"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, October 18, 2012
தவ்ஹீத்வாதம்: இஸ்லாம் பண்பாட்டுக்கான எழுச்சி
தவ்ஹீத்வாதம்: இஸ்லாம் பண்பாட்டுக்கான எழுச்சி
அ.ப.அஹமது, புதுக்கோட்டை
[ "தவ்ஹீத்வாதம் ஒரு நல்ல பண்பாட்டுக்கான எழுச்சி" என்பதை தமிழ் முஸ்லிம்கள் பலரும் உணராமல் உள்ளனர். காரணம் தமிழகத்தில் தவ்ஹீத்வாதிகள் எனத் தங்களைத் தாங்களே அடையாளப் படுத்திக்கொள்ளும் நபர்கள் செய்யும் தவறுகளால் 'இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி' தவறாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகள் என்பவர்கள் அதிர்ஷ்டவசமாகப் பல உயரிய நல்ல விஷ்யங்களைமக்களிடையே பரப்பினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உள்ள அவர்களின் தனிப்பட்ட குறைபாடுகளால் அவர்கள் பரப்பிய நல்ல விஷயங்கள் விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டன.
அடிப்படை விசயத்தைத் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களில் சிலர் சொந்த ஊரில் வாழும்போது அறியாமல் இருந்து பிறகு வெளிநாடு சென்று திரும்பிய பிறகு பின்பற்றினால் அதை தவறு என்று சொல்வது சரியா?
தமிழ் முஸ்லிம் பெண்கள் கல்லூரி சென்று படிக்கும்போதும் புர்கா அணிந்து செல்கிறார்கள். கடந்த தலைமுறையைவிட இன்றைய தலைமுறையில் முஸ்லிம் ஆண்கள் தாடி வைத்திருக்கிறார்கள்.இஸ்லாத்தை விரும்பி, புரிந்து, பின்பற்ற விரும்புவது ஒன்றும் 'கள்ளக் காதல்' அல்ல,
அரபு தேசங்களில் இந்தப் பண்பாட்டுச் சீர்திருத்தங்கள், இமாம் ஹஸன் அல் பன்னா, அப்துல் வஹ்ஹாப் போன்றவர்களாலும் கடந்த நூற்றாண்டுகளிலேயே ஆரம்பிக்கப்பட்டு நடந்துகொண்டிருக்கிறது.
இஸ்லாமியப் பண்பாடு என்பது உலகளாவிய ஓர் இறைக்கொள்கை ஆகும். அதாவது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது மொழியால், இனத்தால், நிறத்தால் மாறுபட்டாலும் மனித இனம் முழுமையும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டுள்ளது என்று நம்பச் சொல்கிறது இஸ்லாம்.]
தவ்ஹீத்வாதம்: இஸ்லாம் பண்பாட்டுக்கான எழுச்சி
தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகளால் முஸ்லிம்களின் பண்பாடு பாழ்பட்டுப் போனது என்று சிலர் புலம்புகின்றனர்.
அப்படி என்னதான் மாறிப்போய்விட்டது?
தமிழ் முஸ்லிம் பெண்கள், பள்ளி, கல்லூரி சென்று உயர்கல்வி படிக்கிறார்கள்;
முஸ்லிம் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்;
பல இன மக்களுடன் கலந்து பழகுகிறார்கள்;
ஆடம்பரத் திருமணங்கள் குறைய ஆரம்பித்துள்ளன;
இரவுத் திருமணங்கள் இல்லாமல் போய்விட்டன;
வரதட்சணை இல்லாத் திருமணங்கள் கூடிவருகின்றன;
தர்ஹாக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக ஆகிவருகின்றன;
சந்தனக் கூடுகள் காணாமல் போய்விட்டன;
'மய்யத்' அடக்கம் செய்தபின் 40 நாள் பாத்திஹா போன்ற சடங்குகளிலிருந்து முஸ்லிம் சமூகம் விலகிவருகிறது;
கந்தூரிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கின்றன.
முஸ்லிம்களின் பண்பாடுகளைப் பற்றிப் பேச, எழுத விரும்புபவர்கள் முதலில் தங்களின் பார்வையை உலகளாவிய கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் சரியானதாக அமையும். வட்டார வழக்கில் இருந்து பார்த்தால் பல சமயங்களில் பிழையான பார்வையாக அது ஆகிவிடக்கூடும்.
இஸ்லாம் மதம் அல்ல, வாழ்க்கை நெறி என்று பேசும் முஸ்லிம் அறிஞர்கள் பலர் அல்லது எழுத்தாளர்கள் தமது சொந்த வாழ்க்கையில் மதவாதிகளைப் போல நடந்துகொள்வார்கள். இப்படி இருக்கும்போது பாமர முஸ்லிம்களைப் பற்றி எப்படிச் சொல்வது?
இஸ்லாமியச் கலாச்சாரம் என்பது இன்ன இன்ன ஆடைதான் அணிய வேண்டும் என்று கூறியதே கிடையாது. எப்படி எப்படி அணிய வேண்டும் என்றுதான் அறிவுரை கூறுகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தத் தமது நாடு, வெப்பநிலைக்கேற்றவாறு தமது விருப்பத்துக்குத் தக்கவாறு ஆடை அணியலாம். உடலில் எதை மறைக்க வேண்டும், என்னும் அடிப்படை ஒழுக்கவியல் அம்சத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவுறுத்துகிறது.
இந்த அடிப்படை விசயத்தைத் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களில் சிலர் சொந்த ஊரில் வாழும்போது அறியாமல் இருந்து பிறகு வெளிநாடு சென்று திரும்பிய பிறகு பின்பற்றினால் அதை தவறு என்று சொல்வது சரியா?
தமிழ் முஸ்லிம் பெண்கள் கல்லூரி சென்று படிக்கும்போதும் புர்கா அணிந்து செல்கிறார்கள். கடந்த தலைமுறையைவிட இன்றைய தலைமுறையில் முஸ்லிம் ஆண்கள் தாடி வைத்திருக்கிறார்கள். இஸ்லாத்தை விரும்பி, புரிந்து, பின்பற்ற விரும்புவது ஒன்றும் 'கள்ளக் காதல்' அல்ல, இப்படி முஸ்லிமாக வாழும் அதேசமயம் பல இனச் சமுதாயத்தோடு வரம்புக்குட்பட்டு, இணக்கமாக, மனிதநேயத்தோடு வாழ்கிறோமே!
தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. அது சுகாதாரமற்ற குடியிருப்புகளாக இருக்கலாம். ஒழுங்கமைப்பு இல்லாத கூட்டுக் குடும்பங்களாக இருக்கலாம். வெளிநாட்டு வாழ்க்கையால் தொலைந்துபோன குடும்ப வாழ்க்கையாக இருக்கலாம். இலைமறைவு காய்மறைவாய் இருந்த 'டாஸ்மாக்' கலாச்சாரம் முஸ்லிம் இளைஞர்களிடம் பெருகிவருவதாக இருக்கலாம்.
. . . இப்படித் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அறிவு மேம்பாட்டுக்குப் பணியாற்ற நினைப்பவர்கள் எழுதப் பேச, போராட நிறையக் களங்கள் இருக்கின்றன. பீர்முகம்மது இதையெல்லாம் விட்டுவிட்டு, தர்ஹா போச்சு, சந்தனக் கூடு போச்சு, 40 நாள் பாத்திஹா போச்சு என்று கவலைப்படுவதன் மூலமும் வரதட்சணை இல்லாத் திருமணங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் தவ்ஹீத்வாதிகளின் வருகையும் காரணம் என்பதை மறுக்க முடியுமா?
"இவையெல்லாம் ஒரு நல்ல பண்பாட்டுக்கான எழுச்சி" என்பதை தமிழ் முஸ்லிம்கள் பலரும் உணராமல் உள்ளனர். காரணம் தமிழகத்தில் தவ்ஹீத்வாதிகள் எனத் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர்கள் செய்யும் தவறுகளால் 'இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி' தவறாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகள் என்பவர்கள் அதிர்ஷ்டவசமாகப் பல உயரிய நல்ல விசயங்களை மக்களிடையே பரப்பினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உள்ள அவர்களின் தனிப்பட்ட குறைபாடுகளால் அவர்கள் பரப்பிய நல்ல விசயங்கள் விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டன.
நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியலை மார்க்கமாக ஏற்றுக்கொண்டுள்ள நாம் நம்மை 'முஸ்லிம்' என்னும் பொது வார்த்தையில்தான் விளித்துக்கொள்ள வேண்டுமே தவிர தவ்ஹீத்வாதி என்றோ அல்லது வேறு எந்தப் பெயரைக் கூறியும் அடையாளப்படுத்துவது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைக்கே முரணானது.
தர்ஹா கலாச்சாரம் என்பது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது என்றும் சந்தனக்கூடு போன்ற வைபவங்கள் நீக்கப்பட வேண்டுமென்பதும் இந்த 'தவ்ஹீது' காரர்கள் கூறுமுன் கடந்த நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பாக்கியத்துஸாலிஹா மதரஸாவில் 'பத்வா' வெளியிட்டிருக்கிறார்கள்.
இஸ்லாமியக் கலாச்சாரப் பண்பாட்டுச் சீர்திருத்தம் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பரவலாக நடந்துகொண்டிருக்கிறது.
இதே போன்று அகில இந்திய அளவில் மௌலானா மௌதூதி, ஜகரியா மவுலானா போன்றவர்களாலும் கடந்த 50, 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது.
அரபு தேசங்களில் இந்தப் பண்பாட்டுச் சீர்திருத்தங்கள், இமாம் ஹஸன் அல் பன்னா, அப்துல் வஹ்ஹாப் போன்றவர்களாலும் கடந்த நூற்றாண்டுகளிலேயே ஆரம்பிக்கப்பட்டு நடந்துகொண்டிருக்கிறது.
மூடப்பழக்கவழக்கங்களான, கயிறு மந்திரித்தல், தாயத்துக் கட்டுதல், ஜோசியம் பார்த்தல் போன்ற செயல்கள் தமிழ் முஸ்லிம்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த மூடப் பழக்கவழக்கங்களைப் பண்பாடு என்றோ கலாச்சாரம் என்றோ பூசி மெழுகிச் சொல்லாமல் நேரடியாக, தெளிவாகத் தமிழ் முஸ்லிம் நெஞ்சங்களைத் தட்டி எழுப்பி அவையெல்லாம் 'ஓர் இறைவனை' நம்பாத ஈனச் செயல்கள் என்று சொன்னவர்கள்தாம் 'தவ்ஹீத்வாதிகள்'. இந்தச் சீர்திருத்தப் பண்பாட்டு எழுச்சியைக் குறை காண்பது பிழையாகும்.
இஸ்லாமியப் பண்பாடு என்பது உலகளாவிய ஓர் இறைக்கொள்கை ஆகும். அதாவது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது மொழியால், இனத்தால், நிறத்தால் மாறுபட்டாலும் மனித இனம் முழுமையும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டுள்ளது என்று நம்பச் சொல்கிறது இஸ்லாம்.
இப்படி நம்பும்போதுதான், நமக்குள் வேற்றுமைகள் இருந்தாலும்கூட அதையும் மீறி சகோதரத்துவம் மலரும். ஆகவே ஓர் இறை எனும் தத்துவத்தைப் பின்பற்றி நிலைநாட்டுவதுதான் மனித இனத்தினுடைய ஒற்றுமைக்கான முதல் படி. இந்த ஓர் இறை – தத்துவத்திற்கு முரணானதுதான் சிலைகள் வழிபாடும் தனிமனித வழிபாடுகளும் இயக்க வழிபாடுகளும் தர்ஹா வழிபாடுகளும். அந்த தர்ஹா வழிபாட்டைத் தமிழ் முஸ்லிம்களின் நெஞ்சங்களிலிருந்து நீக்கி அறிவுப் பண்பாட்டு எழுச்சியை உரக்கக் கூறியவர்கள்தாம் இந்த 'தவ்ஹீத்வாதிகள்'.
தாய் அல்லது தந்தை மரணித்தவுடன் மூன்றாம் நாள் ஏழாம் நாள் நாற்பதாம் நாள் பாத்திஹா ஓதி ஊர் மெச்சும் பழக்கம் இன்றும் இருக்கிறது. ஆனால் வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார் பீர்முகம்மது. தாய் தந்தை உயிரோடு இருக்கும்போது அவர்களைக் கவனித்துப் பணிவிடை செய்து நல்ல பண்பாடான முஸ்லிம்களாக வாழ வேண்டும் என்பது தவ்ஹீத்வாதிகளின் பிரச்சாரம் மட்டுமல்ல, எல்லா முஸ்லிம் அறிஞர்களுமே வலியுறுத்தி வரும் கருத்துதான்.
இதைப்போலவே தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஏன் வரதட்சணை இல்லாத் திரு மணங்களாக இருக்கட்டும், மூடபழக்க வழக்கங்கள் ஒழிப்பாக இருக்கட்டும், தொப்பி, தாடி விசயமாகக்கூட இருக்கட்டும்.
இந்த 'தவ்ஹீத்'வாதிகளைத் தவிர மற்ற எல்லா அமைப்புகளிலுள்ள ஆலிம்கள், எழுத்தாளர்கள் எல்லாம் பாஸிட்டிவாக, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று கூறி நிறுத்திக்கொள்வார்கள்.
இந்த தவ்ஹீத்வாதிகள் மட்டும், 'இவை இவை' செய்ய மார்க்கத்தில் அனுமதி உண்டு 'இவை இவை' செய்யக் கூடாது என்று கொஞ்சம் கறாராகச் சொல்லிவிடுவார்கள். அதாவது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகச் சொல்வது தவ்ஹீத்வாதிகளின் பாணி. பூசி மெழுகிப் பிரச்சாரம் செய்வது மற்ற ஆலிம்களின் பாணி.
அதேசமயம் தனியாகப் பள்ளிவாசல் கட்டிச் சமுதாயத்தைக் கூறு போடுவது. இந்த 'தவ்ஹீத்வாதிகள்' செய்துவரும் ஹிமாலயத் தவறாகும். இந்தத் தனிப் பள்ளிவாசல் கொள்கைகளால் உன்னதமான 'இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி'க்குத் தடையாக உள்ளார்கள் இந்த தவ்ஹீத்வாதிகள். தனித்தனி இயக்கங்களாக அமைத்துக்கொண்டு, வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர் நியமித்துக்கொண்டு தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சிகள் போல் செயல்படுவதும் இந்த தவ்ஹீத்வாதிகள் செய்துவரும் தொடர் தவறுகள். தவ்ஹீத்வாதிகளின் குறைகள், நிறைகள் என நிறைய எழுதலாம். அது இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாத விசயங்கள்.
எது எப்படியோ, ஆலிம் உலமாக்கள், போன்றோர் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த 'தவ்ஹீத்வாதிகள்' கொஞ்சம் சுயபரிசோதனை செய்து தம்மைத் தாமே திருத்திக்கொண்டால் 'இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி" நன்றாக இருக்கும் என்பதுதான் நம் பெருங்கவலை.
இந்தக் கட்டுரையின் உள்ளார்ந்த கருத்துகளையும் உண்மையான நோக்கத்தையும் உள் மனத்தில் நேசிக்கும் முஸ்லிம்கள் நிறையப் படிக்க வேண்டும்! யோசிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!
source: www.readislam.net
Sunday, October 14, 2012
நேர்வழியில் செல்லும் இயக்கம்"
நேர்வழியில் செல்லும் இயக்கம்"
அளவற்ற அன்புடனும் கண்ணியம் நிறைந்த உள்ளச்சத்துடனும் அல்லாஹ்வை சார்ந்து நிற்றல், அவனை வணங்கி வழிபடுதல், அவனை வணங்குவதற்கு அவன் வகுத்துத் தந்த கிரியைகளைத் தாண்டி அணுவளவும் அப்பால் செல்லாதிருத்தல். அவனிடமே உதவி தேடுதல்.
வாழ்வின் சகல விவகாரங்களிலும் அவனது சட்டங்களுக்கு முற்றிலும் கட்டுப்படுவது அவனது வழிகாட்டல் தவிர்ந்த அனைத்தையும் தனது வாழ்விலிருந்து புறந்தள்ளுதலும் அவனது பண்புகளில் ஒன்றையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ பிறிதொரு படைப்புக்கு வழங்கி அவனுக்கு இணைவைக்காதிருத்தல்.
அவனது ஏற்பாடுகளைப் பொருந்திக் கொள்ளுதல், அருளையும் அபிவிருத்தியையும் சௌபாக்கியங்களையும் இடைத்தரகர்களின்றி அவனிடமே நேரடியாக வேண்டி நிற்றல், உலகில் அவன் தரும் சௌபாக்கியங்களுக்கு நன்றி செலுத்துவதோடு, வாழ்வின் எந்தக் கட்டத்திலும் விரக்தியடையாமல் இருத்தல், அவனது அன்பும் சுவனமும் தன்னிகரில்லாத பேறு என்பதை உணர்ந்து செயல்படுதல்.
வழிமுறைகளில் சிறந்தது நபிகளாரின் வழிமுறை
இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமது தலைவரும் வழிகாட்டியும் முன்மாதிரியுமாவார். அன்னாரை ஒரு முழு மனிதராகவும் அல்லாஹ்வின் தூய அடியாராகவும் தூதராகவும் சாட்சி கூறி,அவரை நேசித்து வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அன்னாரின் முன்மாதிரிகளைப் பின்பற்றுதல். இறுதித் தூதரின் பன்முக ஆளுமையில் ஒரு பக்கத்தைக் காட்டி மற்றுமொரு பக்கத்தை மறைக்காதிருத்தல். அன்னாரது முன்மாதிரிமிக்க நடத்தைகளையும் பண்பாடுகளையும் வாழ்க்கை முறையையும் நாகரிகத்தையும் ஸ்தாபிக்கும் பணியில் அன்னாரது சிந்தனைப் பாங்கோடும் அர்ப்பணத்தோடும் ஈடுபடுதல்.
குர்ஆன், ஸுன்னாவை அணுகுதல்
குர்ஆன், ஸுன்னாவை அடிப்படை மூலாதாரங்களாகக் கொள்ளல். துணை மூலாதாரங்கள் பற்றிய அறிவையும் பெற்றிருத்தல். இறுதித் தூதரின் வாழ்க்கையான ஸீராவிலிருந்து இஸ்லாமியப் புனர்நிர்மாணப் பணி பற்றிய சிந்தனைத் தெளிவைப் பெறல். அந்த சிந்தனையோடும் குர்ஆன், ஸுன்னாவை அணுகுவதற்கு எமது முன்னோர்கள் வகுத்துத்தந்த வழிமுறைகளோடும் குர்ஆன், ஸுன்னாவை விளங்குதல். எமது சிந்தனைகளுக்கு குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரம் தேடும் வழிமுறையைக் கைவிட்டு குர்ஆன் ஸுன்னாவின் சிந்தனைப் போக்கைப் பிரதிபலிக்கும் வகையில் குர்ஆனினதும் ஸுன்னாவினதும் வசனங்களைக் கையாளுதல். நவீன பிரச்சினைகள் உட்பட அனைத்து விவகாரங்களிலும் குர்ஆன்,ஸுன்னாவின் கோட்பாடுகள், சிந்தனைகள், வழிகாட்டல்களின் பால் வருமாறு மக்களை அழைத்தல், இஸ்லாத்தை விளங்குவதிலும் அமுல்படுத்துவதிலும் கடை பிடிக்க வேண்டிய 20 அம்சத் திட்டமொன்றை கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் "கோளாறு எங்கே?" என்ற தனது நூலில் தருகிறார். (பக்கம்: 85,86) அவற்றையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம். இன்னும் பல நூல்களையும் இது விடயத்தில் இஸ்லாமிய அழைப்பாளர்கள் படித்திருக்க வேண்டும்.
இரண்டு அறிவுகள்
சமூகத்தை அறிவூட்டி வழிப்படுத்துவதில் முனைப்போடு செயல்படுதல். இரண்டு வகையான அறிவுகளை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ளான்.
1. வானத்தையும் பூமியையும் அதிலுள்ளவற்றையும் வசப்படுத்தும் ஆற்றல் மிக்க பகுத்தறிவும் அது சார்ந்த அறிவியல்களும்.
2. மனிதர்களையும் அவனது சிந்தனைப் பாங்கு, மனப்பாங்கு மற்றும் நடத்தைகள், வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரிகம் என்பவற்றை நெறிப்படுத்தி வழிநடத்தும் வேத அறிவு.
இவ்விரு அறிவுகளையுமோ அல்லது அவற்றில் ஒன்றையோ புறக்கணிப்பதனால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்திருத்தல். இந்த அறிவுத் துறைகளை முடியுமானவரை வளர்ப்பதன் மூலம் அறிவுச் சமூகமொன்றைக் கட்டியெழுப்பமுனைதல்.
இஸ்லாத்தை முன்வைக்கும் முறை
ஈமான், இபாதத், அக்லாக், ஆதாப், முஆமலாத், முஆஷராத், இகாமதுத்தீன் என எப்பகுதியையும் புறந்தள்ளாமல்,மறைக்காமல், முக்கியத்துவத்தைக் குறைக்காமல் இஸ்லாத்தை அதன் மொத்த வடிவில் தூய்மையாகவும் தெளிவாகவும் முன்வைத்தல். இஸ்லாத் தின் ஒரு பகுதியைக் காட்டி மற்றொரு பகுதியை மறைப்பது சாபத்துக்குரிய செயலாகும். அது மட்டுமல்ல, அர்த்தமற்ற கதைகள் புராணங்களால் இஸ்லாத்தை அசிங்கப்படுத்தாமல் குர்ஆன், ஸுன்னாவின் அறிவுபூர்வமான கோட்பாடுகள், சிந்தனைகள், வழிகாட்டல்களால் அதன் மகிமையை உலகறியச் செய்தல்.
"இபாதத்" எனும் வணக்கமும் அதன் பரப்பும்
"இபாதத்" எனும் வணக்கம் மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கமாகும். வணக்கம் என்றால் வாழ்க்கை வாழ்க்கை என்றால் வணக்கம் என்பதே "இபாதத்" பற்றிய இஸ்லாத்தின் கோட்பாடாகும். இந்தக் கோட்பாட்டை சுருக்கமாய் சிதைக்காமல் செயல்படுதல். ஒரு சில செயல்களோடு "இபாதத்" சுருங்கி விடுமானால் அதிகமான நடத்தைகளில் மக்கள் அலட்சியமாக இருந்துவிட்டுப் போவார்கள். இது பிழையான புரிதலும் வழிநடத்தலுமாகும்.
நடுநிலையும் வழிகேடும்
ஒரு தீமையின் தீவிரத்தைக் காணும்போது அதன் எதிர்விளைவாக மற்றுமொரு தீமையின் பக்கம் செல்லாதிருத்தல். அவ்வாறு செல்வது ஒரு வழிகேடாகும்.
உதாரணமாக, ஒரு சாரார் அளவு கடந்து விதியை நம்பியபோது மற்றொரு சாரார் அளவு கடந்து பகுத்தறிவைப் போற்றலாயினர். ஒரு சாரார் அளவு கடந்து மத்ஹப்களைப் பின்பற்றியபோது மற்றொரு சாரார் மத்ஹபுகளையே தூக்கி எறிந்தனர். இதனால் "நடுநிலை" எனும் இஸ்லாத்தின் சிறப்பியல்பு பாதிக்கப்படுகிறது. வழிகேடு தோற்றம் பெறுகிறது. நடுநிலை என்பது இஸ்லாத்தின் அனைத்து விவகாரங்களிலும் இழையோடும் அதன் சிறப்பியல்பாகும். அந்தச் சிறப்பியல்பு மறுக்கப்படும் போது தீவிர ஒருபக்க ஈடுபாடு அல்லது தீவிர ஒரு பக்க புறக்கணிப்பு ஆகிய இரு வழிகேடுகள் தோற்றம் பெறுகின்றன.
மாறாத அடிப்படைகள், மாறிவரும் சூழ்நிலைகள்
என்றும் மாறாத இஸ்லாத்தின் அடிப்படைகள், விதிகள் எவை என்பதை அறிந்திருத்தல். கால சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றம் பெறுபவை எவை என்பதையும் அறிந்திருத்தல். மாற்றங்களை அறிமுகம் செய்யும்போது இஸ்லாத்தின் அடிப்படைகளோடு முரண்படாது இருப்பதை உறுதி செய்தல். மாற்றம் என்ற பெயரில் அடிப்படைகளோடு முரண்டுபம் நூதனங்களை அறிமுகம் செய்யாதிருத்தல். மாற்றம் தேவையில்லை என்ற பெயரில் மாற வேண்டியதை விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ளும் கடும்போக்கையும் தவிர்த்தல். சுருக்கமாகக் கூறினால், காலத்துக்குத் தேவையான மாற்றங்களை உட்படுத்தி காலத்தால் மாறாத அடிப்படைகளையும் பாதுகாத்து இஸ்லாமியப் பணியை முன்னெடுத்தல்.
மனித இனம் ஒரு குடும்பம்
படைப்பினங்கள் அல்லாஹ்வின் குடும்பம். அவற்றுள் மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதி. அவனுக்காக அல்லாஹ் வானம்,பூமியையும் அவற்றிலுள்ளவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான் என்ற வகையில் மனித இனத்தின் மீது அன்பு கொள்ளல்,மனிதனது கன்ணியத்தைப் பாதுகாத்தல், மனித நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் உழைத்தல், இனவாதம்,பிரதேசவாதம் போன்ற நோய்களால் மனித நேயத்தை இழிவுபடுத்தாதிருத்தல், எப்போதும் நீதியின் பக்கம் நிற்றல்,உலகிலும் மறுமையிலும் எமக்கு நாம் விரும்புகின்ற அனைத்தையும் அத்தனை மனிதர்களுக்கும் விரும்புதல், மனிதனின் நல்வாழ்வுக்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளான இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சமூகங்களிடையே சமாதானத்தை யும் சகவாழ்வையும் புரிந்துணர்வையும் வளர்த்தல்.
முஸ்லிம் சமூகம் ஓர் உம்மத்தாகும்
அனைத்துப்பலம், பலவீனங்களுடனும் முஸ்லிம் சமூகத்தை ஓர் உம்மத்தாகக் கருதுதல். அதன் அறியாமைகளையும் பலவீனங்களையும் தவறுகளையும் பண்பாடாகக் களைய முயற்சித்தல். அன்பையும் சகோதரத்துவத்தை யும் சமூகத்தின் மத்தியில் வளர்த்தல், முஸ்லிம் சமூகத்தின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் அனைத்துக் காரணிகளையும் நிராகரித்தல், பணி செய்வதற்காகவே இயக்கங்கள் பாகுபாடு காட்டுவதற்கல்ல என்ற உண்மையை உணர வைத்தல். அனுமதிக்கப்பட்ட கருத்து வேறுபாடுகளில் கடும் போக்கைத் தவிர்த்து விட்டுக் கொடுப்போடு நடந்து கொள்ளுதல், சமூகத்தைப் பிளவுபடுத்தும் கட்சி அடிப்படையிலான அரசியலை மறந்து கொள்கை அடிப்படையிலான அரசியலை வளர்த்தல், மக்களை விரண்டோடச் செய்யும் "தன்பீர்" முறையைத் தவிர்த்து "தப்ஷீர்" முறையிலான தஃவாவை மேற்கொள்ளல். சிரமப்படுத்தும் அணுகுமுறைகளைத் தவிர்த்து இலகு படுத்தும் அணுகுமுறைகளை மார்க்கத் தீர்ப்புகளில் கைக் கொள்ளல், மாற்றங்களை ஏற்படுத்துவதில் பாய்ச்சல் போக்கை விடுத்து படிமுறைப் போக்கைக் கைக்கொள்ளல்.
குடும்ப மாண்புகள்
ஒழுக்க விழுமியங்களதும் பண்பாடுகளதும் உன்னதமான மனித இன விருத்தியினதும் பாசறையா கவும் பாதுகாப்பு அரணாகவும் விளங்கும் குடும்ப அமைப்பையும் அதன் மாண்புகளையும் பாதுகாத்தல் குடும்ப மாண்புகளைச் சீரழிக்கும் அனைத்து அறியாமைகளையும் கடுமையாக எதிர்த்து நிற்றல்.
பெண்கள்
இறுக்கமாக மூடி வைக்கமாலும் கட்டுப்பாடுகளின்றித் திறந்துவிடாமலும் இஸ்லாம் வழங்கிய உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெண்களுக்கு வழங்குதல். தங்களது ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தி குடும்ப மாண்புகளைப் பாதுகாப்பதோடு இஸ்லாத்தினதும் மற்றும் சமூகம், தேசம் என்பவற்றினதும் மேம்பாட்டுக் குப் பங்களிப்புச் செய்பவர்களாக பெண்களைப் பயிற்று வித்து வழிநடத்தல்.
வெளிப்படையான செயற்திட்டம்
அல்லாஹ்வின் தூதர் செய்த பணியை அதன் தத்துவங்களோடும் கோட்பாடுகளோடும் இன்று மேற்கொள்வதற்கான தெளிவான, பகிரங்கமான செயற்திட்டத்தைக் கொண்டிருத்தல். அத்திட்டம் கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவியதாக இருத்தல். மறைமுகமான, இரகசிய நிகழ்ச்சி நிரல்கள் இல்லாதிருத்தல். அனைத்திலும் வெளிப்படைத் தன்மையையும் திறந்த போக்கையும் கொண்டிருத்தல், ஷீஆக்கள் போன்று தருணம் பார்த்துத் தன்னை மாற்றும் "தகிய்யா" பண்பாட்டை தனது உறுப்பினர்களிடையே வளர்க்காதிருத்தல், இயக்க நலனைப் பாதுகாப்பதற்காக இரகசிய ஏற்பாடுகள், மறைமுகமான அமைப்புகள், மூன்றாம் படை போன்றவற்றை வைத்துக் கொள்ளாதிருத்தல், திறந்த உள்ளத்தோடும் நேரிய சிந்தனையோடும் சமூகத்தையும் அதன் பிரச்சினைகளையும் சிறந்த செயற்திட்டங்கள் மூலம் அணுகுதல்.
தனி மனித வழிபாடு இல்லை
எமது இயக்கத்தைச் சார்ந்த தலைவர்கள், அறிஞர்களிடம் அன்பும் மரியாதையும் வைப்பதில் தவறில்லை. எனினும்,அவர்களிடம் மட்டுமே சத்தியம் இருக்கிறது. அவர்கள் சொல்லாத ஒன்று சத்தியமாக இருக்க முடியாது. அவர்களிடமல்லாது பிறிதொருவரிடம் மார்க்கம் கேட்க வேண்டியதில்லை. அவர்கள் சொல்லும் வரை ஒரு செய்தியை எத்தகைய மகான் வந்து சொன்னாலும் செவிமடுக்க மாட்டோம். அவர்கள் வகுத்து வைத்த வழிமுறைகளே இறுதியானவை. ஏனைய அனைத்தும் வழிகேடுகளே எனும் சிந்தனைதான் தனி மனித வழிபாட்டை வளர்க்கிறது. இந்த சிந்தனையை முற்றாக நிராகரித்து எமது நீண்ட வரலாற்றில் அன்றும் இன்றும் நட்சத்திரங்களாக இலங்கிக் கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்கள், இமாம்கள் அனைவரையும் கௌரவிக்கும் பண்பாட்டையும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் கொண்டிருத்தல். எந்த இமாமையும் இஸ்லாமிய அறிஞரையும் அவமதிக்காமலும் தூற்றாமலு மிருத்தல். அவர்களது தவறுகளை மன்னிக்குமாறு அல்லாஹ்வை இறைஞ்சுதல். ஸஹாபாப் பெருமக்களைத் தூற்றும் ஷீஆக்களின் குணங்களை முற்றாக நிராகரித்தல்.
ஒருமுகப்பட்ட சிந்தனை
நீதி, பரஸ்பரம் ஒத்துழைத்தல், மன்னித்தல், சகோதரத்துவம், பாரபட்சமின்மை, நாகரிகமான பேச்சு, கருத்து வேறுபாடுகளின்போது பேண வேண்டிய ஒழுக்கங்கள், இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறி, அதன் பன்முகத்தன்மை, சர்வதேசத் தன்மை, இஸ்லாத்தின் பொது நோக்கங்கள், முஸ்லிம் சமூகத்தில் அனைவரும் அங்கீகரிக்கின்ற பொதுவான உடன்பாடுகள் போன்ற இன்னோரன்ன அம்சங்களில் சமூகத்தின் சிந்தனையை ஒருமுகப்படுத்தும் முயற்சியில் பகிரங்கமாகவும் வெளிப் படையாகவும் ஈடுபடுதல், இத்தகைய சிந்தனை ஒருமைப் பாட்டுக்குத் தடையாக எதிரும் புதிருமான சிந்தனை களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடாதிருத்தல்.
யதார்த்தத்தை விளங்கி எதிர்கொள்ளுதல்
சமூகத்தின் எழுச்சி, வீழ்ச்சிக்கான இறை நியதிகளை அறிந்திருப்பதோடு சமூகத்தினதும் நாட்டினதும் உலகினதும் சமகால சூழ்நிலைகளையும் விளங்கியிருத்தல். எதிர்பார்ப்புக்கும் நிதர்சனத்துக்குமிடையிலான தூரத்தை மட்டிடுதல், தெளிவான தகவல்கள், தரவுகளின் அடிப் படையில் முடிவுகளை மேற்கொள்ளல். அவசரம், ஊகம், மேலோட்டமான கணிப்பு என்பன எம்மை வழிநடத்தலாகாது. வெறும் உணர்ச்சிமயமான செயல்பாடுகளின் விளைவு விபரீதமாகவே அமையும். எனினும்,நெறிப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் அவசியமே.
அதேவேளை, அனைத்தையும் எமக்கெதிரானது என்றோ சதி என்றோ எதிர்மறையாக சிந்திப்பதைத் தவிர்த் தல்,வெற்றிகளையும் தோல்விகளையும் ஏற்கும் மனப்பான்மையைக் கொண்டிருத்தல். அவற்றுக்கான காரணி களையும் அறிந்திருத்தல். வெற்றியாளர்கள் மாற்றீடு களையும் தீர்வுகளையும் முன்வைப்பார்கள். தோல்வியடைந்தவர்கள் நியாயங்களையும் போதாமைகளையும் பேசுவார்கள். எதிலும் காரணிகளை அறிந்து விளைவுகளைத் தீர்மானித்து நலன்களை முதன்மைப்படுத்தி செயற்படும் போக்கைக் கொண்டிருத்தல்.
தூய்மையும் சரியானதும்
எண்ணத்தில் தூய்மையை வளர்த்துக் கொள்ளல். உள்ளத்தின் கட்டுப்பாடுகள் உறுப்புகளின் கட்டுப்பாடுகளை விட முக்கியம் வாய்ந்தவையாகும். உள்ளத்திள் பாவங்கள் உறுப்புகளின் பாவங்களை விட பாரதூரமானதாகும்.
அதே நேரம் சரியானதையும் செய்ய வேண்டும். தூய்மையான எண்ணத்தோடு பொருத்தமற்றவற்றை செய்வதும் அல்லது பொருத்தமானவற்றை தூய்மையான எண்ணமின்றிச் செய்வதும் பிழைகளாகும். தெளிவான மார்க்க விளக்கம் என்பது,சரியையும் பிழையையும் வேறுபடுத்தி அறிவது மட்டுமல்ல. மாறாக, இரண்டு சரிகளில் மிகச் சரியானது எது என்பதையும் இரண்டு பிழைகளில் கொடிய பிழை எது என்பதையும் அறிந்திருப்பதே. அது மட்டுமல்ல, அதிகமானோர் தமக்கு அவசிய மற்றவற்றை அறிந்திருக்குமளவு தமக்கு அவசியமானவற்றை அறிந்திருப்பதில்லை. பிழையான போக்குகளை விமர்சிக்குமளவு சரியான போக்குகளுக்கான இலக்கு களை மட்டிடத் தெரியவில்லை. இவ்வாறானதொரு நிலையில் தூய்மையான எண்ணம் ஒன்றால் மட்டும் வெற்றிகள் ஈட்டப்படுவதில்லை. அதே போன்று சரியானதைச் செய்வதால் கிடைக்கும் பாராட்டுகள், வெகுமதிகள், உயர்வுகள் என்பவற்றைத் தத்தமது குறிக்கோள்களாக ஆக்கிக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
சுய விசாரணை
ஆக்கம் தரும் நல்வினைகள், முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுக்கும் எதிர்மறைகள் என்பவற்றைக் கண்டறிதல். சுய மதிப்பீடு, சுய விசாரணை என்பவற்றின் மூலம் தொடர்ச்சியாகக் குறைகளைக்களையும் முயற்சியில் ஈடுபடுதல். பிறரிடமிருந்து வரும் விமர்சனங்களை உதாசீனம் செய்யாது உண்மைகளை ஏற்றுக் கொள்ளல். தம்மை மறுசீரமைப்பதில் எப்போதும் நெகிழ்வுடனிருத்தல். நிபுணத்துவத்தை மதிப்பதன் மூலம் துறை சார்ந்தவர்களின் உள்ளீடுகளைப் பெறுதல். தமது தோல்விகளுக்கு பிறரது வெற்றிகளே காரணம் எனக் கருதாதிருத்தல்.
எதிரிகள் குறித்த எச்சரிக்கை
இஸ்லாமிய உம்மத் குறிவைக்கப்பட்ட ஓர் உம்மத்தாகும். அதன் எதிரிகள் நேற்று முளைத்தவர்களல்லர். இஸ்லாத்தின் உதயத்தோடு உள்ளும் புறமும் அவர்கள் தோன்றி விட்டார்கள். அவர்களுக்கு நீண்ட வரலாறுண்டு. அவர்களது விடயத்தில்தான் இந்த உம்மத்துக்கு எச்சரிக்கையும் அபாய உணர்வும் மிகைத்திருக்க வேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் எதிரிகளாக நோக்குவதைத் தவிர்க்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தினுள் எதிரிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஒரு பாரிய வழிகேடாகும். பிழையான கொள் கைகளுக்கும் அறியாமையினால் அவற்றை உண்மை என்று நம்பியவர்களுக்குமிடையில் வேறுபாடு அறிய நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எதிர்காலம் இஸ்லாத்திற்கே
அல்லாஹ் வெற்றிகளை வாக்களிக்கிறான். அற்கான காரணிகளையும் வகுத்து விளக்கியுள்ளான். அவன் உதவி செய்தால் தோல்வியுறச் செய்வதற்கு யாரால் முடியும்? என்று அவன் வினா எழுப்புகிறான். அவ்வாறிருக்க, தோல்விகள் நிச்சயிக்கப்பட்டுவிட்டன பித்னாக்கள் மலிந்து விட்டன இறுதிக் காலம் நெருங்கி விட்டது நடப்புக்களை இனி மாற்ற முடியாது துஆவைத் தவிர எமக்கு இப்போது வழிகள் தெரியவில்லை என்றெல்லாம் அவநம்பிக்கையையும் தளர்வையும் ஏற்படுத்துவது நேர்வழியின்பாற்பட்ட செயலன்று. எதிர்காலம் இஸ்லாத்திற்கே என்ற நம்பிக்கையையும் அல்லாஹ்வின் வாக்குறுதிகள் நிறைவேறும் செயற்படுங்கள் என்ற உத்வேகத்தையுமே வழங்க வேண்டும்.
முக்காலத்தையும் பயன்படுத்தும் நிலை
கீர்த்திமிக்க எமது இறந்த காலத்தைப் பற்றிப் பேசுவதோடு தமது பணி முடிவடைவதாக நினைப்போர்... சோகமான நிகழ்காலத்தை விமர்சிப்பதால் தமது பங்களிப்பை வழங்கி விட்டோம் என்று கருதுவோர்... மஹ்தி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வருகையின் மூலம்தான் எமது எதிர்காலம் மலரப் போகிறது என ஆசிப்போர்.... எதையும் சாதித்துவிடப் போவதில்லை. மாறாக, இறந்த காலத்திலிருந்து படிப்பினை பெற்று நிகழ்காலத்தின் வளங்களை ஒன்றுதிரட்டி எதிர்காலத்திற்காகத் திட்டமிடும் சாணக்கியர்களால்தான் இஸ்லாம் புத்தெழுச்சி பெறுகிறது. ஆக, முக்காலத்திலும் வாழ முடியுமான ஒரு செயலாற்றலைப் பெற்றிருத்தல் இஸ்லாத்தின் இலட்சியங்களுக்கு இன்றியமையாதது.
இத்தகைய பண்பு நலன்களையும் நடைமுறைகளையும் இஸ்லாமிய இயக்கங்கள் கைக்கொள்ள வேண்டும். இயக்கம் என்பது ஒரு தனி மனிதனைப் போன்றதல்ல. இயக்கத்தின் இயல்பும் நடைமுறைகளும் இலட்சியங்களும் தனி மனிதனை விட வேறுபட்டவை.
இயக்கத்தை இஸ்லாமிய விழுமியங்களாலும் இலட்சியங்களாலும் வரையறுக்கத் தவறினால் அந்த இயக்கத்தினால் இஸ்லாத்தின் வளர்ச்சியும் எழுச்சியும் பல தசாப்தங்கள் பின் தள்ளப்படலாம். எனவேதான் அற்ப காரணங்களுக்காக இயக்கங்களைப் புதிதாக உருவாக்குவதைத் தவிர்த்து இருக்கும் இயக்கங்களை நெறிப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். ஓர் இயக்கம் நேரான பாதையில் செல்வது அங்கிருக்கும் மனிதர்களைப் பொறுத்ததல்ல. மாறாக,அந்த இயக்கத்தை வழிநடத்தும் கொள்கைகளையும் இஸ்லாமிய விழுமியங்களையும் பொறுத்ததே. ஓர் இயக்கத்திலுள்ள ஒரு சில தனி மனி தர்கள் சிலபோது தவறு செய்யலாம். ஆனால், இயக்கம் தனது கொள்கையிலோ விழுமியங்களிலோ சோரம் போக முடியாது.
Subscribe to:
Posts (Atom)