"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, November 30, 2012
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம்

மார்க்க விடயங்களில் மிகவும் பேணுதலாக நடக்கும் ஒவ்வொரு கொள்கைவாதிகளும் சறுக்கி விழுகின்ற, தோற்றுப்போகின்ற ஒரு சம்பவம் தான் இந்தத்திருமணம் ஆகும். மார்க்க சட்டதிட்டங்களை பேசுவார்கள் பேணுவார்கள்.ஆனால் இந்த ஒரு விடயத்தில் மட்டும் மௌனியாவார்கள்.
ஒரு சுன்னத்தைப் பேணுவதற்காக பல ஹராமான காரியங்கள் அரங்கேறுவதை இன்றைய திருமணங்களில் காணலாம்.
நிக்காஹ்வை பள்ளிவாசல்களில் மிகவும் எளிமையான முறையில் நடாத்தி ஒரு பயானையும் நிகழ்த்தி விட்டு அதற்குப் பிறகு நடப்பதுவோ முழுக்க முழுக்க அநாச்சாரமும், ஆடம்பரமும், அநியாயமுமாகும்.
திருமணத்தில் நடக்கின்ற ஆடம்பரங்கள்
• ஹோட்டல் (Hotel) அல்லது மண்டபத்துக்கான செலவுகள்• மணமக்களின் ஆடை அலங்காரத்துக்கான செலவுகள்
• மணமக்கள் அமரும் மேடை அலங்காரம்
• வீடியோ போட்டோவுக்கான செலவுகள்
• அழைப்பிதலுக்கான செலவுகள்
• பெண் வீட்டாரிடம் சுமத்துகின்ற செலவுகள்
• இன்னும் பல அநாச்சார, அந்நிய கலாச்சார செலவுகள்
• இறுதியில் விரயமாகின்ற குப்பையில் தஞ்சமாகின்ற சாப்பாடு
இவையனைத்திற்கும் பல லட்ச ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. இதனால் யாருக்கும் எந்தவித பிரயோசனமும் நன்மையும் கிடையாது.மாறாக இத்தகைய திருமணத்தின் மூலம் கடன்காரன் என்ற அந்தஸ்து மட்டுமே எஞ்சுகிறது.இந்த ஆடம்பரங்களும் அநாச்சாரங்களும் நாமே நம் மீது திணித்துக் கொண்டவை.இந்தப்பல லட்ச ரூபாய்களைக் கொண்டு எத்தனையோ வாழ வழியற்ற குடும்பங்களை வாழ வைக்க முடியும் என்பதை எவரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா? இதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளலாம்.ஏழை எளியவர்களும் நமக்கு துஆ செய்வார்கள்.பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களையும் சற்று கவனித்துப் பாருங்கள்.
"வீண்விரையம் செய்யாதீர்கள்! வீண்விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்." (அல்குர்ஆன் 6:141)
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண்விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:26,27)
மணமகனுக்கு இவ்வநியாயத்தை எதிர்த்து போராட முடியாதா?
பெற்றோரையும் உற்றாரையும் எதிர்த்து நின்று தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கத் துடிக்கும் இளைஞர்கள் அதனை சாதித்துக் கொள்வதைப் போல் இந்த அநியாயத்தையும், ஆடம்பரத்தையும், அக்கிரமத்தையும் எதிர்க்க, போராட ஏன் அவர்களுக்கு தைரியமில்லை? மணமகன் மட்டும் ஒற்றைக்காலில் நின்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து இவ்வநியாயத்தை எதிர்த்துப் போராடினால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் பல லட்ச ரூபாய்கள் வீணாவதிலிருந்தும், கொடிய நரகிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
திருமண விருந்து எப்படி அமைய வேண்டும்?
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களையும் அவர்களின் அங்கீகாரத்துடன் நடந்த திருமணங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.ஸஹாபாக்களின் திருமணத்தின் போது அவர்கள் நபியைக் கூட அழைக்கவில்லை என்பதை பின்வரும் சம்பவம் மூலம் அறியலாம்.
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்க, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள்.அப்போது (அது குறித்து) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவிய போது தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டதாக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களிடம் தெரிவித்தார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹர் (விவாகக் கொடை) செலுத்தினீர்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் "ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை" என்று பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா மணவிருந்து அளிப்பீராக!" என்று கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி 5153)
செல்வந்தராக இருந்த நபித்தோழருக்கே அல்லாஹ்வின் தூதர் ஒரு ஆட்டை அறுத்து வலீமா கொடுக்க சொல்லியிருக்கும் போது நாம் ஏன் நம்மை வருத்திக் கொண்டு விரலுக்கு மிஞ்சிய வீக்கமாக வீண் விரையம் செய்ய வேண்டும்?
மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த 'சுன்னத்' நிறைவேறிவிடும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே 'வலீமா' விருந்தாக வழங்கினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 371, 2893)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு 'முத்து' (சுமார் "கோதுமையையே 'வலீமா' விருந்தாக அளித்தார்கள்." (அறிவிப்பவர்: சபிய்யா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5172)
ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விருந்தளித்ததில்லை. ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்த போது ஒரு ஆட்டைத் திருமண விருந்தாக அளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள். நூல்: புகாரி – 5168, 5171, 7421)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த பெரிய 'வலீமா' விருந்தில் ஒரு ஆட்டை 'வலீமா'வாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும். எனவே விருந்தின் பெயரால் செய்யப்படும் ஆடம்பரங்களையும் தவிர்க்க வேண்டும்.
வலீமா விருந்துக்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது.
செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5177)
வலீமா விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அதை மறுக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸின் தொடரில் 'யார் வலீமா விருந்தை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து விட்டார்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
விருந்தை ஏற்பது அவசியமானாலும் விருந்து நடக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடந்தால், அல்லது தீய நடத்தை உடையவரால் விருந்து வழங்கப்பட்டால் அதைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டும்.
நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்தைக் கண்ட போது திரும்பி சென்று விட்டார்கள். (அறிவிப்பவர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ – 5256)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வழியைப் பின்பற்றி நபித்தோழர்களும் இந்த விஷயத்தில் கடுமையான போக்கை மேற்கொண்டுள்ளனர்.
அபூமஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை ஒருவர் விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்கள் "வீட்டில் உருவச் சிலைகள் உள்ளனவா?" எனக் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்படியானால் அதை உடைத்து எறியும் வரை வர மாட்டேன் என்று கூறி விட்டு, உடைத்து எறிந்த பின்னர் தான் சென்றார்கள். (நூல்: பைஹகீ பாகம்: 7, பக்கம்: 268)
என் தந்தை காலத்தில் ஓர் விருந்துக்கு ஏற்பாடு செய்தோம். என் தந்தை மக்களை அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள். வீட்டிற்கு வந்த போது பட்டுத் துணியால் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டதைக் கண்டார்கள். என்னைக் கண்டதும் "அப்துல்லாஹ்வே! நீங்கள் சுவர்களுக்கு பட்டால் அலங்காரம் செய்கிறீர்களா?" எனக் கேட்டார்கள். பெண்கள் எங்களை மிகைத்து விட்டனர்" என்று என் தந்தை கூறினார். அதற்கு அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் "உம்மை பெண்கள் மிஞ்சி விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லை" என்றார்கள். மேலும் "உங்கள் உணவைச் சாப்பிடவும் மாட்டேன். உங்கள் வீட்டிற்குள் வரவும் மாட்டேன்" என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றார்கள். (தப்ரானியின் கபீர் பாகம்: 4, பக்கம்: 118)
மிகச் சாதாரணமாக நாம் கருதுகின்ற இந்தக் காரணத்திற்கே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களின் தோழர்களும் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்.
இதை விட பல நூறு மடங்கு ஆடம்பரங்களும், அனாச்சாரங்களும், வீண் விரயங்களும் மஇலிந்து காணப்படும் விருந்துகளில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் நாம் கலந்து கொள்கிறோம். இது சரி தானா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நூல்: அஹ்மத் – 23388)
எனவே மிக மிக குறைந்த செலவில் நபி வழியில் நம் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமொழிகளின் முலம் அறிந்து கொள்ளலாம்.ஒரு ஊரில் குறைந்தது பத்துப்பேராவது திருமணங்களை மிக மிக எளிமையாக குறைந்த செலவுடன் கூடியது பத்துப்பேரைக் கொண்டாவது நடாத்தினால் அடுத்தவர்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் முன் மாதிரியாக இருக்குமல்லவா?
விருந்தில் மார்க்கத்துக்கு முரணாண காரியங்கள் இடம்பெறல்.
நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்தேன்.அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படத்தைக் கண்ட போது திரும்பிச் சென்று விட்டார்கள். (அறிவிப்பவர்: அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: நஸயீ – 5256)
தன் சொந்த மகளின் வீட்டிலேயே மார்க்கத்திக்கு முரணான ஒரு காரியத்தைக் கண்டு அந்த விருந்தை ஏற்காமல் நபியவர்கள் சென்று விட்டார்கள் என்றால், இன்று நடக்கின்ற திருமண விருந்தில் எத்தனை தீமையான காரியங்கள் நடக்கின்றன? இத்தகைய விருந்துக்கு சமூகமளிப்பதை நாம் புறக்கணிக்கின்றோமா?
அல்லாஹ்வுக்காக இத்தகைய விருந்துக்கு சமூகமளிப்பதை நாம் புறக்கணித்தால் அது ஒரு போதும் பாவமாகாது.ஊருலகத்தின் திருப்தியை நாம் விரும்பினால் அது ஒரு போதும் முடியாது.அதனால் எந்தவித நன்மையும் இல்லை. ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தமே மிக மிக மேலானது.எனவே அல்லாஹ்வின் திருப்தியையும் அருளையும் பெற இவ்வநாச்சாரங்களையும், ஆடம்பரங்களையும் விட்டொழித்து எளிமையான முறையில் நபி வழியில் திருமணங்களை நடாத்தவும் ஆடம்பரமான விருந்து வைபவங்களுக்கு சமூகமளிப்பதை புறக்ககணிக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன் 31:33)
-ஷாஹினா ஷாபிஃ
source: www.tamilthowheed.com
கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு -தியாகத்தின் உயிர் வடிவம்
சத்தியத்தின் தரிசனம்
ஒரு நாள் கப்பாபின் வீட்டருகே மக்கத்து குறைஷிகள் ஆச்சரியத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என கேட்கிறீர்களா? ஆம் மக்காவில் வாட்களை திறம்பட செய்து தரும் மிகச் சிலரில் ஒருவரான கப்பாப் தன் வீட்டை விட்டு போக முடியா அளவு அவருக்கு ஆர்டர்கள் குவிந்திருக்கும். அதனால் தான் அவரை தேடி வந்த குறைஷிகள் கப்பாபை அவ்விடத்து காணாதது குறித்து ஆச்சரியப்பட்டனர்.
வெகு நேரம் கழித்து பிரகாசமான முகத்துடன் வந்த கப்பாப் தன் விருந்தினர்களை வரவேற்றவராக உள்ளே நுழைந்தார். தங்களுடைய வாட்கள் செய்தாயிற்றா என்ற குறைஷிகளின் கேள்விக்கு பதிலாக "என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது" என்று சம்பந்தமில்லாமல் உளறினார் கப்பாப். மேலும் அவர்களை நோக்கி "நீங்கள் அவரை பார்த்ததுண்டா? அவரின் மொழிகளை கேட்டதுண்டா?" என்று கேட்ட போது ஒரு வேளை கப்பாபுக்கு சித்தம் கலங்கி விட்டதோ என்று அவர்கள் நினைத்திருந்தாலும் வியப்பதற்கில்லை.
இவ்வாறு கப்பாபும் குறைஷிகளும் கேள்வியும் பதிலுமாக உரையாடி கொண்டிருந்த வேளையில் அவர் பேசும் நபர் யாரென்பதை ஊகித்த குறைஷிகள் கேட்டார்கள் " யாரை குறித்து பேசுகிறாய்". "வேறு யாரை குறித்து நான் சொல்லியிருக்க முடியும். இச்சமூகத்தில் சத்தியத்தால் சூழப்பட்டும் ஒளியூட்டப்பட்டும் இருப்பவர் வேறு யார் உள்ளனர்" என்று கப்பாப் மறுமொழி மொழிந்தார்.
உடன் ஒரு குறைஷியன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எகிறியவனாய் " முஹம்மதை குறித்து சொல்கிறாய்" என்றான். "ஆம், அவர் இறைவனின் தூதர். குஃப்ரின் இருளிலிருந்து ஈமானிய வெளிச்சத்துக்கு கொண்டு செல்ல வந்தவர்" என்று கப்பாப் முழங்கியது தான் தாமதம், அடுத்து அவர் மயக்கமாகும் அளவு நைய புடைத்தனர் அம்முரட்டு குறைஷிகள்.
தியாகத்தின் உயிர் வடிவம்
அன்றிலிருந்து இஸ்லாத்தை ஏற்று கொள்வோர் அதுவும் யாரும் தட்டி கேட்க முடியா அடிமைகளாய் இருந்தால் எங்ஙனம் குறைஷிகள் கொடுமை புரிவார்கள் என்பதற்கும், எந்தளவு அக்கொடுமைகளை இஸ்லாத்திற்காக ஒரு மனிதர் தாங்க முடியும் என்பதற்கும் கப்பாப் உயிர் வடிவமாய் மாறிப் போனார். ஆம் புகலிடம் பெற கோத்திரமில்லா ஒரு அடிமை எல்லா எதிர்ப்புகளையும் மீறி இஸ்லாத்தை ஏற்று கொள்வதை பொறுக்க இயலா அம்மூடர்கள் கப்பாபுக்கு மறக்க முடியா பாடம் கற்பிக்க தீர்மானித்தனர்.
சிபா இப்னு அப்துல் உஸ்ஸாவும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து மக்காவின் உச்சி வேளை மண்டையை பிளக்கும் வெயிலில் கப்பாபின் உடைகளை கழற்றி விட்டு இரும்பாலான போர்க்கவச சூட்டை மாட்டி விட்டார்கள். ஏற்கனவே சூடான மணலில் அவரை அப்படியே கிடத்தி மேலும் சூடாக்கி கொடுமைப்படுத்துவார்கள். மேலும் கற்களை நெருப்பில் இட்டுச் சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அக்கற்கள் நெருப்பு கங்குகளாய் மாறிய பின் அவரை அந்நெருப்பு கங்குகளின் மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுத்தார்கள். அவரது முதுகு சதை துண்டுகள் அத்தீயினால் வெந்து விழ, அவரது காயத்திலிருந்து வழிந்த நீரால் அத்தீயே அணைந்து விடும்.
இப்படிப்பட்ட கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தான் கப்பாப் ஒரு தடவை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இஸ்லாத்தின் எதிரிகள் செய்யும் கொடுமைகளை விவரித்தவராக முஸ்லீம்களுக்காக இறைவனிடம் துஆ செய்யும் படி கப்பாப் வேண்டினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் முகம் சிவக்க இவ்வாறு மறுமொழி சொன்னார்கள் "உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட காரணத்தால் ரம்பத்தை கொண்டு அவர்களின் தலைகள் இரு கூறாக பிளக்கப்பட்டது. பழுக்க காய்ச்சிய இரும்பு சீப்புகளால் அவர் மேனி கோதப்பட்டு அது அவரின் இறைச்சியை தாண்டி அவர் நரம்பையும் சென்றடைந்தது. ஆனால் இவை யாவும் அவர்களை இம்மார்க்கத்திலிருந்து திசை திருப்பவில்லை. நிச்சயமாக ஒரு காலம் வரும். அப்போது ஸன் ஆவிலிருந்து ஹளரமெளத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சத்தை தவிர வேறு எவ்வித அச்சமும் இல்லாமல் செல்வாள்" என பதில் சொன்னார்கள்.
இது ஒன்று போதுமானதாக இருந்தது அந்த ஸஹாபாக்களின் ஈமானை மேலும் மேலும் உறுதியடையச் செய்ய. குறைஷிகள் கப்பாபின் முன்னாள் எஜமானி உம்மு அம்மாரை தூண்டி விட்டு கப்பாபின் தலையில் காய்ச்சிய இரும்பால் சூடு போடுவர். அப்பெண்மணிக்கு சந்தோஷம் கொடுக்காமல் இருக்கும் பொருட்டு தன் வேதனையை மறைத்து கொள்வார். அவரின் தலைக்கு இரும்பு கோலால் சூடு போடப்படுவதை பார்த்த பெருமானார் "நிராகரிப்பாளர்களின் மேல் கப்பாபை வெற்றி கொள்ள வைப்பாயாக" என்று பிராத்தித்தார்கள்.
சில காலம் கழித்து அப்பெண்மணிக்கு இனம் புரியா ஒரு நோய் உண்டாயிற்று. அந்நோயின் காரணத்தால் நாய் குரைப்பது போன்று குரைப்பாள். கடைசியில் அந்நோய்க்கு மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைத்தது சூட்டுகோல் ட்ரீட்மெண்ட் தான். ஆம் தினந்தோறும் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ அவள் தலையில் சூட்டுகோல் டீரீட்மெண்ட் நிச்சயமாய் நடக்கும்.
வேறு சில அறிவிப்புகள் அத்துஆவை கப்பாபே கேட்டதாகவும் தெரிவிக்கின்றன. உஹதுப் போரில் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கையால் கப்பாபை கொடுமைப்படுத்திய சிபா இப்னு அப்துல் உஸ்ஸா கொல்லப்பட்டான்.
மறுமை மீதான நம்பிக்கை
தான் ஏற்று கொண்ட கொள்கைக்காக இத்துணையும் இழக்க தயாரான கப்பாபை குறித்து நமக்கு ஆச்சரியம் எழலாம். உண்மையில் மறுமையின் மீதான அழுத்தமான நம்பிக்கை தான் கப்பாபுக்கு அத்தகைய மனவலிமையை தந்தது. மறுமையின் மீது கப்பாப் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை நாம் பின்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மக்கத்து நகரில் ஆஸ் இப்னு வாயில் என்பவன் கப்பாபிடமிருந்து பெற்ற வாட்களுக்காக பெருந்தொகை கடன்பட்டிருந்தான். அவனிடமிருந்து கடனை வசூலிக்க கப்பாப் வந்த போது கப்பாபுக்கு இஸ்லாத்தின் மீதான உறுதியை சோதிக்க எண்ணியவன் முஹம்மதை நிராகரிக்காத வரை கப்பாபுக்கு பணம் தர முடியாது என்றான். குப்பார்களின் நெருப்புக்கே கலங்காத மனம் கொண்ட கப்பாப் தெளிவாக சொன்னார் " அல்லாஹ் உம்மை மரணிக்க செய்து மீண்டும் எழுப்பும் வரை முஹம்மதை நிராகரிக்க முடியாது" என்றார்.
"அப்படியென்றால் மறுமையில் அல்லாஹ் என்னை எழுப்பும் போது என் கடனை வசூலிக்க வா. அல்லாஹ் எனக்கு அதிக செல்வங்களையும் வாரிசுகளையும் கொடுத்திருப்பான். அதிலிருந்து உனக்கு தருகிறேன்" என்று கப்பாபின் மறுமை நம்பிக்கையை ஏகடியம் பேசினான். அப்போது தான் அல்லாஹ் பின் வரும் வசனத்தை தன் திருமறையில் அருளினான்
"நம்முடைய வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தை செல்வமும் வழங்கப்படும் " என்று இகழ்ச்சி பேசியவனை நீர் பார்த்தீரா? மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது கருணையாளனான இறைவனிடமிருந்து உறுதி மொழி பெற்றிருக்கிறானா " (திருக்குரான் 19:77,78)
இப்படியாக இஸ்லாத்திற்காக எல்லா வித தியாகத்தையும் செய்த கப்பாப் பெருமானாருடன் எல்லா போர்களிலும் ஈடுபட்டவர் என்பதோடு அல்லாஹ் நான்கு கலீபாக்களின் காலத்திலும் வாழக் கூடிய அளவுக்கு கப்பாபுக்கு ஆயுளை நீட்டித்து கொடுத்திருந்தான். மேலும் உமர் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாத்தை ஏற்ற சம்பவத்தில் கப்பாபுக்கும் முக்கிய பாத்திரம் உண்டு என்பது நாம் அறிந்ததே.
எளிமையும் தன் நிலை குறித்த பயமும்
உமர் மற்றும் உதுமான் ரளியல்லாஹு அன்ஹு ஆட்சி காலத்தில் பைத்துல்மால் நிரம்பி வழிந்த காரணத்தால் கப்பாபுக்கு உதவி தொகை தாராளமாக கிடைத்தது. தனக்கு கிடைத்த பணத்தை கொண்டு எளிய குடில் ஒன்றை அமைத்து கொண்ட கப்பாப் தன்னிடமுள்ள அத்துணை செல்வத்தையும் அக்குடிலின் நடுவே யாரும் வந்து எடுத்து கொள்ளும் அளவு நிரப்பி வைத்திருந்தார்.
காலமெல்லாம் வறுமையிலும் இறுதி காலத்தில் செல்வம் வந்த போது எளிமையாகவும் வாழ்ந்த கப்பாப் தன் மரண தறுவாயில் கண்ணீர் மல்க படுத்திருந்தார். அவரது கண்ணீரை கண்ட சக தோழர்கள் கண்ணீருக்கான காரணத்தை கேட்ட போது கப்பாப் சொன்னார் ""நான் இறப்பதற்காக அழவில்லை. ஆனால் எனக்கு முன்னால் இம்மார்க்கத்தை ஏற்று உயிர் நீத்த சகோதரர்கள் இவ்வுலகில் எதையும் அனுபவிக்காமலேயே மரணித்து விட்டார்கள்" என்று கூறி விட்டு தன் எளிய வீட்டை சுட்டி காட்டி சொன்னார்கள் "எனக்கு கிடைத்த எல்லா பணத்தையும் அவ்வீட்டில் தான் வைத்திருந்தேன். எதையும் நான் எடுக்கவில்லை. கேட்ட யாருக்கும் எதையும் மறுக்கவில்லை" என்றார்கள். பின் தன் ஜனாஸா துணியை சுட்டி காட்டி கப்பாப் "உஹது போர்களத்தில் பெருமானாரின் மாமா ஹம்ஸாவின் உடலை மறைக்க சரியான துணி கிடைக்கவில்லை. தலையை மூடினால் கால் தெரிந்தது, காலை மூடினால் தலை தெரிந்தது" என்று அழுதார்கள்.
ஒரு முறை கலீபா அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சிப்பின் யுத்தத்திலிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு புதிய கப்ரை கண்டு அதை பற்றி விசாரித்த போது அது கப்பாபுடையது என்று சொல்லப்பட்டது. அதற்கு அலீ ரளியல்லாஹு அன்ஹு உண்மை முஸ்லீமாகவும் அடிபணிந்த முஹாஜிராகவும் எத்தியாகத்துக்கும் தயாரான முஜாஹிதாகவும் உன் வழியில் போராடிய கப்பாபின் மேல் உன் கருணையை சொறிவாயாக" என்று பிரார்த்தித்தார்கள்.
ஆம். அப்பிரார்த்தனைக்கு உரித்தானவர் தான் கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு. அதனால் தான் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு.
Subscribe to:
Posts (Atom)