widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, March 20, 2012

இறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா?


Post image for இறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா? 
இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது, அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது … போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகின்றான்.
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். (17:23)
அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. (98:5)
அல்லாஹ்வின் தூதர்களையோ, (அவ்லியாக்கள்) இறைநேசர்களையோ சிபாரிசுக்காக அழைப்பதும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற அவர்களிடம் பிரார்த்திப்பதும் “ஷிர்க்” ஆகும்.
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். (27:62)
பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது. (39:44)
சிலர் உட்காரும்போதும், எழும்போதும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து முறையிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக: யா முஹம்மது, யாமுஹ்யித்தீன் என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பது “ஷிர்க் ஆகும். இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்.
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7:194)
 உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள். (13:14)
அடக்கத்தலத்தை(கப்ரை) வணங்கும் சிலர் அதைச் சுற்றி வலம் வருகிறார்கள். அங்குள்ள தூண்களையும், சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள்; முத்தமிடுகிறார்கள்; அதன் மண்ணை எடுத்துப் பூசிக் கொள்கிறார்கள்; ஸஜ்தா செய்கிறார்கள், அங்குப் பயத்துடனும் பணிவுடனும் நிற்கிறார்கள். தங்கள் தேவையை முறையிட்டு, அதை நிறைவேற்றும்படிக் கோருகிறார்கள்.
சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பாக்கியத்தையும் கோருகிறார்கள். சிலர் ”யாஸய்யிதீ! தொலைவான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி விடாதீர்கள்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் கூறுகிறான். கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. (46:5)
 சிலர் கப்ருகளுக்குச் சென்று அங்கு அடங்கி இருப்போருக்காக மொட்டை அடிப்பது. சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்க்காக்களுக்குப் பயணிக்கிறார்கள்.
சிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு கொள்வதாகவும், அவர்களால் நன்மை, தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள். இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான்  அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (10:107)
Source:Labbai Karaikal

0 comments:

Post a Comment