"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Saturday, February 4, 2012
மீலாது விழா – கிறிஸ்மஸ் ஓர் ஒப்பீட்டாய்வு
மீலாது விழாவின் தோற்றம்
ஈடு இணையற்ற ஏக இறைவனின் இறுதிப்புரட்சியாம் உலகப்பொதுமறை திருக்குர்ஆன் யாரை பின்பற்றுமாறு கூறுகின்றதோ அந்த அழ்ழாஹ்வின் அருமைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், மூஸா (அலை), ஈஸா (அலை), இப்றாஹீம் (அலை) உள்ளிட்ட எந்தவொரு முந்தைய இறை தூதர்களுக்கும் மீலாத் விழா (பிறந்தநாள்) கொண்டாட்டம் கொண்டாடவில்லை.
ஏகத்துவ பிரச்சாரத்தின் போது சோதனைகள் மலைபோன்று குவிந்த போதெல்லாம் பக்கபலமாக நின்ற அருமைத் துணைவியார் அன்னை கதீஜா (ரழி) அவர்களுக்காகவும் பிறந்தநாள் கொண்டாடவில்லை.
தம்மோடு ஒன்றாய் வாழ்ந்து இன்ப, துன்பங்களில் பங்கெடுத்த ஆயிஷா (ரழி) உள்ளிட்ட தமது அருமைத் துணைவியர்களுக்காகவோ, பாசமிகு மகள் பாத்திமா (ரழி) அவர்களுக்காகவோ அல்லது ஆருயிர் பேரக் குழந்தைகள் ஹஸன், ஹுசைன் (ரழி) அவர்களுக்காகவோ தமது வாழ்நாளில் ஒருதடவை கூட அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிறந்தநாள் கொண்டாடியதாக ஒரு செய்தி கூட கிடையாது.
மாறாக, இதுபோன்ற அநாச்சரங்களை, புதுவழிகளை, யூத, கிறிஸ்த்தவ கலாசாரங்களை ஒரு முஸ்லிம் பின்பற்றுவதை அதிகமதிகம் மிக வன்மையாக கண்டித்துள்ளார்கள்.
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பாசறையில் வளர்ந்த, உண்மை முஸ்லிம்களான, சர்வ வல்லமை பொருந்திய அழ்ழாஹ்வே பொருந்திக் கொண்டதாக சிலாகித்துக் கூறுகின்ற நபித்தோழர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக பிறந்தநாள் கொண்டாடினார்களா? என்றால் இல்லவே, இல்லை.
சிறந்த தலைமுறையினர் என்று நபிகளார் (ஸல்) அவர்களால் சிலாகித்து கூறப்பட்ட நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினராவது நபிகளாருக்கு பிறந்த நாள் கொண்டாடினார்களா? என்றால், அவர்களும் பிறந்தநாள் கொண்டாடவேயில்லை.
அப்படியானால், முஸ்லிம்களிடம் எவ்வாறு மீலாது கொண்டாட்டம் இடம் பிடித்தெதன்றால், உபைதுல்லாஹ் பின் மைமூன் அல்கத்தாஹ் எனும் யூதனின் பரம்பரையில் வந்த அல் முஇஸ்ஸு லிதீனில்லாஹ் என்கின்ற ஆட்சியாளனாலேயே தமது ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், மக்களை தம்பக்கம் கவர்வதற்காகவும், மீலாது விழா என்கின்ற இந்த அநாச்சாரம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படுகின்றது
எனவே, இந்த மீலாது கொண்டாட்டத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.
கிறிஸ்மஸின் தோற்றம்
கிறிஸ்த்தவர்கள் இறைவேதமாக நம்புகின்ற பைபிளில், இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுமாறோ அல்லது இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 என்பதற்கோ எந்தவொரு சான்றும் கிடையாது. மேலும், இயேசுவின் பிறந்ததினம் குறித்தும் நேரடியான எந்தவொரு சான்றும் கிடையாது. மேலும், ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை
“ஒரிஜென்” போன்ற கிறிஸ்த்தவ அறிஞர்களே, கிறிஸ்மஸ் பண்டிகை குறித்து, “பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக் கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் மிக வன்மையாக தமது கண்டனங்களை பதிவு செய்கின்றனர்.
சில கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்- பாப்பரசின் ஆடம்பரம்” என்றும், “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி” என்றும் விமர்சிக்கின்றன.
உரோமப் பேரரசன் ‘கான்ஸ்டான்டின்’ – Constantin என்பவனாலேயே தமது ஆட்சி, அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக, சூரியக் கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும், சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்படுகின்றது.
மீலாது – கிறிஸ்மஸ் ஒற்றுமைகள்
- மீலாதுவிழா கொண்டாடுவதற்கு அல்குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான நபிமொழிகளிலோ எந்தவொரு ஆதாரமும் கிடையாதது போன்று,
கிறிஸ்த்தவர்கள் இறைவேதமாக நம்புகின்ற பைபிளிலும் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது.
- இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடாதது போன்று
இறைத்தூதர் ஈஸா (இயேசு) (அலை) அவர்களும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.
- அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பாசறையில் வளர்ந்த அருமைத் தோழர்களோ, நபிகளாரால் சிலாகித்து கூறப்பட்ட அடுத்த தலைமுறையினரோ அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடாததது போன்று,
இயேசு (அலை) அவர்களின் உண்மைச் சீடர்கள், ஆதிக் கிறிஸ்த்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை.
- ‘அல் முஇஸ்ஸுலிதீனில்லாஹ்’ என்கின்ற ஆட்சியாளன் தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக மீலாது விழா கொண்டாட்டங்களை அறிமுகப்படுத்தியது போன்று
உரோமப் பேரரசன் ‘கான்ஸ்டான்டின்’ – Constantin – என்கின்ற ஆட்சியாளன் தனது ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை அறிமுகப்படுத்துகின்றான்.
எனவே, மீலாதுக் கொண்டாட்டமும், கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக இறைமார்க்கத்தில் கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது நிரூபணமாகின்றது.
வரம்புமீறிய கிறிஸ்த்தவர்கள் போன்று அதிகப் பிரசங்கித்தனமாக மீலாது கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடிய முஸ்லிம்கள் நியாயமானவர்களாக இருந்தால்,
”அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம்”
(அல்குர்ஆன் 02:285)
என்கின்றஅருள்மறை வசனத்தின் அடிப்படையில் இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாட முன்வர வேண்டும்.
பெரும்பான்மை கிறிஸ்த்தவர்களுடன் இணைந்து டிசம்பர் 25ல் கிறிஸ்மஸ் கொண்டாடுவதா? அல்லது கிழக்கு மரபுவழி திருச்சபையினருடன் இணைந்து ஜனவரில் 7ல் கிறிஸ்மஸ் கொண்டாடுவதா? என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
Source: www.dharulathar.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment