widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, August 5, 2012


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கற்பித்தல் முறைகள் 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கற்பித்தல் முறைகள் (1)
  உம்மு நுமைரா 
[ சுருக்கமாக, அழகாக, தெளிவாக எண்ணிவிடும் அளவுக்கு குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசக்கூடிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே, தனது பேச்சுக்களின் மூலம் மக்களை சலிப்படையச் செய்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமுடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட செய்திகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.
ஆனால் இன்றோ பெரும்பாலான பேச்சாளர்களானாலும் சரி, கற்பிப்பாளர்களானாலும் சரி, கையில் ‘மைக்’ கிடைத்தால் போதும் என்று மணிக் கணக்கில் பேசி கேட்பவர்களை ஒரு வழியாக்கி விடுகிறார்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அவர்கள் பேசி முடித்த பிறகு அந்தப் பேச்சின் சாரம் என்னவென்று பார்வையாளர்களைக் கேட்டால், யாருக்குமே எதுவுமே நினைவில் இருக்காது. பசியும், சோர்வும், அசதியும் தான் இறுதியில் மிச்சமாகும்.
பார்வையாளர்களை தன் அழகிய வார்த்தைகளால் கட்டிப் போடும் ஆற்றல் நிரம்பப் பெற்றிருந்தும், மேடை நாகரீகத்தையும், தனி மனிதனின் நேர மதிப்பையும், அவன் மனநிலையையும் மதிக்கும் தன்மையையும், கற்பித்தல் முறையின் அழகிய முறைகளையும் தன் சொல்லாலும், செயலாலும் நமக்கு விளங்க வைத்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மிகச் சிறந்த ஆசிரியர்தானே!]
  மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனப் பதிவுகள்! (1) 
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கற்பித்தல் முறைகள் :
கற்பித்தலின் போது ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு.
1. கேட்பவர்களை சோர்வடையச் செய்யாமல் இருத்தல்,
2. சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும், எளிமையாகவும் சொல்லுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அணுகுமுறையும் இவ்வாறுதான் அமைந்திருந்தது. தனது உரைகளின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை நாம் விரல்விட்டு எண்ணிக் கொள்ளும் அளவுக்கு மிகக் குறைவாகவே இருக்கும் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.
"பெரும்பாலும் மிக நீண்ட சொற்பொழிவாக அவர்களின் பேச்சுக்கள் அமையாது. சுருக்கமாகவும், சுற்றி வளைக்காமலும், தெளிவான வார்த்தைகள் கொண்டதாகவும் இருக்கும்."
இதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த பெரும்பாலான செய்திகளை நபித் தோழர்களால் ஒருமுறை கேட்ட உடனேயே இலகுவாக மனனம் செய்ய முடிந்தது. ஏன் நம்மால் கூட பல ஹதீஸ்களை அதன் மூல அரபி மொழியில் இலகுவாக மனனம் செய்ய முடிவதற்கும் இதுதான் காரணம்.
அப்துல்லா இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய மாணவர்களுக்கு, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று மட்டும் பாடம் நடத்தக் கூடியவர்களாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவரு டைய மாணவர்களோ கல்வியின் மீது கொண்ட அதிக ஆர்வத்தால் தினமும் தங்களுக்கு பாடம் கற்பிக் குமாறு வேண்டுகிறார்கள். ஆனால் இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ, "இல்லை! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு காட்டித் தந்த வழிமுறை இதுதான். நீங்கள் சோர்ந்துபோய் அதன் காரணமாக கற்பதில் ஆர்வம் காட்டாது போய் விடுவீர்களோ என்ற அச்சம் மட்டும் இல்லையாயின் நான் தினமும் உங்களுக்கு கற்றுத் தந்திருப்பேன் என்று கூறினார்கள். (புகாரி எண் 70)
மேற்கண்ட செய்தியிலிருந்து நாம் விளங்குவது என்ன? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்தோழர்களுக்கு கற்றுத் தருவதற்காக குறிப்பிட்ட ஒரு தினத்தை மட்டுமே ஏற்படுத்தியிருந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர முடிகிறது. இமாம் புகாரி அவர்கள் கூட தனது நூலான ஸஹீஹுல் புகாரியில் "கற்பித்தலின் போது மிதமான முறையைக் கையாளுதல்" கற்பித்தலின் போது மாணவர்கள் சோர்வடையாது இருப்பதற்காக குறிப்பிட்ட ஒரு நாளை மட்டும் ஏற்படுத்துதல்" என்ற தனி பாடப் பிரிவையே ஏற்படுத்தியுள்ளார்கள்.
அப்பாடத்தின் கீழ் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்ததாக பின்வரும் செய்தியை இடம் பெறச் செய்துள்ளார்கள். அதாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "எங்களுக்கு உபதேசம் செய்வதற்காக குறிப்பிட்ட ஒரு சில நாட்களை மட்டுமே ஏற்படுத்தியிருந்தார்கள். காரணம் நாங்கள் சோர்வடைந்து விடக் கூடாது என்று அஞ்சியே அவ்வாறு செய்தார்கள்" என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. (புகாரி எண்: 168)
சுருக்கமாக, அழகாக, தெளிவாக எண்ணிவிடும் அளவுக்கு குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசக்கூடிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே, தனது பேச்சுக்களின் மூலம் மக்களை சலிப்படையச் செய்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமுடன் செயல்பட்டிருக் கிறார்கள் என்பதை மேற்கண்ட செய்திகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.
ஆனால் இன்றோ பெரும்பாலான பேச்சாளர்களானாலும் சரி, கற்பிப்பாளர்களானாலும் சரி, கையில் ‘மைக்’ கிடைத்தால் போதும் என்று மணிக் கணக்கில் பேசி கேட்பவர்களை ஒரு வழியாக்கி விடுகிறார்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அவர்கள் பேசி முடித்த பிறகு அந்தப் பேச்சின் சாரம் என்னவென்று பார்வையாளர்களைக் கேட்டால், யாருக்குமே எதுவுமே நினைவில் இருக்காது. பசியும், சோர்வும், அசதியும் தான் இறுதியில் மிச்சமாகும்.
பார்வையாளர்களை தன் அழகிய வார்த்தைகளால் கட்டிப் போடும் ஆற்றல் நிரம்பப் பெற்றிருந்தும், மேடை நாகரீகத்தையும், தனி மனிதனின் நேர மதிப்பையும், அவன் மனநிலையையும் மதிக்கும் தன்மையையும், கற்பித்தல் முறையின் அழகிய முறைகளையும் தன் சொல்லாலும், செயலாலும் நமக்கு விளங்க வைத்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மிகச் சிறந்த ஆசிரியர்தானே!
கேட்பவர்களின் நிலைக்கும், அறிவுக்கும் ஏற்றவாறு பேச்சுக்களை அமைத்துக் கொள்ளுதல்:
கேட்பவர்கள் பல்வேறுபட்ட நிலைகளில் உள்ளவ ராக இருக்கக் கூடும். எல்லோராலும், எல்லாவற்றையும் எப்போதும் புரிந்து கொள்ள முடியும் என்று கூற இயலாது. அவரவர்களின் நிலைக்கும், அறிவுக்கும் ஏற்பவே அவர்களால் புரிந்து கொள்ள முடியும். நாம் நிறைய தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதற்காக நமது திறமைகளை கேட்பவர்கள் அனைவர் மீதும் திணித்து விட முடியாது. பாத்திரம் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவுதான் கொடுக்க முடியும். பாத்திரத்தின் அளவுக்கு அதிகமாகக் கொடுத் தால் அது விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடியும்.
மார்க்கத்தின் அடிப்படையும் தெரியாமல், உலகக் கல்வியும் கிடைக்கப் பெறாமல் சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழும் மக்களிடம் நம் மொழிப் புலமையையும், பேச் சாற்றலையும் காட்டும் வண்ணம் எதுகை மோனை மொழியில் உரையாற்றலாமா? -ஆக, எந்தவொரு பேச்சாளரும், தனது திறமையையும், அறிவையும் மட்டும் கவனத்தில் கொள்ளாது, எதிரிலிருப்பவர்களின் தகுதி என்ன? என்பதைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடை முறையிலும் இதற்கான உதாரணத்தை நாம் காண முடிகிறது. இமாம் புகாரி அவர்கள் தனது நூலில் கூட சில விஷயங் களை சிலருக்கு மட்டுமே கற்பித்து விட்டு சிலருக்கு; அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு விடுவார்கள் என்று கருதி கற்பிக்காமல் விட்டு விடுதல் என்ற ஒரு அத்தியாயத்தையே உருவாக்கி உள்ளார்கள். அதன் கீழ் இடம்பெற்றுள்ள ஹதீஸ் பின்வருமாறு:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை முஆது ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து, யார் ''லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்'' என்பதை உண்மையாகவே தன் உளப்பூர்வமாக கூறுகிறானோ அவன் நிச்சயம் சுவர்க்கம் செல்வான் என்று கூறினார்கள். உடனே முஆது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த (நல்ல) செய்தியை நான் அனைவருக்கும் அறிவிக்கட்டுமா? என்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "வேண்டாம்! இதைக் கேட்டு விட்டால் சில (ஈமானில் பலவீனம் கொண்ட) மக்கள் இந்த ஹதீஸையே முழுக்க சார்ந்திருந்து விட்டு தங்கள் மார்க்கக் கடமைகளில் அசட்டையாக இருந்து விடுவார்கள் என்று கூறினார்கள் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட செய்தியிலிருந்து நாம் உணர்ந்து கொள்வது என்ன? உளப்பூர்வமாக உணர்ந்து ‘லாயி லாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று யார் சொன்னாலும் அவருக்கு சுவர்க்கம் உறுதிதான் என்ற செய்தி உண்மையானதே என்றாலும் கூட அனைத்துத் தரப்பு மக்களாலும் அதனை சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாது.
பாமர மக்களோ அல்லது ஈமானில் சிறு பலவீனம் கொண்ட மக்களோ மார்க்கத்தின் கடமைகளை விட்டும் அசட்டையாக இருந்து விடுவதற்கு இது காரணமாகி விடக்கூடும். இச் செய்தியை பொது மக்களுக்கு இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆது ரளியல்லாஹு அன்ஹு அவர்களை தடை செய்கி றார்கள்.
அதே நேரத்தில் முஆது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸை சரியான முறையில் புரிந்து கொள்வார்கள். அவர்கள் மார்க்கக் கடமைகளில் இருந்து பின்வாங்குவதற்கு இந்த ஹதீஸ் எந்தவிதத்திலும் காரணமாக அமையாது என்ற நம்பிக்கை நபிகளாருக்கு முஆது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது இருந்ததால் அவர்களுக்கு இந்த நற்செய்தியைக் கூறுகிறார்கள்.
இன்றும் கூட நம்மில் பெரும்பாலானோர் எப்படி இருக்கிறார்கள். மார்க்கத்தில் ஏதேனும் இலேசுக்காக இருக்கும் பட்சத்தில் அதனை தங்களுக்குச் சாதமாக எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதிலேதான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
உதாரணத்திற்கு, ''மறதி, தூக்கம் இந்த இரண்டின் காரணமாக தொழுகையை விட்டு விட்டால் அது குற்றமில்லை'' என்ற ஹதீஸை நம்மில் பலரும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சுபுஹ் மற்றும் அஸர் தொழுகைகளில் அலட்சியமாக இருந்து கொண்டு தம்மை தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
மற்றொரு செய்தியைப் பாருங்கள்!
அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருமுறை நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தபோது, ஒரு இளைஞர் வந்து நபிகளாரிடம், "நான் நோன்பு வைத்திருக்கும் நிலையில் என் மனைவியை முத்தமிடலாமா? என்று கேட்டார்! அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூடாது என்று அவருக்கு அனுமதி மறுத்து விட்டார்கள். பின்னர் வயதான ஒருவர் வந்து நபிகளாரிடம் இதே கேள்வியைக் கேட்டபோது, அவருக்கு ‘ஆம்! முத்தமிடலாம்’ என்று அனுமதியளித்தார்கள். நாங்கள் (குழப்பத்துடன்) ஒருவரையருவர் பார்த்துக் கொண்டோம். (எங்கள் குழப்பத்தைக் கண்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம், ‘அந்த வயதானவரால் தன்னை (வரம்பு மீறாமல்) கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் (அதனால் தான் அவருக்கு அனுமதி யளித்தேன்) என்று விளக்கமளித்தார்கள். (நூல்: அஹ்மது)
மேற்கண்ட செய்தியிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன–? நோன்பாளியான நிலையில் மனைவியை முத்தமிடுவது கூடும் என்றாலும் கூட புதிதாக திருமணமான இளைஞருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. யார் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு பக்குவம் பெற் றிருக்கிறாரோ அவருக்கு மட்டுமே அனுமதியளித்திருக் கிறார்கள்.
ஆக எல்லோருக்கும் எல்லா நேரத்திலும், எல்லா செய்திகளையும் கூறிவிட முடியாது. அவர்களின் நிலை, வயது, தரம், முதிர்ச்சி, புரிந்து கொள்ளும் திறன், பக்குவம் ஆகிய விஷயங்களை கவனத்தில் கொண்டு எடுத்துக் கூற முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் திறன் அறிந்து செயல்பட வேண்டும் என்ற முறையை அன்றே கடைபிடித்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகச் சிறந்த ஆசிரியர் தானே!
கற்றலின் முழுமையான பலனே கற்பித்தலில்தான் உள்ளது. கற்பித்தல் இல்லாத கற்றல் வீணானது. எனவேதான் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யார் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இந்த உலகிற்குத் தான் அனுப்பி வைத்ததற்கான நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது, "அவனே எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயத்தில் இருந்து ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களை கூறிக் காண்பித்து அவர்களை பரிசுத்தப் படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டில் இருந்தனர். (62:2) என்றும், மற்றொரு இடத்திலே,
"(நபியே!) உமக்கு எது இறக்கப்பட்டதோ (அந்த வேதத்தை) அதனை நீர் மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும் என்பதற்காகவே உம்மை நாம் அனுப்பி வைத்தோம்" என்றும் நபிகளாரின் மீது தான் சுமத்தி யிருக்கும் கற்பித்தல் பணியைப் பற்றி அல்லாஹ் தெளிவாகவே விளக்குகிறான். கல்வி கற்ற ஒருவன் அதனை தான் மட்டும் கற்றுக் கொண்டு பிறருக்கு எடுத்துச் சொல்லாமல், கற்பிக்காமல் மறைத்து வைத்தல் மாபெ ரும் தவறு என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டுகிறார்கள்.
"எவனொருவன் (அவனுக்குத் தெரிந்த) ஞானத்தைப் பற்றி கேட்கப்பட்டும் அதனை (பிறருக்குச் சொல்லாமல்) மறைக்கிறானோ அவனுக்கு (மறுமை நாளில்) நெருப்பிலான கடிவாளங்கள் அணிவிக்கப்படும். (நூல்கள்: அபூதாவூது, திர்மிதி) என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்று கற்றலின் நோக்கமே கற்பித்தல்தான் என்பதை மிகத் தெளிவாகவே நமக்கு உணர்த்துகிறது.
  கற்பித்தல் எப்படி இருக்க வேண்டும் ? 
கற்பித்தல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில வழிமுறைகளும் நெறிமுறைகளும் உண்டு. அவைகளில் அடிப்படையான இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். அவையாவன:
1. கற்பித்தல் முறை தெளிவாக இருக்க வேண்டும்
2. எளிமையாக புரியும் விதத்தில் இருக்க வேண்டும்
பொதுவாக ஆசிரியர்களை நாம் இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் பாடங் களை அழகிய முறைகளில் விளக்கி வகுப்பறையையே உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். இன்னொரு வகை யினர் ஏனோதானோவென்று தான் படித்த அனைத் தையும் மாணவர்களிடம் ஒப்புவித்து வகுப்பறையை து£ங்கி வழியச் செய்பவர்கள்.
முதலாவது வகை ஆசிரியர்களிடம் பயிலும் மாணவர்கள்தான் ஆர்வத்தோடு பயின்று அதிக மதிப்பெண்கள் பெற முடியும். இரண்டாவது வகை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியின்மீதான ஒரு வெறுப்பையும், சலிப்பையுமே ஏற்படுத்துகிறார்கள்.
இந்த செய்திகளை நீங்கள் வாசித்துக் கொண்டிருக் கும்போதே நீங்கள் உங்களது பள்ளிப் பருவத்தில் சந்தித்த இரண்டு வகையான ஆசிரியர்களுமே உங்கள் மனதில் தோன்றலாம். இன்றும் கூட சில சிறந்த ஆசிரியர்களும் அவர்கள் கற்றுத் தந்த சில பாடங்க ளும் நம் மனதில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கக் கூடும். நம் முதுமைக் காலத்தில் கூட சில ஆசிரியர் களை நம்மால் மறக்க இயலாது. காரணம் அவர்கள் பயன்படுத்திய சில கற்பித்தல் முறைகள்.
  சிறந்த கற்பித்தல் முறைகள் : 
கற்பித்தல் முறைகள் மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு சமீபகாலமாக மிக அதிகமாகவே காணப்படுகிறது. மாணவர்களை மனனம் செய்ய வைத்து தேர்வு எழுதவைத்தல் என்ற முறை மாற்றப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. செயல்வழிக் கற்றல் என்ற பாடமுறைகள் தற்போது பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு பெரும்பாலோரிடையே விருப்பமானதாக மாறி வருகிறது.
தமிழக அரசு கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இம்முறையை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே இம்முறைக்கு நல்ல வரவேற்பும் ஏற்பட்டுள்ளது. இம்முறைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் புரிதல் திறன் மற்ற மாணவர்களை விட அதிகமாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டும் உள்ளது.
தனியார் பள்ளிகள் பலவற்றில் கூட கற்பித்தல், மனனம் செய்வித்தல், ஒப்புவித்தல், தேர்வு எழுதுதல் என்பது போன்ற பழைய முறைகள் மாற்றப்பட்டு செயல்வழிக் கற்றல் மற்றும் மாண்டிச்சோரி சிஸ்டம் என்பது போன்ற பல்வேறு வகையான கற்பித்தல் முறைகள் ஐந்தாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதற்காக ஆசிரியர்களுக்கென்று பிரத்யேகமான பயிற்சிகள் கூட அளிக்கப்படுகின்றன.
கற்பித்தல் முறையைப் பற்றி இவ்வளவு பெரிய முன்னோட்டம் எதற்காக? அண்ணல் நபிகளாருக்கும் பி.எட்., போன்ற பயிற்சி வகுப்புகளுக்கும் என்ன தொடர்பு? என்று பலருக்கும் தோன்றலாம். அதற்கான விடைதான் இக்கட்டுரை.
அல்லாஹ்வின் அருள் மறையையும், தனது அழகிய வாழ்வியல் நடைமுறைகளையும் அருமைத் தோழர்க ளுக்கு எடுத்து விளக்கும் போது, பல்வேறுபட்ட கற்பித்தல் முறைகளை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இவைகளை ஆராய்ந்து பார்த்தாலே போதும். இன்றைய காலத்து கற்பித்தல் பயிற்சி வகுப்புகள் எல்லாமே ஒன்றுமில்லாததாகி விடு கிறது. இந்த நவீன யுகத்து கண்டுபிடிப்புகள், பயிற்சி முறைகள் எல்லாமே 1400 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பயன்படுத்தப் பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியமாகவும் உள்ளது. இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த இதழ்களில் இருந்து ஓர் ஆசிரியராய் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காண நாம் அனைவரும் ஆர்வமுடன் காத்திருப்போம்.
Source: Nidur

0 comments:

Post a Comment