widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, August 4, 2012


உலமாக்களும் மற்றும் பாமர மக்களும்
  அப்துல் ஹமீத் (ஷரஈ) 

மார்க்கம் என்ற போர்வைக்குள் எனும் இப்பகுதியில் சமூகத்தில் சில தவறுகள் மார்க்கம் என்ற போர்வைக்குள் தவறே இல்லாதது போல் ஒளிந்து கொள்ளும் போது அதை திரை நீக்கி வெளிச்சத்துக்கு கொண்டுவருவதே நமது நோக்கமாகும்.
இங்கு தவறுகள் வெளிச்சத்துக்குவர ஏகத்துவ வாதியோ அல்லது ஏகத்துவ வாதிகளோ காரணமாக இருக்கும் போது அடைப்புக்குறிக்குள் இடப்பட்ட (ஏகத்துவ) எனும் வார்த்தை பாரபட்சமின்றி பயன்பாடாகிறது. இதுதவிர தனிப்பட யாரையும் சாடுவது நமது நோக்கமல்ல.
خالف تعرف முரண்படு பிரபல்யமடைவாய் என்று ஒரு அரபுப் பழமொழி உள்ளது.
எல்லோருக்கும் மாற்றமான கருத்தை எவராவது ஒருவர் சொன்னால் அவர் அங்கு பிரபல்யம்தான். அது போல் இன்று அழைப்பாழர்களாகச் செயற்படும் சில உலமாக்களும் மற்றும் பாமர மக்களும் பிரபல்யத்துக்காக ஒரு சில முரண்பட்ட கருத்துக்களை தேடித் தேடி சொல்வதும் அல்லது இதுவரைகாலமும் அடித்துச் சொன்ன ஒரு கருத்து தவறி விடாமல் இருக்க முட்டுக் கட்டைகளாக பொருத்தமற்ற ஹதீஸ்களையும், அதில் இல்லாத வார்த்தைகளை ஹதீஸ்கள் போன்று பயன்படுத்துவதையும் அவதானிக்கக்கூடியதாய் உள்ளது. உதாரணமாக சர்வதேச பிறையை அடிப்படையாகக் கொண்டு நோன்பு வைப்பவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கும் போது ஊருக்கு ஊர் பிறை பார்க்கவேண்டும் என்ற கருத்தில் உள்ள ஒரு பிரபல்யமான அறிஞர் அல் ஹதீஸில் வராததை வந்ததைப் போன்று கூறிவிடுகிறார்.
அதாவது ஒரு பிரயாணக் கூட்டம் வந்து சாட்சி சொன்னதாக ஹதீஸில் வந்த வாசகத்தை பிரச்சாரம் செய்யும் போது நோன்பு நோற்றவர்களாக வந்தார்கள் என்ற வார்த்தையை சேர்த்து ஹதீஸில் வந்த மாதிரியே பிரச்சாரம் செய்கிறார். இங்கே பிரச்சாரகர் அல்லாஹ்வின் மார்க்கம் அதன் மூலவடிவில் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்கின்ற உளத்தூய்மையுடன் இருப்பாரானால் ஹதீஸில் உள்ளதை உள்ளதுமாதிரி மொழிபெயர்க்க வேண்டும். பின்னர் தம் சொந்த கருத்தை தம் கருத்தாக குறிப்பிட்டு விளங்கப்படுத்தலாம்.
ஆனால் எதற்காக இல்லாத ஒரு வார்த்தையை இடைச்செருக வேண்டும். தான் ஏற்கனவே எடுத்த முடிவு தடுமாறிவிடாமல் கடைசிவரை உறுதியுடன் இருக்கவேண்டும் என்கின்ற என்னமா? அல்லது தான் ஹதீஸ்களை கையாண்ட விதத்திலும் தான் எடுத்த முடிவிலும் அவ்வளவு நம்பிக்கையா? அல்லது ஏனைவர்கள் குர்ஆன், ஹதீஸில் விடும் தவறுகளை கண்டுகொள்ள மாட்டார்கள் என கருதிக்கொண்டார்களா? புரியவில்லை.
பல வருடங்களுக்கு முன்பு ஷிர்க்கும், பித்அத்களும், மூடநம்பிக்கைகளும், அகீதாவுக்கு (அடிப்படை நம்பிக்கைக்கு) முரண்பட்ட கருத்துக்களும் நிறைந்திருந்த மக்களிடம் ஏகத்துவ வாதிகளின் அழைப்புப்பணி எழுத்து வடிவிலும் பிரச்சார வடிவிலும் சரமழையாய் பொழிந்து கொண்டிருந்தது.
அக்கால கட்டத்தில் 'இவர்களுக்கு ஷிர்க்கையும் பித்அத்தையும் விட்டால் வேறு தலைப்பு இல்லை' என்றொரு பொதுவான குற்றச் சாட்டும் நம் மீது இருந்தது. அதுமட்டுமல்லாது தவ்ஹீத்காரன் என்றால் முன்பின் சுன்னத்துத் தொழுகை, உபரியான நோன்பு, சீதனமில்லாத திருமணம், மற்றும் பேணுதல் உள்ளவர்கள் என்றும் ஒரு நம்பிக்கையும் மக்களிடத்தில் இருந்தது. ஆனால் இன்று நிலை தலைகீழாகப் புரண்டு மாற்றுக் கருத்துள்ள நண்பர்களிடம் நாசுக்காக குர்ஆன் ஹதீஸ் பேசுவது நிறுத்தப்பட்டு ஒரே கொள்கை பேசியவர்கள் மோதிக் கொள்ளும் தளமாக நமது தஃவாக்களம் இன்று மாறிக்கொண்டிருக்கிறது.
மாநாடுகளும் மிம்பர் மேடைகளும் குட்டிக் குட்டி உரைகளும் நான் ரெடி நீ ரெடியா? என சவால் விடும் போர்க் களங்களாக மாறிக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய சஞ்சிகைகள் அடுத்தவனின் தனிப்பட்ட குறையை பெயர் சொல்லிச் சொல்லி அள்ளிக் கொட்டும் அரசியல் மற்றும் சினிமா பத்திரிகை போன்று தன்னை மாற்றிவிட்டது.
அகீதாவில் (அடிப்படை நம்பிக்கையில்) ஒன்றாக இருந்து கொண்டு ஹதீஸ்களை புரியும் விதத்தில் முரண்பட்டுக் கொண்ட நபித்தோழர்கள் வழிமுறை இங்கு மறுக்கப்படுகிறதா? அல்லது மறைக்கப்படுகிறதா? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. பின்வரும் ஹதீஸை கவனியுங்கள.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு. என அம்ர் இப்னு அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஆதாரம் புகாரி 7352)
எனவே ஆய்வின் முடிவு தவறாக இருந்;தாலும் உண்மையை அறிந்து கொள்ளும் எண்ணம் உண்ணதமாக இருக்கும் போது அல்லாஹ்வே கூலி கொடுக்கின்றான் என்பது வெளிப்படையாக உள்ளது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்கின்றோம்.
ஆனால் இன்று குர்ஆன் ஹதீஸ் பேசியவர்களில் ஒரு சாரார்; ஆய்வாளர்கள்களையும் காஃபிராக்குவதில் மிகத் தீவிரமாக முன்னேறி விடுகின்றார்கள். உதாரணத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரியில் வரும் ஹதீஸை ஒருவர் நம்பினால் அவருக்கு பின்னால் தொழுவது அனுமதியாது. ஏனெனில் அவர் இணைவைத்த முஷ்ரிக்காகி விட்டார் என வாய் கூசாமல் தீர்ப்பு வழங்கி விடுகின்றனர். அப்படிப்பார்த்தால் இமாம் புகாரி இமாம் முஸ்லிம் இமாம் நஸாயி மற்றும் முன் வந்த முஹத்திஸீன்கள் அனைவரும் இந்த ஹதீஸை நம்புவதால் அவர்கள் தீர்ப்பின் பிரகாரம் முஷ்ரிக்குகள் என்று கூறவேண்டிவருகிறது. இவ்வாறு தீர்ப்பு வழங்கினால் முஷ்ரிக்குகள் அறிவித்த ஹதீதுகளை ஏற்க முடியுமா? என பல கேள்வி எழும்புவதுடன் இன்னும் பல புதிய சர்ச்சைகளும் ஏற்படுகின்றது. இவ்வாறான தீர்ப்புகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணராமல் முஸ்லிம்களை காபிர்களாக்கும் நிலை தொடர்ந்தால் என்னவாகும் என்பதை நாம் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும்.
மறுமையை ஞாபகமூட்டி நன்மைகளுக்கு ஆசையூட்டும் தலைப்புகளில் நம்மவர்களின் பழய சீடிக்கள் மட்டுமே தற்போது கைவசமுள்ளது. காரணம் இப்போதெல்லாம் அவர்கள் புரட்சித் தலைப்புகளில்தான் உரை நிகழ்த்துவார்களாம். ஏற்பாட்டாளர்கள் கூட மாற்றுக் கருத்தில் இருப்பவர் மனம் மாறி உள்ளே வரும் அமைப்பில் உங்கள் பேச்சு அமையட்டும் என்று நம்மை வேண்டிக் கொள்வதற்கு பதிலாக அடிக்கிற அடியில துண்டக் காணோம் துனியக் காணோம் என ஓடனும் என்றுதான் தலைப்பு தருகிறார்கள்.
கேட்டுக் கொண்டிருக்கும் பாமர மக்கள் என்ன சும்மாவா? பேசி முடிந்ததும் பேச்சாளரை கைகுலிக்கி நல்லா குடுத்திங்க இனி வாயத்திறக்க மாட்;டானுங்க என உசுப்பேத்தி விடுகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும் கருத்து முரண்பாடுகள் கருத்துக்களால் (இஹ்லாசோடு) உளத்தூய்மையோடு விமர்சிக்கப்பட வேண்டும். கதவை தாளிட்டுவிட்டு உள்ளே வா என அழைக்கும் முட்டாள் தனமான அழைப்பைப் போன்று அல்லாமல் மனம் திருந்த வழி வைத்து நம் அழைப்புப் பணியை அமைக்கவேண்டும்.
அல்லாஹ் பின் வருமாறு திருவளமாகிறான்:
''அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.'' (அல்குர்ஆன் 03.159)

0 comments:

Post a Comment