widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, July 22, 2011

இறைவனை நினைவுகூருவோம்


ஜீனத் நிஸா
o மன நிம்மதி தரும் மாமருந்து

o பாவங்களை உணரவைக்கும் இறைநினைவு
o நம் நினைவில் இறைவன்
o இறைவனை வணங்குவதற்கு காரணமும் இறைசிந்தனையே!
o இறைநினைவை தடுக்கும் பொருளாதாரம்
o ஷைத்தானின் நோக்கமும் இறைவனின் விருப்பமும்

o இறைவனை நினைவுகூறாதவர்கள் நயவஞ்சகர்களே!

இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒருவர் மற்றவரை நினைக்கின்றனர்.

எதையாவது நினைக்காத உள்ளங்கள் இல்லை எனலாம். தன்னை நேசிப்பவர்களையோ தனக்கு விருப்பத்திற்குரியவர்களையோ குடும்பத்தினரையோ தொழிலில் முன்னேற்றம் அடைவதை பற்றியோ எதிர்காலத்தை பற்றியோ தன்னை விட்டு கடந்து போன தனக்கு வர விருக்கின்ற இன்ப துன்பங்களை பற்றியோ அவர்களுடைய நினைவலைகள் நீண்டு கொண்டே செல்கின்றது. இச் சிந்தனை போக்குகள் அவனுடைய நிம்மதி தூக்கம் உணவு போன்ற அன்றாடம் அவன் செய்யக்கூடிய அனைத்து காரியங்களையும் நிறுத்திவிடுகின்றது. இச்சிந்தனை போக்குகளின் தாக்கம் சில நேரங்களில் தவறான முடிவுகளின் பக்கமும் தற்கொலைகளின் பக்கமும் கொண்டு செல்கின்றது.
நம்முடைய செயல்பாடுகள் அனைத்தையும் சரியான முறையில் கொண்டு செல்லக்கூடிய ஒரு சிந்தனை போக்கு இறை நினைவு மட்டுமே!
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 62 : 10)
நம்பிக்கை கொண்டோரே! (களத்தில்) ஓர் அணியைச் சந்தித்தால் உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 8 : 45)
"உங்களை எச்சரிப்பதற்காக உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவது ஆச்சரியமாக உள்ளதா? நூஹுடைய சமுதாயத்திற்குப் பின் உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதையும், உடலமைப்பில் உங்களுக்கு வலி-மையை அதிகப் படுத்தியதையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்!'' (என்றும் அவர் கூறினார்). (அல்குர்ஆன் 7 : 69)

மன நிம்மதி தரும் மாமருந்து
அனைத்து மனிதர்களுமே நிம்மதியையும் ஆறுதலையும் தேடியே அலைகின்றனர். விருப்பத்ததிற்குரிய எத்தனையோ நபர்கள் இவ்வுலகில் இருந்தாலும் அவர்களை நினைக்கும் போது நிம்மதி கிடைப்பதில்லை. இன்னும் உற்று நோக்குவோமேயானால் இவ்வாறு நினைக்கும் போது இருக்கின்ற நிம்மதியும் தொலைந்து போவதை உணர்கின்றோம். பொருளாதாரத்தாலோ உடலாலோ பிறர் பேசக்கூடிய பேச்சுக்களினாலோ மனிதனின் மனம் காயப்படுத்தப்படுகின்றது. இச்சூழ்நிலையில் ஒருவன் இறைவனையும் இறைவனின் வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தால் "மனிதனுக்கு அவன் நினைத்தது யாவும் கிடைக்காது என்றும் இறைவனின் விருப்பத்திற்குரியவர்கள் சோதிக்கப்படுவார்கள் என்றும் இறைவன் தூதர்களாக தேர்ந்தெடுத்த நபிமார்களுக்கே பெரும் பெரும் சோதனைகள் வந்தது என்றும் நமக்கு ஏற்பட்ட துன்பம் இறைவன் புறத்திலி-ருந்து வந்தது ஆகையால் அதற்கும் இறைவனிடம் கூ-லி உண்டு'" என்றும் அவன் நினைக்கும் போது அது அவனுக்கு ஆறுதலாகவும் சுமைதாங்கியாகவும் அமைகின்றது.

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன் 13 : 28)

பாவங்களை உணரவைக்கும் இறைநினைவு
அனைத்து மனிதர்களுமே தவறுகள் செய்யக்கூடிய சூழ்நிலைகள் அமைகின்றது. ஒரு மனிதன் தவறு செய்யும் போதோ செய்ய நினைக்கும் போதோ இவ்வாறு செய்தால் அல்லாஹ்விடம் தண்டிக்கப்படுவோம் என்று நினைத்தாலோ அல்லது மற்றவர்கள் இறைவனை நினைவூட்டினாலோ இறைவனுக்கு பயந்து அந்த தவறை செய்யமாட்டான். இங்கு இறைவனை நினைவுகூர்வது அவனுக்கு இறையச்சத்தை ஏற்படுத்துகின்றது.

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (அல்குர்ஆன் 8 : 2)
மேலும் ஒரு மனிதன் பாவங்களிலிருந்து விலக வேண்டும் என்றால் முதலில் அவன் அதை பாவம் என்று உணரவேண்டும். தான் செய்வது சரி என்று நினைப்பதினால் தான் பெரும்பாலானவர்கள் அதை தொடர்ந்து செய்து வருகின்றனர். சிலருக்கு அது உணர்த்தப்படும் போதும் விலகுவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செய்கின்ற பாவங்களை பிறரிடம் ஒப்புக்கொள்ளவில்லையானாலும் இதற்காக அவன் எவ்வளவு சாக்கு போக்குகளை சொன்னாலும் அவன் செய்தது சரியா? தவறா? என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.
மாறாக மனிதன் சமாதானங்களைக் கூறிய போதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 75 : 14,15)
செய்த தவறு யாருக்கும் தெரியாவிட்டாலும் கூட அது இறைவனுக்கு தெரியும் என்பதை அவர்கள் உணர்ந்தே வைத்துள்ளனர். ஒவ்வொருவர் செய்கின்ற தீமைகளுக்கும் அதை தடுப்பதற்கு நீதிமன்றம், காவல்துறை இருந்தாலும் அது போதுமானதாக அமையாது. இங்கு தப்பித்தாலும் இறைவனிடம் மாட்டிக்கொள்வோம் என்ற இறை நினைவே அவனை பாவங்களை ஒப்புக்கொள்ள வைத்து மன்னிப்பு தேடும் பண்பை வரவைக்கின்றது .
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)

நம் நினைவில் இறைவன்
அன்றாடம் ஒவ்வொருவரும் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் என்று தனக்கு விருப்பத்திற்குரியவர்களையும் அவர்கள் செய்த உதவிகளையும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். இவர்களையெல்லாம் சிந்தித்து பார்க்கும் கட்டத்தில் நமக்கு இவர்களை கொடுத்த இறைவனை நினைக்க மறந்து விடுகின்றோம். மேலும் அழகு, படிப்பு, செல்வம், அறிவு, உடல் ஆரோக்கியம் போன்றவைகளை அவன் நமக்கு கொடுத்துள்ளான்.

அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் உங்களால் எண்ணி முடியாது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல் குர்ஆன் 16 : 18)
மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப்பாருங்கள்! வானத்திலி-ருந்தும், பூமியி-லிருந்தும் உங்களுக்கு உணவளிக்கும் அல்லாஹ்வைத் தவிர (வேறு) படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்? (அல்குர்ஆன் 35 : 3)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி : 7405)

இறைவனை வணங்குவதற்கு காரணமும் இறைசிந்தனையே!
சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனுக்கே கட்டுப்படுங்கள்! பணிந்தோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 22 : 34)

இறைவனுக்குரிய வணக்கவழிபாடுகளை சரியாக கடைபிடிப்பவர்களை உற்று நோக்கினால் அவர்களிடத்தில் இறைசிந்தனை அதிகமாக இருப்பதை காண்கின்றோம்.
(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் தனது பெயர் நினைக்கப்படவும் (தான்) அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளைஅவர்கள் அஞ்சுவார்கள் (அல்குர்ஆன் 24 : 36,37)

இறைநினைவை தடுக்கும் பொருளாதாரம்
இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இறைவன் கட்டளையிட்ட வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற காரியங்களை செய்வதில்லை. இதற்கு காரணம் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அவர்களின் கவனம் பொருளாதாரத்தை பெருக்குவதுதிலே குறிக்கோளாக அமைகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே இழப்பை அடைந்தவர்கள். (அல்குர்ஆன் 63 :9)
இதனால் இறைவனிடம் அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடிய ஜஸ்ரீமுஆ என்ற பெரும்பாக்கியத்தையும் கூட சிலர் கடைபிடிப்பதில்லை .
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62 : 9)
இங்கு நாம் பனூ இஸ்ரவேலர்களை நினைக்க கடமைப்பட்டுள்ளோம். சனிக்கிழமை அவர்களுக்கு புனிதமாக்கப்பட்டது. அதில் அவர்கள் வரம்புமீறியதால் குரங்குகளாக அவர்கள் மாற்றப்பட்டனர்.
கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
"அல்லாஹ் அழிக்கப்போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப்போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர். கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன் 7 : 163-166)
இவ்வுலகில் ஆடம்பரமாக வாழவேண்டும் என்பதற்காக பொருளாதாரத்தை பெருக்க முயன்று தொழுகையை விடுவோமேயானால் மறுமை தேர்வில் தோல்வியை தழுவுவோம் என்பதை உணரவேண்டும். இறைவனிடத்தில் இருப்பது இவ்வுலகை விட சிறந்ததாகும் .
"(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்'' எனக் கூறுவீராக!. (அல்குர்ஆன் 62 : 11)
அவர்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் அவர்களைக் காப்பாற்றாது. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 58 : 17)
அதற்காக பொருளாதாரத்தை கவனிக்காமல் எந்நேரமும் தொழுதுகொண்டே இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. இறைவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றிவிட்டு உலக ஆதாயத்தை தேடவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது .
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 62 :10)

ஷைத்தானின் நோக்கமும் இறைவனின் விருப்பமும்
மனிதர்கள் இறைவனை வணங்காமல் அவனை நினைக்காமல் வழிதவறி நரகிற்கு செல்ல வேண்டும் என்பதே ஷைத்தானின் நோக்கமாகும் .

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5 : 90, 91)
மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான். (அல்குர்ஆன் 35 : 5,6)
"என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் கூறினான். "நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூ-லி. (அது) நிறைவான கூலி'' என்று (இறைவன்) கூறினான். உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழி கெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட் படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட் செல்வத்திலும், மக்கட் செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. "எனது (நல்ல) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல்குர்ஆன் 17 : 62-65)
இறைவனை வணங்குவதை தடுக்கும் விதமாக தொழுவதற்கு முன் தொழவேண்டாம் என்று ஷைத்தான் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகின்றான் .இவ்ஊசலாட்டத்திற்கு பிறகு ஒருவன் தொழுகையில் நிற்கும் போதும் அங்கும் இறைவனை வணங்குவதை தடுக்கும் விதமாக தேவையற்ற பல சிந்தனைபோக்குகளை ஏற்படுத்துகின்றான் . இதனாலேயே ஒருவர் தவறாக தொழ வேண்டிய நிலை ஏற்படுகின்றது .
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்குத் தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும். அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு சஜ்தாக்களால்) அவரது தொழுகையை அந்த (ஐந்து) ரக்அத்கள் இரட்டைப்படை ஆக்கிவிடும். அவர் நான்கு ரக்அத்கள் பூர்த்தி செய்துவிட்டிருந்தால் அவ்விரு சஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமையும். (நூல்: முஸ்லிம் : 990)
இவ்வகையில் ஷைத்தான் நமக்கு அதிக இடையூறுகளை ஏற்படுத்துவதினால் தான் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கு ஆர்வமூட்டும் விதமாக தொழுகையை எதிர்பார்த்திருப்பதற்கும் தொழுமிடத்தில் அமர்ந்திருப்பதற்கும் நன்மையை அல்லாஹ் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றான் .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் "ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்கற்ல் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ற்வாசலுக்கு வந்தால் அவர் பள்ற்வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான்.
(கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்ற்க்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள், "இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கின்றார்கள். (நூல் : புகாரி 477)
தன்னை மட்டுமே மக்கள் வணங்கவேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும் . அதற்காகத்தான் அல்லாஹ் மனிதனையே படைத்தான். ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51 : 56)
நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக! (அல்குர்ஆன் 20:14)
மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையி-லிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள். (அல்குர்ஆன் 2:21)

இறைவனை நினைவுகூறாதவர்கள் நயவஞ்சகர்களே!
பொய், வாக்குமீறுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் போன்ற காரியங்கள் மட்டும் நயவஞ்சகத்தனம் என்றில்லாமல் இறைவன் கொடுத்த அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் அவனை நினைக்காமல் வாழ்வதும் நயவஞ்சகத்தனமாகும் .

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன் 4 : 142)
நம்பிக்கை கொண்டவர்கள் இறைவனை வணங்குவதற்கு காட்டும் ஆர்வத்தை பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளி-லிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். (அல்குர்ஆன் 32:16)
வெற்றியாளர்கள் வருவார்கள் ....


எழுத்து: ஜீனத் நிஸா

0 comments:

Post a Comment