widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, July 6, 2012


இறைதிருப்தி பெற்ற ஸஹாபாக்கள்…..(தொடர்)

கடந்த கால வரலாற்றை மறந்த எந்த சமுதாயமும் நிகழ்காலத்தை ஒழுங்குபடுத்தவோ எதிர்காலத்தை ஒளிமயமாக்கவோ முடியாது. இந்த சமுதாயத்தின் முற்காலத்தவர் எவ்வாறு நடந்து சீர்பெற்றனரோ அவ்வாறு நடந்தே இந்த சமுதாயத்தின் பிற்காலத்தவரும் சீர் பெறமுடியும். இந்த வகையில் வரலாறு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக இஸ்லாத்தின் உயர்வையும் அந்தஸ்தையும் அறிய வேண்டு மென்றால் நபி(ஸல்) அவர்கள் முதல் இன்று வரை இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக தமது உடலையும் உயிரையும், உழைப்பையும் உரமாகப் பாய்ச்சியவர்களின் வரலாற்றை தெரிந்திருப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.
அந்த அடிப்படையில் உலகம் அழியும் நாள் வரை சிறப்பித்துப் பேசப்படும் சமுதாயமான அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற்ற அருமை நபியின் மதிப்பு மிகு தோழர் (ஸஹாபா)களைப் பற்றி தெரிந்திருப்பது மிக முக்கியமாகும்.
ஸாஹிப்’ எனும் அரபிவார்த்தையின் பன்மையே ஸஹாபா, ‘ஸாஹிப்’ என்பதற்கு தோழர் என்று பொருளாகும். ஸஹாபா என்பதற்கு தோழர்கள் என்று பொருள். அஸ்ஹாப், ஸஹ்ப் ஆகியவார்த்தைகளும் கூட ஸாஹிப் எனும் வார்த்தையின் பன்மைதான். ‘ஸஹாபத்துன்னபி’ என்பதற்கு நபித்தோழர்கள் என்று பொருள். ஆனால் நபித்தோழர்களை குறிப்பிட ‘ஸஹாபா’ என்ற வார்த்தையையே இஸ்லாமிய வழக்கில் பயன்படுத்துகிறோம். ‘ஸஹாபி’ என்பதற்கு ஸஹாபாக்களில் ஒருவர் என்பது கருத்தாகும்.
ஸஹாபாக்கள் என்போர் யார்?
ஈமான் கொண்ட நிலையில் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து,ஈமானுடன் மரணித்தவர்களே இஸ்லாமிய வழக்கில் ஸஹாபாக்கள் ஆவார்கள். அவரது சந்திப்பு
குறுகிய காலத்தில் நிகழ்ந்திருந்தாலும் அவர் ஸஹாபாக்களில் ஒருவரே! இதன்படி ஒருவர் நபி(ஸல்) அவர்களை எவ்வளவு அதிகமாக சந்தித்திருந்தாலும் அவர் ஈமான் கொள்ளாதிருந்தால் அவர் ஸஹாபாக்களில் ஒருவர் அல்ல. அதே போல் ஈமானுடன் நபியைச் சந்தித்த ஒருவர் பின்பு இஸ்லாத்திலிருந்து வெளியேறி ஈமான் இல்லாமல் மரணித்தாலும் அவர் ஸஹாபியாக ஆகமாட்டார். ஸஹபாக்கள் என்றால் அவர்களிடத்தில் மூன்று தன்மைகள் ஒருங்கே இருக்க வேண்டும்.
1) நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இருக்க வேண்டும்.
2) ஈமான் கொண்டிருக்க வேண்டும்.
3) மரணிக்கும் போது முஸ்லிமாக மரணித்திருக்க வேண்டும்.
இஸ்லாத்திற்காக தங்களின் சொத்துக்களையும் உயிர்களையும் இழந்தவர்கள் ஸஹாபாக்கள் அவர்களின் இந்த தியாகத்தினால் அல்லாஹ்வின் மன்னிப்பையும் பொருத்தத்தையும் பெற்றார்கள். ஸஹாபாக்கள் அனைவருக்கும் நன்மையை வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவுசெய்யா திருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது ? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர உரிமை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவுசெய்து போரிட்டவர்களுக்கு உங்களிலிருந்து எவரும் சமமாகமாட்டார். (மக்காவின் வெற்றிக்குப்) பின் செலவு செய்து போரிட்டவர்களை விட அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். அல்குர்ஆன் 57:10
இத்தகைய கண்ணியமிக்க நபித்தோழர்களின் கண்ணியத்தை களங்கம் செய்யும் விதத்தில் இக்காலக்கட்டத்தில் ஒவ்வொரு தனி ஸஹாபியின் புரிந்துணர்வில் ஏற்பட்ட தவறுகளை தெருத் தெருவாக மேடைபோட்டுப் பிரச்சாரம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. அதுவும் தவ்ஹீத் என்ற பெயரிலும் குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரிலும் நடப்பது தான் வேதனை!
அல்லாஹ்வினால் கண்ணியப் படுத்தப்பட்டவர்களை தரம் தாழ்த்திப் பேசுவது நாம் அவர்கள் மீது கொண்ட அன்பின் அடையாளமாகுமா? அல்லது வெறுப்பின் அடையாளமாகுமா?
அருமை ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு உதவியாளர்களாக இருந்து இந்த மார்க்கத்தை நிலை நாட்டியவர்கள். அவர்கள் வழியாகவே அல்லாஹ் தனது வேதமாகிய குர்ஆனையும் அதன் விளக்கமான ஹதீஸையும் நமக்குக் கிடைக்கும் படிச்செய்துள்ளான். குர்ஆனையும் ஹதீஸையும் எத்திவைப்பதில் அவர்கள் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் நம்பகமானவர்கள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் நடப்பதில் முன் மாதிரி சமுதாயமாகத் திகழ்ந்தார்கள். எனவே இஸ்லாமிய மார்க்கத்தின் ஒளியில் கண்ணியமிக்க ஸஹாபாக்களின் சிறப்புக்களையும் அவர்களின் வரலாற்றையும் நாம் அறிவது அவசியம்.
(இன்ஷாஅல்லாஹ் தொடரும்)

Source: jaqh

0 comments:

Post a Comment