widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, July 31, 2011

புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம்


"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)

ஆம்! உலக முஸ்லிம்களின் வாழ்வில் மீண்டும் ஒரு முறை புனித ரமழான் வந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச ரமழான் மாதம் பிறந்திருக்கிறது. 

புண்ணியம் மொழியும் கண்ணியமிகு மாதமான இம்மாதம் பாவக் கறையகற்றும் மாதமாகும். பதினொரு மாதமும் நாம் செய்த பாவங்களை கழுவி பரிசுத்தப்படுத்துவதற்காக இனிய நோன்பு வருடத்தில் ஒரு தடவை வருகிறது. 

இந்த மாதத்திற்கு "ரமழான்' என்று பெயர் வரக் காரணம் என்ன? ரமழான் என்ற அரபுப் பதம் காய்தல், எரித்தல் என்று பொருள்படும். இந்த மாதத்தில் வயிறு காய்கிறது. உடலில் மிதமிஞ்சிய கொழுப்புக்கள் எரிக்கப்படுகின்றன. அதே போன்று சூரியனின் வெப்பத்திற்கும் "ரமழான்' என்று கூறப்படுகிறது. 

ஆயினும் ஆத்மீகமான ரமழான் என்பதன் அர்த்தம் ஆத்மீக இன்பம், விருப்பம் மற்றும் மார்க்க ரீதியிலான வெப்பமாகும் என இஸ்லாமிய அறிஞர்கள் கூறியுள்ளனர். நோன்பு நோற்பதன் காரணமாக ஒரு முஸ்லிமிடத்தில் "இறை நேசம்' எனும் வெப்பம் பிறக்கிறது. "தக்வா' என்ற இறையச்சம் ஏற்படுகிறது. 

நோன்பின் முக்கியத்துவம் 
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ""உங்களுடைய இந்த மாதம் உங்களுக்காக நிழல் தர வந்துள்ளது. முஃமின்களுக்கு இதனைவிட சிறந்த மாதம் எதுவுமில்லை. மேலும் முனாபீன்களுக்கு இதனைவிட கஷ்டமான மாதம் எதுவுமில்லை. 

ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: 

""நோன்பு ஒரு கேடயமாகும். மேலும் நெருப்பிலிருந்து காப்பாற்றுகின்ற ஒரு உறுதியான கோட்டையாகும்''

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்: ""ரமழான் மாதம் ஆரம்பமாகும் போது சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும். நரகத்தின் வாயில்கள் மூடப்படும்''

முஸ்லிம்களின் நான்காவது கடமையான நோன்பு இறைவனுக்காக செய்யப்படுவதாகும். அதனால்தான், மனிதன் எல்லாச் செயல்களையும் தனக்காகவே செய்கிறான். ஆனால், நோன்பை எனக்காக நோற்கிறான். (அவன் தனது எல்லாச் சொந்த விருப்பங்களையும், உண்ணுவதையும் அருந்துவதையும் எனக்காக விட்டுவிடுகிறான்) எனவே, நானே அவனுக்கு வெகுமதியாகிவிடுகிறேன். (புகாரி, கிதாபுஸ்ஸவ்ம்)

என்று அல்லாஹ் தஆலா கூறியுள்ளதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நோன்பானது மனிதனது ஆன்மாவை மேம்படுத்தக்கூடிய ஆத்மீகப் பயிற்சியாக விளங்குகிறது. அதனால்தான் நோன்பு நோற்பதன் காரணமாக இறையச்சம் உடையவர்களாக ஆகலாம் என்று இறைவன் கூறுகின்றான். இறையச்சத்தின் உயர்ந்த நிலையை அடைவதே நோன்பு நோற்பதன் குறிக்கோளாகும். 

ரமழான் ஒரு மனிதன் தன்னை மனிதப் புனிதனாகவும், ஒரு குடும்பம் தன்னை ஒரு சிறந்த குடும்பமாகவும் மாற்றிக் கொள்வதற்கு பயிற்சியளிக்கிறது. அதன் மூலம் அதற்கான வழியமைக்கப்படுகிறது. 

நோன்பின் விதிகள்
பருவமடைந்த ஒவ்வொரு ஆண், பெண் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. ஆயினும் சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கும் பயணிகளுக்கும் நோன்பு பிடிப்பதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் வேறு நாட்களில் நோன்பிருந்து விடுபட்ட நோன்புகளை ஈடுசெய்ய வேண்டும். 

நீண்ட காலமாக நோயுற்றுள்ள ஒருவர் நோன்பிற்கு பகரமாக ஓர் ஏழைக்கு தினமும் (அதாவது ரமழான் மாதம் முழுதும்) உணவளிக்க வேண்டும். 

மாதவிடாய் உள்ள பெண்களும், கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் நோன்பிருக்கக்கூடாது. அவர்கள் அவற்றை பின்னர் ஈடு செய்ய வேண்டும். 

"ஸஹா' செய்வதன் சிறப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: ""நீங்கள் ஸஹரின் (அதிகாலை உதயமாவதற்கு முன்னுள்ள நேரத்தில்) உணவை உண்ணுங்கள். ஏனெனில் ஸஹரில் உணவை உண்பதில் பரகத் (அருள்) உள்ளது.'' (திர்மிதி)

மிகப் பிந்திய ஸஹரும் விரைவாக குறித்த நேரத்தில் நோன்பு திறப்பதும் சிறப்பானதாகும். நோன்பின் மூன்று பகுதிகள் ரமழான் நோன்பு மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: 

""புனித ரமழான் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இறைவனின் பேரருள் மழை நீரைப் போன்று பொழியும். அதையடுத்து வரும் பத்து நாட்களில் பாவங்கள் மன்னிக்கப்படும். இறுதிப் பத்து நாட்களில் நரக தண்டனையிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும்''

நோன்பின் பயன்கள்
மனித ஆரோக்கியத்திற்கு நோன்பு தலைசிறந்த மருந்தாகும். நாங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தாலேயே வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

நோன்பின் போது உடலின் உறுப்புக்கள் தூய்மையடைகின்றன. உள்ளுறுப்புக்களும் தூய்மையடைகின்றன. பசியோடு இருப்பதன் காரணமாக கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன் பின் கிளைக்கோஜனாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரையும், புரதப் பொருளும் கரைந்து உடலில் கலக்கின்றன. 

உடல் பெருத்தவர்கள் நோன்பு நோற்பதன் காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களை சுற்றியிருக்கும் வீணான பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உடல் ஓய்வடைகிறது. நரம்புத்தளர்ச்சி நீங்குகிறது. இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றஞீ. காம உணர்வு தணிக்கப்படுகிறது. நீண்ட ஆயுளுக்கும் நோன்பு சிறந்த மருந்தாகும். 

உடல் ரீதியில் மட்டுமன்றி உள ரீதியாகவும் ஆரோக்கியம் மேன்மையடைகிறது. சரியான முறையில் நோன்பு நோற்பவர்களுக்கு இறைவனின் நெருங்கிய தொடர்பு கிடைக்கிறது. இறையருள் கிடைக்கிறது. அவரின் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பாவங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. அவர் தூய்மையாக்கப்படுவார். 

நோன்பினால் உடல் கஷ்டங்களையும் இன்னல்களையும் சகித்துக்கொள்வதற்கு பழக்கப்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக சகித்துக்கொள்ளும் வலிமையும், பொறுமையை கைக்கொள்ளும் தன்மையும் கிடைக்கின்றன. 

ஏராளமான நன்மைகளை தரக்கூடிய அடியார்களை பக்குவப்படுத்தக்கூடிய புனித நோன்பை எல்லோரும் நோற்று பயன் பெறவேண்டும். 

நோன்பை முறிக்கக்கூடிய நோன்பை வீணாக்கக்கூடிய காரியங்களிலிருந்து ஒவ்வொருவரும் விலகி இருக்க வேண்டும். 

ரமழான் மாதம் "துஆக்கள்' அங்கீகரிக்கப்படும் மாதமாகும். இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

""மூன்று பேர்களின் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை. முதலாவது நோன்பாளி நோன்பு திறக்கும் வரை கேட்கும் துஆ இரண்டாவது நீதியுள்ள அரசன் கேட்கும் துஆ. மூன்றாவது அநீதி இழைக்கப்பட்டவன் கேட்கும் துஆ''

ஆகவே, நோன்பு நோற்று எமது தேவைகளை இறைவனிடம் கேட்டு நிறைவேற்றிக்கொள்ளவும் பாவ மன்னிப்புக் கேட்கவும் இனிய ரமழான் எமக்கு வாய்ப்பு தர வந்துள்ளது.

நோன்பின் உண்மை நிலையை பற்றி ஒவ்வொருவரும் நன்கு உணரவேண்டும். பொய் பேசுதல், புறங்கூறுதல், சண்டை பிடித்தல், வீணான பேச்சு பேசுதல், இன்னொருவரை கேலி செய்தல் போன்றவைகளிலிருந்து தவிர்ந்து நடக்கவேண்டும். 

புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை தியானத்தில் மூழ்கி இருந்து நற்செயல்கள் பல புரிந்து நன்மையடைவோமாக. 

எம்.இஸட். ஷாஜஹான் ___ 

0 comments:

Post a Comment