"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, August 3, 2012
அது ஒரு காகம்! (நீதிக்கதை)
வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.
லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”
சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”
“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”
சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”
மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”
முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.
அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.
அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.
இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது. திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.
(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் ‘சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)
தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டு களை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment