widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, July 1, 2011

முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை


தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக சுற்றாடல் பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் வி. விஜேவீரவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இன்று முதலாம் திகதி விசேட கூட்டமொன்று நடத்தப்படும் என்று ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தம்மிடம் கூறியதாக பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் நேற்றுக் கூறினார்.
இவ்விசேட கூட்டத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் மெளலவி ரிஸ்வி முப்தி மற்றும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப் பாளர் வை. எல். எம். நவவி ஆகியோரை அழைக்கும் படி தாம் சிபாரிசு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பிரதியமைச்சர் காதர் மேலும் கூறுகையில் : தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பி, ஹிஜாப், மற்றும் முக்காடு அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள விவகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை எனது கவனத்திற்குக் கொண்டு வந்தது. இதனடிப்படையில் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துடன் நேற்று முன்தினம் அவசர சந்திப்பொன்றை நடத்தினேன்.
தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பியோ அல்லது ஹிஜாப் மற்றும் முக்காடு அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பது குறித்து முன்னொரு போதுமே சர்ச்சை எழுந்தது கிடையாது. பயங்கரவாதம் நிலவிய போது கூட இது பிரச்சினையாகவில்லை. நான் சுமார் 25 வருடங்களாகத் தொடராக பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன்.
ஆனால் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதி, சாமாதானத்தை ஏற்படுத்தியுள்ளார். அத்தோடு இன, மத, மொழி, பிரதேச பேதங்களைப் பாராது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார். எமது ஜனாதிபதி ஒரு போதுமே இன ரீதியாக சிந்திக்காதவர்.
இப்படியான நிலையில் தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பதை சர்ச்சையாகி இருப்பது ஆச்சரியத்தையும் கவலையும் தருகின்றது.
ஆகவே தற்போது எழுந்துள்ள இச் சர்ச்சையை நியாயமாகவும், சுமுகமாகவும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அவருடனான சந்திப்பு திருப்திகரமானதாக அமைந்திருந்தது. அதனால் இன்றைய விசேட கூட்டத்தில் திருப்திகரமான முடிவுகள் வெளியாகலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Source: Thinakaran

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல் சம்பவங்கள் என்னை அதிகமாக பாதித்தது – அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)


வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல் சம்பவங்கள் தம்மை அதிகமாக பாதித்ததன் காரணமாக ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை தான் கைவிட்டதாக பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள அவர் ஊடகங்களுக்கு இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஆரம்பகாலத்தில் நான் இலங்கையின் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவந்தேன். எனினும் அக்குழுக்கள் முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டபோது, நான் எனது நிலைப்பாட்டினையும் மாற்றிட நேர்ந்தது. வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், காத்தான்குடி முஸ்லிம்களின் படுகொலை சம்பவங்கள் என்னை அதிகமாக பாதித்தது. இவை மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரம். இவற்றை எவராலும் நியாயப்படுத்த முடியாது.
இக்கொடூரங்களை செய்தவர்களின் முடிவு நிச்சமாக விரும்பத்தகுததாக இருக்கப்போவதில்லை என நான் அப்போதே கூறினேன். அதுபோன்றே எல்லாம் நடந்தும் முடிந்தது. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அதனை சைவப் புலவர்கள் நியாயப்படுத்தினர். ஆனால் நான் அந்தச் சம்பவங்களை வன்மையாக கண்டித்தேன். அதனை எவலாலும் நியாயப்படுத்தவும் முடீயாதென வாதிட்டேன்.
தமிழகத்தின் பல அரசியல் தலைவர்களிடம் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து நான் அதிருப்தியை வெளியிட்டேன். ஆனால் அவர்கள் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. மனித நேயம் மிக்கவனென்ற முறையிலேயே நான் இச்சம்பவங்களை அன்றே கண்டித்தேன் எனவும் கூறியுள்ளார்.
Source: Yarl Muslim