widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, July 5, 2012


நபி வழியில் நம் தொழுகை - 1

தொழுகை என்பது நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும்
அல்லாஹ் வானுலகில் வைத்து வழங்கிய பரிசாகும். இஸ்லாத்தின் ஏனைய கடமைகள் யாவும் இவ்வுலகில் வைத்து
கடமையாக்கப்பட்டுள்ள போது தொழுகையானது வானுலகில் வைத்து கடமையாக்கப்பட்டமையே தொழுகையின்
முக்கியத்துவத்தையும் அதன் சிறப்பையும் எடுத்துக்காட்டப் போதுமானதாகும்.
ஒரு முஸ்லிமின் எந்த ஒரு அமலாக இருந்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின், இரண்டு முன்
நிபந்தனைகள் அவசியமாகும்:
அல்லாஹ்வுக்காக என்ற தூய நோக்கோடு அவ்வணக்கம் நிறைவேற்றப்பட வேண்டும்.
2. நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய முறைப் பிரகாரம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இவ்விரு நிபந்தனைகளில் எது விடுபட்டாலும் அல்லாஹ்வினால் எந்தவொரு அமலும் - அது எவ்வளவு பேணுதலாக
நிறைவேற்றப்பட்டாலும் - ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தொழுகையை பேணுதலாகவும் உரிய நேரத்திற்கும் ஜமாஅத்தாகவும் தொழுவதற்கு நாம் எவ்வளவு கரிசனை
செலுத்துகிறோமோ அவ்வாறே நபியவர்கள் தொழுத முறை பற்றி அறிந்து தொழுவதற்கும் கரிசனை செலுத்த வேண்டும்.
இல்லாவிடில் நாம் தொழும் தொழுகைகள் யாவும் அல்லாஹ்வினால் மறுமையில் நிராகரிக்கப்பட்டு விடும்.
தொழுகின்ற முறையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நபிகளார் பல்வேறு முறைகளை
கையாண்டுள்ளார்கள். ஸஹாபாக்கள் முன்னிலையில் மதீனா பள்ளிவாசலின் மிம்பரில் ஏறி நின்று தொழுதுகாட்டியுள்ளார்கள்.
அவ்வாறு மிம்பரில் ஏறி நின்று தொழுது விட்டு நபியவர்கள் நான் இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்னை நீங்கள் பின்பற்ற
வேண்டும் என்பதும் எனது தொழுகையை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுமாகும் என்று கூறினார்கள். (நூற்கள் :
புஹாரி, முஸ்லிம் )
மட்டுமன்றி, ஸஹாபாக்கள் தொழும் போது நபியவர்கள் அவதானித்துக் கொண்டிருந்து, தொழுதுகொண்டிருக்கும் போதும்
தொழுது முடித்ததற்குப் பின்னரும் அவர்கள் விட்ட பிழைகளை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி திருத்தியுள்ளார்கள்.
எனவே நபிகளார் தொழுத முறையை கற்றறிந்து, அவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் தொழுவது எவ்வளவு முக்கியமானது
என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதனால்தான் நபியவர்கள் கூறினார்கள் நான் தொழுவதை நீங்கள் எவ்வாறு
கண்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள் (நூல் : ஸஹீஹ{ல் புஹாரி)
நபிகளார் தொழுத முறையை மிக நுணுக்கமாக அவதானித்த ஸஹாபாக்கள் எந்த ஒளிவு மறைவுமின்றி நபிகளார் தொழுத
முறை பற்றி பல நூற்றுக்கணக்கான ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். அவை அனைத்தும் ஹதீஸ் நூல்களில் பதிவு
செய்யப்பட்டுள்ளன. அவ்வாறிருந்தும் நம்மில் பலர் நபிகளார் தொழுத முறை பற்றி அறிந்து பின்பற்றாமல், அதைப் பற்றி
கரிசனை செலுத்தாமல், பரம்பரை பரம்பரையாக நமது பெற்றோர்களும் மற்றோர்களும் தொழுது வந்ததையே ஆதாரமாகக்
கொண்டு செயற்பட்டு வருகிறோம். எம்மில் பெரும்பாலானவர்கள் நபிகளார் தொழுகையின் போது எப்படி றுகூஉ செய்தார்கள்,
எப்படி ஸ{ஜூது செய்தார்கள் என்பன போன்ற விடயங்களை ஹதீஸ்களின் வாயிலாக அறிந்து பின்பற்றுவதில்லை.
உண்மையில் இது கவலைக்கும் மறுமையில் மிகப் பெரும் கைசேதத்துக்கும் உரிய விடயமாகும். அனைவருக்கும்
வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபியைப் பின்பற்றாமல் புறக்கணித்ததைப் பற்றி நாளை மறுமையில் அல்லாஹ் விசாரிக்கும்
போது நாம் என்ன பதில் கூறப் போகிறோம்?
எனவேதான் நபிகளார் தொழுத முறை பற்றி ஹதீஸ் நூல்களில் கூறப்பட்டுள்ள ஆதாரபூர்வமான (ஸஹீஹான)
ஹதீஸ்களையெல்லாம் ஒன்று திரட்டி இத் தொடர் கட்டுரை எழுதப்படுகிறது. இதற்காக முற்கால இமாம்கள் தொடங்கி தற்கால
அறிஞர்கள் வரை எழுதப்பட்டுள்ள பல நூல்கள் உசாத்துணை நூல்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. தமது எழுத்துகளின் மூலம்
உதவிபுரிந்த அத்தனை இமாம்கள், அறிஞர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது பேரருளை மறுமை நாள் வரை
சொரிவானாக
யா அல்லாஹ்! உனது திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே நாடி மேற்கொள்ளப்பட்ட எனது இச்சிறு முயற்சியை
அங்கீகரிப்பாயாக! இத்தொடரில் கூறப்படவிருக்கும் விடயங்களை அனைவரும் பின்பற்றி நடந்து நாளை மறுமையில்
நபிகளாரினதும் நல்லடியார்களினதும் கூட்டத்தில் நம்மை சேர்த்து விடுவாயாக! உண்மையை யார் கூறினாலும் அதை ஏற்றுக்
கொள்ளும் மனப் பக்குவத்தை நம் அனைவருக்கும் தந்து விடுவாயாக!




0 comments:

Post a Comment