widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, September 3, 2011

ஈமான் எனும் இறைநம்பிக்கை -ஹதீஸ் 46-50 From Buhari Shareef


46. 'நஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவரை தலை பரட்டையாக நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி(ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர் 'அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை" என்றார்கள். அடுத்து 'ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் 'அதைத்தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமையுண்டா?' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை" என்றார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் கூறினார்கள். அதற்கவர் 'அதைத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை" என்றார்கள். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றார். அப்போது 'இவர் கூறியதற்கேற்ப நடந்தால் வெற்றியடைந்துவிட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
47. 'நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காகப் பிரார்த்தனைத் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தவர் நிச்சயமாக நன்மையின் இரண்டு குவியலைப் பெற்றுத் திரும்புவார். ஒவ்வொரு குவியலும் உஹது மலை போன்றதாகும். அதற்காகப் பிரார்த்தனை தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
48. நான் அபூ வாயிலிடம் முர்ஜிஆ பற்றிக் கேட்டபோது, 'ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம்; அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் வழியாக என்னிடம் கூறினார்" என ஜுபைத் அறிவித்தார்.
(குறிப்பு) இறை நம்பிக்கையாளர் செய்யும் எந்தப் பாவத்திற்கும் தண்டனை கிடையாது என்று சொல்லும் வழி கெட்ட பிரிவினர் முர்ஜிஆ எனப்படுவர்.
Volume :1 Book :2
49. 'நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு பற்றி (அது எந்த இரவு என்று) அறிவிப்பதற்காகத் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள்) 'லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் (வீட்டைவிட்டு) வெளியேறினேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமலான் மாதத்தின் இருபத்த) ஏழு (இருபத்து) ஒன்பது (இருபத்து) ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயலுங்கள்' என்று கூறினார்கள்" என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
50. நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்" என்று கூறினார்கள்.
அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்' அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானார்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்" என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது." (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். 'அவரை அழைத்து வாருங்கள்" என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, 'இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
Volume :1 Book :2

0 comments:

Post a Comment