"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Sunday, July 15, 2012
ரமளனை வரவேற்போம் - (இறுதிப் பகுதி)
-: நோன்பாளி குளிப்பது :-
நோன்பு நோற்றிருப்பவர் நோன்பு துறக்குமுன் குளிக்கக் கூடாது என்ற நம்பிக்கை சிலரிடம் உள்ளது. வேறு சிலர் நோன்பின் சிரமத்தை உணர வேண்டும் என்பதற்காக மாலை நேரத்தில்தான் குளிக்கலாம் என்கின்றனர். இவையெல்லாம் ஆதாரமற்ற, தவறான நம்பிக்கைகளாகும்.
'நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது வெளப்பதின் காரணமாகத் தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன்' என்று நபித்தோழர் ஒருவர் அறிவித்திருக்கிறார். இந்த செய்தி அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. காதுக்குள், மூக்குக்குள் தண்ணீர் செல்லக் கூடாது என்பதற்கும் ஆதாரமில்லை.
-: நோன்பாளி பல் துலக்குவது :-
நபி(ஸல்) அவர்கள் உலூச் செய்யும் போதெல்லாம் பல துலக்குவதை வலியுறுத்தியுள்ளார்கள். நோன்பாளி பல் துலக்கலாகாது என்று எந்தத் தடையும் ஹதீஸ்களில் காணப்படவில்லை.
நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும் என்று ஹதீஸ் வந்துள்ளதால், பல் துலக்குவது அந்த வாடையை நீக்கிவிடும் என்று காரணம் கூறிப் பல் துலக்கலாகாது என்கின்றனர் சிலர். இது ஏற்க முடியாத வாதமாகும். வுயிறு காலியாக இருந்தால் வயிற்றிலிருந்து வாடை புறப்படும். பல் துலக்கவதால் அந்த வாடை நின்று விடாது. வாடை வருவதன் காரணத்தை விளங்காதவர்களின் கூற்றை நாம் ஏற்கத் தேவையில்லை.
மேலும் நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாய இருக்கும்போது பல் துலக்கியுள்ளார்கள் என்பதையும் நாம் காண முடிகிறது.
'நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன்.' (அறிவிப்பவர்: ஆமிர் பின் ரபிஆ (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்து நோன்பாளி பல் துலக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
-: நோன்பாளி உணவுகளை ருசி பார்ப்பது :-
நோன்பாளிகள் உண்பது தடுக்கப்பட்டிருந்தாலும் நாவால் ருசி பார்ப்பதற்குத் தடை இல்லை. மேலும் பல துலக்குவதற்குரிய அனுமதியிலிருந்தும் இதை நாம் விளங்கலாம். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குச்சியால் பல் துலக்கும் வழக்கம் இருந்தது. பல் துலக்கும் குச்சியை வாயில் வைக்கும்போது அதன் ருசியை நாவு உணரும். இதற்கு அனுமதி உள்ளதால் உணவை ருசி பார்ப்பதை தடுக்க முடியாது. ஆனால் உணவை ருசி பார்த்துவிட்டு, விழுங்கி விடாமல் உமிழந்து விடுவது அவசியமாகும். உணவை விழுங்கிவிட்டால் உண்வை உட்கொண்டதாக ஆகிவிடும்.
-: இரத்தம் குத்தி எடுத்தல் :-
ஆரோக்கியம் கருதி, அரேபியர்கள் இரத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். கொம்பு போன்ற கருவியினால் தலையில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சி எடுப்பது ஒரு வகை. கண்ணாடிக் குவளை போன்ற ஒரு கருவியையும் பயன்படுத்துவர். இது இன்றைக்கு நடைமுறையில் இல்லாவிட்டாலும், இதிலிருந்து வேறு சட்டங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதால் இதனைத் தெரிந்து கொள்வது பயனள்ளதாகும்.
இரத்தம் கொடுப்பவரும், இரத்தம் எடுப்பவரும் நோன்பை முறித்துவிட்டனர் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜ் (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதீ)
இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. ஆனாலும் ஆரம்ப காலத்தில் இது நடைமுறையில் இருந்தது. பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோது அவரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் 'இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர்' என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதற்கு அனுமதியளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) ஆதார நூல்: தாரகுத்னீ)
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'பலஹீனம் ஏற்படும் என்பதானாலேயே அதனை வெறுத்தோம்' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஸாபித் பின் புன்னானி, ஆதார நூல்: புஹாரி)
மருத்துவச் சோதனை போன்ற காரணங்களுக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதையும் மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
-: மருத்துவம் செய்தல் :-
நோயாளிகள் நொன்பை விட்டுவிட்டு வேறு நாட்களில் அதை நோற்க சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் முன்னரே குறிப்பிட்டோம். ஒருவர் நோன்பு நோற்றபின் அவர் நோய்வாய்ப்பட்டால் நோன்பை விட்டு விடலாம். மருத்தவம் செய்யலாம். வேறு நாட்களில் அந்த நோன்பை நிறை வேற்றலாம். ஏனெனில் நோயாளி நோன்பை விட்டுவிட சலுகை வழங்கப்பட்டுள்ளார்.
நோன்பை விட்டுவிடும் அளவுக்கு நோய் பெரிதாக இல்லாவிட்டால் - சிறிது நேரத்தில் விலகிவிடக்கூடிய வலி போன்றதாக இருந்தால் - வாய்வழியாக உட்கொள்ளாத வைத்தியம் செய்து கொள்ளலாம். ஏனெனில் உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகிய காரியங்களே நோன்பை மறிக்கும் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன. இவையல்லாத காரியங்கள் நோன்பை முறிக்கும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.
-: தவறான நம்பிக்கைகளும் நடைமுறைகளும் :-
நோன்பை முறிக்கும் காரியங்கள் என மூன்று காரியங்கள் மட்டுமே குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படுகின்றன. அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்துள்ள இறைவன் எதையும் மறந்து விடமாட்டான்.
'..உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்.' (அருள்மறை குர்ஆனின் 19வது அத்தியாயம் ஸுரத்து மர்யம் - 64வது வசனத்தின் ஒரு பகுதி)
குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சொல்லப்பட்ட அந்த மூன்று காரியங்களையும் தவிர, நோன்பை முறிக்கும் வேறு எந்தக் காரியங்கள் இருந்தாலும் அல்லாஹ் தன் தூதர் மூலம் நமக்குச் சொல்லியிருப்பான். அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாதவற்றையெல்லாம் நாம் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏவிய காரியங்களை செய்து நோன்பு என்னும் இவ்வணக்க வழிபாட்டை செவ்வனேச் செய்யக் கூடியவர்களாகவும், ரமளான் மாதத்தை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்பவர்களாகவும் நம் அனைவரையும் ஆக்கிவைக்க வல்ல அல்லாஹ்வையே பிரார்த்திப்போம்.
வல்லோன் அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment