"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, March 9, 2012
ஸலவாத்துன்னாரிய்யா
பி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அருமை ஸஹாபாக்கள் ‘உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவது’ என்று கேட்டபோது, நபி அவர்கள் ‘ஸலவாத்’ கூறும் முறைகளை நமக்குத் தெளிவாக கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் எவற்றை ‘ஸலவாத்’ என்று கற்றுத் தந்தார்களோ அதை விடுத்து நாமாகப் புதிய ‘ஸலவாத்’ களை உருவாக்கிக் கொண்டால் அது ஸலவாத் ஆக முடியாது. மாறாக ‘பித்அத்’ஆக அவை கருதப்படும். இதற்கு உதாரணமாக ‘இப்னு அபீ ஜைது’ என்ற அறிஞர் ‘வர்ஹம் முஹம்மதன் வஆல முஹம்மத்’ என்று ஒரு புதிய ஸலவாத்தை அவராக தயாரித்தபோது அன்றைய அறிஞர் உலகம் அவரை வன்மையாகக் கண்டித்து ‘அவர் மார்க்கத்தை அறியாதவர்’ என்றும் முடிவு கட்டியது.
நபி அவர்கள் ஸலவாத் எப்படிக் கூறுவது என்று நமக்கு தெளிவாக கூறியிருக்கும் போது ‘புதிதாக ஒரு ஸலவாத்தை உருவாக்குவது பித்அத் ஆகும்’ என்றும் அன்றைய அறிஞர் பெருமக்கள் அவரைக் கண்டித்துள்ளனர். ‘திர்மிதி’ என்ற ஹதீஸ் நூலுக்கு விரிவுரை எழுதிய இமாம் அபூபக்ரு இப்னுல் அரபி(ரஹ்) அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்கள். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்ட பின் ‘ஸலவாத்துன்னாரிய்யா’ என்று நம்மவரிடையே பிரபல்யம் அடைந்துள்ள ஸலவாத்தை அலசுவோம்.
இந்த ‘ஸலவாத்துன்னாரியா’ என்ற ஸலவாத்தை நபி அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. அருமை ஸஹாபாக்கள் இதை ஓதியதுமில்லை. நாற்பெரும் இமாம்களின் காலத்திலும் இந்த ஸலவாத் இருந்ததில்லை.
மிகமிகப் பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்த ஸலவாத்தைத் தயார் செய்தனர். நபி அவர்கள் கற்றுத்தந்துள்ள எண்ணற்ற ஸலவாத்துக்கள் இருக்க, இப்படிப் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்ட ‘ஸலவாத்துன்னாரியா’ மக்களிடம் நன்கு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இதைச் சொல்வதால் ஸலவாத்தின் நன்மை நிச்சயம் கிடைக்காது. இதன் பின்னனியில் ஏராளமான பித்அத்கள் வேறு நடந்து கொண்டுள்ளன. இதை 4444 தடவை ஓத வேண்டுமாம். இந்த எண்ணிக்கை நிர்ணயம் செய்தவர் யார்? அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் அவர்களுக்கும் தவிர இப்படி எண்ணிக்கைணை நிர்ணயிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.
இந்த ‘ஸலவாத்’ ஓதுவதால் செல்வம் பெருகும் நோய் நீங்கும் என்ற குருட்டு நம்பிக்கை வேறு! இந்த ‘தீனை’ வைத்து சம்பாதிப்பவர்கள் தான் திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்பதை சிந்தனை உள்ள எவரும் உணரலாம். 4444 என்று பெரும் எண்ணிக்கைணைச் சொன்னால் மக்கள் தானாக அவ்வளவு பெரும் எண்ணிக்கையை ஓத இயலாது. அதற்கென்று ஓதத் தெரிந்தவர்கள் அழைப்பார்கள் அதற்கு சில்லரைகள் கிடைக்கும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் எதுவும் இருக்க முடியாது.
இத்தகைய பித்அத்தான சொற்றொடர்களைச் சொல்வதால் நன்மை கிடைப்பதற்கு பதிலாக தீமைதான் ஏற்படும். ஏனெனில் நபி அவர்கள் எல்லா பித்அத்களும் வழிகேடு என்று சொல்லி இருக்கின்றார்கள். (புகாரி)
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஸலவாத்துன்னாரிய்யா’ வின் பொருளும் குர்ஆன், ஹதீதுகளின் வழிகாட்டுதலுக்கு முரண்படுகின்றது.
‘கிறித்தவர்கள் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். (நூல்கள்: புகாரி, தாரமி, அஹ்மத், ஷமாயிலெ திர்மிதீ) என்ற நபி அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாகவே இதன் பொருள் அமைந்துள்ளது.
இனி ஸலவாத்துன்னாரியாவின் பொருளை பார்ப்போம்
‘யா அல்லாஹ்! எவர் மூலம் சிக்கல்கள் அவிழ்ந்து விடுமோ; எவர் மூலம் கஷ்டங்கள் அகன்று விடுமோ; எவர் மூலம் தேவைகள் நிறைவு செய்யப்படுமோ; எவர் மூலம் ஆசைகள் பூர்த்தி செய்யப் படுமோ; எவருடைய திருமுகத்தின் மூலம் மேகத்திலிருந்து மழை பெறப்படுமோ அந்த எங்கள் தலைவர் மீது முழுமையாக நீ அருள் புரிவாயாக!’ இது தான் ஸலவாத்துன்னாரிய்யாவின் பொருள்.அல்குர்ஆனையும் நபி மொழிகளையும் ஓரளவு அறிந்தவர்கள் கூட இந்தப் பொருளை ஏற்க மாட்டார்கள்! இதில் சொல்லப்படுகின்ற தன்மைகள் யாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறிடுவார்கள்.
‘நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்கள் மூலம் கஷ்டங்கள் அகன்று விடும்’ என்று அல்லாஹ்வோ, அவன் திருத் தூதரோ நமக்குச் சொல்லித் தரவில்லை. ‘அல்லாஹ்வின் மூலமாகவே கஷ்டங்கள் விலக முடியும்’ என்று தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போதனை செய்தார்கள்.
‘அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே நான் நன்மை செய்து கொள்ளவோ தீங்கிழைத்துக் கொள்ளவோ சக்தி பெற்றிருக்கவில்லை’ என்று சொல்வீராக! (அல்குர்ஆன் 10 :49)
அல்லாஹ் இப்படித்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கூறச் சொல்கிறான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அவ்வாறே கூறினார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் 23 ஆண்டு கால பிரச்சசார வாழ்க்கையில் அவர்கள் பட்ட கஷ்டங்களே இதற்குச் சரியான சான்றுகளாகும். எத்தனை முறை அடிக்கப்பட்டிருக்கிறார்கள்? பைத்தியம் என்று எள்ளி நகையாடப் பட்டிருக்கிறார்கள்! ‘தாயிப்’ நகரில் இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் அடிக்கப்பட்டார்கள்! சொந்த ஊரிலேயே இருக்க முடியாத நிலமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்! உஹதுப் போர்க் களத்தில் ‘பல்’ உடைக்கப்பட்டது! இது போன்ற இன்னும் பல கஷ்டங்களுக்கு அவர்களே ஆளானார்கள்.
அவர்களின் அன்புத் தோழர்களில் பலர் இரண்டாகக் கிழிக்கப்பட்டார்கள்! சுடு மணலில் கிடத்தப்பட்டார்கள்! மர்ம ஸ்தானத்தில் அம்பு எய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்! தூக்கு மேடையிலும் ஏற்றப்பட்டார்கள்! பல போர்க்களங்களில் ஷஹீதாக்கப்பட்டார்கள்! நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்களின் காலத்திலேயே இவ்வளவு கொடுமைகளும் தொடர்ந்தன. இது போன்ற சந்தர்ப்பங்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இ ‘தன் மூலமாகக் கஷ்டங்கள் விலகும்’ என்று கூறிடவில்லை.
‘தனது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும்’ என்ற ஆசை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. ஆனால் கடைசி வரை அந்த ஆசை பூர்த்தி செய்யப்படவில்லை ஏன் அபூஜஹல் உட்பட எல்லாக் காபிர்களும் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்ற பேராசையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. அதை அல்லாஹ்வே சொல்லிக் காட்டுகிறான். ‘அவர்கள் இந்த (வேத) அறிவிப்பில் ஈமான் கொள்ளவில்லை என்பதற்காக கை சேதப்பட்டு உன்னையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்’ (அல்குர்ஆன் 18:6) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டும் அளவுக்கு காபிர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தார்கள். அந்த ஆசையை அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை.
அவர்களின் 23 ஆண்டுகால வாழ்க்கையில் துன்பங்கள் தான் இன்பங்களை விடவும் அதிகமாக இருந்தன. தாங்களே கஷ்டத்திற்கு ஆளாகி நின்ற போது ‘அல்லாஹ்தான் நீக்கக் கூடியவன்’ என்றே போதித்தார்கள். திருக்குர்ஆனும் பல இடங்களில் இதை மிகத் தெளிவாகவே கூறுகின்றன.
(2:272) (3:128) (6:17) (6:50) (6:66) (7:188) (10:106,107) (11:63) (28:56) (42:52) (49:9) (72:21,22)
ஆகிய வசனங்களை ஒருவர் சிந்தித்தால் இந்த ஸலவாத்துன்னாரிய்யாவின் கருத்தை தவறு என்று புரிந்து கொள்வார். கருத்தின் அடிப்படையிலும் இந்த ஸலவாத்துன்னானரிய்யா தவறாக உள்ளது என்பதால் இதை ஓதுவது கூடாது என்று உணரலாம்.
ஆகிய வசனங்களை ஒருவர் சிந்தித்தால் இந்த ஸலவாத்துன்னாரிய்யாவின் கருத்தை தவறு என்று புரிந்து கொள்வார். கருத்தின் அடிப்படையிலும் இந்த ஸலவாத்துன்னானரிய்யா தவறாக உள்ளது என்பதால் இதை ஓதுவது கூடாது என்று உணரலாம்.
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதை ஸலவாத் என்று சொல்லித் தந்தார்களோ அதை ஓதி நன்மை அடைவோமாக! பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட உலா வருகின்ற பித்அத்தான ஸலவாத்களை விட்டொழிப்போமாக!
முகம்மது அலி, M.A
Source: readislam.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment