிட முடியும். உண்மையிலேயே இருவருக்கும் மறதி ஏற்பட்டு, அவர்கள் உடலுறவில் ஈடுபட்டால் அவர்களுக்கும் இது பொருந்தும் என்பதே சரியாகத் தெரிகிறது. 

'..எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!..' (அருள்மறை குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகரா - 286வது வசனத்தின் ஒரு பகுதி) 
மேலும் நோன்பு என்பது இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே கடமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதர்கள் பக்குவப்படாமல் உண்ணுவது, பருகுவதை விட்டுவிடுவது அல்லாஹ்வுக்கு தேவையில்லை என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன. வேண்டுமென்றே இச்செயலில் ஈடுபடுவது இறையச்சத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

நோன்பு வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு தக்க காரணமின்றி வேண்டுமென்றே நோன்பை முறிப்பது மிகப் பெரிய குற்றமாகும். ஏனெனில் வேண்டுமென்றே செய்கின்ற காரியத்தின் மூலம் இறைவனின் கட்டளை மீறப்படுகிறது. இவ்வாறு வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்கள் அந்த நோன்புக்கு பகரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு இயலாதவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதற்கும் இயலாதவர்கள் அறுபது ஏழைக்கு உணவளிக்க வேண்டும். மேலும் மேற்குறிப்பிட்ட மூன்றுக்கும் சக்தியில்லாதவர்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை என்பதையும் இந்த ஹதீஸ் கூறுகிறது. 

நோன்பு நோற்றுக்கொண்டு உடலுறவில் ஈடுபடுவதால் கணவன் மட்டும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அல்லது மனைவியும் பரிகாரம் காண வேண்டுமா?

இது இருவரைக்கொண்டு நடக்கக்கூடிய காரியம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அம்மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் இதைக் குறிப்பிட்டபோது 'நீரும், உமது மனைவியும் இதற்குப் பரிகாரம் காண்பீராக' என்று கூறவில்லை. அவரது மனைவியும் பரிகாரம் காணவேண்டும் என்றிருந்தால் இந்த சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருப்பார்கள். அப்படிக் கூறியதாக எந்த ஹதீஸையும் காண முடியவில்லை.

'நான் நாசமாகி விட்டேன்' என்று அவர் கூறுவதால் மனைவியின் விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக உறவு கொண்டார் என்று அர்த்தம் கொள்ள முடியாது. முன் முயற்சி இவரிடமிருந்து ஏற்பட்டால்கூட இந்த வார்த்தையைக் கூற முடியும். மனைவி மறுத்தபின், அவரைக் கட்டாயப்படுத்தியதாகத் தெரியாதவரை இந்த அர்த்தம் செய்ய முடியாது. கணவன் மட்டும் பரிகாரம் செய்தால்போதும் என்பதே இதிலிருந்து தெரியவருகிறது.

இந்த ஹதீஸில் கூறப்படுவது ஒருவர் செய்த குற்றத்தின் பரிகாரம் என்பதால், இந்தப் பரிகாரத்தைச் செய்வதுடன், முறிந்தவிட்ட நோன்பையும் களாச் செய்ய வேண்டும்.

-: குளிப்புக் கடமையானவர் குளிக்காமல் நோன்பு நோற்பது:-

இரவில் குளிப்புக் கடமையானவர் குளிக்காமலேயே ஸஹர் செய்யலாம். நோன்பு நோற்கலாம். குளிப்புக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பது நோன்பின் நிபந்தனைகளில் ஒன்றன்று.

நபி (ஸல்) அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டுக் குளிக்காமலேயே நோன்பு நோற்பார்கள். ஸுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காக குளிப்பார்கள் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன.

'நபி(ஸல்) அவர்கள் உடலுறவின் மூலம் களிப்பக் கடமையானவர்களான ஸுப்ஹ் நேரத்தை அடைவார்கள். ரமளானில் நோன்பு நோற்பார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
தொழுகைக்காகத்தான் குளிப்பது அவசியமேத் தவிர, நோன்புக்காக குளிக்க வேண்டியது இல்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

-: நோன்பாளி மனைவியுடன் நெருக்கமாக இருப்பது :-

நோன்பு நோற்றவர் பகல் காலங்களில் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது என்பதை முன்னரே நாம் அறிந்தோம். ஆயினும், மனைவியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவர் என்றால், அவர் அவ்வாறு செய்வதைக் தவிர்த்துக்; கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது முத்தமிடுவார்கள். கட்டிப்பிடிப்பார்கள். எனினும் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர், ஆயிஷா(ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா) 
நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது அவருக்கு அனுமதியளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது அவருக்குத் தடை விதித்தார்கள். அவர்கள் அனுமதி வழங்கிய மனிதர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதார நூல்: அபூதாவூத்) - (இன்ஷா அல்லாஹ் தொடரும்)


 (தொடர் 1)                (தொடர் 2)                (தொடர் 3)               (தொடர் 4)


0 comments:

Post a Comment