widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, August 19, 2011

ஈமான் எனும் இறைநம்பிக்கை -ஹதீஸ் 21-25 From Buhari Shareef


21. 'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியராவது; ஒருவர் மற்றொரு வரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது; குப்ரிலிருந்து அல்லாஹ் அவரை விடுத்த பின், நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
22. (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு 'ஹயாத்' என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் 'ஹயா' என்று நபி(ஸல்) கூறினார்களோ என்று சந்தேகப்படுகிறார்... அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு:) இதே ஹதீஸை உஹைப் அறிவிக்கும்போது (ஹயா அல்லது ஹயாத் என்று) சந்தேகத்தோடு அறிவிக்காமல் 'ஹயாத்' என்னும் ஆறு என்று உறுதியாகக் குறிப்பிடுகிறார். மேலும் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை என்பதற்குப் பதிலாகக் கடுகளவேனும் நன்மை என்ற வார்த்தையையும் குறிப்பிடுகிறார்.
Volume :1 Book :2
23. 'நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டாப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன் இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு 'மார்க்கம்' ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
24. 'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
25. 'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2

0 comments:

Post a Comment