"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, August 5, 2011
ரமழான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்
அருள்மிகு ரமழான் மாதம் நம்மை முன்னோக்கி வரக்கூடிய இந்நேரத்தில் அந்த மாதம் தொடர்பாக பதியப்பட்டுள்ள ஆதாரமற்ற செய்திகளை நாம் அறிந்து கொள்வது சாலச்சிறந்ததாகும்.
ஏன் என்றால் எது சரியான தகவல், எது பிழையான தகவல் என்ற பிரித்தறியும் தன்மை நம்மிடம் இருந்தால் தான் நமது வாழ்க்கையில் இறைவனுக்கு செய்யக்கூடிய கடமைகளை நாம் சரியாக நிறை வேற்ற முடியும்.
பல சந்தர்பங்களில் சரி என்று நினைத்துக் கொண்டு தவறை நாம் செய்து கொண்டிருப்போம் தவறு என்று நினைத்துக் கொண்டு சரியைச் செய்யாமலும் இருப்போம். அதிலும் குறிப்பாக ரமழான் மாதத்தைப் பொருத்தவரையில் அந்த மாதத்தில் அதிகமான நன்மைகளை நாம் செய்ய வேண்டும் என்ற நல்லண்ணத்தின் காரணத்தினால் ஹதீஸ் என்று யார் எதைச் சொன்னாலும் நாம் அதனை செயல்படுத்த முன்வந்து விடுகிறோம்.
இதன் காரணத்தினால் தான் இந்தக் கட்டுரை மூலமாக ரமழான் பற்றி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடிய ஹதீஸ்களை நாம் தொகுத்துத் தந்துள்ளோம்.
ரமழானின் மூன்று பகுதிகள்.
“ரமலானின் முதல் பகுதி அருளாகவும், நடுப்பகுதி மன்னிப்பு வழங்கப்படக் கூடியதாகவும், இறுதிப் பகுதி நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கப் பெறக் கூடியதாகவும் இருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: இப்னு குஸைமா (பாகம்: 3 பக்கம்: 191), ஷுஅபுல் ஈமான் (பைஹகீ,பாகம்: 3, பக்கம்: 306)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவர் இடம் பெறுகிறார். இவரை அஹமத் பின் ஹன்பல் போன்றோர் விமர்சித்துள்ளனர்.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 5, பக்: 156)
மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் யூஸுப் பின் ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி புகாரீ அவர்கள், “ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர்” என்றும் தாரகுத்னி அவர்கள், “பொய்யான செய்தியை அறிவிப்பதில் பிரபலமானவர்” என்றும் இன்னும் பல்வேறு அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
(நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 6, பக்:321)
மாதத்தின் தலைவர் ரமழானாகும்?
அபீ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்: “மாதங்களின் தலைவர் ரமலான் மாதமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: தப்ரானி கபீர், பாகம்: 9 பக்:205 - ஷுஅபுல் ஈமான், பாகம்: 3 பக்: 314)
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் யஸீத் பின் அப்துல் மலீக் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவராவார். மேலும் இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
இதே செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் கபீரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும் என்று இமாம் ஹைஸமீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மாலை நேரத்தில் பல் துலக்கக் கூடாதா?
அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ”நீங்கள் நோன்பு வைத்தால் காலையில் பல் துலக்கி விடுங்கள். மாலையில் துலக்காதீர்கள்! ஏனெனில் மாலை நேரத்தில் உதடுகள் காய்ந்த நிலையில் நோன்பாளி இருந்தால் கியாம நாளில் அவருடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் ஒளி உண்டாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: தப்ரானி கபீர் (பாகம்: 4, பக்கம்: 78)
இதில் அபுஅம்ரு என்ற கைஸான் என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஏராளமான அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள்.
(நூல்: மீஸான் அல் இஃதிதால், பாகம்:5, பக்: 205)
பிரயாணத்தில் நோன்பு நோற்றால் அரஃபா மலையளவு பாவமா?
அபூ துஃமா என்பவர் அறிவிக்கிறார்: நான் இப்னு உமரிடம் இருக்கும் போது ஒரு மனிதர் வந்து அப்துர்ரஹ்மானே! நான் பயணத்திலும் நோன்பு வைப்பதற்குச் சக்தி பெற்றுள்ளேன் (நான் நோன்பு நோற்கலாமா?) என கேள்வி கேட்டார். அதற்கு இப்னு உமர் அவர்கள்,யார் அல்லாஹ்வுடைய அனுமதியை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவன் மீது அரபா மலை அளவு பாவம் ஏற்பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் கூற செவியுற்றுள்ளேன்.
நூல்: அஹ்மத் (5135), தப்ரானீ கபீர்
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் “இப்னு லஹிஆ”என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப்)
பரிந்துரை செய்யும் நோன்பும், குா்ஆனும்.
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்: “நோன்பும் குர்ஆனும் கியாம நாளில் அடியானுக்குப் பரிந்துரை செய்யும். நோன்பு இறைவனிடத்தில் முறையிடும். “என் இறைவனே! இந்த அடியானை நான் பகலில் உணவை விட்டும் ஆசைகளை விட்டும் தடுத்து விட்டேன். இவருடைய விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!” என்று கோரும். குர்ஆன் கூறும்: “(யா அல்லாஹ்!) இரவு நேரங்களில் அவனுடைய தூக்கத்தைத் தடுத்து விட்டேன். ஆகவே இவர் விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக” என்று கோரும். அவை இரண்டின் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (6337)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் “இப்னு லஹிஆ”என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீன மானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)
ரமலான் சீராகி விட்டால், வருடம் முழுவதும் சீராகிவிடும்...
“ரமலான் (மாதம் நற்காரியங்கள் செய்வதன் மூலம்) சீராகி விட்டால் அந்த வருடம் (முழுவதும்) சீராகி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: ஷுஅபுல் ஈமான் (பைஹகீ) பாகம்: 3,பக்கம் 340
இச்செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் அபூமுதீஃ என்ற அல்ஹகம் பின் அப்துல்லாஹ் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார்.
இவர் பலவீனமானவர். எனினும் அப்துல் அஸீஸ் பின் அபான் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றிருப்பதே சரியானதாகும் என்று கூறும் இமாம் பைஹகீ அவர்கள் இவரும் பலவீனமானவர் என்று அதே நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ரமலான் என்று கூறக்கூடாதா?
“ரமலான் என்று கூறாதீர்கள்! ஏனெனில் அது அல்லாஹ்வுடைய திருநாமங்களில் ஒன்றாகும். எனவே நீங்கள் ஷஹ்ரு ரமலான் (ரமலான் மாதம்) என்று கூறுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: பைஹகீ (7293)
இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீ மிஃஷர் என்பவர் பலவீனமானவர் என்பதை இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸின் கீழே குறிப்பிட்டுள்ளார்கள்.
தக்க காரணமின்றி நோன்பை விட்டால்.....
“நோயோ தக்க காரணமோ இன்றி ரமலானில் ஒரு நாள் நோன்பை விட்டு விட்டால் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (655)
இந்தச் செய்தியைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் குறிப்பிடும் போது, “இந்தச் செய்தியில் மூன்று குறைபாடுகள் உள்ளன. 1. அறிவிப்பாளரில் குளறுபடிகள் 2. இதில் இடம் பெறும் அபுல் முதவ்விஸ் என்பவரின் விவரம் தெரியவில்லை. 3. இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செவியுற்றாரா? என்பதில் ஐயம் உள்ளது”என்று கூறி இந்தச் செய்தி பலவீனமானது என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
ரமழான் முதல் நாள் காலையை அடைந்தால் பாவமன்னிப்பு.
“ரமலான் மாதத்தின் முதல் நாள் காலையை அடைந்த எந்த முஸ்லிம்களின் பாவத்தையும் அல்லாஹ் மன்னிக்காமல் விடுவதில்லை”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள்.
நூல்கள்: தாரிக் பக்தாத், பாகம்: 5, பக்கம்: 90, அல்இலலுல் முதநாஹிய்யா
இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் இரண்டாவது அறிவிப்பாளர் ஸியாத் பின் மைமூன் என்பவரும், மூன்றாவது அறிவிப்பாளர் ஸல்லாம் அத்தவீல் என்பவரும் பெரும் பொய்யர்கள்.
இவர்களை இமாம் புகாரீ, நஸயீ, மற்றும் தாரகுத்னீ ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்ததை இதைப் பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் இப்னுல் ஜவ்ஸீ தனது அல்இலலுல் முதநாஹிய்யா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ரஜப் மாதத்தில் ரமழானைப் பற்றிய துஆ.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் “யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக!’ எங்களுக்கு ரமலான் மாதத்தையும் அடையச் செய்வாயாக!“ என்று பிரார்த்தனை செய்வார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: அஹ்மத் (2228)
பஸ்ஸார், தப்ரானி
இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸாயிதா பின் அபிர்ருகாத் என்பவர் இடம் பெறுகிறார். இவரை இமாம் புகாரீ அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சனம் செய்துள்ளார்.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 3 பக்கம்: 95)
மதீனாவில் நோன்பு மற்ற இடங்களைவிட சிறந்ததா?
“மதீனாவில் நோன்பு வைப்பது மதீனா அல்லாத மற்ற ஊர்களில் ஆயிரம் நோன்பு வைப்பதை விட சிறப்பானதாகும். மேலும் மதீனாவில் ஜும்ஆவை நிறைவேற்றுவது மற்ற ஊர்களில் நிறைவேற்றும் ஆயிரம் ஜும்ஆவை விட சிறப்பானதாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று பிலால் பின் ஹாரிஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: தப்ரானீ – கபீர் பாகம்: 1, பக்கம்: 372)
இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் கஸீர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர். (லிஸானுல் மீஸான் பாகம்: 3,பக்கம்: 329)
பத்து நாள் இஃதிகாப் இரண்டு ஹஜ்ஜுக்கு சமனானதா?
“யார் ரமலான் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாப் இருக்கிறாரோ அவர் இரண்டு ஹஜ், மற்றும் இரண்டு உம்ரா செய்தவர் போன்றவராவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஹஸன் (ரலி), நூல்: ஷுஅபுல் ஈமான், பாகம்: 3, பக்கம்: 425
இதில் முஹம்மத் பின் ஸாதான் என்பவர் இடம் பெறுகிறார். இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை என்று புகாரீ அவர்கள் உட்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். மேலும் இச்செய்தியில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் அன்பஸா பின் அப்துர் ரஹ்மான் என்பவரையும் இமாம் புகாரீ போன்றோர், இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை” என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம் 8 : பக்கம்: 143, பாகம்: 9, பக்கம்: 145)
மக்காவில் ரமழானை அடைவது.
“யார் ரமலானை மக்காவில் அடைந்து, (அதிலே) நோன்பு வைத்து இயன்ற அளவு இரவுத் தொழுகை தொழுகிறாரோ அவருக்கு, மக்கா அல்லாத மற்ற ஊர்களில் நோன்பு வைத்த நன்மையை விட ஆயிரம் மாதங்கள் நோன்பு வைத்து தொழுத நன்மைகள் கிடைக்கின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: இப்னுமாஜா (3108)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹீம் பின் ஸைத் அல் அம்மீ என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்பதை ஹதீஸ் துறையில் ஏராளமான அறிஞர்கள் பலவித வார்த்தைகளில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 6, பக்கம்: 273)
சென்ற வருட நோன்பை களா செய்யாவிட்டால்……
அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யார் ரமலான் மாதத்தை அடைந்து அவர் சென்ற ரமலானின் நோன்பை களாச் செய்யவில்லையானால் அவரின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: தப்ரானீ அவ்ஸத், பாகம்: 3, பக்கம்: 321)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ”இப்னு லஹிஆ”என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீன மானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப்)
நோன்பு உடலுக்குறிய ஸக்காத்தா?
“ஒவ்வொரு பொருளுக்கும் ஸகாத் (கடமை) இருக்கிறது. உடலுடைய ஸகாத் நோன்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: இப்னு மாஜா (1735)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் “மூஸா பின் உபைதுல்லாஹ்”என்பவர் இடம் பெறுகிறார். இமாம் அஹ்மத், நஸயீ, இப்னு அதீ, இப்னு மயீன் ஆகியோர் பலவீனமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(மீஸானுல் இஃதிதால், பாகம் 6, பக்கம்: 551)
பித்ரா இல்லாமல் நோன்பு கூடாது?
ரமலான் மாதம் (அதாவது அம்மாதத்தின் நோன்பு) வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் தொங்கவிடப் பட்டிருக்கும். பித்ரா தர்மம் கொடுக்கும் வரை அது (அல்லாஹ்விடம்) உயர்த்தப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்கள்: அல் இலலுல் முதநாஹிய்யா, கன்ஸுல் உம்மால்>அல்ஜாமிவுஸ்ஸகீர்)
இச்செய்தியில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸிஸானுல் மீஸான் என்ற நூலிலும் உறுதி செய்துள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment