"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, November 15, 2012
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வும் வஃபாத்தும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வும் வஃபாத்தும்
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்க ஐந்து நாட்களுக்கு முன்னர்
o மரணிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர்
o மரணிப்பதற்கு மூன்று நாளைக்கு முன்னர்
o மரணிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னர்
o வஃபாத்தாகிய தினம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வும் வஃபாத்தும்
இப்னு மஸாஹிரா
நபியவர்களின் வபாத் எல்லோர் மனதையும் அதிரவைக்கும் ஒரு சம்பவமாகும். இதனைப்பற்றி பேசும் போதே எமது மனது அதிர்ச்சியில் ஆழ்கிறது.
தனது கணவனும் சகோதரனும் போராட்டத்தில் ஷஹீதாக்கப்பட்டு விட்டனர் என்று கூறியதையும் பொருட்படுத்தாது, றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறிருக்கிறார்கள், றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறிருக்கிறார்கள் என கூறிய ஸஹாபிய பெண்ணுக்கு அல்லாஹ் அருள்பாளிக்கட்டும். அந்தப் பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரடியாக கண்ட பின்னரே அமைதியடைந்தாள். அவள்: "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு முன்னால் எந்த சோதனையும் கால் தூசுக்கு சமன்" என்று கூறினாள். இவ்வாறே ஸஹாபாக்களின் உறவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இருந்தது.
ஏன் இப்படியான உறவு இருந்தது? என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸஹாபாக்கள் வைத்த அன்பாக இருக்கிறது. நபியவர்களின் பண்பாட்டால் கவரப்பட்ட பலர் இவ்வாறான உறவை வைத்திருந்ததை நாம் அறிவோம். ஆனால், எம்மில் சிலரிடம் நல்ல பண்புகள் அரிதாகிக்கொண்டே போகின்றன. ஒருமுறை ஒருவரிடம் குறிப்பிட்டதொரு பரீட்சை எழுதப்போகிறேன் எனக்கூறினேன். (இது பரீட்சை எழுதப்போகும் தினத்தில் நடைபெற்றது). அதற்கு அவர் "இந்த பரீட்சையையா எழுதப்போறீங்கசு என இழிவான தொனியில் குறிப்பிட்டார். ஆனால், நான் இதே விடயத்தை ஒரு சகோதர இனத்தவரிடம் குறிப்பிட்டபோது அவர் என்னைப் பாராட்டி, உட்சாக வார்த்தைகளைக் கூறி அனுப்பினார். நாம் எம்மை மாற்றாதவரை அல்லாஹ் மாற்றமாட்டான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் பாருங்கள்:
ஒருமுறை ஒரு காபிரான சிறுவன் முஸ்லிம்களின் முக்கியமான அம்சமாகிய தொழுகைக்கான அழைப்பை கேலி செய்து கொண்டு நின்றான். இவ்வேளையில் அவனுக்கு பின்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இது மதீனாவில் நடைபெற்ற சம்பவம். ஆட்சி முஸ்லிம்களின் கையில் இருந்தது. தனக்கு தண்டனைதான் கிடைக்கப் போகிறது என அச்சிறுவன் நினைத்தான். ஆனால், றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "சிறுவனே! உனது குரல் எவ்வளவு அழகாக இருக்கிறது" என அவனைப் பாராட்டினார்கள். அவனை ஆச்சரியம் ஆட்கொண்டது. உடனே கலிமாவை மொழிந்து, இஸ்லாத்தில் நுழைந்தான். இவ்வாறான பண்புகள் குடிகொண்டவராகவே நபிகளார் இருந்தார்கள். இதனாலேயே மக்கள் இந்த மார்க்கத்தை நோக்கி சாரிசாரியாக வந்தனர். ஆனால், மனிதனாய் பிறந்த அனைவரும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்.
"(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே" (55 : 26)
"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும். அன்றியும், இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே, எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்க (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை." (3 : 185)
இந்த மரணத்திற்கு முன்னால் யாரும் விதிவிலக்கு கிடையாது. அவர் அல்லாஹ்வின் படைப்பில் உயர்ந்த படைப்பாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாக இருந்தாலும் சரியே. எனவேதான் அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பார்த்து பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
"நிச்சயமாக நீரும் மரணிப்பீர், நிச்சயமாக அவர்களும் மரணிப்பார்கள்." (39 : 30)
என்னதான் ஆறுதல் கூறினாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணம் ஒரு பேரிடியாகவே இருந்தது. இஸ்லாமிய தஃவா பூரணமாகி, இஸ்லாம் அதிகாரம் பெற்றதாக மாறிய வேளையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரிவிடை கொடுக்கும் நாள் நெருங்கியது. இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் விளங்கியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் றமழானில் 20 நாட்கள் இஃதிகாப் இருப்பார்கள். அன்றைய வருடம் 10 நாட்களே இஃதிகாப் இருந்தார்கள். அந்த வருடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அல்குர்ஆனை இரண்டு முறை பூரணமாக ஓதிக்காண்பித்தார். இறுதி ஹஜ்ஜில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "அடுத்த வருடம் உங்களை நான் சந்திக்க முடியுமா என்பது எனக்குத் தெரியாது" எனக் கூறினார்கள்.
நபியவர்கள் ஜம்ரதுல் அகபாவில் வைத்து, "ஹஜ்ஜின் கிரியைகளை என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். சிலவேளை அடுத்த வருடம் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காமல் போகலாம்" எனக் கூறினார்கள். சூறதுந்நஸ்ர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிரியாவிடை கொடுப்பதுபோல காணப்பட்டது.
நபியவர்கள் ஹிஜ்ரி 11 ஆம் வருடம் ஸபர் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் உஹத் பகுதிக்கு சென்று, அங்கு ஷஹீதானவர்களுக்கான தொழுகையை நிறைவேற்றி விட்டு, "நான்தான் உங்களுக்காக சாட்சி பகர்பவான இருக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இப்போது எனது மண்ணறையைக் காண்கிறேன். எனக்கு உலக வளங்களின் திறவுகோல்களே வழங்கப்பட்டிருந்தன. நான் மரணித்ததன் பின்னர் நீங்கள் இணைவைத்து விடுவீர்களோ என்பதனையிட்டு நான் அஞ்சவில்லை. மாறாக, உலகத்திற்காக போட்டி போட்டுக் கொள்வீர்களோ என்பதனையிட்டே அஞ்சுகிறேன்" என உருக்கமான வார்த்தைகளை மொழிந்தார்கள்.
ஷுஹதாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள "பகீஃ" பகுதிக்கு நள்ளிரவில் சென்று, அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களுக்காக பாவமன்னிப்பு வேண்டினார்கள்.
ஒரு வியாழன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தலையை பிடித்துக்கொண்டு, எனது தலையே என சத்தமிட்டார்கள். மரண வலி அவரின் தலையை வந்தடைந்திருந்தது. அல்லாஹ்விடத்தில் மிக கண்ணியத்துக்குரிய படைப்பாகிய அல்லாஹ்வின் தூதருக்கே இந்த நிலையாயின், எமது நிலை எப்படியிருக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரண வேளை எமக்கு பின்வரும் போதனைகளைச் சொல்கின்றது:
01. உலகுக்காக போட்டி போட்டுக் கொள்ளக் கூடாது. ஏனெனில், அது தான் முன்னிருந்தவர்களை அழிவை நோக்கி அழைத்துச் சென்றது.
02. யார் அல்லாஹ்வை விரும்புகிறாரோ அவனை சந்திக்க வேண்டுமே என்ற ஆர்வத்தோடு தொடர்ந்திருப்பார்.
03. மரண வேதனையில் இருந்தாலும் கூட தஃவாவின் கவலையை சுமந்தவராகவே ஒரு முஃமின் இருக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்க ஐந்து நாட்களுக்கு முன்னர்:
நபியவர்களின் உடம்பின் சூடு அதிகரித்தது. மரண வலியும் கடுமையாகியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரண வலி தாங்க முடியாமல்: "என் மீது நீரை அள்ளிக் கொட்டுங்கள்" எனக்கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதும் என்று கூறும் வரைக்கும் அவருக்கு நீரை ஸஹாபாக்கள் கொட்டினார்கள். பின்னர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மின்பரில் ஏறி: "யூத நஸாராக்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில், அவர்கள் தமது நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டார்கள். நீங்கள் எனது கப்ரை வணங்கப்படும் சிலையாக ஆக்கிவிடாதீர்கள்" என உபதேசம் புரிந்தார்கள். இதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி அமர்வாக இருந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்தும் கூறுகையில்: "மனிதர்களே! நான் எனது இறைவனை சந்திக்கப்போகின்றேன். நீங்கள் எனது அழைப்புக்குப் பதிலளித்தது பற்றி அவனிடம் கூறுவேன். மனிதர்களே! உங்களில் எவருக்கும் நான் ஏசியிருந்தால் அல்லது எவரது செல்வத்திலிருந்தும் எடுத்திருந்தால், தீனாரோ திர்ஹமோ இல்லாத நாள் வரமுன்னர் அதற்காக பழிக்குப் பழிவாங்கிவிடுங்கள்." இதனைக் கேட்ட ஸஹாபாக்கள் மிகக்கடுமையாக அழுதார்கள்.
மரணிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரண வேதனை மிகக்கடுமையாக மாறியது. இன்றைய தினம் மஃரிப் தொழுகையை ஸஹாபாக்களுக்கு தொழுவித்து, அதில் ஸூறதுல் முர்ஸலாத்தை ஓதினார்கள். இஷாத் தொழுகையை தொழுவிக்க தயாரான போது நோய் மிகக்கடுமையானது. ஆயிஷா நாயகியிடம் "ஸஹாபாக்கள் தொழுவித்துக் கொள்வார்களா?" என வினவினார். அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா "இல்லை அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்" எனக் கூறினார். மரண வேதனை இருந்தும் நீரை கொண்டு வருமாறு கூறி, குளித்து விட்டு தொழுவிப்பதற்காக செல்ல முனைந்தபோது, மயங்கி விழுந்தார்கள். பின்னர், எழுந்து "ஸஹாபாக்கள் தொழுவித்துக்கொள்வார்களா?" என வினவிவிட்டு, மீண்டும் தொழுவிப்பதற்காக செல்ல முனைந்தபோது, மயங்கி விழுந்தார்கள். மூன்றாவது முறையும் அதே போன்றே மயங்கி விழுந்தார். எனவே, இஷாத் தொழுகையை அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை தொழுவிக்கு மாறு பணித்தார்கள்.
மரணிப்பதற்கு மூன்று நாளைக்கு முன்னர்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் அல்லாஹ்வைப்பற்றிய நல்லெண்ணத்துடனேயே மரணியுங்கள்."
மரணிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னர்:
இன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது அடிமைகளை விடுதலை செய்தார்கள். தன்னிடமிருந்த ஆறு அல்லது ஏழு தீனார் நாணயங்களை ஸதகா செய்தார்கள். தனது ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு நன்கொடையாக வழங்கினார்கள்.
வஃபாத்தாகிய தினம்:
முஸ்லிம்கள் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்னால் ஓரணியில் நிற்பதைக்கண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தோசப்பட்டார்கள். பின்னர், ளுஹா நேரத்தில் ஃபாதிமா நாயகியை அழைத்து தான் மரணிக்கப் போவதாகக் கூற, ஃபாதிமா ரளியல்லாஹு அன்ஹா அழுதுவிட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு அவரது குடும்பத்தில் முதலாவதாக மரணிப்பவர் ஃபாதிமா(ரளியல்லாஹு அன்ஹா)வே எனக்கூற அவர் சிரித்தார். ஃபாதிமா ரளியல்லாஹு அன்ஹா தான் உலகத்து பெண்களுக்கான தலைவி என சுபசோபனம் கூறினார்கள். ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு, ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு இருவரையும் அழைத்து, அவர்களிருவரையும் முத்தமிட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மனைவிமார்களை அழைத்து, அவர்களுக்கு உபதேசித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி வேளையில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் இருந்தார்கள். அவ்வேளையில் அப்துர் ரஹ்மான் இப்னு அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹு தனது கையில் பல்துலக்கும் குச்சியை வைத்துக் கொண்டு நின்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த குச்சியையே பார்த்துக்கொண்டிருப்பதை ஆயிஷா நாயகி அவதானித்து, அவருக்கு பல்துலக்க ஆசையாக உள்ளதை உணர்ந்து, பல்துலக்கி விட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்கு அருகிலிருந்த நீரால் தனது முகத்தை தடவி விட்டு"லா இலாஹ இல்லல்லாஹ் மரணத்துக்கு ஸகராத் வேதனையொன்று உள்ளது" எனக்கூறினார்கள். பல்துலக்கி முடிந்ததும், தனது கையை மேலே உயர்த்தினார்கள். அவரது பார்வை கூரையை பார்த்துக் கொண்டிருந்தது. அவரது உதடுகள் பின்வருமாறு உரைத்தன- "நீ அருள்பாளித்த நபிமார்கள், உண்மையாளர்கள், ஷுஹதாக்கள், நல்லடியார்களுடன் என்னை ஆக்கிவிடுயாக. யா அல்லாஹ்! எனது பாவங்களை மன்னிப்பாயாக. எனக்கு அருள் புரிவாயாக. உயர் நண்பனாகிய உன்னோடு சேர்த்து விடு."
இறுதியாக கூறிய "உயர் நண்பனாகிய உன்னோடு சேர்த்து விடு" என்பதனை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு, மரணத்தை தழுவினார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
நன்றி: மீள்பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment