"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Saturday, August 6, 2011
கோதரர்களே! ரமழானிடம் ஜெயிக்க வேண்டாமா?
வருடத்திற்கு ஒரு ரமழான் வருகிறது. முப்பது நாட்கள் நோன்பு வைக்கிறோம். இறுதியாக ஒரு பெருநாள் தொழுகை. எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன வேலை? என்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவர்கள் நிறையப் பேர் நம்மிலே உள்ளார்கள். இதற்குக் காரணம் என்னவெனில் ரமழானின் முக்கியத்துவம் தெரியவில்லை, ரமழானை நாம் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை.
ஆம் சகோதரர்களே! ரமழானிடம் நாம் ஜெயிக்க வெண்டாமா?
ஒவ்வொரு வருடமும் நம்மைத் தாண்டி செல்லும் புனித மிக்க ரமழானை நாம் சரியாகப் பயன்படுத்துவதே ரமழானை நாம் ஜெயித்துவிட்டோம் என்பதற்கான சரியான பதிலாக இருக்க முடியும்.
பொதுவாக ரமழானில் நாம் செய்யும் காரியங்களை பட்டியல் போட்டுப் பாருங்கள். என்னெவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள முடியும்.
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து ஸஹர் உணவை நேர காலத்தோடு உண்டுவிட்டு அவசர அவசரமாக சென்று படுத்துறங்குகிறோம். அப்படியானால் சுப்ஹுத் தொழுகை ? அதன் கதி அதோ கதி தான்.
காலை பத்து மணிக்கு மேல் எழும்பி அதன் பின்னர் நம்முடைய மற்ற காரியங்களை செய்ய ஆரம்பிக்கிறோம் பெரும் பாலும் லுஹர், அசர், மஃரிப், இஷாவுடன் சேர்த்து இரவுத் தொழுகை என்று மற்ற தொழுகைகளை எப்படியோ தொழுது விடுகிறோம்.
அதிலும் சிலருக்கு லுஹர் தொழுகை உண்டு அதன் பின் ஒரு தூக்கம் போட்டால் அசர் இல்லை. நோன்பு திறப்பதற்குத் தான் கண் விழிப்பார்கள்.
இஷா தொழுகையுடன் சேர்த்து இரவுத் தொழுகையையும் தொழுதுவிட்டு நிம்மதியாக கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் தூக்கத்தில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும் ஆனால் பெரும்பாலானவர்களின் நிலை அதுவன்று.
ரமழான் காலம் என்றால் இரவு முழுவதும் கூத்தும் கும்மாலமும் நிறைந்திருக்கும் பகல் முழுவதும் ஊரே அடங்கிப் போகும் அளவுக்கு தூக்கத்தில் மூழ்கியிருக்கும்.
இன்னும் சிலரின் பகல் நேர இரவு நேர வேலையாக, பொழுது போக்கும் காரியமாக தொலைக்காட்டி பார்த்தல் தான் அமைந்திருக்கும்.
இனி எப்படி நாம் ரமழானை ஜெயிப்பது ?
ரமழானை ஜெயிப்பதற்கான சில அறிவுரைகள்.
புனிதமிக்க ரமழான் மாதத்தை ஜெயித்து மறுமையில் வெற்றி பெறுவதற்காக ரமழானை நாம் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சில செய்திகளை இங்கு குறிப்பிடுகிறோம்.
ரமழான் பற்றி குடும்பத்தினருடன் ஆலோசனை செய்யுங்கள்.
முதலாவதாக நாம் எதிர் நோக்க இருக்கும் ரமழான் மாதம் பற்றி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு ஆலோசனை செய்யுங்கள். ரமழான் மாதத்தை பிரயோஜனமானதாக கழிப்பதற்குறிய கருத்துக்களை அவர்களிடம் இருந்து எதிர்பாருங்கள்.
உங்கள் கணவர், பிள்ளைகள், தாய், தந்தை, உங்கள் கணவரின் தாய், தந்தை, உங்கள் தம்பி, தங்கைள் என்று அனைவரையும் ஒன்று கூட்டிக் கூட இந்த ஆலோசனையை நீங்கள் செய்யலாம். ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெரிவிக்கும் போது அதில் சிறந்த கருத்துக்களை தேர்ந்தெடுத்து அதன் அடிப்படையில் ரமழான் மாதத்தின் செயல்பாடுகளை நீங்கள் அமைத்துக் கொள்ள முடியும்.
தொழுகையை சரியாகப் பேணுதல்.
ரமழான் காலம் என்பது நமது வாழ்வை சரியாக அமைத்துக் கொள்வதற்கான ஒரு பயிற்சிக் களமாகும் அந்த பயிற்சிக் காலத்தை சரியாக நாம் பயன்படுத்த முனைய வேண்டும்.
அந்த அடிப்படையில் தொழுகையை சரியாக பேணுவதற்கு நாம் நம்மை பழக்கிக் கொள்வதற்கு ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைவது இந்த ரமழானுடைய காலம் சரியான நேரத்தில் ஜமாத்துடன் சேர்ந்து நாம் தொழுவதால் நமது வாழ்வை சரியாக வழப்படுத்திக்கொள்ள அது பெரிதும் உதவியாக இருக்கும்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற போது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையான போது, "மக்கள் தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். "இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினோம். அப்போது "பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, "மக்கள் தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். "இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று சொன்னோம். அப்போது, "பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, "மக்கள் தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். "இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள்'' என்று சொன்னோம். அப்போது "பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ், நூல்: புகாரி 687
தனக்கு எழுந்து நிற்கவே முடியாது என்ற நிலை இருந்தும் நபியவர்கள் தொழுகையை விடுவதற்க விரும்பவில்லை. ஏன் என்றால் தொழுகை என்பது அவ்வளவு முக்கியமான ஒரு செயல். அதனால் தான் நபியவர்கள் இவ்வளவு கஷ்டம் இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
நாமும் இந்த ரமழான் காலத்தை தொழுகையை சரியாக அமைத்துக்கொள்ளக் கூடிய பயிற்சிக் களமாக மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.
குர்ஆன் ஓதுதல்.
திருமறைக் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மிக்க மாதமாக இந்த ரமழான் மாதம் தான் இருக்கிறது. இம்மாதத்தில் அதிகமதிகம் நாம் குர்ஆனை ஓத வேண்டும்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன் 2:185)
நமது வீடுகளில் திருமறைக் குர்ஆனை ஓதுவதின் மூலமாக நமது பிள்ளைகளும் அதைப் பார்த்து பழகுவதற்கு ஒரு வாய்ப்பாக அது மாறிவிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை,ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். "அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1430
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஏட்டை எழுதினான். அந்த ஏட்டிலிருந்து இரண்டு வசனங்களை அருளினான். அந்த இரண்டைக் கொண்டு சூரத்துல் பகராவை முடித்தான். மூன்று இரவுகள் ஒரு வீட்டிலே அந்த இரண்டு வசனங்களும் ஓதப்படவில்லையென்றால் ஷைத்தான் அவ்வீட்டை நெருங்கியே தீருவான்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதி 2807
ரமழான் மாதத்தில் ஆண், பெண் என்று அனைவருக்கும அதிகமான நேரங்கள் கிடைப்பதால் அந்த நேரத்தை திருமறைக் குர்ஆனை ஓதுவதின் மூலம் பிரயோஜனப் படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு “ஜுஸ்வு” ஓதினால் முப்பது நாட்களில் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்த நன்மையை நாம் பெற்றுவிட முடியும்.
அதே போல் குர்ஆனை ஒதுவதுடன் இணைத்து அதன் மொழி பெயர்பையும் படிக்கும் போது திருமறையில் உள்ளார்ந்த, உயரிய கருத்துக்களை நாம் நமது வாழ்வில் நடை முறைப்படுத்துவதற்கு வசதியாக அது அமையும்.
அண்டை வீட்டாரை கவணித்தல்.
ரமழான் மாதம் என்பது அனைவரையும் அரவணைக்கும் ஓர் உண்ணத மாதமாகும். அம்மாததில் நாம் நம்முடைய அண்டை வீட்டாருடன் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் நடக்க முயற்சிக்க வேண்டும். ஏன் என்றால் பொருமையின் மாதத்தில் நாம் நமது அண்டை வீட்டாருடன் சரியான முறையில் வாழ்ந்து பழகும் போது அது மற்ற மாதங்களிலும் நாம் சரியாக இருப்பதற்கு ஒரு அடிப்படையாக அமைந்து விடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) , நூல்: முஸ்லிம் 73
நம் மூலமாக நமது அண்டை வீட்டாருக்கு எந்த ஒரு தீங்கும் நடக்காமல் இருக்கும் அளவுக்கு நாம் அவர்களுடன் சிறப்பான முறையில் பழகுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
உறவினர்களுக்கு மார்க்க விஷயங்களை எத்தி வைத்தல்.
கிடைக்கும் நேரங்களில் நமது உறவினர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய செய்திகளை எத்தி வைப்பதற்கு முனைய வேண்டும். அது காலை நேரமாக இருக்களாம் அல்லது இரவுத் தொழுகைக்குப் பின் கண்டவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை விடுத்து அந் நேரத்தில் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு மார்க்கத்தின் முக்கியத்துவம் பற்றிய செய்திகளை நன்மையான காரியங்களை நாம் சொல்லிக் கொடுக்கும் போது அவர்களும் அதன் படி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொடுத்த நன்மையை அடைந்து கொள்வோம்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீரலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5-2)
நன்மையான காரியங்களில் அதிகமதிகம் ஈடுபடுபவர்களாக ரமழான் மாதத்தில் நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இரவில் நின்று வணங்குதல்.
ரமழான் மாதத்திற்கு என்று சிறப்பான எந்தத் தொழுகையும் இல்லாவிட்டாலும் மற்ற காலங்களில் தொழும் இரவுத் தொழுகையை விட ரமழான் மாத்த்தில் தொழும் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதை நாம் காணமுடிகிறது. எல்லா நாட்களிலும் இந்தத் தொழுகையைத் தொழ வேண்டும் என்றாலும் ரமளானில் இந்தத் தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
யார் ரமளானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் தொழுகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.
இது போன்ற ஹதீஸ்கள் யாவும் ரமளானில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டுகின்றன. நின்று வணங்குவது என்றால் நபியவர்கள் எவ்வாறு நின்று வணங்கினார்களோ அவ்வாறு வணங்குவதையே அது குறிக்கும். நபியவர்கள் பதினொரு ரக்அத்களே நின்று வணங்கியுள்ளதால் அதையே நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
நிறைய பிரார்த்தனைகளை செய்தல், பாவ மண்ணிப்புத் தேடுதல்.
நோன்பு பிடித்துக் கொண்டிருப்பவர் நிறைய பிரார்தனைகளை செய்ய வேண்டும். தனக்கு தேவையான கோரிக்கைகளை நோன்பாளியாக இருக்கும் நேரத்தில் இறைவனிடம் எடுத்து வைக்கும் போது அதற்கு இறைவன் நிறைய பலன்களைத் தருகிறான். மற்ற காலங்களில் நாம் நிறைய பாவங்கள் செய்திருப்போம் அந்தப் பாவங்களுக்குறிய பரிகாரமாக இந்த ரமழான் மாதத்தைப் பயன்படுத்தி இறைவனின் பாவ மன்னிப்பை கேட்க்க வேண்டும்.
இஃதிகாப் இருத்தல்.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.
இதன் அடிப்படையில் நாமும் அந்த நாட்களில் இஃதிகாப் இருந்து நன்மைகளை அடைந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஒருவருக்காவது நோன்பு திறக்க உதவுதல்.
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு, நோன்பு திறப்பதற்கு வசதியில்லாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவருக்காவது நாம் நோன்பு நோற்பதற்கான அல்லது திறப்பதற்கான உதவிகளை செய்து கொடுக்கும் போது அவர்களின் மனது சந்தோஷத்தில் நிறைந்து விடுவதுடன், நாமும் சந்தோஷமாக இருந்து இறைவனிடத்தில் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பித்ராக்களை சரியாக வழங்குதல்.
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை,அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
ஏழைகளுக்கான இந்த தர்மத்தை நாம் மனமுவந்து வழங்கும் போது நிறைய நன்மைகள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன.
நல்ல வார்த்தைகளை பேசுதல்.
நோன்பு காலம் என்பது பொருமையான மாதம் என்பதால் அம்மாதத்தில் நாம் நமது நாவைப் பேணுவதில் மற்ற மாதங்களைவிடவும் இம்மாதத்தில் மிகவும் அதிகமாக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
தீய வார்த்தைகள், ஆபாசமான வார்த்தைகள், கெட்ட எண்கங்களை உண்டாக்கும் பேச்சுகள், சினிமாப் பாடல்கள் போன்றவற்றை விட்டும் நாம் ஒதுங்கிவிட வேண்டும். அவ்வாறு ஒதுங்கும் போது, இதுவே நமது பயிற்சியாக உருவெடுத்து மற்ற மாதங்களிலும் நாம் சரியாக இருப்பதற்கு உதவியாகி விடுகிறது.
மார்க்கத்தைப் பற்றிய செய்திகளை தேடிப்படித்தல்.
நிறைய நேரம் கிடைக்கிறது என்ன செய்வதென்று தெரியவில்லை என ரமழான் காலத்தில் நிறையப் பேர் தவிப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் செய்வதற்கான ஒரு அருமையான காரியம் மார்க்த்தைப் பற்றிய புத்தகங்கள்ப் படிப்பது அல்லது எழுதுவதாகும்.
இது போன்ற வேலைகளை செய்யும் போது நம்மை அறியாமல் நிறைய விஷயங்களைப் படித்துக் கொள்வதோடு மற்றவர்களுக்கும் அதனை சொல்லிக் கொடுக்க முடியும்.
பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல்.
ரமழான் மாதத்தைப் பொருத்தவரையில் நிறைய பயான் நிகழ்ச்சிகள் மார்க்கப் பிரச்சாரங்கள் செய்யப்படும் ஒரு மாதமாகும் இம்மாத்தில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் நிகழ்த்தப்படும் பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது போன்ற செயல்பாடுகளில் அதிகமதிகம் நாம் ஈடுபடுவது நம்மை சிறப்பானவர்களாக மாற்றும் காரியமாகும்.
தாயின், மனைவியின் சமையலுக்கு உதவுதல்.
ரமழான் காலத்திலும் தாய், தந்தையர்களுக்கு உதவிகள் செய்து அதிகமாக நன்மைகளை பெற்றுக்கொள்ள முனைய வேண்டும் அதிலும் குறிப்பாக தாயின் சமையலுக்கு, மனைவியின் சமையலுக்கெல்லாம் உதவுவதும் அதிகமாக நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளாகும்.
தந்தையின் வேலைகளுக்கு உதவுதல், தாயில் வேலைகளை இலகுவாக்குதல் போன்ற காரியங்களில் ரமழானில் அதிகமதிகம் ஈடுபட வேண்டும்.
குழந்தைகளுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள்.
குழந்தைகள் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான நேர அட்டவனை ஒன்றை தயார் செய்து குர்ஆன் ஒதல் பயிற்சி, இஸ்லாமிய பயான்கள் பார்க்க கேட்ட, குரான் கிராத்கள் கேட்பதற்கான பயிற்சிகள் என்பவற்றை ஏற்பாடு செய்து கொடுக்கும் போது அவர்கள் தமது ரமழான் காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.
தொலைக்காட்சியில் தீமையை நன்மையாக்குங்கள்.
ரமழான் காலத்தில் தொலைக்காட்சியில் நிறைய இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒளி, ஒலி பரப்பப்படும் அந்த நிகழ்ச்சிகளில் சிறந்த நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பதுடன், பாவமான, கெட்ட நிகழ்ச்சிகளை விட்டும் நாமும் ஒதுங்கி நமது குழந்தைகளையும் காத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக.......................
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (4:1)
ரமழானில் இறைவன் காட்டிய அடிப்படையில் அதிகமான நன்மைகளை செய்து ரமழானை ஜெயித்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment