widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, December 27, 2011

எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை! எதுவும் தெரியாதவர் யாரும் இல்லை!


 எம். முஹம்மது சித்தீக், மலேசியா 
[ எல்லாம் தெரிந்தவர் என்று இவ்வுலகில் எவரும் இல்லை. எதுவும் தெரியாதவர் என்றும் யாரும் இல்லை. அறிவாளிகளுக்கு தெரியாத சில அறிவிலிகளுக்கு தெரிந்திருக்கும்.
அறிவிலும் கல்வியிலும் ஒருவரை காட்டிலும் ஒருவர் மேம்பட்டவராக இருக்கின்றனர் என்கிறது இறைமறை அல்குர்ஆன்.
எந்த அறிவு எல்லாம் அறிந்ததாக தன்னை எண்ணூகிறதோ, எண்ண வைக்கிறதோ அது அறிவல்ல, அது அறியாமை.]
தன்னை விட சிறந்த அறிவாளி இந்த உலகத்தில் யாரும் இல்லை என எண்ணுபவன் முட்டாள் மட்டும் அல்லன், மிக மிக ஆபத்தானவனும் கூட. பெருவாரியான பணம், பதவி, திறமை, புகழ் மட்டும் அல்லாமல் அறிவும் மனிதனுள் செருக்கை ஊட்டும் என்பது பறுக்க முடியாத உண்மையாகும். அடக்கமில்லாத அறிவுச்செருக்கின் ஆட்டமும் ஆர்ப்பரிப்பும் அநாகரீகமாகவே இருக்கும்.
அறிவு அழகானது, மதிக்கத்தக்கது, போற்றுதலுக்குறியது ஆனால் அதில் அகந்தை கலக்கும்போது அது நிந்திக்கத்தக்கதாகி விடுகிறது. ஆனால் பண்பட்ட அறிவு பெருமை பேசித்திரியாது. தான்தான் பெரியவன், தானே எல்லாம் தெரிந்தவன் என இறுமாப்புடன் அலையாது. அறிவுடையார் எல்லாம் உடையார் என்றார் வள்ளுவர்.
பணச்செல்வம், பொருட்செல்வம் எதுவும் அவரிடத்தில் இல்லாமல் போயினும் பண்புடன் கூடியதான அறிவுச்செல்வம் இருப்பின் அவர் எல்லாச் செல்வமும் உடையவரே என்பதுதான் குறளின் கருத்து. இவ்வாறாக அனைத்துச் செல்வத்தையும் உள்ளடக்கிய அறிவு அடக்கம் எனும் செறிவூட்டப்பட்ட நிறைகுடமாய் மிளிர வேண்டும்.
அகந்தை அறிவின் பகையாகும். அறிவை ஒழிக்கச்செய்வதில் அது முதன் நிலையில் இருக்கிறது. அகந்தையினால் எத்தனையோ அறிவாளிகள் காணாமல் போயினர். அவர்களது அறிவு அவர்களுக்கும் பிறருக்கும் எவ்வித பயனும் தராமல் முடங்கிப்போன வரலாறுகளும் உண்டு. இறையருளுக்கு உறிய அறிவு அடக்கமாக இருக்கும். அந்த அறிவே நிறை பயன் தரும்.
எழுத்தும் கருத்தும் விதைகளே! விதைக்கப்படும் விதைகளெல்லாம் முளைக்கும் என எதிர்பார்கக்கூடாது. எழுத்தும் கருத்தும் இப்படித்தான் தாராளமாக எழுதப்படுகின்றன. தாராளமாக கருத்துக்கள் உறைக்கப்படுகின்றன. நிறை பயன் விளைதல் மிகக்குறைவாகவே இருக்கிறது. அமோக விளைச்சல் என்றில்லாவிடினும் ஏதோ ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்றிருந்தாலும் பரவாயில்லை. அப்படியும் சில மண் வயல்கள் விளைச்சல் தராமலிருக்கின்றன. விதையின் வீரியம் - நில வளமே விளைச்சளை வெளிப்படுத்தும்.
கல்வியை கற்றதற்காக , அறிவை பெற்றதற்காக அறிவாளிகள் இறைவனுக்கு நன்றி கூறகடமை பட்டிருக்கின்றனர். அறியாமை இருளை அகற்றும் அறிவொளியை ஆண்டவன் தந்துள்ளானே எனப் பெருமிதத்துடன் இறைவனை போற்றி புகழ வேண்டும்.
எல்லாம் தெரிந்தவர் என்று இவ்வுலகில் எவரும் இல்லை. எதுவும் தெரியாதவர் என்றும் யாரும் இல்லை. அறிவாளிகளுக்கு தெரியாத சில அறிவிலிகளுக்கு தெரிந்திருக்கும். அறிவிலும் கல்வியிலும் ஒருவரை காட்டிலும் ஒருவர் மேம்பட்டவராக இருக்கின்றனர் என்கிறது இறைமறை அல்குர்ஆன்.
அற்பமான - பயனற்ற விஷயங்களில் அவற்றிற்கு உரிய நேரத்தைவிட கூடுதலாக செலவழிப்பதை விட ஓர் அறிவாளிக்கு வருந்தத்தக்கது வேறு இல்லை என்கிறார் பிளெட்டோ என்ற அறிஞர். பெருமை, அகந்தை, ஆணவம் போன்றவை அறிவாளிக்கு அனாவசியமாகும். பண்பட்ட அறிவாளி இவற்றில் கவனத்தை செலுத்தி கால நேரத்தை வீணாக்க மாட்டார்.
மனிதர்களெல்லாம் கருத்துக்களை வெளியிடுபவர்களாக இல்லை. எத்தனையோ அறிவாளிகள் சிந்தனையாளர்கள் தாம் கண்ட கருத்தை , சத்திய உண்மைகளை அஞ்சாது துணிவுடன் எடுத்துரைப்பவராகவும் இல்லை.
கசப்பான உண்மைகளை அஞ்சாது துணிவுடன் எடுத்துரைப்போரே தெளிந்த அறிவுடையோராவர். தன்மானம், சுயமரியாதை பிறர் பொருள் நாடாமை உள்ளோர் ஒரு போதும் அகந்தைகாரராக மாட்டார். அறிவுடையோர் கல்விமான்களுக்கு தன்மானமும் சுயமரியாதையும் அவசியம் இருத்தல் வேண்டும். இவை அறிவின் அணிகலன், கல்வியின் கண்ணியம்.
எந்த அறிவு எல்லாம் அறிந்ததாக தன்னை எண்ணூகிறதோ, எண்ண வைக்கிறதோ அது அறிவல்ல, அது அறியாமை.

0 comments:

Post a Comment