"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Tuesday, January 31, 2012
வட்டி சம்பந்தமாக புஹாரி ஹதீது கிதாபில் இடம்பெற்ற ஆதாரபூர்வமான ஹதீத்கள்
வட்டி சம்பந்தமாக புஹாரி ஹதீது கிதாபில் இடம்பெற்ற ஆதாரபூர்வமான ஹதீத்கள்
459. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'பகரா' அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள்.
Volume :1 Book :8
1386. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள். ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் இது என்ன?என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர். அப்படியே நடந்தபோது அங்கு ஒருவர் மல்லாந்து படுத்திருந்தார். அவரின் தலை மாட்டிலே பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரின் தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே 'இவர் யார்?' என கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்" என்றனர். எனவே நடந்தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தன. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பின் உஷ்ணம் அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியிலுள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும், பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் 'இவர்கள் யார்?' எனக் கேட்டேன் அதற்கும் அவர்கள் 'நடங்கள்' எனக் கூறி விடவே மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றிருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்றிருந்தார். அந்த மனிதர் ஆற்றைவிட்டு வெளியேற முயலும்போது இவர் அவரின் வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப்பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றார். அப்போது நான் 'என்ன இது?' எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' எனக் கூறிவிடவே நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். அதில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு வயோதிகரும் சில சிறுவர்களும் இருந்தனர். அந்த மரத்திற்கு அருகீல் ஒருவர் இருந்தார். அவருக்கு முன்னால் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதை அவர் மூட்டிக் கொண்டிருந்தார். பிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள். நான் இதுவரை அப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததேயில்லை. அதில் சில ஆண்களும் வயோதிகர்களும் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதும் சிறப்பானதுமாக இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் இருவரிடமும் 'இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றி விவரங்களைச் சொல்லுங்கள்!' எனக் கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்ட வரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார். பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள். மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த பெரியவர் இப்ராஹீம்(அலை) அவர்கள் அவரைச் சுற்றியிருந்த சிறுவர்கள் (முஸ்லிம்) மக்களின் குழந்தைகள். நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவர் நரகக் காவலாளியான மாலிக்(அலை). நீர் நுழைந்த முதல் மாளிகை சராசரி இறைநம்பிக்கையாளர்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்த்தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயில்" என்று கூறிவிட்டு. 'இப்போது உம்முடைய தலையை உயர்த்தும்" என்றனர். நான் என்னுடைய தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் 'இதுவே (மறுமையில்) உம்முடைய இருப்பிடம்" என்றதும் நான் 'என்னுடைய இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்" என்றேன். அதற்கு இருவரும் 'உம்முடைய வாழ்நாள் இன்னம் மிச்சமிருக்கிறது; அதை நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உம்முடைய இருப்பிடம் வருவீர்" என்றனர்" என்று கூறினார்கள்.
Volume :2 Book :23
2085. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! "அவர் யார்?' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள்."
என ஸமுரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :34
2086. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் கூறினார்:
இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவரின் தொழில் கருவிகளை உடைத்துவிட்டார்கள்.) இது தொடர்பாக அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்குப் பெறுகிற கூலியை)யும் தடை செய்தார்கள்; பச்சை குத்துவதையும், பச்சை குத்திக் கொள்வதையும் தடை செய்தார்கள்; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!" என்று பதிலளித்தார்கள்.
Volume :2 Book :34
2134. ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்:
"யாரிடமாவது சில்லறை இருக்கிறதா?' என்று மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) கேட்டார்கள். அப்போது தல்ஹா(ரலி) 'என்னிடம் இருக்கிறது. என்றாலும் ஃகாபாவிலிருந்து கருவூலக் காப்பாளர் வரும்வரை தரமுடியாது!" என்றார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது, உடனுக்குடன் மாற்றினாலே தவிர, வட்டியாகும்! தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர!" என உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :34
2170. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடக் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர!" என உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :34
2174. மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.
நான் நூறு தீனார்களை (திர்ஹமாக) மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) என்னை அழைத்தார்கள். அவர்களிடம் வியாபாரம் பேசியதும் என்னிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டு கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு 'ஃகாபாவிலிருந்து நம்முடைய கருவூலக் காப்பாளர் வரும் வரை சில்லறை தர முடியாது!" என்றார்கள். இதை உமர்(ரலி) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவரிடமிருந்து சில்லறையைப் பெறாமல் நீர் பிரியக் கூடாது; ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் 'தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர!" என்று கூறினார்கள்!" என்று உமர்(ரலி) சொன்னார்கள்.
Volume :2 Book :34
2178. & 2179. அபூ ஸாலிஹ் அஸ் ஸய்யாத்(ரலி) அறிவித்தார்.
"தங்க நாணயத்திற்கு (தீனாருக்கு)த் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு (திர்ஹத்திற்கு) வெள்ளி நாணயத்தையும் விற்கலாம்!' என அபூ ஸயீத்(ரலி) கூறினார். அவரிடம் நான் இப்னு அப்பாஸ்(ரலி) இவ்வாறு கூறுவதில்லையே எனக் கேட்டேன். அதற்கு அபூ ஸயீத்(ரலி) 'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் இதை நபி(ஸல்) அவர்கள் வழியாகச் செவியுற்றீர்களா? அல்லது அல்லாஹ்வின் வேதத்தில் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவ்வாறு நான் கூறவில்லை. என்னைவிட நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி நன்கறிந்தவர் என்றாலும், கடனில் தவிர வட்டி ஏற்படாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸாமா எனக்கு கூறினார் என்று விடையளித்தார் எனப் பதிலளித்தார்.
Volume :2 Book :34
2226. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பகரா அத்தியாயத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து இறுதி வசனம் வரை இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, 'மதுபான வியாபாரம் ஹராமாக்கப்பட்டுவிட்டது!" என்றார்கள்.
Volume :2 Book :34
2238. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
"என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, அவரின் தொழிற் கருவிகளை உடைக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்கள் இரத்தத்தின் கிரயம் (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகிற கூலி), நாயின் கிரயம், அடிமைப் பெண்ணின் சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடுத்தார்கள். பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்தி விடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்!' என்று பதிலளித்தார்கள்!"
2312. அபூ ஸயீத் குல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) 'பர்னீ' எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் 'இது எங்கிருந்து கிடைத்தது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்! என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அடடா! இது வட்டியேதான்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக! என்றார்கள்.
Volume :2 Book :40
2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று (பதில்) கூறினார்கள்.
Volume :3 Book :55
3814. அபூ புர்தா ஆமிர்(ரஹ்) அறிவித்தார்.
நான் மதீனாவுக்கு வந்து அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் (என்னுடன்) வர மாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேழீச்சம் பழத்தையும் உண்ணத் தருவேன். நீங்கள் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்த என்) வீட்டிற்கு வந்ததாகவும் இருக்குமே" என்று கேட்டார்கள். பிறகு, 'நீங்கள் வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து. அவர் ஒரு வைக்கோல் போரையோ, வாற்கோதுமை மூட்டையையோ, கால்நடைத் தீவன மூட்டையையோ அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அதுவும் வட்டியாகும்" என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், '(என்) வீட்டிற்கு' என்னும் சொல் இடம் பெறவில்லை.
Volume :4 Book :63
4540. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அல்பகரா அத்தியாயத்தின் இறுதிவசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 - 281) வட்டி தொடர்பாக இறங்கியபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளி வாசலில் வைத்து) ஓதிக் காட்டினார்கள். பிறகு, மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.
Volume :5 Book :65
4544. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 02:281 வது) வசனம் ஆகும்.
Volume :5 Book :65
5347. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.103
5945. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அறிவித்தார்
என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி) குருதி உறிஞ்சி எடுக்கும் அடிமை ஒருவரை விலைக்கு வாங்கி, அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்தபோது) அவர்களை நான் கண்டடேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் இரத்தத்தின் விலையையும், நாய் விற்ற காசையும் (பெறக் கூடாதெனத்) தடை செய்தார்கள். மேலும், வட்டி உண்பவனையும் அதை உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் (சபித்தார்கள்.)130
Volume :6 Book :77
5962. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்
நான் குருதி உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கினேன். (அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்து விட்டேன். ஏனெனில்,) நபி(ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசையும் விபசாரியின் சம்பாத்தியத்தையும் (ஏற்கக் கூடாதென்று) தடை செய்தார்கள். மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் உருவப் படங்களை வரைகிறவனையும் சபித்தார்கள்.139
Volume :6 Book :77
6857. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.70
Volume :7 Book :86
7047. சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.
அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள்.
நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், 'இவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'செல்லுங்கள், செல்லுங்கள்' என்று என்னிடம் கூறினர்.
அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவந் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்துவைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், 'இவ்விருவரும் யார்?' என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' என்று கூறினார்கள்.
நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், 'இவர் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' என்று கூறினர்.
அப்படியே நடங்கள் அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், 'இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், 'அதில் ஏறுங்கள்' என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது. நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காணகிறவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகிறவற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு) பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள்' என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. எனவே, அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்துவிட்டு) தங்களிடமிருந்து அந்த அசூசை நீங்கி விட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பிவந்தனர்.
அவ்விருவரும் என்னிடம், 'இது (-இந்த நகரம்) தான் 'அத்ன்' எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விடமாகும்' என்றார். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், 'இது உங்கள் இருப்பிடம்' என்றனர். நான் அவர்களிடம், 'உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்து கொள்கிறேன்' என்றேன். அவ்விருவரும், 'இப்போது முடியாது நீங்கள் (மறுமையில்) அதில் நுழையத்தான் போகிறீர்கள்' என்றனர்.
நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.
கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக்கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார்.
அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர்.
இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், 'இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)' என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்' என்று பதிலளித்தார்கள்.66
(தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்,) ஒரு பாதி அழகாகவும் மறுபாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள், நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்துவிட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் (என்று கூறினர்).
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment