widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, August 22, 2011

ஈமான் எனும் இறைநம்பிக்கை -ஹதீஸ் 31-35 From Buhari Shareef


31.இவருக்கு (அலீ(ரலி)க்கு) உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரா(ரலி) என்னைச் சந்தித்து 'எங்கே செல்கிறீர்?' எனக் கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் 'நீர் திரும்பிச் செல்லும்; ஏனெனில், 'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, 'அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்' என்று கூறினார்கள்' என கூறினார்' என அஹ்னஃப் இப்னு கைஸ் அறிவித்தார்.
Volume :1 Book :2
32. 'இறைநம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தைக் கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவார்" (திருக்குர்ஆன் 06:82) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள் 'நம்மில் யார் அக்கிரமம் செய்யாமலிருக்க முடியும்?' எனக் கேட்டனர். அப்போது, 'நிச்சயமாக (அல்லாஹ்வுக்கு எவரையும்) இணையாக்குவதுதான் மிகப் பெரும் அக்கிரமம்' (திருக்குர்ஆன் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
33. 'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
34. 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
35. 'நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய குற்றங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2

0 comments:

Post a Comment