widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, July 11, 2012


ரமளானை வரவேற்வோம் (தொடர் - 3)

எவ்வளவு நாட்களுக்குள் 'களா'ச் செய்யலாம்?

வேறு நாட்களில் நோன்பு நோற்கச் சலுகை வழங்கப்பட்டவர்கள் இத்தனை றாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும் என்ற காலக்கெடு எதுவும் ஹதீஸ்களில் கூறப்படவில்லை. அருள்மறை குர்ஆன் 'வேறு நாட்களில்' என்று மட்டுமே குறிப்பிடுகிறது. 

'ரமளானில் எனக்குச் சில நோன்புகள் (மாதவிடாய் காரணமாக) தவறி விடும். அதை ஷஃபான் மாதத்தில் தவிர என்னால் களாச் செய்ய முடிந்ததில்லை. நபி(ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைளே இதற்குக் காரணம். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி). நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா)

ஷஃபான் மாதம் ரமளான் மாதத்திற்கு முந்திய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்திய மாதம்வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) அவர்கள் களாச் செய்துள்ளனர். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தில், அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் காரணமாக நடந்துள்ளது. இதிலிருந்து குறிப்பிட்டக் காலக் கெடு எதுவும் இல்லை என்று உணரலாம்.

ஆயினும் மனிதன் மரணத்தை எதிர்நோக்கியவனாக இருக்கிறான். எப்போது மரணம் வரும் என்பது மனிதனின் கையில் இல்லாததால் அதற்கு அஞ்சி விரைந்து களாச் செய்ய முயல்வதே சிறந்தது.

-: நோன்பின் ஆரம்ப நேரம் :-

ஸுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும்வரை நோன்பின் நேரமாகும். அதாவது ஸுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும், உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும். இது பற்றி அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகச் கூறுகிறான்:
'..இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்..' (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகரா - 187வது வசனத்தின் ஒரு பகுதி) 

நோன்பு நோற்பதாக இரவிலேயே முடிவு செய்துவிட்டாலும், முன் இரவிலேயே ஸஹர் உணவு உட்கொண்டு விட்டாலும், ஃபஜ்ர் நேரம்வரை உண்ணலாம். பருகலாம். ஏனெனில் நோன்பின் ஆரம்ப நேரம் ஃபஜ்ரிலிருந்துதான் துவங்கும். 

'..பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்..' (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகரா 187வது வசனத்தின் ஒரு பகுதி) சூரியன் மறைந்தவுடன் இரவு வந்துவிடுவதால், சூரியன் மறையும்வரை நோன்பைத் தொடர வேண்டும். 

-: ஸஹர் உணவு :-

நோன்பை சிரமமின்றி சமாளிப்பதற்குப் பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு உணவு உட்கொள்வது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

'நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் உணவில் நிச்சயம் பரக்கத் உள்ளது.' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதி)

ஸஹர் உணவு உண்பதை மிகவும் தாமதப்படுத்துவதும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
'ஸஹரை தாமதப்படுத்தி, நோன்பு திறப்பதை விரைவு படுத்தும்வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளார்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூதர்(ரலி) ஆதார நூல்: அஹ்மத்)

மேற்படி ஸஹரை எந்த அளவுக்கு தாமதப்படுத்த வேண்டும் என்பதற்கு விளக்கமாகப் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்துவிட்டுப் பிறகு (ஸுப்ஹுத்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஸஹர் முடிந்து ஸுப்ஹ் வரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு (நேரம்) என்று விடையளித்தார்கள்.' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதார நூற்கள்: புஹாரி, திர்மிதீ)

ஸஹர் உணவை முடித்துவிட்டு ஐம்பது வசனங்கள் ஓதும் நேரத்தில் ஸுப்ஹு நேரம் வந்துள்ளது. ஐம்பது வசனங்களை நிறுத்தி, நிதானமாக ஓதப் பத்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது. இந்த அளவுக்கு ஸஹரை தாமதப்படுத்த வேண்டும் என்பது மேற்படி ஹதீஸிருந்து நாம் அறியும் செய்தியாகும்.

விடி ஸஹர்

'விடி ஸஹர்' பெயரில் ஒரு விநோதமான ஸஹர் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளது. அதாவது இரவில் உறங்கிவிட்டு ஸுப்ஹு நேரம் வந்ததும் விழிப்பவர்கள் அவசரம் அவசரமாக எதையாவது சாப்பிட்டுவிட்டு நோன்பு நோற்பார்கள். இது நோன்பாகாது. ஏனெனில் ஃபஜ்ரு நேரம் வந்துவிட்டால் எதையுமே சாப்பிடக்கூடாது என்கிற கட்டளை குர்ஆனில் உள்ளது. நோன்பைப் பாழாக்கிவிடும் இந்தப் பழக்கம் தவறானதாகும். எனவே தாமதமாக விழிக்கக்கூடியவர்கள் எதையுமே சாப்பிடாமல், பருகாமல் நோன்பைத் தொடர வேண்டும். ( இன்ஷா அல்லாஹ் தொடரும்)

0 comments:

Post a Comment