widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, August 17, 2011

ஐயமும்-தெளிவும் – கத்தீபு கேள்வி கேட்கலாமா?


ஐயம்:- ஜும்மா மேடையில் குத்பா நிகழ்த்திக்கொண்டிருக்கையில் இமாம் அவர்கள்இ குத்பாவைக் கேட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம்களிடத்தில் கேள்வி கேட்கலாமா? அதற்கு முஸ்லிம்கள் பதில் கூறலாமா? குர்ஆன் – ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.
தெளிவு:-ஜும்ஆ மேடையில் இமாம் உரை நிகழ்த்தும்போது, உரையைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களை நோக்கி இமாம் தாராளமாகப் பேசலாம்இ கேள்விகளும் கேட்கலாம். அதற்கு, எதிரிலிருப்போர் பதில் சொல்லலாம்! அதுபோல் இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, உரையைக் கேட்டுக் கொண்டிருப்போரும் இமாமை நோக்கிக் கேள்வியோ அல்லது வேண்டுதலோ விடுக்கலாம். இதற்கு அநேக ஆதாரங்கள் ஹதீஸ் அறிவிப்புகளில் உள்ளன!
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் உள்ளே வந்தமர்ந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது வீட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘(எழுந்து) இரண்டு ரக்அத் தொழுவீராக!’ என்று கூறினார்கள்.அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) (நூல்கள்: புகாரி 931, முஸ்லிம் 1585, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ)
நபி(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழத்திக்கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், ‘(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர் நின்று கொண்டே இருப்பேன் உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும்,  (யாரிடமும்) பேசமாட்டேன் நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்துகொண்டுள்ளார்’ என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்’ என்றார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 6704)
நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட வழிகாட்டலிலிருந்து, உமர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்கு தாமதமாக வந்த நபித்தோழருக்கும் உமர் (ரலி) அவர்களுக்குமிடையே நடந்த உரையாடல்:
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர்(ரலி) அழைத்து ‘ஏனிந்தத் தாமதம்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘நான் அலுவலில் மூழ்கிவிட்டேன். பாங்கு சப்தத்தைக் கேட்டு(க் குளிக்காமல்) உளூ மட்டும் செய்துவிட்டு வேகமாக வருகிறேன்’ என்று கூறினார். அதற்கு உமர்(ரலி) ‘உளூ மட்டும்தான் செய்தீரா? ஜுமுஆ நாளில் குளிக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர் என்பது உமக்குத் தெரியுமே!’ என்று கேட்டார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) (நூல்கள்: புகாரி 882,  முஸ்லிம் 1533, திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா மாலிக்)
மிம்பரில் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இமாமை நோக்கிக் கோரிக்கை வைத்தல்:
நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது (கிராமவாசி) ஒருவர் வந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) மழை பொய்த்துவிட்டது. (எங்களுக்கு) மழை வேண்டி உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள்’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வானத்தை (அண்ணாந்து) பார்த்தார்கள். (அதில் மழை) மேகம் ஏதும் இருக்கவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே மேகம் ஒன்றொடொன்று திரள ஆரம்பித்தது. பிறகு மழை பொழிந்தது. இதையடுத்து மதீனாவின் நீர்வழிகள் (எல்லாம் நிரம்பி) வழிந்தோடின. இடையறாமல் அடுத்த ஜுமுஆ வரை அம்மழை நீடித்தது.
நபி(ஸல்) அவர்கள் (அடுத்த ஜுமுஆ) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது அந்தஃவேறொரு மனிதர் எழுந்து ‘(தொடர்) மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களைவிட்டு மழையை நிறுத்துமாறு உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே! எங்கள் சுற்றுப்புறங்களில் (உள்ள மானாவாரி நிலங்கள், நீர்நிலைக்கு ஆகியவற்றுக்கு இம்மழையைப்) பொழியச் செய்வாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!’ என்று இரண்டு அல்லது மூன்று முறைப் பிரார்த்தித்தார்கள். அந்த(த் திரண்ட) மேகம் மதீனாவிலிருந்து (விலகி) வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றது. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தன்னுடன் தூதரின் மதிப்பையும் அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு (நேரடியாகக்) காட்டினான். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) (நூல்கள்: புகாரி 6093இ இதேக் கருத்தையொட்டிய அறிவிப்பாக முஸ்லிம் 1635)
வெள்ளிக்கிழமை மேடையில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது பிறரை நோக்கி இமாம் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இமாமை நோக்கி யாரும் எதுவும் பேசக்கூடாது என்று கூறுவதற்கும் எவ்வித ஆதாரமுமில்லை. மாறாக, தேவைக்கேற்ப, வேண்டியவற்றைப் பேசிக்கொள்ளலாம் என்பதற்கு மேற்கண்ட சான்றுகளுடன் இன்னும் அநேக சான்றுகள் உள்ளன.
வெள்ளிமேடையில் இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது அந்தப் பள்ளியில் இருப்பவர்கள், கத்தீபுடைய உரைக்குச் செவி தாழ்த்தாமல் தங்களுக்கிடையே பேசிக் கொள்ளக்கூடாது எனத் தடையுள்ளது!
(இறைவன் மிக்க அறிந்தவன்)
நன்றி – சத்தியமார்க்கம்

Source: Kattankudi.info

0 comments:

Post a Comment