"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, August 2, 2012
ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு
அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி)
சுபஹ் தொழுகையில் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஓதப்படும் குனூத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது ரமழான் பதினைந்தின் பின்பு அதனை வித்ருதொழுகையின் இறுதியிலும் இமாம் ஓத, பின் நிற்பவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் மாத்திரம் இடம் பெறுவதை நாம் அறிவோம். இதன் உண்மை நிலைபற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு பற்றிய அவர்களின் மூல நூற்களில் இருந்து இங்கு எடுத்து எழுதுகின்றோம்.
நாம் இதனை எழுதி மாத்திரத்தில் இவர்கள் இப்படித்தான், அமல்களைக் குறைப்பவர்கள், அப்படித்தான் எழுதுவார்கள், வஹ்ஹாபிகள், குழப்பவாதிகள் என்று எம்மீது சீறிப்பாய்வதையும், எமெக்கிதிராக அவதூறுகள் பரப்புவதையும், பொதுமக்களைத் திசை திருப்பி சத்தியத்தை மறைப்பதையும் ஆலிம்கள் எனக் கூறிக் கொள்வோர் தவிர்த்து, ரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர்வமானதா? அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா? என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள்கின்றோம்.
குனூத் இடம் பெறும் நூல்களும் அறிஞர்களின் விமர்சனங்களும்
ஹதீஸ்கலை அறிஞர்களான அபூதாவூத். பைஹகி, இப்னு அபீஷைபா, இப்னுல் அதீர் போன்றோர் தமது நூற்களில் இதனைப் பதிவு செய்துள்ளனர்.
இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் சுனனில் (அவர்களின் ஹதீஸ் நூலில்) வித்ர் குனூத் பற்றி ஒரு ஹதீஸை அறிவித்த பின் மற்றொமொரு செய்தியை பின்வருமாறு அறிவிக்கிறார்கள். அதாவது உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் உபை பின் கஃப் (ரழி) அவர்களின் தலைமையில் (ரமழானில்) மக்களை ஒன்று சேர்த்திருந்தார்கள். அவர் அவர்களுக்கு இருபது இரவுகள் தொழுகை நடத்தினார். மிஞ்சிய அரைவாசியில் குனூத் ஓதுவார்…’ என ஹஸன் அல்பஸரி என்பவர் உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கும் செய்திகள் பற்றி விpமர்சிக்கும் இமாம் அபூதாவூத் அவர்கள் ‘
قَالَ أَبُو دَاوُد: وَهَذَا يَدُلُّ عَلَى أَنَّ الَّذِي ذُكِرَ فِي الْقُنُوتِ لَيْسَ بِشَيْءٍ وَهَذَانِ الْحَدِيثَانِ يَدُلَّانِ عَلَى ضَعْفِ حَدِيثِ أُبَيٍّ… ( سنن أبي داود)
குனூத் பற்றிக்கூறப்படும் இந்தச் செய்தி ஒன்றுக்கும் உதவாதது. இந்த இரு செய்திகளும் உபை பின் கஃப் (ரழி) அவர்களின் செய்தி பலவீனமானது என்பதைக் காட்டுகின்றது. (பார்க்க: சுனன் அபீதாவூத்) மேற்படி செய்தியை அபூதாவூத் இமாம் வழியாக பைஹகி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
மேற்படி செய்தியில் காணப்படும் குறைகள்
மேற்படி செய்தியில் இடம் பெறும் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ‘ஹஸனுல் பஸரி’ என்பவர் உமர் (ரழி) அவர்களை சந்திக்காதவர். உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் இறுதி இரண்டு வருட காலத்தில் பிறந்தவர். உமர் (ரழி) அவர்களை சந்திக்காதவர். இப்படிப்படிப்பட்ட ஒருவரால் இந்தச் செய்தி கூறப்படுவதை அறிஞர்கள் ‘முன்கதிஃ’ அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த நிலை என வர்ணிப்பதுடன், அந்த அறிவிப்பையும் தள்ளுபடி செய்வர் என்பதையும் கருத்தில் கொண்டால் இது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய, சட்டம் எடுக்க முடியாத அறிவிப்பு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மேற்படி செய்தியை விமர்சிக்கும் இமாம்கள்
இந்தச் செய்தி ஒன்றுமல்ல, அது பலவீனமானது என இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் ஏற்கெனவே கூறியுள்ளதை மேலே எழுதியுள்ளோம். இமாம் ஸைலயி என்பவர் ஹனபி மத்ஹப் சார்ந்த நூலான ‘அல்ஹிதாயா’ என்ற நூலில் இடம் பெறும் ஹதீஸ்களை திறனாய்விற்கு உட்படுத்தி ‘நஸபுர்ராயா’ என்ற நூலை எழுதியுள்ளார்கள். ரமழான் அரைவாசியில் ஓதப்படும் குனூத்பற்றிக் குறிப்பிடும்போது ‘ அது பற்றி இரண்டு ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன எனக் கூறிவிட்டு, இமாம் அபூதாவூத் அவர்களின் கிரந்தத்தில் இடம் பெறும் மேற்படி ஹதீஸை முதலாவது ஹதீஸாக எடுத்தெழுதிய பின்னர் ‘;
وَهَذَا مُنْقَطِعٌ ، فَإِنَّ الْحَسَنَ لَمْ يُدْرِكْ عُمَرَ …. ( نصب الراية في تخريج أحاديث الهداية – ج 3 ص 175)
இது ‘முன்கதிஃ’ அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த நிலையாகும். ஏனெனில் ஹஸன் என்பவர் உமர் (ரழி) அவர்களை சந்திக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: நஸபுர்ராயா, பாகம்: 3.பக்கம். 175) (இலத்திரனியல் நூலகம். இரண்டாம் வெளியீடு.) மேலும் மற்றொரு அறிவிப்பு அபூதாவூதில் இடம் பெறுகின்றது. அதில் وَفِيهِ مَجْهُولٌ ‘அதில் விலாசமற்ற, யார் என்று அறியப்படாதவர் இடம்பெறுகிறார்’ என அதே நூலில் விமர்சித்த பின்னர்,
وَقَالَ النَّوَوِيُّ فِي ‘ الْخُلَاصَةِ ‘ : الطَّرِيقَانِ ضَعِيفَانِ ‘ அல்ஹுலாஸா’ என்ற நூலில் இமாம் நவவி அவர்கள் ‘ இவ்விரண்டு வழிகளும் பலவீனமானவையே’ எனக் கூறியுள்ளதாகக் கூறுகிறார்கள்.
‘நபி (ஸல்) அவர்கள் ரமழானின் அரைவாசியில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்’ என அபூஆதிகா எனப்படும் தரீப் பின் சுலைமான் என்பவர் அனஸ் (ரழி) அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்தியை இரண்டாவது ஹதீஸாகக் குறிப்பிடும் அதே இமாம் ஸைலயி அவர்கள் இதனை இப்னு அதிய் அவர்கள் தனது ‘அல்காமில்’ என்ற (பலவீனமான அறிவிப்பாளர்கள் பற்றி குறிப்பிடும்) நூலில் குறிப்பிடுவதாகக் கூறிய பின்
وَأَبُو عَاتِكَةَ ضَعِيفٌ ، قَالَ الْبَيْهَقِيُّ : هَذَا حَدِيثٌ لَا يَصِحُّ إسْنَادُهُ . ‘அபூ ஆதிகா பலவீனமானவர்’ எனத் தீர்ப்பை முன்வைப்பதோடு, இது அறிவிப்பாளர் தொடர் சரியில்லாத ஹதீஸ்’ என இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் குறிப்பிடுகிறார்கள்.(பார்க்க: நஸபுர்ராயா, பாகம்: 3.பக்கம். 175)
இந்தச் செய்தி பற்றி விபரிக்கும் ‘அபூதாவூதின் விரிவுரை அறிஞரான அல்முபாரக்பூரி என்பவர், மேற்செய்தியானது ‘அறிவிக்கப்படுகின்றது’ என்ற மறைமுகமான, சந்தேகத்திற்கு இடம்பாடான சொற்றடரைக் கொண்ட ஒரு செய்தியாகவே அறிவிக்கப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளதையும் இதன் பலவீனத்தின் காரணிகளில் முக்கியமான காரணியாக இங்கு கவனித்தில் கொள்ளவும் வேண்டும். (அவ்னுல் மஃபூத் ஷரஹ் சுனன் அபூதாவூத். பாகம்: 3: பக்கம், 360) (இலத்திரனியல் நூலகம். இரண்டாம் வெளியீடு.)
குறிப்பு: அறிவிக்கப்படுகிறது, சொல்லப்படுகிறது போன்ற அமைப்பை ஹதீஸ் கலை அறிஞர்கள் ‘ஸீகதுத் தம்ரீழ்) நோய், பலவீனம் சார்ந்த அமைப்பு என வர்ணிப்பர். குறித்த ஹதீஸை ஏற்கமுடியாது என்பதற்கான காரணிகளில் இதுவும் உள்ளடக்கப்படும் என்பதைக் கவனித்தில் கொள்ளவும்.
ஷாபி மத்ஹப் அறிஞரின் தீர்ப்பு:
ஷாபி மத்ஹப் அறிஞனரான இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ‘அல்மஜ்மூஃ’ என்ற அவரது நூலில் இந்தச் செய்தியை எடுத்தெழுதிய பின்
…. هذا لفظ أبي داود والبيهقي وهو منقطع لان الحسن لم يدرك عمر بل ولد لسنتين بقيتا من خلافة عمر بن الخطاب رضى الله عنه ورواه أبو داود أيضا عن ابن سيرين عن بعض أصحابه أن أبى بن كعب أمهم يعنى في رمضان وكان يقنت في النصف الآخر منه وهذا أيضا ضعيف لانه رواية مجهول (( المجموع شرح المهذب – (ج 4 ص 18)
இது அபூதாவூத், மற்றும் பைஹகி ஆகியோரின் அறிவிப்புக்கள். இது ‘முன்கதிஃ’ அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த நிலையாகும். ஏனெனில் ஹஸன் என்பவர் உமர் (ரழி) அவர்களை சந்திக்கவில்லை. மாத்திரமின்றி உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களின் ஆட்சியில் மீதமிருந்து இரண்டு வருடங்களுக்குள்ளாகதான் ஹஸன் பிறந்திருக்கின்றார். (அவர் உமர் (ரழி) வழியாக எப்படிய அறிவிக்கலாம்) எனக் குறிப்பிட்ட பின்னர், இப்னு ஸீரீன் என்பவர் நபிகள் நாயகத்தின் தோழர்கள் சிலரைத் தொட்டும் அறிவிப்பதாக இடம் பெறும் அறிவிப்பில் ‘மஜ்ஹுல்’ ‘அறிமுகமற்றவர்கள்’ இடம்பெறுகிறார்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். (( பார்க்க: அல்மஜ்மூஃ . பாகம்: 4: பக்கம், 18) (இலத்திரனியல் நூலகம். இரண்டாம் வெளியீடு.)
இமாம் அர்ராபிஈ அல்கபீர் என்பவரின் பிக்ஹ் நூலில் காணப்படும் ஹதீஸ்களை பகுப்பாய்வு செய்த இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ‘தல்ஹீசுல் ஹபீர்’ என்ற நூலில் இந்தச் செய்தி பற்றி எடுத்தெழுதிய பின் ‘
وَرَوَى الْبَيْهَقِيُّ وَابْنُ عَدِيٍّ فِي نِصْفِ رَمَضَانَ الْأَخِيرِ مِنْ حَدِيثِ أَنَسٍ مَرْفُوعًا ، وَإِسْنَادُهُ وَاهٍ .(( التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير – (ج 2 ص 122)
பைஹகி அவர்களும், இப்னு அதிய் அவர்களும் அனஸ் (ரழி) அவர்கள் வழியாக இது பற்றி அறிவித்திருக்கிறார்கள். அதன் அறிவிப்பாளர் வரிசை وَإِسْنَادُهُ وَاه’ மிகவும் பலவீனமானது’ (புஷ்வானமானது) எனக் குறிப்பிடுகிறார்கள். (( பார்க்க: தல்ஹீசுல் ஹபீர் பாகம்: 2: பக்கம், 122) (இலத்திரனியல் நூலகம். இரண்டாம் வெளியீடு.
இவ்வளவு தெளிவான தீர்ப்பை மறுத்துரைப்போரிடம் இது பற்றி எழுதுபவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது, சவூதியில் இருந்து பணம் வருகிறது, போன்ற உளரல்களைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம்.
ஆதாரமின்றி தவ்ஹீத் வாதிகளை மட்டம் தட்டுபவர்கள் உங்களுடைய அந்த மௌலவி இப்படிச் சொன்னார், அப்படிச் சொன்னார் என்றெல்லாம் கூறும் அவர்கள் ஏற்றுக்கொண்ட மத்ஹபு அறிஞர்களின் தீர்ப்பை முன்வைத்தே இதை எழுதியுள்ளோம். அதற்கும் அவர்களின் அறியாமை மக்கள் மன்றத்தில் அறிவார்ந்த வாதமாகப் பரப்பப்படும் என்பதையும் நாம் அறிவோம். இருந்தும் பின்வரும் இமாம்களின் கூற்றுப்படி நடைமுறைப்படுத்த வேண்டுகின்றோம்.
قُلْتُ : وَيُمْكِنُ الْفَرَقُ بَيْنَ الْقُنُوتِ الَّذِي فِي النَّوَازِلِ فَيُسْتَحَبُّ الْجَهْرُ فِيهِ كَمَا وَرَدَ ، وَبَيْنَ الَّذِي هُوَ رَاتِبٌ إنْ صَحَّ ، فَلَيْسَ فِي شَيْءٍ مِنْ الْأَخْبَارِ مَا يَدُلُّ عَلَى أَنَّهُ جَهَرَ بِهِ بَلْ الْقِيَاسُ أَنَّهُ يُسَنُّ بِهِ كَبَاقِي الْأَذْكَارِ الَّتِي تُقَالُ فِي الْأَرْكَانِ . التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير – (ج 1 ص 490)
‘குனூத்துன் நவாஸில்’ குழப்பமான சூழ்நிலையில் ஓதப்படும் ‘குனூத்திற்கும்,வித்ருடைய குனூத்திற்கும் (அதுவும் ஸஹீஹானதாக இருப்பின்) இடையில் வேறுபாடு இருக்கிறது. (குனூத்துன் நவாஸிலில்) நபிமொழியில் வந்திருப்பது போன்று பகிரங்கமாக ஓதுவது ‘முஸ்தஹப்’ விரும்பத்தக்க நபி வழியாகும். ஆனால் வித்ருடைய குனூத்தில் பகிரங்கமாக ஓதியதற்கான எந்த சான்றும் நபி மொழிகள் எதிலும் இடம் பெறவில்லை. ஆகவே கடமையான நிலைகளில் கூறப்படும் ஏனைய திக்ர்கள் போன்று இதனையும் (மௌனமாகக்) கூறுவதே முறையாகும். (பார்க்க: தல்ஹீஸுல் ஹபீர். (பா:1.பக்:490) என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும்,
وَالْمُخْتَارُ فِي الْقُنُوتِ الْإِخْفَاءُ لِأَنَّهُ دُعَاءٌ ، وَاَللَّهُ أَعْلَمُ . نصب الراية في تخريج أحاديث الهداية – (ج 3 ص 177)
குனூத்தில் மௌனம் காப்பதே தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லாகும். ஏனெனில் அது துஆவாகும். (அல்லாஹ் மிக அறிந்தவன்), என இமாம் ஸைலயி (ரஹ்) அவர்களும் குறிப்பிடும் செய்திகளை இங்கு கவனித்தில் கொண்டு சப்தமின்றி, மௌனமாக ஓதுவதற்கேனும்
முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
Source : Islamkalvi.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment