"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, March 1, 2012
நரகம் சென்றவர் சொர்க்கத்துக்கு மாற்றப்படுவாரா?
நரகம் சென்றவர் சொர்க்கத்துக்கு மாற்றப்படுவாரா?
ஒரு முஸ்லிம் செய்த பாவத்தை அல்லாஹ் நாடினால் மறுமையில் மன்னிக்கலாம். அவருடைய தண்டனையைத் தள்ளுபடி செய்து நேரடியாகவே அவர் சொர்க்கம் செல்லலாம். இதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.
உபாதா பின் ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்; திருடமாட்டோம் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?'' என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டு விட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும்.
மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும்தெரியாமல்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகின்றார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 4894)
அல்லாஹ் நாடினால் அதற்காக அவரை தண்டிக்கவும் செய்யலாம். அவர் பாவத்துக்குரிய தண்டனையை பெற்றுவிட்டு பிறகு அவர் இஸ்லாமிய கொள்கையை ஏற்றதற்காக சொர்க்கம் செல்வார்.
இதற்கும் நபி மொழிகளில் ஆதாரம் உள்ளது.
அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:
(மறுமையில் விசாரணைகள் முடிந்தபின்)
சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள்.
பிறகு "உள்ளத்தில் கடுகளவேனும் இறைநம்பிக்கை (ஈமான்) இருந்தோரை (நரகத்திலிலிருந்து) வெறியேற்றி விடுங்கள்'' என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள்(கருகிக்) கறுத்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பின்னர் "மழைநதி''யில் (நஹ்ருல் ஹயா) அல்லது "ஜீவநதி''யில் (நஹ்ருல் ஹயாத்) அவர்கள் இடப்படுவார்கள்.
(அவ்வாறு அவர்கள் அந்த நதியில் போடப்பட்டதும்) ஓடைக்கரையில் விதைப் பயிர் முளைப்பது போல (நிறம்) மாறிவிடுவார்கள். அவை வளைந்து நெளிந்து மஞ்சள் நிறத்தில் (பொலிலிவுடன்) இருப்பதை நீர் கண்டதில்லையா? (இதை அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 22)
அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் "லாயிலாஹஇல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.
எவர் தமது இதயத்தில் ஒருமணிக் கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் "லாயிலாஹ இல்லல்லாஹ்'' சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.
எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் "லாயிலாஹ இல்லல்லாஹ்'' சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். இதை அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 44)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment