widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, July 12, 2012


ரமளானை வரவேற்வோம் - (தொடர் 4)


நிய்யத் செய்தல் 

கடமையான நோன்புக்கும், கடமையல்லாத நஃபிலான நோன்புக்கும் நிய்யத் (நோன்பு நோற்பதாக எண்ணுதல்) அவசியமாகும். நோன்பு என்ற எண்ணமோ, தீர்மானமோ இல்லாமல் பட்டினி கிடந்தால் அது நோன்பாகாது. 'நவைத்து.. ஸவ்மகதின்.. என்கிற சில வார்த்தைகளை வாயால் மொழிவதுதான் நிய்யத் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர். இது ஆதாரமற்றதாகும். 'நிய்யத்' என்ற பெயரில் வாயால் மொழிவதற்கு என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தரவில்லை. மேலும் 'நிய்யத்' என்ற அரபி வார்த்தையின் பொருள் எண்ணுவதுதான். எனவே; நோன்பு நோற்பதாக ஒருவர் எண்ணிவிட்டால், அவர் நிய்யத் செய்துவிட்டார்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் 'நவைத்து.. ஸவ்மகதின்.. என்கிற வாசகங்களைக் கூறுமாறு கற்றுத் தராததால் இதைக் கூறுவது தவறாகும்.
'யார் நமது உத்தரவின்றி ஏதேனும் ஒரு அமலைச் செய்கிறாரோ, அது நிராகரிக்கப்படும்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: முஸ்லிம்).

மேற்குறிப்பிட்டவாறு எண்ணுவது மிகவும் அவசியம். இவ்வாறு எண்ணுதலில் கடமையான நோன்பிற்கும், கடமையல்லாத நோன்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. கடமையான நோன்புகளைப் பொறுத்தவரை நோன்பு நோற்பவர் ஃபஜ்ருக்கு முன்பாகவே நோன்பு நோற்பதாக முடிவு செய்திட வேண்டும். ஆனால் கடமையல்லாத நஃபிலான நோன்பிற்கு இந்நிலை இல்லை. ஒருவர் படுக்கைக்குச் செல்லும்போது நோன்பு நோற்பதாக எண்ணவில்லை. அதிகாலையில் ஸுப்ஹுநேரத்திலும் அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. ஸுப்ஹுதொழுதுவிட்டு வீட்டிற்கு வந்ததும், வீட்டில் உணவு ஏதும் இல்லாததைக் கண்ட அவர் நோன்பாக இருந்து கொள்வோம் என்று முடிவு செய்கிறார். கடமையல்லாத நஃபிலான நோன்புகளில் அவ்வாறு நடந்து கொண்டால். அது நோன்பாக அமையும். கடமையான நோன்புகளைப் பொறுத்தவரை ஃபஜ்ரு நேரத்துக்கு முன்பாகவே நோன்பு நோற்பதாக முடிவு செய்திட வேண்டும். 

என்னிடம் நபி (ஸல்) ஒருநாள் வந்து 'உங்களிடம் ஏதும் உள்ளதா?' என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்று சொன்னோம். அப்போது அவர்கள் 'நான் நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்' என்றார்கள். மற்றொரு நாள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் ஹைஸ் (மாவு, பேரீத்தம்பழம், நெய் ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட உணவு) நமக்கு அன்பளிப்பாக வந்துள்ளது எனக் கூறினோம். 'அதை என்னிடம் காட்டு. நான் காலையில் நோன்பு நோற்றிருந்தேன்' என்று கூறிவிட்டு சாப்பிடலானார்கள். 'கடமையல்லாத நோன்பு நோற்பவர் தர்மம் செய்தவர் போலாவார். விரும்பினால் அவர் தர்மம் செய்யலாம். விரும்பினால் செய்யாமல் இருக்கலாம்' என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) ஆதார நூல்: நஸயீ)

கடமையான நோன்பு நமது விருப்பத்தின்பாற்பட்டதன்று என்பதால் ஃபஜ்ருக்கு முன்பே நோன்பு நோற்கும் முடிவுக்கு வந்துவிடவேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

நோன்பு துறத்தல்
சூரியன் மறைந்தவுடன் தாமதம் இன்றி நோன்பு துறக்க வேண்டும்.
'இங்கிருந்து இரவு வந்து, இங்கிருந்து பகல் சென்று சூரியன் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: உமர் (ரலி), ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)

'ஸஹரை தாமதப்படுத்தி, நோன்பு திறப்பதை விரைவு படுத்தும்வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளார்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூதர்(ரலி) ஆதார நூல்: அஹ்மத்)

நோன்பு துறப்பதை விரைந்து செய்ய வேண்டும் என்பதை மேற்குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். எனவே சூரியன் மறைந்த உடனேயே தாமதமின்றி நோன்பு துறப்பது அவசியமாகும். நடைமுறையில் இது பேணப்படுவதில்லை. 'நான் பலஹீனமானவன். பசி, தாகத்தைத' தாங்க முடியாதவன். நீ கட்டளையிட்டதற்காவே நான் இதுவரை கட்டுப்படுத்திக் கொண்டேன்' என்ற உணர்வு விரைந்து நோன்பு திறக்கும்போதுதான் ஏற்படும். 'இதெல்லாம் எனக்குச் சர்வ சாதாரணம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் என்னால் பசி, தாகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும்' என்ற ஆணவமே தாமதப்படுத்துவதில் உள்ளது. எனவே நோன்பு துறப்பதை விரைவு படுத்துவதே நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றுவதாகும்.

நோன்பு திறக்க ஏற்ற உணவு

பேரீச்சம் பழங்கள் கிடைக்குமானால் அதைக் கொண்டு நோன்பு துறப்பது சிறந்ததாகும். அது கிடைக்கப்பெறாதவர்கள் தண்ணீரை அருந்தி நோன்பு துறப்பது சிறந்ததாகும்.

'யார் பேரீச்சம் பழத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும். கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும். ஏனெனில் அது தூய்மையானதாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) ஆதார நூற்கள்: திர்மிதி, நஸயீ)

நோன்பு திறக்கும்போது கூற வேண்டியது

'அல்லாஹும்ம லக ஸும்து..' எனற வாசகத்தை நோன்பு துறக்கும்போது கூறும் வழக்கம் பெரும்பாலான முஸ்லிம்களிடையே உள்ளது. ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இவ்வாறு கூறப்படும் இந்த துஆ காணப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஆதாரப்பூர்வமான துஆ உள்ளது. எனவே நோன்பு துறக்கும்போது அந்த துஅவை ஓதிக் கொள்ள வேண்டும். 

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும்போது 'தஹபள் ளமவு வபதல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்' (பொருள்: தாகம் தணிந்தது: நரம்புகள் நனைந்தன: அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று ஓதுவார்கள். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

0 comments:

Post a Comment