"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, December 23, 2011
தவ்ஹீத் வாதிகளும், அலவி மௌலானாவும் ( யாழ் முஸ்லிம் விளக்கம்)
தவ்ஹீத் வாதிகளும், அலவி மௌலானாவும் ( யாழ் முஸ்லிம் விளக்கம்)
யாழ் முஸ்லிம் வலைத்தளமானது கடந்த புதன்கிழமை 21 ஆம் திகதி, அதாவது நேற்று முன்தினம், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா வஹாபி அல்லது தவ்ஹீத் வாதிகள் பற்றி குறிப்பிட்ட தகவல்களை பதிவிட்டிருந்தது.
இச்செய்தியை நாம் பதிவிட்டதும் தவ்ஹீத் வாதிகள் சிலரிடமிருந்து எமக்கு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிலர் பண்பான முறையிலும் எமக்கு இதுபற்றிய விளக்கங்களை அனுப்பியிருந்தனர். மற்றும் சிலர் அந்தச் செய்தியை பழைய கஞ்சி எனவும் வர்ணித்திருந்தனர். இதனால் நாம் அந்தச் செய்தியை பின்னர் நீக்கிவிட்டோம். இருந்தபோதும் குறித்த செய்தியின் பாரதூர தன்மையை தற்போது உணருகின்றமையால் அதனை இங்கு மீண்டும் பதிவிடுகிறோம்
ஆம், அலவி மௌலானா Ceylon Today நாளிதழில் கிழக்கு மாகாணத்தில் செயற்படும் தவ்ஹீத் வாதிகள் பற்றி கடும் விமர்சனங்களை அதில் குறிப்பிட்டுள்ளமை தெளிவாகிறது. யாழ் முஸ்லிம் வலைத்தளமானது எந்தவொரு இயக்க பக்கச்சார்புமின்றி செயற்படுவதை சகலரும் அறிந்துவைத்துள்ளனர்.
இருந்தபோதும் அரசியல் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கும் இதுபோன்ற கருத்துக்கள் பல்லின மக்கள் வாழும் இலங்கையில் அனாவசிய குழப்பங்களை உண்டாக்கிவிடக்கூடாதென்பதற்காகவும், அலவி மௌலானா போன்றவர்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென்பதற்காகவுமே இந்தச் செய்தியை இங்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து பதிவிடுகிறோம்.
எமது முன்னைய செய்தி
கிழக்கில் முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைள் அதிகரித்துள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகளும், அனைத்துலக தீவிரவாத அமைப்புகளும் இதற்கு உதவி வருவதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானாவை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஜிகாத் அமைப்பின் நிதியுதவியுடன் செயற்படும் ஆயுதக்குழுக்களால் கிழக்கிலுள்ள சுபி முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து முறையிடப் போவதாகவும் அலவி மௌலானா கூறியுள்ளார்.
கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் சுபி முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இந்த ஆயுதக்குழுக்கள் முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வகாபி இஸ்லாமிய பாடசாலையை பின்பற்றும் இந்த ஆயுதக்குழுக்கள், சுபி முஸ்லிம்களின் மசூதிகளையும், வழிபாட்டு இடங்களையும் தாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ இந்தக் குழுக்களுக்கு பல மத்திய கிழக்கு நாடுகள் நிதியுதவி செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வறுமையில் உள்ள சில முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஆயுதக்குழுக்களில் இணைகிறார்கள். இவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து போரிடுவதற்குக் கூட அனுப்ப்ப்பட்டுள்ளனர்.
முன்னதாக காவல்துறை இதுபற்றி விசாரணை நடத்தி பலரைக் கைது செய்ததுடன் ஆயுதங்களும் மீட்கப்பட்டன. ஆனால் இப்போதும் இவர்கள் கிழக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் குழுக்களின் அச்சுறுத்தல்களால் காத்தான்குடியில் உள்ள சுபி முஸ்லிம்களால் தமது மார்க்கத்தைக் கடைப்பிடிக்க முடியவில்லை.“ என்றும் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கிழக்கில் செயற்படும் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் தொடர்பாக அரச புலனாய்வுச் சேவை விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த விசாரணைகளின் போது, கிழக்கிலுள்ள ஆயுதக் குழுக்களுக்கு முக்கியமான அனைத்துலக தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து நிதிஉதவி கிடைத்து வருவது தெரியவந்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆங்கில செய்தி
2 கருத்துரைகள்:
Rajai Net Cafe says:
23 December 2011 15:25
Reply
இலங்கையில் வஹாபி ஆயுதக் குழுக்கள்(?) நிரூபிப்பாரா அலவி மவ்லானா?
அலவியின் கருத்து உண்மையானதா?
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் இருந்த ஆயுதக் கலாசாரத்தை இல்லாமலாக்கி சுதந்திரமான இலங்கையை தற்போதைய அரசு கட்டியெழுப்பியிருக்கும் இவ்வேலையில் அலவி போன்றவர்கள் தெரிவிக்கும் இது போன்ற பொய்யான குற்றச் சாட்டுக்களுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை.
இதற்கு அலவியே சாட்சியாக இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் லக்பிம நி்வ்ஸ் என்ற ஆங்கில நாளிதழில் ரியாஸ் ஸாலி என்ற ஒரு சூபியினால் வஹ்ஹாபிய தீவிரவாதம் என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையின் அபத்தம் தொடர்பாக அப்போதே அரசாங்கம் கருத்து வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து கொழும்பில் உலமாக்களுடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்த அலவி இந்தத் தகவல் தவறானது என்பதை அந்த இடத்தில தெரிவித்ததை நவமணி போன்ற பத்திரிக்கைகள் அப்போதே பிரசுரித்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
அது மட்டுமன்றி இலங்கையில் எந்த இடத்திலும் எவ்வித ஆயுதக் குழுக்களும் இயங்கவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபே ராஜபக்ஷ அவர்கள் அப்போதே இதனை மறுத்ததும் இங்கு கவணிக்கத் தக்கது.
Rajai Net Cafe says:
23 December 2011 15:25
Reply
பாதுகாப்புச் செயலாளருக்குத் தெரியாதது அலவிக்கு தெரிகிறதா?
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபே ராஜபக்ஷ அவர்கள் எந்த ஆயுதக் குழுக்களும் இலங்கையில் இல்லை என்று மறுத்திருந்தும் அலவி மவ்லானா இப்படியான கருத்தை வெளியிடுகிறார் என்றால் பாதுகாப்பு செயலாளருக்குத் தெரியாத ஆயுதக் குழுக்கள் பற்றிய ரகசியம் எப்படி அலவிக்கு தெரிய வந்தது?
அது மட்டுமன்றி இலங்கையில் இயங்கும் ஜிஹாத் அமைப்புகளுக்கு மத்திய கிழக்கு நாடுகளும் தீவிரவாத இயக்கங்களும் நிதி மற்றும் ஆயுத உதவி செய்வதாக அலவி குறிப்பிட்டுள்ளார்.
அப்படி எந்த ஜிஹாத் அமைப்பு இங்கு இயங்குகின்றது என்பதை அலவி பகிரங்கப்படுத்தத் தயாரா?
இலங்கை முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உதவிகளுக்காக அரபு நாடுகள் உதவி வருவது ஒன்றும் ரகசியமான விஷயமில்லை. யுத்தம் நீங்கியதன் பின்னர் இலங்கையின் பல வளர்ச்சித் திட்டங்களுக்கும் அரபு நாடுகள் பலவும் பல விதங்களிலும் உதவி வருகிறது.
கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாகக் கூட கத்தார் நாட்டுடன் இலங்கை அரசு ஒப்பந்தங்கள் செய்து கொண்டதையும், புத்தளம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பை கத்தார் நாட்டுக்காக இலங்கை அரசு ஒதுக்கிக் கொடுத்ததையும் முழு நாடும் அறியும்.
மத்திய கிழக்கு நாடுகள் தீவிரவாதத்திற்கு துணை போகிறது என்றால் அப்படிப்பட்ட நாடுகளுடன் தான் இலங்கை அரசு கை கோர்க்கிறது என்று சொல்ல வருகிறாராரா அலவி?
தீவிரவாத செயலில் ஈடுபடும் வஹாபிகளை காவல் துறை ஏற்கனவே கைது செய்ததாகவும் அலவி மேற்கண்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் இலங்கையில் செயல்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட ஒரு வஹாபியைக் கூட அலவியினால் காட்ட முடியாது என்பதே நிதர்சனமாகும்.
அலவியிடம் ஒரு கேள்வி.
உண்மையில் இலங்யைில் எந்த ஒரு ஆயுதக் குழுக்களும் இயங்கவில்லை. ஆனால் வஹாபிய ஆயுதக் குழுக்கள் இயங்குவதாகவும் அதற்கு மத்திய கிழக்கு நாடுகள் உதவுவதாகவும் கூறும் அலவி அந்தப் பட்டியலில் ஈரானையும் சேர்த்துக் கொள்ளத் தயாரா?
ஈரானின் உதவியுடன் காத்தான்குடி உள்ளிட்ட கிழக்கின் பல பகுதிகளிலும் புனரமைப்பு வேலைகள் நடை பெருகின்றது. யாழ்பாணம் வரை ஈரானின் நிதியுதவி கிடைக்கிறது. உங்கள் வாதப்படி ஈரானும் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றது என்று சொல்வீர்களா?
சொல்ல மாட்டீர்கள் ஏன் என்றால் ஈரான் தான் உங்களுக்கு ரோல் மாடல்.
கடந்த வெள்ளிக் கிழமை வெளியான தினகரனன் பத்திரிக்கையில் கூட கொழும்பு தெவடகஹ தர்காவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய ஆக்கத்தில் ஈரான் நாட்டின் “அல் ஜாமிஅத்துல் முஸ்தபா அல் ஆலமிய்யா” என்ற பல்கலைக் கழகத்தின் சிறப்புகளை(?) எடுத்தெழுதிய அந்த ஆக்கத்தில் இலங்கை சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்றதையும், அங்குள்ளவர்கள் இவர்களுக்கு கவுரவம் கொடுத்ததையும் குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் பார்வையில் இவைகள் என்ன சமாதான உடன்படிக்கைகளா? மத்திய கிழக்கு நாடுகள் தீவிரவாதத்திற்கு உதவி புரிவதாக கூறும் நீங்கள் ஏன் மத்திய கிழக்கின் முக்கிய ஷியா நாடான ஈரானுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருக்கிறீர்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஈராம் மாத்திரம் தான் உங்கள் பார்வையில் தூய்மையான நாடா? அல்லது சூபிகளின் வளர்சிச்கு ஈரான் தான் துணை போகிறது என்பதினால் இந்த இரட்டை வேடமா?
அரசிடம் ஓர் வேண்டுகோள்.
தீவிர வாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு சுதந்திரமான முறையில் வாழும் இலங்கை மக்களுக்கு மத்தியில் இனவாதத்தைத் தூண்டும் விதமாக செயல்படும் யாராக இருந்தாலும் அவர்களை அரசு இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அலவி போன்றவர்கள் தெரிவிக்கும் இது போன்ற பொய்யான குற்றச் சாட்டுக்களுக்கும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.
Source: http://yarlmuslim.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)