widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, August 7, 2012


இஃதிகாப் நோக்கமும் நடைமுறையும்

முஹம்மத் பகீஹுத்தீன்
பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் தூய்மையான எண்ணத்துடன் இறைவழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தனித்திருத்தலே இஃதிகாப் என்பதாகும். இது ஒரு சுன்னாத்தான அமலாகும்.
 இஃதிகாபின் சிறப்புகள்
ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
(நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
இஃதிகாபின் வகைகள்
இஃதிகாப் இரண்டு வகைப்படும்.
1) வாஜிப்: யார் இஃதிகாப் இருப்பதாக நேர்சை வைக்கின்றாரோ அவர் மீது இஃதிகாப் வாஜிபாகும். உமர் (றழி) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு நாள் இரவு முழுவதும் இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவிய போது “உனது நேர்ச்சையை நிறைவேற்று” என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி.)
2) சுன்னதான இஃதிகாப்: ஒருவர் நன்மையை நாடியும், இறை திருப்தியை வேண்டியும் இஃதிகாப் இருப்பது இந்த வகையைச் சேர்ந்ததாகும். “ நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.” என அபூ ஹ{ரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் – புகாரி)
இஃதிகாப் இருப்பதற்கான காலம்
இஃதிகாப் இருப்பதற்கென்று குறிப்பிட்ட காலம் கிடையாது. எப்போதும் இருக்கலாம். எவ்வளவு நேரமும் இருக்கலாம். ஆனால் இஃதிகாப் இருப்பதை நேர்ச்சை மூலம் தனக்கு கடமையாக்கிக் கொண்டவர் குறிப்பிட்ட அந்தக் காலப் பகுதியில் இஃதிகாப் இருப்பது கட்டாயமாகும்.
சுன்னத்தான இஃதிகாப் இருப்பவர்களுக்கு கால வரையரை கிடையாது. இஃதிகாப் இருக்கும் நிய்யத்தோடு கொஞ்சம் நேரம் பள்ளிவாசலில் தங்கியிருந்தாலும் அது நிறைவேறும். அவ்வாறே ஒரு நாள் இஃதிகாப் இருப்பதாக நிய்யத் வைத்த நிலையில் இடையில் முறித்துக் கொள்ளவும் முடியும்.
எப்போது ஆரம்பிப்பது:
இஃதிகாப் இருப்பதற்கு நேரம் காலம் கிடையாது என ஏற்கனவே பார்த்தோம். ஒருவர் ஒரு நாள் இஃதிகாப் இருப்பதாக நிய்யத் வைத்தால் அவர்; மஃரிப் நேரத்துடன் ஆரம்பித்து மறுநாள் மஃரிப் நேரம் வரை இருக்கவேண்டும் என பல அறிஞர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள்.
பஜ்ர் நேரம் உதயமாக முன்னர் அவர் பள்ளிக்குள் நுழைந்து விட்டால் அதுவும் ஒரு நாளாக கணிக்கப்பட முடியும் என வேறுசில அறிஞர்கள் கருதுகின்றனர். “ நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பதற்கு நாடினால் பஜ்ர் தொழுகையை முடித்தவுடன் தனக்குரிய பிரத்தியேகமான இடத்தில் ஒதுங்கிவிடுவார்கள்” என்ற ஹதீஸ் இஃதிகாப் இருப்பவர்கள் பஜ்ருக்கு பின்; தனியான இடமொன்றை ஒதுக்கி அதில் தரிப்பதும் நபி வழி என்பதையே காட்டுகின்றது.
இஃதிகாபின் றுகூன்கள் (கடமைகள் )
1) நிய்யத: எல்லா செயல்களும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன என்ற ஹதீஸ் நிய்யத் கட்டாயம் என்பதை வலியுறுத்துகின்றுது.
2) பள்ளிவாசலில் தரித்திருத்தல்: குறிப்பிட்ட பள்ளியொன்றில் தரிக்கும் போது அல்லாஹ்வுக்காக இஃதிகாப் இருக்கின்றேன் என்ற எண்ணத்தை வரவழைப்பது கட்டாயமாகும்.
இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசல்கள்
இஃதிகாப் இருப்பதற்கு பொருத்தமான இடம் பள்ளிவாசலே என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது. “ இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து இஃதிகாபில் இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்” (ஸூறா பகரா: 187)
இமாம் அபூ ஹனீபா, இமாம் அஹ்மத் போன்றோரின் கருத்துப் படி ஐவேளை தொழுகை நடைபெறுகின்ற எந்த பள்ளிவாசலிலும் இஃதிகாப் இருக்கலாம். இமாம் ஷாபிஈ, இமாம் மாலிகி போன்றோரின் கருத்துப்படி “எந்த பள்ளிவாசலிலும் இஃதிகாப் இருக்கலாம். ஐவேளையும் தொழுகை நடைபெற வேண்டும்; என்ற நிபந்தனை கிடையாது. ஆனால்; ஜும்மா தொழுகை நிறைவேற்றப்படும் பள்ளிவாசலில் இருப்பது சிறந்ததாகும் எனக் கூறியுள்ளனர்.
நோன்பும் இஃதிகாபும்
நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாப் இருப்பது மிகச் சிறந்தது. ரமழான் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருப்பதில் நபி (ஸல்) அவர்கள் கூடிய கரிசனை காட்டியுள்ளதோடு அதனை தூண்டியுமுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோன்பின்றி இஃதிகாப் இருந்ததில்லை என ஆயிஷா (றழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் ரமழான அல்லாத ஏனைய மாதங்களிலும் நோன்புடன் இஃதிகாப் இருப்பது விரும்பத்தக்கது என்பதயே உணர்த்துகிறது. எனவே ரமழான் அல்லாத மாதங்களில் இஃதிகாப் இருப்பவர் விரும்பினால் நோன்பு பிடிக்கலாம் விரும்பினால் நோன்பின்றி இஃதிகாப் இருக்கலாம்.
இஃதிகாப் ஏன்:
• லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்ளுதல்
• மக்களை விட்டும் ஒதுங்கி தனித்திருந்து அல்லாஹ்வை நெருங்குதல்
• உள்ளத்தை சீர் செய்து கொள்ளல்
• வணக்க வழிபாடுகளில் மாத்திரம் முற்றுமுழுதாக ஈடுபடல்
• இச்சையின் தூண்டுதல்களை விட்டு தூரமாகி நோன்பைப் பாதுகாத்தல்
• உலக விவகாரங்களில் ஈடுபடுவதை குறைத்துக் கொண்டு பற்றற்று வாழ பழுகுதல்
இஃதிகாப் இருக்கும் போது:
இஃதிகாப் இருப்பதிலிருந்து பூரண பயன் அடைந்து கொள்ள விரும்பும் ஒருவர் வீணான பேச்சுக்களை விட்டும் தவிர்ந்து கொண்டு தொழுகை. குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற இபாதத்களிலேயே கழிக்கவேண்டும். தனியாக இஃதிகாப் இருப்பது போலவே கூட்டாகவும் பலர் சேர்ந்து இஃதிகாப் இருக்கலாம். ஆனால் கூடிக்கதைத்து அதன் பலனை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழுக்களாக இருந்து குர்ஆன் விளக்கங்களை, சன்மார்க்க சட்டங்களை, ஸீராவை மற்றும் பயனுள்ள புத்தகங்களையும் படிக்க முடியும்.
இஃதிகாப் இருப்பவரை பாதிக்காத செயற்பாடுகள்
1) மனைவியை வழியனுப்புவதற்காக வெளியேறுதல். நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் சமயத்தில் தேவையின் நிமித்தம் நபியவர்களிடம் வந்த அவர்களது மனைவி ஸபிய்யா (றழி) அவர்களை வீடுவரை சென்று வழியனுப்பினார்கள்.
2) முடி களைதல், நகம் வெட்டுதல், தலை வாறுதல்: இது போன்ற சுத்தம் பேணும் விடயங்களில் ஈடுபடலாம்.
3) மலம் ஜலம் போன்ற அவசியத் தேவைக்காக பள்ளியை விட்டும் வெளியேறலாம்.
4) உண்ணுதல், பருகுதல், தூங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
5) ஜும்மா தொழுகைக்காக, நோயாளியை தரிசிப்பதற்காக, ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காக வெளியேறுவதை அலி (றழி) அவர்கள் விரும்பத்தக்கதாக கருதியுள்ளார்கள். இன்னும் சில ஸஹாபாக்கள் சமூகப் பணிகளில் கூட ஈடுபட்டுள்ளார்கள். உண்மையில் இஸ்லாத்தில் துறவரம் என்பது கிடையாது. இஃதிகாப் என்ற பெயரில் சமூக உறவை முற்று முழுதாக அறுத்துவிடக் கூடாது என்பதையே இது காட்டுகின்றது.
இஃதிகாபின் விளைவு
இஃதிகாப் தேவையற்ற சகவாசம், அதிகமாக தூங்குதல், நாவினால் ஏற்படும் பாவங்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவதுடன் இறை நினைவோடு வாழ்வதற்கும் அல்குஆன் ஓதுவதற்கும் அல்லாஹ்வை பற்றி சிந்திப்பதற்கும் அதிகமாக தொழுவதற்கும் இன்னும் பல வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் துணை செய்கின்றது.
இஃதிகாபை முறிக்கும் கருமங்கள்
1) எந்தத் தேவையுமின்றி வேண்டுமென்றே பள்ளியில் இருந்து வெளியேறுதல்.
2) மதம் மாறுதல்.
3) மயக்கம் அல்லது மனநோய் காரணமாக புத்தி நீங்குதல்.
4) ஹைழ், நிபாஸ் ஏற்படுதல்
5) உடலுறவு கொள்ளுதல்
இஃதிகாப் விட்டுச் செல்லும் தடயங்கள்
1) மஸ்ஜிதை விரும்புதல். உள்ளம் அதனோடு தெடர்புபடுதல்
2) தொழுகைக்காக காத்திருத்தல். அந்த வகையில் மலக்குகளின் பிராத்தனைக்கு உட்படுதல்.
3) உலக இன்பங்களை விட்டு தூரமாகுதல்.
4) தீங்கிழைக்கும் பழக்க வழக்கங்களை களைதல்
5) மனக்கட்டுப்பாட்டிற்கும் பொறுமைக்கும் பழகுதல்
6) பாவங்களை விட்டும் தூரமாகி தௌபா செய்யும் பழக்கம் எற்படுதல்
7) உளச் சீர்திருத்தமும் மன அமைதியும் கிடைக்கும்
8) குர்ஆனுடனான நெருங்கிய தொடர்பு
கவனிக்க
முறையாக விடுமுறை எடுக்காமல் தொழிலை விட்டு விட்டு அல்லது பெண்கள் தமக்குள்ள கடமையான பணிகளை கவனிக்காமல் பள்ளியில் இஃதிகாப் இருப்பது அங்கீகரிக்க முடியாத செயலாகும். ஒரு சுன்னத்தான அமலை செய்வதற்காக அதைவிட முற்படுத்த வேண்டிய கடமைகளை விட்டுவிடுவது தவறாகும்.
எனவே இந்த விடயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
Source:lankamuslims

0 comments:

Post a Comment