"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, April 20, 2012
மர்வா ஸபா கவாக்ஸி: இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண்களில் ஒருவர்
ஆபிரிக்காவின் மொரோக்கோ முதல் ஆசியாவின் இந்தோனேசியா வரை பரந்து விரவிக் கிடக்கும் இஸ்லாமிய உலகில் பல கோடிப் பெண்கள் ஹிஜாபை துறந்திருக்கின்றபோது, ஹிஜாபுக்காக தனது குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவ உரிமையையும் உதறித் தள்ளிமைதான் மர்வா செய்த மாபெரும் புரட்சி.
1999 இல் துருக்கிய பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கான சத்தியப் பிரமாணத்தை எடுப்பதற்கு நுழைந்தபோது அங்கிருந்த கொடுங்கோன்மை மிக்க மதச்சார்பற்ற சக்திகள் கூக்குரலிட்டனர். அவரை ஒரு இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரி என்று வர்ணித்ததோடு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறும் காட்டுக் கூச்சல் போட்டனர்.
கலாச்சார உரிமைகள் குறித்து பேசும் ஐரோப்பாவில் உடுப்பதற்கான உரிமை மறுக்கப்பட்ட நிலையில், தனது குடியுரிமையையும் இழந்து அமெரிக்காவில் குடியேறியவர் கவாக்ஸி. இஸ்லாமிய அறிவுத் துறையிலும் சமூகப் பணிகளிலும் தஃவாவிலும் அரசியல் செயற்பாட்டிலும் ஓர் உயிர்த் துடிப்புள்ள ஆளுமையாக விளங்குகின்றவர். இந்நூற்றாண்டு கண்ட புரட்சிகரமான பெண்களில் ஒருவர்.
பல்வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுள்ள கவாக்ஸி, 21ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய கலாச்சார சின்னமான ஹிஜாபின் குறியீடாகப் பார்க்கப்படுகின்றவர். மதச்சார்பற்ற அரசாங்கம், மதச்சார்பற்ற சமூக அமைப்பில் இதுபோன்ற ஓர் போராளியைக் காண்பது மிகவும் அபூர்வம்.
மர்வா கவாக்ஸி 1968 ஒக்டோபர் 30 இல் அங்காராவில் பிறந்தார். 1999 ஏப்ரல் 18 இல் ஸ்தன்பூல் தொகுதியில் Virture கட்சியின் பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்டப்டார். மே 02 இல் ஹிஜாப் அணிந்தமைக்காக பாராளுமன்றம் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். கவாக்ஸி அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஒரு ஹாபிழ். ஹாவாட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை முடித்தவர். அதே பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர்.
தற்போது ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாகக் கடமையாற்றி வருகின்றார். அதேபோன்று ஹாவாட் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். மணவாழ்வில் இணைந்த அவருக்கு பாத்திமா, மர்யம் என இரு பெண்கள் உள்ளனர். ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இவர் விரிவுரையாற்றும் துறை ‘சர்வதேச உறவுகள்’ (International Relation) என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாவாட் பல்கலைக்கழகத்தில், அரசியல் விஞ்ஞானத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர், ஹாவாட் பல்கலைக்கழத்தில் MPA கற்கையைப் பூர்த்தி செய்தவர். அமெரிக்காவிலுள்ள மற்றொரு பிரபலமான டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் Software Engineering துறையில் BSc பட்டத்தையும் பெற்றுள்ளார்.
துருக்கியில் அங்காரா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு அனுமதி கிடைத்தபோது வைத்தியராகக் கற்று வெளியேற வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. ஆனால், அவர் இளமைப் பருவத்திலிருந்தே அணிந்து வந்த ஹிஜாப் அதற்குத் தடையாக இருந்தது. கவாக்ஸி ஹிஜாபில் மிகவும் பற்றுள்ளவராக இருந்ததனால் அங்காரா பல்கலைக்கழக நிருவாகிகள் அவரை அங்கு கற்பதற்கு அனுமதிக்கவில்லை.
கவாக்ஸி பிறந்து வளர்ந்த குடும்ப சூழல் இஸ்லாத்தை பற்றுறுதியோடு பின்பற்றி வந்த குடும்பமாகும். அவரது தாயும் ஹிஜாப் அணியும் வழக்கம் கொண்டிருந்தார். கவாக்ஸியின் தாய் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர். ஹிஜாபினால் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியை இழந்தவர். 1980 களில் கொண்டு வரப்பட்ட ஹிஜாபுக்கு எதிரான தடைச் சட்டமே இத்தனைக்கும் பின்னணியாக இருந்தது. தாயைப் போன்று கவாக்ஸியும் இந்த சோதனையையே எதிர்கொண்டார். கவாக்ஸியின் தாய் அதாதுர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றிவர். அவரது குடும்பம் முன்னாள் ஆட்சியாளர் கமால் அதாதுர்க்கின் கையாட்களால் பல கெடுபிடிகளுக்கு உள்ளானது. ஹிஜாப் அணிந்தமையால் பல அவதூறுகளுக்கும் வசைகளுக்கும் அவர் உட்பட்டார்.
கவாக்ஸியின் தந்தை யூஸுப் ஸியா கவாக்ஸி அதாதுர்க் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கை பீடத்தில் பீடாதிபதியாகப் பணியாற்றியவர். பெண்களின் உரிமைகளுக்காக -குறிப்பாக, ஹிஜாப் உரிமைக்காக- தொடர்ந்தும் போராடி வந்தவர். இஸ்லாமிய மாணவர்களின் உரிமைக்காகப் போராடியதால் பதவி துறப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்.
மருத்துவ பீடத்திற்கு அவர் தெரிவானபோதும் தனது ஹிஜாபினால் அந்த வாய்ப்பை இழந்தார். பல்கலைக்கழக நிருவாகம் அவரைத் திருப்பி அனுப்பியது. மருத்துவராவதா அல்லது ஹிஜாப் அணிவதா என்ற தெரிவுக்கு முன்னால், கவாக்ஸி இரண்டாவது தெரிவை ஏற்றுக்கொண்டார்.
1990 களில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய கவாக்ஸி, அரசியல் செயற்பாடுகளில் இறங்கினார். தொடக்கத்தில் பேராசிரியர் நஜ்முதீன் அர்பகான் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ரபா கட்சியின் பெண்கள் அணிக்குத் தலைவராக இருந்தார். பின்னர் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து அணியில் பிளவுகள் ஏற்பட்டது.
துருக்கியின் மற்றொரு இஸ்லாமியக் கட்சியான இஸ்லாமிய பாஸிலாத் கட்சியில் (Virture) இணைந்து பாராளுமன்ற அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டார். 1999 ஏப்ரல் 18 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். மதச்சார்பற்ற துருக்கியில் தனது தனித்துவமான ஹிஜாபுடனேயே அவர் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அவரது தூர நோக்கிற்கும் அரசியல் வெல்திறனுக்கும் கிடைத்த வெற்றியாகவே அவரது பாராளுமன்ற அங்கத்துவம் இருந்தது. எனினும், மக்களின் அமோக ஆதரவோடு பாராளுமன்றம் நுழைந்தபோது, மதச்சார் பற்றவர்கள் அவருக்கு தடங்கல்களை ஏற்படுத்தினர். சத்தியப் பிரமாணம் செய்யும் இடத்திற்கு அவர் சென்றபோது அங்கிருந்தவர்கள் “பாராளுமன்றத்தை விட்டு வெளியேறு” என கூச்சலிட்டனர்.
1999 மே 2 இல் நடைபெற்ற இச்சம்பவம் துருக்கியில் மாத்திரமன்றி, முழு ஐரோப்பாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “அரசியலமைப்புச் சட்டத்தில் பாராளுமன்றத்தில் நுழையும் பெண் ஹிஜாப் அணிந்திருக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனினும், அவர்கள் என்னை அவமானப்படுத்துவதற்கும் மதச்சார்பின்மையின் தூய்மையைப் பாதுகாக்கவும் காட்டுக் கூச்சல் போட்டனர். ஆண்கள் ஷேட்டும் நீள் காற்சட்டை அணிய வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், எந்தவொரு சட்டத்திலும் அவ்வாறில்லை. அவர்கள் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த வெறுப்பையே தமது வார்த்தைகளில் உமிழ்ந்தனர். மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளிடையே இஸ்லாத்தைப் பின்பற்றும் நான் அதற்கு மேலும் அங்கிருக்க விரும்பவில்லை. பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினேன் என்று கவாக்ஸி தனது அனுபவத்தை பத்திரிகையொன்றில் எழுதியுள்ளார்.
இந்த கசப்பான அனுபவத்திற்குப் பின்னர் துருக்கிய பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக மசோதா கொண்டு வரப்பட்டு அவரது குடியுரிமையைப் பறித்தனர். அவர் பிரதிநிதித்துவம் செய்த பாஸிலாத் கட்சிக்கும் 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் கவாக்ஸி வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் வெற்றி பெற்றார்.
துருக்கியின் கிராமப்புறமொன்றில் பிறந்து, அமெரிக்காவின் அதி முன்னோடி பல்கலைக்கழகங்களில் பயின்று, ஹிஜாப் குறித்து தனது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்த முதல் பெண் இவராகவே இருப்பார். 2000 ஆம் ஆண்டில் மீண்டும் வொஷிங்டன் திரும்பிய அவர், அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினார். துருக்கிய அரசாங்கத்திற்கு எதிரான வழக்கின் முடிவு 2007 இலேயே வெளிவந்தது.
கவாக்ஸி மிகச் சாதாரணமானதோர் பெண்ணல்ல. சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுள்ள, அறிவுத் துறையில் மிகவும் ஆழமான ஒருவர். இதனால்தான், முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அவரால் விரிவுரை ஆற்ற முடிந்தது. ஆங்கிலம், பிரென்ஞ், ஆகிய மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுள்ள அவர், பல்வேறு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் இஸ்லாம் குறித்த விரிவுரைகளை ஆற்றி வருகின்றார். சர்வதேசளவில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
2004 இல் பெசிலோனியாவில் நடந்த உலக சமயங்களுக்கான மன்றத்தில் அவர் ஆற்றிய உரை மிகப் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றது. சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு புத்திஜீவியாகவே கவாக்ஸி கருதப்படுகின்றார். ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின், அமெரிக்க காங்கிரஸின், ஹெல்சிங்கியிலுள்ள மனித உரிமைப் பேரவையில் கவாக்ஸி ஆற்றிய உரைகளும் முக்கியமானவை.
அமெரிக்காவின் மெரியாட்டிலும் ஐரோப்பிய, கனேடிய பல்கலைக் கழகங்களிலும் வருகை நிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் கவாக்ஸி, ஹார்வேர்ட், யாலே, கேம்பி ரிட்ஜ், பேர்லின், ஒட்டோவா, மிலான், இன்ஸ்பேர்க் போன்ற உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களிலும் விரிவுரையாற்றியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில் நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்ட உலகின் செல்வாக்குள்ள 500 பேரின் பட்டியலில் கவாக்ஸியும் ஒருவர். Naap மற்றும் பூகோளப் பெண்கள் ஒன்றியம் 2005 இல் அவரை ‘அதிசிறப்பு மிக்க பெண்ணாகத் தெரிவுசெய்தது. மனித உரிமை முன்னேற்றத்துக்காகவும் பெண்களை வலுவூட்டுவதற்காகவும் போராடியவர் என்ற வகையில், அவரது பணிகள் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு சர்வதேச விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
2000 ஆம் ஆண்டில் சர்வதேச பெண்கள் மற்றும் சிறுவர் ஒன்றியம், மனித இனத்துக்காகப் பணியாற்றியவர் என்ற விருதினை வழங்கியது. இவ்விருது ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் வழங்கப்பட்டது. இதேபோன்று 1999 இல் இந்த ‘ஆண்டின் தாய்’ (Mother of the year) எனும் விருதினை துருக்கியின் அங்காரா தேசிய இளைஞர் கழகம் வழங்கியது.
கவாக்ஸி ஒரு காலத்தில் அமெரிக்கக் காங்கிரஸுக்கான முஸ்லிம் உலகு தொடர்பான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அதேவேளை, பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் அவர் திகழ்கின்றார். Mediterraneal Quaterly எனும் பிரபலமான சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராக உள்ள கவாக்ஸி, இதுவரை 6 நூல்களை எழுதியுள்ளார். அவரது இணையத்தளத்தினூடாகவும் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் எழுதுவதினூடாகவும் இஸ்லாமிய சிந்தனைகளையும் கருத்துகளையும் முன்வைத்து வருகிறார். அவர் எழுதிய நூல்களில் Basortusus Demokrasi எனும் நூல் அறபு, ஆங்கிலம், பிரென்ஞ், பாரசீகம் ஆகிய மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ளது.
ஓர் அரசியல் செயற்பாட்டாளராக, சமூகப் போராளியாக, மாபெரும் அறிவு ஜீவியாக, எழுத்தாளராக என மர்வா ஸபா கவாக்ஸியின் பன்முக ஆளுமை விரிகின்றது. கவாக்ஸி இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. அவரிடம் கற்பதற்கு எமது பெண்களுக்கு நிறையவே உள்ளன.
நன்றி-மீள்பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment