widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, October 26, 2012


இவ்வார ஜூம்ஆ உரை (26.10..2012)
குத்பா உரை: மௌலவி  ஏ.எம்.அப்துல் கனி (ஹாமி)
தலைப்பு: கடன் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்






Tuesday, October 23, 2012

குர்பானி சட்டங்கள் (துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்)





- மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி -
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர்ஆனில் பின்வருமாறு இந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
“எனவே, சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.
அவருடன் இணைந்து செயற்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது, “என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்டார். அ(தற்க)வர், “என்னருமைத் தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்!” என்று கூறினார்.
அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (மகனாகிய) இவரை நெற்றி நிலத்தில் படக் கிடத்திய போது,
இப்றாஹீமே! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்திவிட்டீர் என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.
நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும்.
இவருக்குப் பகரமாக, மகத்தான ஒரு பலிப் பிராணியை ஆக்கினோம்.
பின்வருவோரில் அவர் மீது (புகழை) விட்டு வைத்தோம்”. (37:101-108)
குர்பானியின் நோக்கம் இறையச்சம் என்பதைத்தவிர வேறில்லை என்பதைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள்; தெளிவு படுத்துகின்றன.
“குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது”. (22:37)
உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதன் அவசியத்தை மற்றுமொரு திருமறை வசனம் எடுத்துக் கூறுவதுடன் நபி(ஸல்) அவர்களைக் குர்பானி கொடுக்குமாறும் கட்டளையிடுகிறது.
“உமது இறைவனைத் தொழுது குர்பானி கொடுப்பீராக” (108:02)
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு அடிபணிந்து தமது வாழ்வில் குர்பானி எனும் அமலை நிறைவேற்றி யுள்ளார்கள்.
“நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள கறுப்புக் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளைத் தன் கரத்தால் அறுத்துப் பலியிட்டார்கள்”.
(அனஸ்(ரலி) – புகாரி, முஸ்லிம்)
இந்த வகையில் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினரும் இக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை:
ஒருவர் குர்பானி கொடுப்பதாக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும்வரை நகம், முடி ஆகியவைகளை நீக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்;
“உங்களில் ஒருவர் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்பினால் துல் ஹஜ் மாதம் தலைப்பிறை முதல் அதனை நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் என்பவற்றைக் களைவதைத் தவிர்த்துக்கொள்ளட்டும்.
(உம்மு ஸல்மா(ரலி), முஸ்லிம்)
குர்பானிப் பிராணிகள்:
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளையே அறுத்துப் பலியிட வேண்டும். இவை அல்லாத ஏனைய பிராணிகளை அறுத்துப் பலியிட்டால் “உழ்ஹிய்யா” நிறைவேறாது.
“ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகம்) நாற்கால் பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக குர்பானியை நாம் ஏற்படுத்தினோம்”. (22:34)
பிராணியின் வயதெல்லை :
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
“முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )
இங்கு “முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
“முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸில் நபித்தோழர் “முஸின்னா”வை விட சிறந்த ஆறுமாதக்குட்டி உள்ளது என்ற கூற்று நபி(ஸல்) அவர்கள் “முஸின்னா”வைத்தான் குர்பானி கொடுக்க கட்டளையிட்டுள்ளார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. உமக்குத்தவிர வேறு எவருக்கும் இது அனுமதியில்லை என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளையும் முஸின்னாவைத் தான் கொடுக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக விளக்குகின்றது.
அறுத்துப் பலியிடத் தகாதவைகள்:
உழ்ஹிய்யாக் கொடுக்கப்படும் பிராணி குறையற்றுக் காணப்படல் வேண்டும்.
1) வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய்
2) வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருடு
3) வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம்
4) மிகவும் மோசமாக மெலிந்திருத்தல் போன்ற குறைகள் இருத்தல் கூடாது. (திர்மிதி)
அறுத்துப் பலியிடும் நேரம்:
ஹஜ்ஜுப் பெருநாள் சூரியன் உதயமாகி, பெருநாள் தொழுகையை நிறைவேற்றி முடித்தது முதல் அய்யாமுத் தஷ்ரீகின் கடைசி நாள் (துல்ஹஜ் மாதம் பதின்மூன்றாம் நாள்) வரை “உழ்ஹிய்யாவை” நிறைவேற்றலாம். பெருநாள் தொழுகைக்கு முன்னர் அறுக்கப்படுவது உழ்ஹிய்யாவாகக் கணிக்கப்பட மாட்டாது.
“நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் “யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டுக் குர்பானி கொடுக்கின்றாரோ, அவர்தான் அக்கடமையை நிறைவேற்றியவராவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ, அவர் கடமையை நிறைவேற்றியவராக மாட்டார்” என்று குறிப்பிட்டார்கள். (பரா(ரலி) – புகாரி)
குர்பானிப் பிராணிகளில் ஆணும், பெண்ணும்:
பெட்டை ஆடுகளையும், பசுக்களையும், கிடாய்களையும் முஸ்லிம்கள் வித்தியாசமாகவே பார்க்கின்றனர். சிலபகுதிகளில் பெட்டை ஆடுகள் சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது போன்று கருதுகின்றனர். சாதாரண நேரத்தில் பெட்டை ஆடுகளைச் சாப்பிடக் கூடாது எனக் கருதக் கூடியவர்கள் குர்பானி கொடுப்பதற்கு பெட்டை ஆடுகள் அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர்.
இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.
உண்பதற்கு அனுமதிக்கப் பட்டவைகளில் கிடாயும், பெண்ணாடும், காளையும் பசுவும், சேவலும் கோழியும் சமமானவைதான் என்பதை முஸ்லிம்கள் முதலில் நம்ப வேண்டும். பறவைகளில் இதை ஏற்கக் கூடியவர்கள் கால்நடைகளில் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர். குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும்தான் தகுதியானவை என்று திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை; நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் கூறப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், “ஜத்உ” (கன்று) என்று ஆண் பாலில் கூறப்பட்டுள்ளது போன்றே, “ஜத்அத்” என்று பெண் பாலிலும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆண் கால்நடைகளைத்தான் உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கூட்டுச் சேர்ந்து கொடுத்தல்:
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”
(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)
குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.
“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.
(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)
அறுக்கும் முறை:
1) ஆடு-மாடுகளை ஒருக்கணித்து படுக்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
2) ஒட்டகங்களை நிற்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
3) அறுக்கும் போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று கூறவேண்டும். (புகாரி)
தாமே அறுப்பது நபிவழி:
உழ்ஹிய்யாக் கொடுப்பவர் அறுக்கத் தெரிந்தவராய் இருந்தால் – தனது பிராணியைத் தானே அறுத்தல் சுன்னத்தாகும்.
நபியவர்கள் – அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் பெயர் கூறித் தக்பீர் மொழிந்து “இறைவா! எனக்காகவும், உழ்ஹிய்யாக் கொடுக்காத என் உம்மத்தினர்களுக்காகவும்” என்று கூறி ஓர் ஆட்டை அறுத்தார்கள். (அபூதாவூத், திர்மிதீ)
உழ்ஹிய்யா மாமிசத்தைப் பங்கிடல்:
“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தனது உழ்ஹிய்யாவிலிருந்து தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.
“அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்: வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்”. (22:28)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“மாமிசத்தை நீங்களும் சாப்பிட்டுப் பிறருக்கும் உண்ணக் கொடுங்கள், உங்களுக்காகச் சேமித்தும் வையுங்கள்”. (புகாரி, முஸ்லிம், நஸாயி)
குர்பானி மாமிசத்தை காபிர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை.
“(குர்பானிக்கான) ஒட்டகங்களை அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாக உங்களுக்கு நாம் ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மை உண்டு. எனவே, (அது உரிய முறையில்) நிற்கும் போது அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்து) விடுங்கள். அது தனது விலாப் புறங்களின் மீது சாய்ந்து விட்டால் அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். உள்ளதைக் கொண்டு திருப்தியடைபவனுக்கும், யாசிப்பவனுக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறே அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தியுள்ளோம்”. (22:36)
இந்த அல்குர்ஆன் வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும், யாசிப்பவர்கள் என்றும் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனினும், ஹஜ்ஜுப் பெருநாள் முஸ்லிம்களின் பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றைய நாளில் பசியின்றி இருப்பது அவசியம். இந்த அடிப்படையில் தான் குர்பானி கொடுக்கப்படுகிறது. எனவே, முதலிடம் முஸ்லிம்களுக்குக் கொடுப்பது முக்கியமாகும். கூடுதலாக இருக்கும்போது காபிர்களுக்குக் கொடுத்தால் எந்தத் தவறுமில்லை.
மரணித்தவர்கள் சார்பாக குர்பானி:
மரணித்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்குச் சரியான ஹதீஸ் எதுவும் காணக்கிடைக்கவில்லை. இதற்கு சிலரால் எடுத்துக் காட்டப்படும் ஆதாரம் சரியற்றதாகவும், பலவீனமாகவும் உள்ளது.
“ஆதமின் மகன் இறந்து விட்டால் மூன்று விடயங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை, நிரந்தர தர்மம், பயன் தரும் கல்வி, தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று” நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூஹுரைரா(ரலி) – முஸ்லிம்)
மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்கும் வழி இந்து மூன்றும்தான். இது அல்லாத வேறு வழிகளில் நன்மை சேரும் என்றால் அதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். குர்பானி விடயத்தில் நபி(ஸல்) அவர்கள் இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுக்கும் படி கூறவில்லை. ஸஹாபாக்களும் கொடுத்ததில்லை.
இறந்தவர்கள் சார்பாகக் குர்பான் கொடுக்கலாம் என்று கூறக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸும் ஆதாரபூர்வமானது அல்ல.
அலி(ரலி) அவர்கள் இரண்டு ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். ஒன்றைத் தனக்காகவும், இன்னொன்றை நபி(ஸல்) அவர்களுக்காகவும் கொடுத்தார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். எனவே, அதை ஒருபோதும் விடமாட்டேன் என்றார்கள்.
(ஹன்ஷ் – திர்மிதி, அபூதாவூத்)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஷரீக் இப்னு அப்துல்லாஹ், அபுல் ஹன்ஸா, ஹன்ஷ் இப்னு முஃதமர் ஆகிய மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெறுவதால் இந்தச் செய்தி ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல.
குர்பானியின் மூலம் அல்லாஹ் எதிர்பார்ப்பது இறையச்சம் மட்டுமே! இந்த இறையச்சம் அவரவர் கொடுக்கும் போதுதான் வெளிப்படும். இறந்தவருக்காக நாம் கொடுப்பது அவரின் இறையச்சத்தை வெளிப்படுத்தாது.
எனவே, உழ்ஹிய்யா எனும் வழி முறையை நபிவழி பேணி நாமும் கொடுக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.!

Friday, October 19, 2012


இவ்வார ஜூம்ஆ உரை (05.10..2012)
குத்பா உரை: மௌலவி  எம்.என். ழபருள்ளா
தலைப்பு: இறை அச்சம்


Thursday, October 18, 2012

ஏகத்துவப் பிரச்சாரத்தில் பி.ஜெயின் பங்களிப்பு

ஏகத்துவப் பிரச்சாரத்தில் பி.ஜெயின் பங்களிப்பு (1)

 ஏகத்துவப் பிரச்சாரத்தில் பி.ஜெயின் பங்களிப்பு (1) 
சகோதரர் பீ.ஜே யின் மூலம் தமிழ் பேசும் நல்லுலகிற்கு இஸ்லாத்தின் சத்தியக் கருத்துக்களை அல்லாஹ் தெளிவாக்கினான். அவர் மூலம் உருவாக்கப்பட்ட செடி இன்று மரமாக கிளைகள் விட்டு பல நாடுகளுக்கும் விரிவடைந்து சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றது மட்டுமன்றி மூட நம்பிக்கையிலும், மௌட்டீகத்திலும் திலைத்திருந்த பலரை ஏகத்துவம் என்ற நேரான பாதைக்கு அல்லாஹ் மாற்றியிருக்கிறான்.
ஆலிம்கள் என்றால் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவதும், நபியின் பிறந்த நாள் (?) விழா என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலை ஒதுவதும், ஐந்து நேரம் தொழுகை நடத்துவதும் தான் என்பதைத் தாண்டி, சமுதாயப் போராட்டத்தில் ஆலிம்கள் தங்களை ஈடுபடுத்தி நமது சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புபவராக இவர் இருந்து வருகின்றார். 
சினிமாவில் மூழ்கி, மரணித்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் இவருடைய பேச்சின் மூலமும், எழுத்தின் மூலம் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்ற முனைந்தனர்.
இன்றைக்கு இவரையும் இவர் சார்ந்திருக்கும் ஜமாத்தையும் எதிர்க்கும் பலரும் அன்றைக்கு இவருடைய கருத்துக்களின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றால் அது மிகையல்ல.
குர்ஆன், சுன்னாவை வாயலவில் பேசிவிட்டு தனது வாழ்வில் அதன் வாசைன கூட இல்லாமல் இருக்கும் பிரச்சாரகர்களுக்கு மத்தியில் சொன்னதை தனது வாழ்வில் தன்னால் முடிந்த வரை பின்பற்றி நடக்கும் ஒரு சிறப்பான இஸ்லாமியப் பிரச்சாரகராக சகோதரர் பீ.ஜே அவர்களை நாம் கண் முன்னால் காணக் கிடைக்கிறது.
தமிழ் பேசும் நல்லுலகில் இஸ்லாத்தின் தூய கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கு தனது வாழ்நாளையே அர்பணித்த சகோதரர் பீ.ஜே அவர்கள் தற்போது புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்து ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்திக்கும் இவ்வேலையில் சகோதரர் பீ.ஜே யைப் பற்றி தெரியாதவர்களுக்கும் அவரைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கும் விதமாகவும், தெரிந்தவர்கள் இன்னும் சில தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்தக் ஆக்கத்தை வெளியிடுகின்றேன்.
அல்லாஹ் சகோதரர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் நோயை குணப்படுத்தி அவரின் பேச்சாற்றல் மூலமும், எழுத்தாற்றல் மூலமும் இந்த சமுதாயத்திற்கு இன்னும் பல நன்மைகளை வழங்க வேண்டும் என்று தினமும் பிரார்த்திப்போமாக! RASMIN M.I.Sc
யார் இந்த பீ.ஜே (P.J) ? 
  RASMIN M.I.Sc 
பீ.ஜே என்ற அடைமொழி மூலம் அறியப்பட்டுள்ள பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பல சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு பேச்சாளராக மட்டுமல்லாமல்,எழுத்தாளராகவும், சிறந்த சமூக சேவகராகவும் அறியப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் தமிழ்நாட்டில், தொண்டி என்ற ஊரில் பிறந்த இவர், இஸ்லாமிய மார்க்த்தைத் தெளிவாக கற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி அதன் மூலம் பிரச்சாரக் களத்தில் தனக்கென ஒரு தனியிடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டுள்ளார்.
1980 காலப் பகுதியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் புறப்பட்ட இவருடைய பிரச்சார வாழ்க்கையில் இதுவரைக்கும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக ஆயிரக் கணக்கான உரைகள் நிகழ்த்தியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், திருமறைக் குர்ஆனை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் மொழி பெயர்த்தது மட்டுமன்றி அதற்கு அழகிய முறையில் விளக்கவுரையும் எழுதியுள்ளார்.
மார்க்கப் பிரச்சாரம் மாத்திரம் தான் தங்கள் வேலை என்றெண்ணிக் கொண்டிருக்கும் பல மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஆலிம்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் முன்னெடுப்புக்களிலும் தன்னை இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.
ஆலிம்கள் என்றால் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவதும், நபியின் பிறந்த நாள் (?) விழா என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலை ஒதுவதும், ஐந்து நேரம் தொழுகை நடத்துவதும் தான் என்பதைத் தாண்டி,சமுதாயப் போராட்டத்தில் ஆலிம்கள் தங்களை ஈடுபடுத்தி நமது சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புபவராக இவர் இருந்து வருகின்றார்.
  ஏகத்துவப் பிரச்சாரத்தில் பி.ஜெயின் பங்களிப்பு : 
அல்லாஹ்வை வணங்க வேண்டிய சமுதாயம், அவ்லியாக்கள் (?) என்று மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களை வணங்கி வழிபட்டு வந்ததைப் பார்த்து அதற்கெதிராக இஸ்லாத்தின் உண்மை நிலையை மக்கள் மத்தியல் எடுத்துரைக்க வேண்டும் என்று ஏகத்துவப் பிரச்சாரத்தை 1980களில் தமிழகத்தில் இவர் ஆரம்பித்தார்.
கப்ரு வணக்கத்திற்கெதிராக குரல் கொடுத்த காரணத்தினால் பல இடங்களில் தாக்கப்பட்டு, அல்லாஹ்வின் உதவியினால் உயிர் பிழைத்தார்.
உயிரே போனாலும் கொள்கையை சொல்லாமல் விட மாட்டேன் என்ற கொள்கை உறுதியினால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இவருடைய பிரச்சாரம் சூடு பிடித்தது. தமிழகத்தின் பல இளைஞர்கள் இவருக்குப் பின்னால் அணி வகுத்தார்கள்.
நவீன தாக்கத்தை உண்டாக்கிய "நஜாத்" பத்திரிக்கை :
ஏகத்துவப் பிரச்சாரத்தை எழுத்து மூலமும் எத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துபையில் பணியாற்றும் தமிழ் கூறும் சகோதரர்களினால் நட்த்தப்பட்ட ஐ ஏ சி (இஸ்லாமிய விழிப்புணர்வு மையம்) என்ற அமைப்பின் சார்பில் "நஜாத்" என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை இவரை ஆசிரியராகக் கொண்டு துவங்கப்பட்ட்து. அது வரை காலமும் பேச்சாளராக மாத்திரமே அறியப்பட்ட பி.ஜெ நஜாத் பத்திரிக்கை மூலம் எழுத்தாளராகவும் அறிமுகமானார்.
ஆம் ஒவ்வொரு செய்தியையும் மிக அழகிய முறையில் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் விதமாக பேசும் இவர் எழுத்திலும் அதே முறையைக் கையாண்டார்.
கப்ரு வணக்கத்திற்கு எதிரான இவருடைய எழுத்துக்கள் "நஜாத்" பத்திரிக்கை மூலமாக தமிழகத்தின் மூலை முடுக்குகளையும் தாண்டி வெளிநாடுகளிலும் தடம் பதிக்க ஆரம்பித்தது.
மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புக்காக சென்றிருந்த மக்கள் மத்தியில் பி.ஜெ அவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களும் அபார தாக்கத்தையே உண்டாக்கியது எனலாம்.
சினிமாவில் மூழ்கி, மரணித்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் இவருடைய பேச்சின் மூலமும், எழுத்தின் மூலம் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்ற முனைந்தனர்.
இன்றைக்கு இவரையும் இவர் சார்ந்திருக்கும் ஜமாத்தையும் எதிர்க்கும் பலரும் அன்றைக்கு இவருடைய கருத்துக்களின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றால் அது மிகையல்ல. (இவருடன் இருந்த பலர் இவரை விட்டும் விலகிச் சென்றதற்கான காரணத்தை இறுதியில் விளக்குவோம்).
நடிகர்களுக்கு பால் அபிஷேகம் நடத்திய முஸ்லிம் இளைஞர்கள் "நஜாத்"பத்திரிக்கையின் வாசகர்களாக மாறினார்கள். ஏகத்துவக் கருத்துக்களை மற்றவர்களுக்கு பரப்புவது மட்டுமன்றி குர்ஆனை ஆழமாக படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் இந்தப் பத்திரிக்கை உண்டாக்கியது.
இன்றைக்கும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தவ்ஹீத் வாதிகளை "நஜாத் காரர்கள்" என்று அழைக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. காரணம் நஜாத் பத்திரிக்கை தான்.
ஆனால் ஐ ஏ சி அமைப்பின் மூலமும், அதன் பொருளாதாரத்தின் மூலமும் உருவாக்கப்பட்ட நஜாத் பத்திர்கையை உள்ளூரில் நிர்வாகம் செய்து வந்த அபூ அப்துல்லா என்பவர் தன்னுடைய சொந்த உரிமையாக பதிவு செய்து கொண்ட்தால் ஐ ஏ சிக்கு ஆதரவாக, நியாயத்துக்கு ஆதரவாக நஜாத் பத்திரிகையில் இருந்து விலகினார். அத்துடன் நஜாத் பத்திரிகை இருந்த இடம் தெரியாமல் போனது தனி விஷயம்.
புரட்சியை உண்டாக்கிய புரட்சி மின்னல் :
இதன் பின்னர் மதுரையில் இருந்து நீண்ட காலமாக அப்துல்லா என்பவர் புரட்சி மின்னல் என்ற பெயரில் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார் அவர் ஐ ஏ சி யைத் தொடர்பு கொண்டு இந்தப் பத்திரிகையை நீங்கள் நட்த்துங்கள் என்று கூறி ஒப்படைத்தார். அந்தப் பத்திரிகையில் பீஜே தொடர்ந்து எழுதி வந்தார்.
அறிவுக் கண்களைத் திறந்த அல்ஜன்னத் :
இவருடைய எழுத்துத் துறையின் இன்னொரு பரிணாமமாக உருவானதுதான் "அல்ஜன்னத்" பத்திரிக்கை. ஆன்மீகம் மட்டுமல்லாமல் அரசியில் கருத்துக்களையும் இதன் மூலம் பி.ஜெ முன்வைத்தார்.
பொது சிவில் சட்டம், இந்திய அரசியில் சாசனம் தொடர்பான விளக்கங்கள், குறைகள், பாதிக்கப்படும் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் தங்கள் உரிமையை வென்றெடுப்பதற்காக சட்ட ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை இதன் மூலம் இவர் தெளிவுபடுத்தினார்.
ஷாஃபி, ஹனபி என்று ஆளுக்கு ஒரு இமாமை பிடித்துக் கொண்டு மத்ஹபுகள் என்ற வழி கெட்ட சிந்தனையில் இருந்தவர்களிடம் மத்தபுகளின் ஆபாசங்களையும், அசிங்கங்களையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தியது மாத்திரமன்றி, ஹதீஸ்கள் என்ற பெயரில் போலியாக மக்களிடம் புகுத்தப்பட்டிருந்த செய்திகளையும் தெளிவுபடுத்திக் காட்டுவதற்குறிய சிறந்த ஊடகமாக அல்ஜன்னத்தை இவர் பயன்படுத்தினார்.
இயக்க ரீதியிலான கொள்கை முன்னெடுப்புக்கள் :
ஆரம்பம் முதல் பல இயக்கங்களில் இணைந்திருந்த இவர் குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் யாருக்கும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் உடைத்து சொல்ல வேண்டும் என்பதற்காக ஜாக் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கினார். அதன் தலைவராகவும் இருந்தார்.
பிரசாரப்பணியில் தீவிரமாக ஈடுபட தலமைப் பொறுப்பு தடையாக இருப்பதாக கூறி அந்த இயக்கத்தினர் விரும்பாத போதும் வலுக்கட்டாயமாக கமாலுத்தீன் மதனியை அதன் தலைவராக ஆக்கினார்.
சிரிது காலம் அதில் இருந்து பிரச்சாரத்தை முன்னெடுத்த இவர் மார்க்க ரீதியிலான சில பிரச்சினைகள் காரணமாகவும், அரசியல் ரீதியிலும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தமுமுக என்ற இயக்கத்தைச் சில சகோதரர்களுடன் சேர்த்து உருவாக்கினார்.
நேரடி அரசியலில் இணைந்து வெறும் வாக்கு வங்கி அரசியல் நடத்தும் இயக்கமாக இல்லாமல் சமுதாயத்தின் நலன் காக்கும் இயக்கமாக தமுமுக இருக்க வேண்டும் என்பதற்காக எக்காரணம் கொண்டும் தேர்தலில் இறங்க மாட்டோம் என்ற ஒரு விதியையும் அமைப்பு விதியாக்கினார்.
ஏகத்துவ அறிஞர்களின் இடைவிடாத உழைப்பாலும் தீவிரமான பிரச்சாரத்தினாலும் இந்த இயக்கம் மக்களிடம் செல்வாக்கு பெற்றது.
பலதடைகளைத் தாண்டி இந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்ட பின்னர் இதன் அமைப்பாள பொறுப்பில் இருந்து விலகினார். திருக்குர் ஆன் தமிழாக்கம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுபட வேண்டியுள்ளதால் விலகுவதாகவும் அறிவித்தார். அன்றைய தமுமுகவில் தலைவர் பொதுச் செயலாளர் பதவிகலை விட மேலான முதனமையான பதவி அமைப்பாளர் பதவியாகும்.
அதன் பின்னர் அந்த இயக்கத்தின் பணிகளில் இருந்து விலகிக் கொண்டாலும் அதன் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பல ஆண்டுகள் இருந்தார். பொதுவாக ஒரு இயக்கத்தில் இருந்து விளகுவோர் அதற்கு எதிராக செயல்படுவது தான் வழக்கம். ஆனால் இவர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டாலும் அந்த இயக்கதில் இருந்து வந்தார்.
இதன் பின்னர் அவர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எஞ்சிய தவ்ஹீத்வாதிகளை வெளியேற்றினால் தான் சுன்னத் ஜமாஅத் ஆதரவும் கிடைக்கும். நாம் தேர்தலிலும் போட்டியிடலாம் என்று கருதி யாரும் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று முடிவு செய்தனர். இதைக் கண்ட பிறகு தான் தவ்ஹித் பிரச்சாரம் உங்களுக்குத் தடையாக இருக்குமானால்அதை எழுதி தாருங்கள் நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கூறினார். அந்த மதிகெட்டவர்கள் அப்படியே எழுதியும் கொடுத்தனர்.
தமுமுக வில் இருந்து இவருடன் சேர்த்து வெளியாகிய அனைத்து மார்க்க அறிஞர்களும் சேர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை தோற்றுவித்தார்கள்.
தவ்ஹீத் பிரச்சாரம் தான் நமது உயிர் மூச்சு என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு சமுதாய சேவையிலும் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தவ்ஹீத் பேசினால் மக்கள் வரமாட்டார்கள் என்ற இவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் கும்பகோனம் நகரில் பத்து லட்சம் முஸ்லிம்களைத் திரட்டி முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு போராட்டம் நடத்தினார். தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நடத்திய இந்த பேரணி இதற்கு முன் தமுமுக நடத்திய எல்லா போராட்டங்களை விடவும் பிரம்மாண்டமாக இருந்தது.
அதன் பின்னர் தஞ்சை, சென்னை தீவுத்திடல் என நடத்தப்பட்ட இரண்டு மாநாடுகளும் கும்பகோனத்தையும் மிஞ்சும் வகையில் இருந்தன. ஆனால் தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுக வளர்ச்சிக்கு தடை என்று கூறியவர்கள் பீஜே பிரிந்த பின்னர் ஒரு மாநில மாநாடையும் நடத்தவில்லை. நட்த்தினால் இரண்டையும் மக்கள் ஒப்பிட்டு பார்த்து தமுமுகவின் செல்வாக்கை விளங்கிக் கொள்வார்கள் என்று அஞ்சினார்கள்.
மாற்று மத அன்பர்களில் பலம் பெரும் இயக்கங்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது, இரத்ததான சேவையில் மாநிலத்திலேயே முதல் இடத்தில் இவ்வமைப்பு தான் இருக்கிறது என்றால் அதன் சமுதாய சேவை முன்னெடுப்புக்களின் வீரியத்தை அறிந்து கொள்ளுங்கள்.
  பி.ஜெ சந்தித்த விவாதக் களங்கள் : 
ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக விவாதக் களங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கப்ரு வணங்கிகள், கிருத்தவர்கள், காதியானிகள், கடவுள் இல்லை என்று வாதிடும் நாத்தீகர்கள், குர்ஆன் சுன்னா என்று தங்களையும் தவ்ஹீத் வாதிகளாக வாதிடுபவர்கள் என்று பலருடன் பல விவாதக் களங்களை சகோதரர் பி.ஜெ சந்தித்தார்.
முதன் முதலில் குமரி மாவட்டம் கோட்டாரில் கப்ரு வணங்கிகளுடன் விவாதம் நடந்தது. அதில் கேரளாவின் பெரிய ஆலிமாக கருதப்படும் அபூபக்கர் முஸ்லியார் உள்ளிட்ட பல பெருந்த்தலைக்கள் கேவலமான தோல்வியைத் தழுவினார்கள். அதன் பின்னர் குமரி மாவட்ட்த்தில் மாபெரும் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்ட்து. தமிழகம் முழுவதும் கப்ரு வணக்கத்தில் இருந்து மக்கள் விடுபட இந்த விவாதம் காரணமாக் இருந்த்து எனலாம்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் எந்த நபியும் இவ்வுலகுக்கு அனுப்பப்பட மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக இருக்க மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவனும் நபி தான் என்ற வழி கெட்ட கொள்கை கொண்ட காதியானிக் காபிர்களுடன் எதிர்த்து வாதிடுவதற்கு அனைவரும் பின்வாங்கிய நேரத்தில் இறைவனின் அருளினால் அவர்களுடன் பகிரங்க விவாதம் நடத்தி காதியானிகளின் குருட்டுக் கொள்கைக்கு சாவு மணி அடிக்க உதவினார்.
கஃபா நிலைக்குமா? என்ற தலைப்பில் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட ஜெபமணி என்ற பாதிரியாருடன் மதுரையில் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் கிருத்தவம் தூய்மைத் தன்மையை இழந்து மனிதர்களின் சொந்தச் சரக்குகள் பைபிலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நிரூபித்து ஒரு விவாதத்தை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து இலங்கையில் கல்முனையில் மத்ஹப் வாதிகளுடன் நடந்த விவாதத்திலும் பங்கு கொண்டார்.
பின்னர் கொழும்பில் கப்ரு வணங்கிகளுடன் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த மற்றொரு விவாதத்திலும் கலந்து கொண்டார்.
அதே போல் மவ்லிதுகளுக்கும், மதுகபுகளுக்கும் எதிராக கலியக்காவிளை என்ற இடத்தில் ததஜ சார்பாக மிகச் சிறப்பான ஒரு விவாதக் களத்தில் கலந்து கொண்டு சத்தியக் கொள்கையை நிலை நாட்ட பாடுபட்டார்.
ஒருவன் முஸ்லிம் என்று தன்னை சொல்லிக் கொண்டால் அவன் என்னிடம் வந்து பைஅத் – உறுதி மொழி தரவேண்டும் என்று வாதிட்டு பைஅத் செய்யாதவர்கள் அனைவரும் காபிர்கள் என்று குப்ர் பட்டம் சூட்டிய இலங்கை உமர் அலி என்பவருடன் இலங்கை புத்தளம் நகர மண்டபத்தில் பகிரங்க விவாதம் ஒன்றை நடத்தியதின் மூலம் உமர் அலியின் உளரல் மொழிகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவினார்.
அல்லாஹ் உருவமற்றவனா? அபத்தங்களும், ஆபாசங்களும். இமாம்களின் துணையின்றி குர்ஆனையும், சுன்னாவையும் விளங்க முடியாதா?, போன்ற தலைப்புகளில் கப்ரு வணக்கத்திற்கு வக்காலத்து வாங்கி மக்களை வழிகேட்டிற்கு அழைத்துக் கொண்டிருக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் சென்னையில் தொடர்ந்து நான்கு விவாதங்களை நடத்தினார்.
கடவுள் இல்லை எல்லாம் இயற்கை என்று வெற்றுக் கூச்சல் போடும் நாத்தீக திராவிட இயக்கத்தவர்களுடன் இறைவன் இருக்கிறான் என்பதை அழுத்தமாக பதிய வைக்க கடந்த ஆண்டு பகிரங்க விவாதக் களத்தில் அவர்களுடன் வாதிட்டார்.
இறுதியாக முஸ்லீம்களில் யாரும் என்னுடன் வாதிக்க வர மறுக்கிறார்கள். நான் சொல்லும் கிருத்தவ மதம் தான் உலகில் உண்மை மதம், என்று வெறிக் கூச்சல் போட்டுத் திரிந்த ஜெர்ரீ தோமஸ் என்ற கிருத்தவ பாதிரியாருடன் ததஜ சார்பாக கடந்த ஜனவரி மாதம் சென்னையில் பைபில் இறை வேதமா? என்ற தலைப்பில் ஒரு பகிரங்க விவாதத்தை நடத்தினார்.
இதன் விளைவாக இரண்டாவது தலைப்பான குர்ஆன் இறை வேதமா? என்ற தலைப்புக்கு வாதிக்க வராமலே ஓடினர் ஜெர்ரீ தோமஸ்.
இப்படி தனது 30 வருட கால பிரச்சாரக் களத்தில் பல விவாதக் களங்களையும் சந்தித்தார் சகோதரர் பி.ஜெ.
ஏகத்துவப் பிரச்சாரத்தில் பி.ஜெயின் பங்களிப்பு (2)
ஏகத்துவப் பிரச்சாரத்திற்காக பல தியாகங்களை செய்து தனது வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்காகவே இவர் அர்பணித்தார் என்பதில் நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆனால் இவருடைய கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுவதற்கு தக்லீத் –தனிமனித வழிபாடு நடத்துவதற்கு மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் கிடையாது.
பி.ஜெ சொன்னால் அனைத்தும் சரியாகத் தான் இருக்கும்.
அவர் தவறாக சொல்ல மாட்டார்.
அவரில்லாவிட்டால் தவ்ஹீத் பிரச்சாரம் கேள்விக் குறியாகிவிடும்.
இவருடைய ஆய்வுகள், கருத்துக்களில் தவரே இல்லை
என்று யாராவது வாதிட்டால் அவர் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் அல்லாஹ்வை இறைவனாக ஒத்துக் கொண்ட ஒவ்வொரு மனிதனும் அவனுடைய இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.
எந்த ஒரு மார்க்க விஷயமாக இருந்தாலும் அல்லாஹ் சொல்லியுள்ளானா?நபியவர்கள் காட்டித் தந்தார்களா? என்று தான் பார்க்க வேண்டுமே தவிர பி.ஜெ சொல்லிவிட்டார் என்று பின்பற்றுவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை. பி.ஜெ ஒரு செய்தியைச் சொன்னாலும் அதை அல்லாஹ் சொன்னானா? நபியவர்கள் சொன்னார்களா? என்று ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும்.
ஏன் என்றால் அவரும் சாதாரண மனிதர் தான் தன்னுடைய ஆய்வின் படி சரியானதாக தான் நினைக்கும் கருத்தை அவர் வெளியிடுகின்றார். குறிப்பிட்ட கருத்து தவறானது என்று யாராவது ஆதாரத்துடன் சுட்டிக் காட்டும் போது அதனை அவர் மாற்றிக் கொள்கின்றார். இதுவே இவரின் கருத்தில் சரியும் இருக்கும் தவறும் வரும் என்பதற்கான ஆதாரமாகும்.
பி.ஜெ அவர்கள் ஆரம்ப காலத்தில் தான் வெளியிட்ட பல கருத்துக்களை அவை தவறானவை என்று சுட்டிக் காட்டப்பட்டவுடன் திருத்தியிருக்கிறார்.
பி.ஜெ ஆரம்பத்தில் சொன்ன கருத்துக்களில் பின்னர் மாற்றிக் கொண்ட சில கருத்துக்கள்...
உதாரணத்திற்கு பி.ஜெ ஆரம்ப காலத்தில் பிரச்சாரம் செய்தவற்றில் தற்போது மாற்றிக் கொண்ட சிலவற்றை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.
ஏகத்துவக் கொள்கையை யாருக்கும் வளைந்து கொடுக்காமல் உடைத்துச் சொன்னார் அந்த அடிப்படைக் கொள்கையில் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறுகள் ஏற்பட்டு அதை சுட்டிக் காட்டும் போது அவ்வப்போது பகிரங்கமாகச் ஒத்துக் கொண்டு திருத்திக் கொண்டிருக்கிறார்.
இவரை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலை ஏற்படாத எந்த அறிஞரும் உலகத்தில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை.
இதற்கான காரணம்..
அறிவிப்பாளர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய அனைத்து நூல்களும் கிடைக்கப் பெறாமை.
பொதுவாக மனிதரிடம் காணப்படும் மறதி, கவனமின்மை.
ஒருவரைப் பற்றி செய்த விமர்சனத்தை அதே பெயருடைய மற்றவருக்குப் பொருத்தி விடுதல்.
இந்தத் துறையில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் செய்த விமர்சனங்களில் பெரும்பாலும் தவறு ஏற்படாது என்று எண்ணி அப்படியே அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்.
இது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.
தவ்ஹீத் ஜமாஅத் மூத்த அறிஞர்களைப் பொறுத்த வரை அவர்கள் அனைவருமே மத்ஹபை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கூடங்களில் தான் கற்றனர். அவர்கள் கற்ற கல்விக் கூடங்களில் ஹதீஸ் கலை குறித்து முறையாகக் கற்பிக்கப்படாததால் அந்தக் கலையைக் கூட சுய முயற்சியால் கற்கும் நிலையில் இருந்தனர்.
இதன் காரணமாகத் தான் துவக்க காலங்களில் சில ஹதீஸ்கள் குறித்து நிலை மாற்றம் ஏற்பட்டது.
தற்போது ஹதீஸ் கலை தொடர்பான அனைத்து நூல்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் தாம் பேசிய, எழுதிய, அங்கீகரித்த ஹதீஸ்களில் பலவீனமானவை உள்ளனவா? என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்று கருதியதால் அதன் அடிப்படையில் சில சட்டங்களைக் கூறினார்கள். பின்னர் அவை பலவீனம் எனத் தெரிய வரும் போது முன்பு பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் கூறிய சட்டத்தை தவறு என்று தெளிவுபடுத்தினார்கள்.
பெரும்பாலான மக்கள் அதனை அறிந்திருந்தாலும் இன்னும் அதிகமானவர்கள் தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் முன்னர் சரி என்று கூறி, பின்னர் தவறு என்று மாற்றியவற்றை அறியாமல் இருக்கின்றனர். எனவே அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அவற்றை பத்திரிக்கைகளிலும் சிடி க்களாகவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணம் கூறி உண்மையை மறைப்பதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும்.
மறுமையைப் பற்றிய அச்சம் இல்லாமல் குரோதப் புத்தி கொண்ட சில குறுமதியாளர்கள் இளக்காரம் செய்வார்கள் என்றாலும் தம் கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.
பெண்கள் கப்ர் ஸியாரத் செய்யலாமா?
பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்பது தான் முதலில் பி.ஜெ மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது.
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ (294), நஸயீ (2016), அபூதாவூத் (2817), அஹ்மத் (1926, 2472, 2829, 2952)
இச்செய்தியில் பாதாம் என்ற அபூஸாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.
பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கப்ரு ஜியாரத் செல்வதற்குத் தடையில்லை என்பதே சரியானதாகும்.
மரண பயத்தையும் மறுமைச் சிந்தனையையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் ல லாஹிகூன்" என்று சொல்"என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம்.) (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: முஸ்லிம் (1774)
நபியவர்கள் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கப்ரு ஜியாரத்தின் போது ஓத வேண்டிய துஆவைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
"அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் (1777)
"அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: புரைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி (974)
மண்ணறைகளை ஸியாரத் செய்கிறோம் என்று கூறிக் கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்குச் செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணை வைப்பு அரங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம். என்பதே மறு ஆய்வின் தெளிவான முடிவாகும்.
நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு திறக்கும் போது "தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
(பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்) (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாபூத் 2010, ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ)
இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று கூறி பி.ஜெ தனது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்திருந்தார்.
இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.
ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.
மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் பி.ஜெ யும் இதனை வழிமொழிந்தார்.
இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார்.
பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.
ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று பி.ஜெயும் பிரச்சாரம் செய்தார்.
மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.
ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்தது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.
ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி,முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி,முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது தெரிய வந்தது.
மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா? என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.
இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், "இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார்' என்று குறிப்பிடுகின்றார்.
இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.
இப்னு ஹிப்பான் அவர்களின் இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர்.
வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.
எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.
இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376)நபிமொழிக்கேற்ப நோன்பு துறக்கும் போதும் "பிஸ்மில்லாஹ்' கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும் என்று தனது மறு ஆய்வில் இதனைத் தெளிவு படுத்தினார்.
ஏகத்துவப் பிரச்சாரத்தில் பி.ஜெயின் பங்களிப்பு (3)
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா?
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்பதே ஆரம்ப கால நிலைப்பாடாக இருந்தது. இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்து வைத்தார்.
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஹாகிம் (3392)
ஆனால் மேற்கண்ட செய்தி ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இது நபியவர்கள் கூறியது கிடையாது. அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சொந்தக் கூற்று (மவ்கூஃப்) என்பதே சரியானதாகும் என ஹாபிழ் இப்னு ஹஜர் உட்பட பல்வேறு அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓத வேண்டும் என்று வருகின்ற அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும்.
கஹ்ஃப் அத்தியாயத்திற்குப் பொதுவாக சில சிறப்புகளைக் குறிப்பிட்டு சில ஸஹீஹான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் வெள்ளிக்கிழமை கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை என்பதே சரியானதாகும். என்று தனது மறு ஆய்வின் முடிவில் ஏற்கனவே தான் சொன்னதை மாற்றி அறிவித்தார் பி.ஜெ.
நடுவிரலில் மோதிரம் அணியலாமா?
நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைப்பாட்டைத் தான் ஆரம்பம் முதல் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் அது குறித்த ஹதீஸை மறு ஆய்வு செய்த போது இந்த விரல்களில் மோதிரம் அணிவது தவறல்ல என்ற முடிவு எட்டப்பட்டது.
இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
நடுவிரலையும் அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாக ஆஸிம் கூறினார். (முஸ்லிம் 3910)
இந்த ஹதீஸில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில் (ஹதீஸ் எண் 3910) "இரண்டில் எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை' என்று கூறப்படுகிறது.
இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள் (இப்னு மாஜா 3638) என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.
இரண்டையும் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ ரளியல்லாஹு அன்ஹு வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.
அதாவது ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.
எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக அறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும். என்ற முடிவுக்கு வந்தார்.
இப்படி தான் ஆரம்பத்தில் சொன்ன பல கருத்துக்கள் தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டவுடன் இவரால் திருத்தப்பட்டுள்ளது.
TNTJ மற்றும் SLTJ பிரச்சாரகர்கள் பி.ஜெ யைப் பின்பற்றுகின்றார்களா?
நிலைமை இப்படியிருக்க பி.ஜெயுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யும் பிர உலமாக்கள் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் அனைவரும் பி.ஜெ சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்கிறார்கள். பி.ஜெ அவர்களை தக்லீத் செய்கிறார்கள் என்ற வாதம் அண்மைக் காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் பி.ஜெ அவர்கள் தற்போது திருத்திக் கொண்டுள்ள பல விஷயங்கள் மற்ற உலமாக்களினால் சுட்டிக் காட்டப்பட்டதுதான் என்பதை ஏனோ இவர்கள் புரிய மறுக்கின்றார்கள்.
ஒருவரை கண்மூடிப் பின்பற்றுபவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?
தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களோ பல விஷயங்களை தாம் ஆய்வு செய்து மற்ற உலமாக்களுடன் அதைப் பற்றிய வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார்களே!
பி.ஜெயின் ஆய்வுக்கு மாற்றமாக கருத்துக் சொல்லி அதைப் பி.ஜெ அவர்களே ஏற்றுக் கொண்டு திருத்திய விஷயஙகள் பல இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் பொய்யையும், அவதூரையும் மாத்திரம் தங்கள் பிரச்சாரமாக இவர்கள் செய்வதற்குக் காரணம் இந்த ஜமாத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரைக் கொடுக்க வேண்டும் என்ற அடிமட்ட சிந்தனை ஒன்று தானே தவிர வேறில்லை.
தவ்ஹீத் ஜமாஅத்தில் நிர்வாக விஷயங்களிலும் மார்க்க விஷயங்களிலும் ஒருவரைக் கண்மூடி பின்பற்றும் நிலை இல்லை. நிர்வாகம் சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் கூட சக நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து அனைவரின் ஒப்புதலுடனே முடிவெடுக்கப்படுகின்றது.
தலைமை நிர்வாகத்தில் மட்டுமின்றி செயற்குழு, பொதுக்குழு ஆகியவற்றிலும் ஜமாஅத் உறுப்பினர்களின் கருத்தைப் பிரதிபலிக்கக்கூடிய ஜமாஅத்தாகவே தவ்ஹீத் ஜமாஅத் உள்ளது. இந்த ஜமாஅத்தில் தனிமனித வழிபாடு இருந்தால் இது போன்று கூட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை.
தனிமனிதனை வழிபடக்கூடியவர்களிடம் கருத்து வேறுபாடே வராது. ஏனென்றால் அவர்கள் ஒரு மனிதனுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவன்சொல்வதற்கு மாற்றமாகப் பேசமாட்டார்கள்.
ஆனால் நம்முடைய ஜமாஅத்தில் மார்க்க விஷயங்களில் நமது அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. அனைவரும் கூடி ஆராயந்த பிறகு ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்படுகின்றது.
ஒருவர் கூறும் கருத்து தவறாக இருந்தால் அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தவறான கருத்தைக் கூறியவர் அதைத் திருத்திக் கொள்கிறார். தக்லீத் செய்யக் கூடியவர்களிடம் இது போன்ற பண்புகளைப் பார்க்க முடியாது.
நிர்வாக விஷயத்திலும், மார்க்க விஷயத்திலும் யாரையும் தக்லீத் செய்யாத ஜமாத்தாக தவ்ஹீத் ஜமாத் மாத்திரமே இருப்பதை நியாயமாக சிந்திப்பவர்கள் உணர முடியும்.
இப்படிப்பட்ட ஜமாஅத்தைப் பார்த்து தக்லீத் செய்யக்கூடியவர்கள் என்றுசிலர் கூறுகிறார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.
தவ்ஹீத் நிலைபாடுகளை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் முறியடிக்க திராணி அற்றவர்களே இந்த விமர்சனத்தைக் கையில்எடுக்கின்றனர். இவ்வாறு கூறினால் மக்கள் இந்த ஜமாஅத்தைப் புறக்கணிப்பார்கள் என்பதற்காக நம்மிடம் இல்லாத இந்தக் குற்றத்தை நம்மீதுசுமத்தப் பார்க்கிறார்கள்.
ஆனால் நம்முடைய ஜமாஅத்தின் செயல்பாடுகளும், நிலைபாடுகளும் பொதுமக்களுக்கு வெளிப்படையானவை. இதைப் பார்க்கும் யாரும் இவர்களுடைய இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்ப மாட்டார்கள்.
அண்ணன் சொன்னால் இவர்கள் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்ற வாதம் தவறானது என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களை பார்ப்போம்.
பி.ஜெ யை தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு எதிராக பி.ஜெ அவர்களுக்கு முன்னிலையிலேயே ஜமாத்தின் மூத்த உறுப்பினர் எம்.ஐ சுலைமான் அவர்கள் அண்ணன் சொன்னால் மார்க்கமா? என்ற தலைப்பில் தனி உரையொன்றை ஆற்றினார்.
ஸக்காத் பற்றிய ஆய்வின் ஆரம்பம் எது?
தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் பி.ஜெ யைத் தான் பின்பற்றுகிறார்கள் என்று அவதூறு பரப்புபவர்கள் ஸக்காத் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் ஆய்வைத் தான் பெரிதாக எடுத்துப் பேசுவார்கள்.
ஆம் ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு முறை கொடுத்தால் போதுமா? என்று ஆய்வு செய்தால் ஒரு பொருளுக்கு ஒரு முறை தான் ஸக்காத் கொடுக்க வேண்டும். வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவையாக இருக்கிறது.
அதனால் கொடுத்த பொருளுக்கே வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்று சொல்வது தவறு என்ற முடிவை தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டது. இந்த முடிவை ததஜ வெளியிட்ட நேரத்தில் பலரும் பலவிதமான விமர்சனங்களையும் முன்வைக்க ஆரம்பித்தார்கள்.
அதிலும் குறிப்பாக பி.ஜெ அவர்கள் இது தொடர்பான ஒரு விவாதத்தை மதுரையில் நடத்தினார்கள் அப்போது பி.ஜெ சொல்வதைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று தவ்ஹீத் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்களைப் பற்றி சிலர் விமர்சித்தார்கள் இன்றும் விமர்சிக்கின்றார்கள்.
இவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் ஸக்காத் விஷயத்தில் இப்படியான ஒரு ஆய்வை முதலில் முன் வைத்தவர் பி.ஜெ அல்ல. எம்.ஐ சுலைமான் அவர்கள் தான் இந்தக் கருத்தை ஆரம்பத்தில் வைத்தார்கள். அப்போது எம்.ஐ சுலைமானின் கருத்துக்கு மாற்றமாக வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் சகோதர் பி.ஜெ அவர்கள். பின்னர் எம்.ஐ சுலைமான் சொல்வதுதான் சரியான ஆய்வு என்பதை விளங்கி அந்த நிலைபாட்டிற்கு வந்தார்.
இப்போது எம்.ஐ சுலைமானை பி.ஜெ தக்லீத் செய்கிறார் என்று இவர்கள் சொல்வார்களா? சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
பி.ஜெ க்கும் தவ்ஹீத் ஜமாத் உலமாக்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு வருவதில்லையா?
தவ்ஹீத் ஜமாத்தின் உலமாக்களுக்கும் பி.ஜெ அவர்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடே வருவதில்லை. காரணம் அவர்கள் பி.ஜெ சொன்னால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு குருட்டு விமர்சனத்தையும் சிலர் செய்கிறார்கள்.
அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படையான விஷயம் என்னவெனில். பெரும்பாலும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் யாரும் மார்க்க பிரச்சினைகளில் ஆளுக்கு ஒரு கருத்தை பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். மார்க்க ரீதியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டார் அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து முடிவை வெளியிடுவார்கள். அதனால் வெளியில் பிரச்சாரம் செய்யும் போது அனைவரும் ஒரே கருத்தை சொல்வதினால் பி.ஜெ யைப் பின்பற்றுகிறார்கள் என்று வாதிட முனைவது. வடிகட்டிய முட்டால் தனமாகும்.
மேற்கண்ட விமர்சனம் ஒன்றும் புதிதாக கிளம்பியது அல்ல. தமுமுக வை விட்டு தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் பிரிந்து வந்த நேரமே இந்த விமர்சனம் ஆரம்பித்து விட்டது.
பி.ஜெ அவர்களுக்கும் மற்ற பிரச்சாரகர்களுக்கும் மத்தியில் எவ்வித கருத்து வேறுபாடும் வராத அளவுக்கு அத்தனை பேரையும் பி.ஜெ மிரட்டி வைத்திருக்கிறார் என்றொரு குற்றச் சாட்டை அப்போதே தமுமுக வின் சார்பாக ஜவாஹிருல்லாஹ் வைக்கும் போது அதற்கு எம்.ஐ. சுலைமான் அவர்கள் பதில் கொடுத்தார்கள்.
அதில் தனக்கும் பி.ஜெ அவர்களுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பட்டியலிட்டு தெளிவுபடுத்தினார் எம்.ஐ. சுலைமான் அவர்கள்.
பி.ஜெ அவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களுக்கும் மத்தியில் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றது. அப்படியான நேரங்களில் எல்லாம் அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதுதான் ஜமாத்தின் வளர்சிக்கு பெரும் துணையாக இருக்கும் ஒரு விஷயம்.
பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கமும், ததஜ உலமாக்களின் பங்களிப்பும்.
அதே போல் சகோ. பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கத்தை விமர்சிப்பவர்கள் பி.ஜெ அவர்கள் தன்னிச்சையாக அதனை மொழியாக்கம் செய்த்தைப் போலவும், அவருடைய மொழியாக்கத்தை அனைத்து உலமாக்களும் அப்படியே நம்பியதைப் போலவும் எழுதியும், பேசியும் வருகின்றார்கள். ஆனால் பி.ஜெ அவர்கள் திருமறைக் குர்ஆன் மொழியாக்கத்தை வெளியிடுவதற்கு முன் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்கள் அதனை சரி பார்த்து திருத்தங்கள் செய்த்தன் பின்னர் தான் வெளியிட்டார் என்பதே உண்மையாகும்.
குர்ஆன் மொழியாக்கத்தின் முதல் பதிப்பிலேயே அதன் கடைசிப் பகுதியில் சரி பார்த்த உலமாக்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கும். இதைப் பார்த்த பின்பும் விமர்சிப்பவர்கள், காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சிக்கின்றார்களே தவிர சத்தியம் அவர்களிடம் இல்லை என்பது இதன் மூலம் இன்னும் நிரூபணமாகின்றது.
தக்லீத் பற்றி பி.ஜெ யின் கருத்துக்கள்.
உலகத்தில் யார் என்ன கருத்தை சொன்னாலும் அதனை குர்ஆன் மற்றம் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் உரசிப் பார்த்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்கின்றது.
அதே போல் பி.ஜெ அவர்கள் கூட பல இடங்களிலும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது. தக்லீத் தொடர்பாக பி.ஜெ யிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்க்கப்பட்ட கேள்விகளையும் அதற்குறிய பதில்களையும் ஒரு தொகுப்பாக இங்கு தருகின்றோம்.
பி.ஜெ சொன்னால் தான் சரியா?
நான் சொல்லும் செய்திகளை அனைத்தையும் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். குர்ஆனில் இருக்கிறது என்று நான் சொன்னால் அதையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் சொன்னால் சரி என்று இருந்தால் நீங்கள் மத்ஹபுகளிலேயே இருந்திருக்களாம். அப்படி யாராவது நான் சொன்னால் சரி என்று நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல மறுமையில் அவர்களுக்கு எதிராக நான் பேசுவேன்.
எந்த அறிஞரையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது.
எந்த அறிஞரின் கருத்தையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது. அவர்கள் சொல்வது குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இருக்கின்றதா என்பதை பார்த்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.
பி.ஜெ பயானை மட்டும் கேட்பது சரியா?
பி.ஜெ அல்லாத மற்ற அறிஞர்களின் பயான்களையும் கேட்க வேண்டும் அப்படி கேட்பதில் குர்ஆன் மற்றும் ஸஹீஹான செய்திகளை சொல்பவர்களின் உண்மையை உணர்ந்து மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
பி.ஜெ க்குப் பின் தவ்ஹீத் ஜமாத் இருக்காதா?
பி.ஜெ இல்லாமலேயே 2 வருடங்களுக்கும் மேலாக ஜமாத்தின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுத்தான் இருக்கின்றது. பி.ஜெ இல்லாவிட்டாலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நாம் சொல்ல முடியும் என்பதை ததஜ பிரச்சாரகர்கள் நிரூபித்துக் காட்டினார்கள் என்பதுதான் இதில் இருந்து தெரியவரும் முக்கிய விஷயம்.
தக்லீதுக்கு யார் பொறுப்பு?
நாம் ஒரு கருத்து சொன்னால் நமக்கு மாற்றமாக யாராவது சொல்லியிருந்தால் அதையும் சேர்த்து பார்த்து இரண்டில் எது சரி என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தக்லீத் செய்ததாக மாறிவிடும்.
பொது மக்களின் தெளிவும், குழப்ப நினைக்கும் உலமாக்களும்.
ஏகத்துவத்தின் அடிப்படையில் தெளிவான முறையில் முடிந்த வரை இஸ்லாத்தின் செயல்பாடுகளை எடுத்து நடக்கும் மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கும் சில ஆலிம்கள் தான் தக்லீத் என்ற வாதத்தை கையில் எடுத்து அவதூறு பரப்புகிறார்கள். அதிலும் அவர்கள் சொல்லும் செய்திகளை பொது மேடையில் நிரூபிப்பதற்கு முடியாமல் அறைக்குள் இருந்து ஆட்டம் போடுவதையும். மேடையில் வந்து நிரூபிக்க அழைத்தால் ஓடி ஒழிவதையும் நாம் கண் முன் காணக் கிடைக்கிறது.
சகோதரர் பீ.ஜே யின் மூலம் தமிழ் பேசும் நல்லுலகிற்கு இஸ்லாத்தின் சத்தியக் கருத்துக்களை அல்லாஹ் தெளிவாக்கினான். அவர் மூலம் உருவாக்கப்பட்ட செடி இன்று மரமாக கிளைகள் விட்டு பல நாடுகளுக்கும் விரிவடைந்து சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றது மட்டுமன்றி மூட நம்பிக்கையிலும், மௌட்டீகத்திலும் திலைத்திருந்த பலரை ஏகத்துவம் என்ற நேரான பாதைக்கு அல்லாஹ் மாற்றியிருக்கிறான். இந்த நேரான பாதை மற்றவர்களுக்கும் கிடைக்க நமது பிரச்சாரத்தை தெளிவான முறையில் முன்னெடுப்போமாக.
அல்லாஹ் சகோதரர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் நோயை குணப்படுத்தி அவரின் பேச்சாற்றல் மூலமும், எழுத்தாற்றல் மூலமும் இந்த சமுதாயத்திற்கு இன்னும் பல நன்மைகளை வழங்க வேண்டும் என்று தினமும் பிரார்த்திப்போமாக!