"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Sunday, July 24, 2011
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரு வெற்றி-18 சபைகளும் கூட்டமைப்பு வசம்: ஈ.பி.டி.பியினருடன் இணைந்து களமிறங்கிய ஆளும் கட்சி தோல்வி!
நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர்களுக்குப் பெரு வெற்றி கிடைத்துள்ளது. அரச அடக்குமுறைக்கு எதிராக மக்களை வாக்களிக்கக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் தமிழர்கள் இந்தப் பெரு வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.
வடக்கில் உள்ள 20 பிரதேச சபைகளில் 18 சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இரு சபைகளையும்கூட கூட்டமைப்பே கைப்பற்றி உள்ளது. யாழ். மாவட்டத்தில் 3 நகரசபைகளுக்கும் 13 பிரதேச சபைகளுக்கும் கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் முல்லைத்தீவில் ஒரு பிரதேச சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச சபைகளுக்கும் வாக்களிப்பு இடம்பெற் றது. திருகோணமலை மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
யாழ். மாவட்டத்தில் 48 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றதாக தெரிவத்தாட்சி அதிகாரி இமெல்டா சுகுமார் அறிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்று அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கிலும் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.வன்னியில் சுமார் 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. படையினரின் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சம் கொடுத்தல் ஆகிய பல முறைப்பாடுகள் பதிவாகி இருந்த நிலையிலும் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது பெரும் ஆதரவையும் வழங்கி உள்ளனர்.
அரச தரப்பினரின் சட்டவிரோதச் செயற்பாடுகள், கடும் அச்சுறுத்தல்கள், அராஜகங்களின் மத்தியில் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பது அவர்களின் தேசிய உணர்வைக் காட்டுகின்றது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். தமக்குப் பெரு வெற்றியை ஈட்டித்தந்த தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு கிடைத்த தகவலின்படி வடக்கில் 18 சபைகளை வென்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி நெடுந்தீவு பிரதேசசபை தவிர்ந்த ஏனையவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகின. உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின்படி வேலணை பிரதேசசபை மட்டும் அரசு பக்கம் போக எஞ்சியவற்றில் கூட்டமைப்பு வெற்றி பெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment