widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, July 1, 2011

அழைப்பு பணியில் அத்துமீறும் அழைப்பாளர்கள்!


Rizwan Madani
o. காடையர்கள் மயமாகிப் போன தஃவாக் களம்
o. தக்லீத் (தனிமனித துதி) மயமாகிப் போன தஃவாக்களம்
o. அவசியமற்றதை அவசியமாக்கும் தாயிக்கள்
o. பண்புகள் பாழடிக்கப்படும் பணிக்களம்
o. வணக்கங்களில் குறை செய்யும் தஃவாக் களம்.
o. குறைகளைத் தேடும் தாயிக்கள்
o. சத்தியத்தை அசத்தியமாக்கும் தாயிக்கள்
o. பித்அத்தை நியாயப்படுத்தும் தாயிக்கள்
o. உலக விவகாரத்தை மார்க்கமாக்கும் தாயிக்கள்
o. இயக்கத்தை இஸ்லாமாக்கும் தாயிக்கள்
மனிதன் இவ்வுலகில் தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து மிருகங்களுக்கும், கால் நடைகளுக்கும் ஒப்பான கலாச்சாரத்தை அரங்கேற்றுகின்ற போது, அகிலங்களின் இரட்சகானகிய அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்ற போது அவனை உண்மை மனிதனாக, இறை திருப்தியையும், அருளையும் பெற்றவனாக மாற்றுவதற்காக அல்லாஹ் தனது மனித தூதர்களை வானவத் தூதர்கள் மூலம் தெரிவு செய்து அழைப்புப் பணி செய்வதற்காக அவர்களை அனுப்பி வைக்கின்றான்.
தஃவா (அழைப்பு)ப்பணி மகத்தான பணியாகும். மரணத்தின் பின்னர் ஸதகா ஜாரியாவை – நிலையான தர்மத்தைப்- பெற்றுத்தரும் இப்பணியை அல்லாஹ்வால் தெரிவு செய்யப்பட்ட நபிமார்கள், இறைத்தூதர்கள், அவர்களின் வழியை அறிந்த நன்மக்கள் செய்தார்கள்.
அல்லாஹ்தான் வானவர்களிலும், மனிதர்களிலும் இருந்து தூதர்கைளத் தெரிவு செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவனும், பார்ப்பவனும் (அல்குர்ஆன்: அல்ஹஜ். வச: 75) என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
இந்த மகத்தான பணி செய்யும் தாயிக்கள் தஃவாக் களத்தை கொலைக் களமாக, விமர்சனக் களமாக, பிற சகோதர முஸ்லிமின் மானத்தை போக்கும் களமாக, பித்அத் களமாக, இரு கருத்திற்கும் சாதானகமான மஸாயில்களைக் கூறி பிளவுக்களமாக மாற்றி அமைக்கின்றனர் என்பதை சம கால நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றது.
காடையர்கள் மயமாகிப் போன தஃவாக் களம்
நபிமார்கள் தமது சமூகத்திற்குப் பிரச்சாரம் செய்கின்ற போது அவர்கள் சார்ந்த சமூகத்தவர்களால் நோவிக்கப்பட்டார்கள். நையப்புடைக்கப்பட்டார்கள். அதுமாத்திர மின்ற அவர்கள் கொலையும் செய்யப்பட்டனர். இது பற்றி இஸ்லாமிய அழைப்பாளர்கள் நன்கு அறிவார்கள்.
இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்கும் பல அமைப்புக்கள் நவீன காலத்தில் களத்தில் இறங்கி இருக்கின்றன. இவற்றில் உள்ள சில அழைப்பாளர்கள் தம்மை முன்மாதிரி அமைப்பாக, பேணுதல் உள்ள அமைப்பாக, தக்வாவின் சின்னமாக சித்தரித்துக் கொண்டாலும் காடையர்களாக மாறி மற்றொரு சகோதர அமைப்பினைத் தாக்குவோராக, அவர்களின் சொத்துக்களைச் சேதப்படுத்துவோராக, இருக்கின்றனர். இதன் காரணமாக பலர் போலிஸ் நிலையங்களுக்கும், நீதி மன்றங்களுக்கும் சென்றுவருவேராக இருக்கின்றனர். இது தான் நபிமார்கள் செய்த தியாகமோ தெரியவில்லை.
தக்லீத் (தனிமனித துதி) மயமாகிப் போன தஃவாக்களம்
மத்ஹபுவாதிகளை மதம்மாறியோர் போன்று விமர்சித்தவர்கள் தமக்கென ஒரு கூட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயல்படுவதைப் பார்க்கின்றோம். எல்லா மத்ஹபும் வழிகேடு, எனது மத்ஹப் மாத்திரம் சரி, நானே அறிஞன், நானே பொது முஃப்தி, எனது கூற்றே நூறுவீதம் சரியானது என்ற நிலையில் செயற்படும் ஒருவரின் பின்னால் ஆராய்ச்சி இல்லாத, கண்ணை மூடிக்கொண்டு செல்கின்ற குருட்டு பக்தர் கள் கூட்டம் ஒன்று குர்ஆன், சுன்னாவின் பெயரில் தக்லீத்வாதிகளாக மாறி, சிந்திக்கும் திறனற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்;.
தக்லீத்வாதிகளை விமர்சிக்கும் பல தவ்ஹீத் முகல்லித்கள் சீடி தாயிக்களாக, பிறரின் நாவில் பேசுபவர்களாக, கேள்விப்பட்டதை எல்லாம் நம்பும், பிரச்சாரம் செய்யும் தாயிக்களாக இருக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன் தவ்ஹீத் தாயி ஒருவர் அல்குர்ஆன் குறிப்பிடும் ‘லஹ்முல் கின்ஸீர்" ‘பன்றியின் மாமிசம்" என்ற பொருளை வைத்துக் கொண்டு புதிய விளக்கம் சொன்னார். பன்றியின் மாமிசம் என்றுதான் குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதன் பாகங்கள் பற்றிக் கூறவில்லை, அல்லாஹ் ஏன் அப்படிச் சொன்னான் தெரியுமா? விஞ்ஞானிகள் மனிதனுக்கு பன்றியின் இதயம் மாத்திரம் பொருந்திப் போவதாக கண்டு பிடுத்துள்ளனர்.
பன்றியின் இதயத்தை வருங்காலத்தில் மனிதனுக்குப் பொருத்திக் கொள்ளலாம் என்பதை உணர்த்தவே பன்றியின் மாமிசம் என்று கூறப்பட்டுள்ளது என்றார். அத்துடன், இப்படி ஒரு செய்தியை பிற்காலத்தில் உலகுக்குச் சொல்லத்தான் என்றார். அதனுடன் நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை பன்றியின் ஏனைய பாகங்களைப் பேணுதல் அடிப்படையில் நாம் விட்டுவிட வேண்டும் என்றும் தொடர்ந்தார். இவரின் ஆச்சரியமிக்க ஆய்வுதான், அவரது மத்ஹப்வாதிகளுக்கு பூரிப்பை உண்டு பண்ணியது.
இதையும் சரி என்று நம்பி பிரச்சாரம் செய்த, அவரது கருத்துக்கு வக்காலத்து வாங்கிய அவரின் பக்தர்கள் இன்றும் உயிருடன் இருக்கின்றனர்.
ஆனால் அவர் இலங்கை காலியில் ஒரு பயான் நிகழ்ச்சியில் அதை மழுப்பிப் பேசி, வாபஸ் ஆகாமல் வெளியேறினார். அதற்கு முன்னர் இதை நாம் தவறு என்று சொன்னபோனது இந்த மாபெரும் அறிஞனா தவறாகச் சொல்லுவார் என்றனர் அவரின் வாய்வழி நடப்போர்.
இதைத்தான் ஒரு தக்லீதில் இருந்து மற்றொரு தக்லீதுக்கு மாறுவது என்பார்கள். இந்த தக்லீத்வாதிகள் இவர் ஒரு பத்வாவைச் சொல்லும் வரை பார்த்திருந்து அவர் சொன்ன பின்னால் முஜ்தஹித்களாக மாறி சமுதாயத்தில் சக்கைப்போடு போடுவார்கள்.
அவசியமற்றதை அவசியமாக்கும் தாயிக்கள்
தாயிக்கள் எனப்படுவோர் சமூகத்திற்குத் தேவையான அதி முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை இனம் கண்டு முன் வைக்க வேண்டும். இதையே இறைத் தூதர்கள் செய்தார்கள். அதுவும் முஸ்லிம்கள் மத்தியில் தஃவாச் செய்யப்படுகின்ற காரணத்தால் ஒரு சமூகத்தில் உள்ள மக்களின் நிலை பற்றியும், அங்கு நடை பெறும் பாவங்கள் பற்றியும், அவற்றின் தராதரம் பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும்.
அதே போன்று மத்ஹபு நூலில் இவ்வாறு உள்ளது. சர்வதேசப் பிறைதான் சரி, லோகல் தவறு, ஸகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை, தங்க வளையல்கள் அணிவது ஹராம், குத்பா மிம்பர் படிகள் இரண்டுதான் இருக்க வேண்டும், காஃப் அத்தியாயம் ஓதாமல் ஜும்ஆச் செல்லுபடி அற்றது, இரண்டாவது ஜமாஅத் ஒரு பித்அத், ஜனாஸாத் தொழுகையில் இருகைகளையும் உயர்த்துவது பச்சை பித்அத், பெண்கள் முகத்தை மூடுவது ஹராம், இப்படி பல விசயங்களை பொதுமக்கள் மன்றத்தில் பேசி பொது மக்களை சீரழிக்கும் தாயிக்களையும் பார்ப்பீர்கள்.
அல்லாஹ்வை சரியாக வணங்காத மக்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம் முதல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலம் வரை வாழ்ந்த மக்களில் இருந்தார்கள். அது பற்றி அழுத்தம் பிரயோகித்த நபிமார்கள், அந்த சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்ட கொடிய பாவங்களில் இருந்து மக்களை தடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.
இதற்கு ஷுஐப் நபியின் வரலாற்றையோ, லூத் நபியின் வரலாற்றையோ பார்க்க முடியும். அளவு நிறுவையில் செய்யப்பட்ட அநீதியை ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கண்டித்தார்கள், ஓரினச் சேர்க்கையில் மூழ்கி இருந்த தனது சமுதாயத்தவரை நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கண்டித்ததைப் பார்க்கின்றோம். அதே போன்று அனைத்து நபிமார்களின் வரலாறுகளையும் பாருங்கள்.
முஆதே! நீ வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (அதிகமாக வாழும்) எமன் தேசம் செல்கின்றாய். அவர்களை முதல் முதலாக லாயிலாஹ இல்லல்லாஹ், நான் அல்லாஹ் தூதர் என்ற கோட்பாட்டின் பக்கம் அழைக்க வேண்டும் என்று நபி(ஸல்) முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறியதைப் பார்த்தாலும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததையே பிரச்சாரத்தின் அடிப்படையாகக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.
பண்புகள் பாழடிக்கப்படும் பணிக்களம்
இஸ்லாமிய அழைப்புப் பணி அல்லாஹ்வின் நேசர்களான நபிமார்கள் அவனது வழிகாட்டலின் பேரில் செய்த உன்னதமான பணியாகும். இப்பணி அழகிய பண்புகளைக் கொண்டதாக இருக்கின்ற போது தான் தராதரமும், மேன்மையும் அடைகின்றது. இல்லை எனில் களத்தில் இருந்து மக்கள் வெருண்டோடுவதையும், தாயிக்கள் மக்களால் விமர்சிக்கப்படுவதையும் முடிவில் காண முடியும்.
ஹிர்கல் மன்னர் அபூ சுஃப்யான் அவர்களிடம் அந்த முஹம்மத் எதை ஏவுகின்றார் எனக் கேட்ட போது உங்கள் மூதாயதையர் கூறுவதை விட்டு விடும்படியும், நல்ல பண்பாடுகளைக் கொண்டும், உறவினர்களுடன் இணைந்து வாழும்படியும் கட்டளை இடுகின்றார் என அபூ ஸுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னர் கூறினார் (நூல்: புகாரி).
அகீதா (அடிப்படை நம்பிக்கை), அக்லாக் (பண்பாடுகள்) ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் மக்களை அழைத்தார்கள் என்பதை ஏட்டுச் சுரக்காயாக அறிந்து வைத்துள்ள பல தாயிக்களையே தஃவாக்களத்தில் பார்க்கின்றோம்.
அல்லாஹ்வின் தூதரின் அமைப்பில் அடையாளம் காணப்பட்ட முனாபிக்கள், அடையாளம் காணப்படாத முனாபிக்கள் என இரு சாராரும் இருந்துள்ளனர். பெயருக்கு தோழர்கள் என இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அப்துல்லாஹ் பின் உபை என்ற முனாபிக்களின் தலைவன் மரணித்த போது அவனது இறுதிக் கடமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலந்திருக்கின்றார்கள். தொழுகை நடத்த முயற்சியும் செய்தார்கள். அல்லாஹ் முனாபிக்களுக்கு தொழுகை நடத்துவதோ, பிரார்த்திப்பதோ கூடாது என்று கட்டளையிட்டதும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். (புகாரி).
இஸ்லாமிய அமைப்புக்களைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் கலந்து கொள்ளும் கருத்தரங்குகளில் தவ்ஹீத் மௌலவி கலந்து கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் தென்னிந்திய இஸ்லாத்தில் அது ஹராமாக்கப்பட்டிருக்கின்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற புதிய அமைப்பில் உள்ளவர்கள் தாங்கள் ஏற்கனெவே இருந்த அமைப்பைப்பற்றி பொதுக்குழு கூட்டத்தில் இவ்வாறு கூறினர். இவர்கள் பிரபலமான தாயி, இடம் இருந்து பிரிந்தே புதிய அமைப்பை தோற்றுவித்தனர் என்பதை அனைவரும் அறிவர்.
வணக்கங்களில் குறை செய்யும் தஃவாக் களம்
தஃவாக்களத்தின் சோதனை மிகுந்தது என்று இதை வர்ணிக்க முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு வணக்கம் செய்யுமாறு ஆரம்பத்தில் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். ஒரு வருடம் அதை அவர்களும், அவர்களின் தோழர்களும் கடைப்பிடித்தார்கள் (நூல்: முஸ்லிம்).
தாயிக்கள் எனப்படுவோர் தமது பண்பாடுகளை அல் குர்ஆனில் இருந்தும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளில் இருந்தும் படிக்கின்ற போதுதான் இரவு வணக்கத்தில் இன்பம் காண்பார்கள். ஒரு பெரியார் ஒரு இரவில் பல முறை குர்ஆனை ஓதினார் என்பதையும், பல ரகஅத்துக்களைத் தொழுதார் என்பதையும், தஸ்பீஹ் தொழுகையையும் இன்னும் ஆதரமற்ற செயற்பாடுகளையும் இவ்வாறு செய்யலாமா என நியாயமாக விமர்சிக்கும் தாயிக்கள் நான் எத்தனை வசனங்களை, அத்தியாயங்களை ஓதி இருக்கின்றேன். நபிலான வணக்கங்களான ழுஹா, இரவு வணக்கமாகக் கொள்ளப்படும் தஹஜ்ஜுத், மற்றும் வித்ர், தொழுகின்றேனா என தம்மைப் பற்றி ஒரு போதும் கேள்வி எழுப்பி இருப்பார்களோ தெரியவில்லை.
குறைகளைத் தேடும் தாயிக்கள்
ஒரு மனிதனின் மானம், மரியாதை, அந்தஸ்து யாவற்றையும் புனிதமானது என இஸ்லாம் கூறி இருக்கின்றது. கலிமாவை இறை திருப்தியை நாடிக்கூறிய அனைவரின் மானம் மரியாதை என்பது இதன் விளக்கமே தவிர தவ்ஹீத் அடிப்படையைக் கொண்ட தாயிக்களின் மானம், மரியாதை என்பது பொருள் அல்ல.
சகோதர முஸ்லிமின் மானத்தை காற்றில் பறக்கவிடுவதையும், சீடிக்களாக, நோட்டீஸ்களாக வெளியிடுவதையும் தஃவாப் பாதையில் ஒரு மைல் கல்லாக நினைத்து செயற்படும் தாயிக்கள். இருக்கின்றார்கள். எல்லை மீறிச் (சிந்திப்பவர்கள், செயற்படுபவர்கள்) அழிவார்கள் (நூல்: முஸ்லிம்) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை உண்மைப்படுத்தும் குர்ஆன் சுன்னாவைப் போதிப்பதாகக் கூறுவோரின் களம் மாற்றம் பெற்றுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
வளவளப்பவர்கள் (பெரும் பேச்சு பேசுவார்கள்) அழிவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது இவர்களைத்தான் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
சத்தியத்தை அசத்தியமாக்கும் தாயிக்கள்
சத்தியத்தை உரைப்பது ஆலிம்களின் கடமை. சத்தியம் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒரு ஆலிமின் இரத்தத்தில் ஊறிப்போன பண்பாக இருக்க வேண்டும். அறிவை மறைப்பவனுக்கு மறுமையில் அல்லாஹ் நரக நெருப்பினால் கடிவாளம் இடுவான் (நூல்: இப்னு மாஜா). என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருப்பதை ஆலிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டில் ஷாஃபி மத்ஹபை பாதுகப்பது கடமை என்பது போலவும், சத்தியம் எக்கேடு கெட்டாலும் சரி என்ற நிலையிலும் வாழும் பல ஆலிம்களை சமூகத்தில் காண முடிகின்றது. மற்றொரு புறத்தில் தென்னிந்தியாவின் பிரதமப் பேச்சாளர் ஒருவரின் கருத்தில் குறை கண்டு ஆதராத்தின் அடிப்படையில் சுட்டிக்காட்டினால் சீ, சீ இதை நாம் நமக்குள்தான் பேசிக் கொள்ள வேண்டும், மற்றவர்கள் என்ன சொல்வார்கள், இவர்களுக்குள்ளும் பிளவா என்று அவரின் பிரியர்கள் கூறுவதையும் காண்கின்றோம்.
அந்த தாயீ, ஒரு ஜமாத்தைப் பல கூறுகளாக்கி பத்து பேரை வைத்துக் கொண்டு நமது கிளை என்று பத்திரிகையில் பூதாகரமாக விளம்பரம் போடுவதைப் பொறுத்துக் கொள்வார்கள். இதுதான் தக்லீதின் உச்சகட்டம் என்பதை இனியாவது இவர்கள் உணரட்டும்.
பித்அத்தை நியாயப்படுத்தும் தாயிக்கள்
அனைத்து பித்அத்களும் (புதிய வழிமுறைகளும்) வழிகேடு என்றும், யார் நமது மார்க்கத்தில் இல்லாததைச் செய்கின்றாரோ அவரது செயல் நிராகரிக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம், திர்மிதி)
ஸஹீஹான ஹதீஸ்தான் எனது மத்ஹப் என இமாம்கள் அடித்துக் கூறி இருந்தும் ஊரில் செய்கின்றார்கள், உலகத்தில் செய்கிறார்கள், நல்லது தானே என்றெல்லாம் காலத்தை கடத்தும் ஆலிம்கள் கூட்டம் மக்களுக்கு பித்அத்தையே அரங்கேற்றும் நிலையைப் பார்க்கின்றோம். கத்தம், பாத்திஹா, மௌலித், தாயத்து. தகடு என்று மக்களை ஏமாற்றி சீரழிப்பதைப் காண்கின்றோம்.
உலக விவகாரத்தை மார்க்கமாக்கும் தாயிக்கள்
முஸ்லிம்கள் மார்க்கமாக இல்லாமல் ஒரு பழக்கமாகக் கொள்ளும், மார்க்கம் தடை செய்யாத நடைமுறைகள் பலதை நாம் அறிவோம். ஜும்ஆவுக்காக ஜுப்பா அணிவது, தொப்பி போடுவது போன்ற அம்சங்களைக் குறிப்பிட முடியும்.
இது விஷயத்தில் தாயிக்கள் பித்னாக்களமாக மாற்றி அமைப்பதைப் பார்க்கின்றோம். காபிர்ளுக்கு இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து கடிதங்கள் எழுதுகின்ற நேரம் முத்திரை பதிக்கப்படாத கடிதங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை எனக் கருத்துக் கூறப்பட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை அங்கீகரித்தார்கள். (நூல்: புகாரி)
இந்த சாதாராண விஷயத்தைக் கூட தஃவாக்களத்தில் பிரயோகிக்கத் தெரியாத தாயிக்களால் தஃவாக்களம் துவம்சம் செய்யப்படுமா? அல்லது முன்னேற்றம் அடையுமா என்று சிந்தித்துப் பாருங்கள்.
இயக்கத்தை இஸ்லாமாக்கும் தாயிக்கள்
தனிமனிதன் புகழ்பாடி அழியும் ஒரு கூட்டம், தான் இருக்கும் இயக்கமும் அதன் சித்தாந்தமுமே சரி என வாதிடும் மற்றொரு கூட்டம், எனது அமீர் சொல்வதை அப்படியே பின்பற்றுவேன், எனது மர்கஸில் சொல்லப்பட்டதை அப்படியே நம்புவேன் என்று வாதிடும் மற்றொரு கூட்டம், சேகு நாயகம், வாப்பா நாயகம் ஆகியோரின் கூற்றே வேதவாக்கு என்று நம்பும் பிறிதொரு கூட்டம். எகிப்தின் ஆலிம்களை அச்சாணிகள் போல் நம்புகின்ற மற்றொரு கூட்டம், இவ்வாறு தஃவாக்களத்தை துவம்சம் செய்யும் பல கூட்டங்களை களத்தில் இனம் காண முடிகின்றது.
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதை நம்பினேன், அதன்படி நடப்பேன் என்ற கூட்டத்தில் இணையாத அனைத்துக் கூட்டமும் வழிகேட்டின், பித்அத்தின் மறுவடிவங்களாகவே இருக்கும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
- எம்.ஜெ.எம். ரிஸ்வான் மதனி

0 comments:

Post a Comment